தொல்லியல் அறிஞர் எஸ்.டி. நெல்லை நெடுமாறன், மற்றும் தொல்லியல் துறை அதிகாரியாகப் பணிபுரிந்த திரு.சீ. இராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து செய்த செப்பேடு மற்றும் கல்வெட்டு ஆய்வுகளின் அடிப்படையில் சில தகவல்களைத் தருகின்றனர் (சான்றோர் காடும் சான்றோர் நாடும், நாட்டார் மடை, மூன்னூற்றுவர், எழுனூறுவர் என்ற தலைப்புகளிடப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்). ‘சான்றோர், நாடன், நாடான், நாடாள்வார், கிராமணி, முன்னுறுவர், எழுநுறுவர் என்று பலவித பெயர்களால் பல்வேறு காலகட்டங்களில் இவர்கள் அழைக்கப்பட்டனர். ‘

‘சான்றோர் என்பது இன்றைய வழக்கில் உள்ளதுபோல அன்றைக்கு பொதுப்பெயரல்ல, சங்க இலக்கியத்தில் சான்றோர் என்றால் வீரர், அதனால் போர் வீரர்களாய் இருந்தவர்களை சான்றோர் என அழைத்தனர். ‘

சான்றோரே சான்றார் ஆகி பின் சாணார் ஆயினர். 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமுருகன்பூண்டி பட்டயத்திலும் அவல்பூந்துறை பட்டயத்திலும் திருவிடைமருதூர் பட்டயத்திலும் ‘எழுநூற்றுவர்’ என்பது சான்றோர் குலப்பட்டப்பெயர் என்ற குறிப்பு காணப்படுகிறது. குறிப்பாக அவல்பூந்துறை செப்பேடுகள் சான்றோர் சமூகத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள உதவுகிறது. சான்றோர்கள் சூரிய சந்திர குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறும் (இச்சான்று, சான்றோர்கள் மூவேந்தர்களின் உறவினர்கள் என்பதைச் சுட்டுகிறது) இந்த ஆவணம், ‘வெள்ளை வட்டக்குடையும் விருதும் வெண்சாமரமும் வெள்ளைப் புரவியுமுள்ளவன் வெள்ளானை வேந்தன்’ என்றும் சான்றோர்களை விவரிக்கிறது.

இது ஒருகாலத்தில் பண்டைய சோழர், பாண்டியர், வேளிர் போன்ற தமிழ் அரசகுலத்தினரின் வழக்கம். இந்தத் தகவல் 17ஆம் நூற்றாண்டின் திருசெங்கோடு அருகேயுள்ள கருமாபுரம் செப்புத்தகட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சான்றோர்கள் குலத்தால் முப்புரி நூல் உடைய அரச மரபினர் என்கிறது கருமாபுரம் செப்புத்தகடு. அதற்குச் சான்றாக ஆனூர் அம்மன் கோவிலில் செல்ல மூப்பன் சாணார் சிலை பூணுலோடு காட்சி அளிக்கிறது. கொங்கன், நாடான், மதுரையான், கலியானியன் மற்றும் ஈழன் என்ற ஐந்து சான்றோர் பிரிவுகள் செப்பேட்டில் குறிப்பிடப்படுகின்றன. மேலும் கருமாபுரம் செப்புத்தகடு சான்றோர்களை சாணக்குலம் என்றும், சான்றோர் குலத்தைச் சேர்ந்த ஒருவரை ‘சாணக்குல தீரன்’ என்றும் விவரிக்கிறது. சாண என்பது சாணார் என்ற சொல்லின் பெயரடை வடிவமாதலால் சான்றோர்கள்தான் சாணார்கள் என்பதை தெளிவாக விவரிக்கும் நேரடி ஆதாரம் இது.

‘அதே 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அவல்பூந்துறை செப்பேடு, ‘சோழர்களின் குலப் பட்டங்களில் ஒன்றான பூவேந்தியச்சோழன் நான்தான்’ எனச் சொல்கிறது. அத்தோடு ‘வைகை வளநாடான் கொட்டமடக்கி’ அதாவது பாண்டியன் கொட்டம் அடக்கியவன் என்று கூறுகிறது. எனவே அவர்கள் சோழர் வம்சாவளியினர்’ என்கிறார் இராமச்சந்திரன். எழுநூற்றுவர் என்பது சோழர்களின் மூலப்படை, அதாவது சோழர்களின் ரத்த சொந்தங்களால் ஏற்படுத்தப்பட்ட படை. சாணார்கள் எழுநூற்றுவர் என அழைக்கப்பட்டார்கள் என்ற கூற்று இதற்கு சான்றாகிறது.

‘தமிழரின் விளக்கம்’ நூலின் 45வது பக்கம் குலம் மேம்பட்ட சான்றோர், கோவில்களில் தங்கள் தெய்வங்களையும், முன்னோர்களையும் வைத்து வழிபடக்கூடிய உரிமை நாடார் சமுதாயத்தினருக்கு உண்டு என குறிப்பிடுகிறது. பழிகோட்டையில் கொங்கு நாட்டு தலைமை பட்டக்காரரின் மானூர் காளியம்மன் கோவிலில் செல்ல மூப்பரின் சிலை வைத்து வழிபடப்படுவதே இதற்கான சான்று.

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர ஆட்சிக்கால செப்பேடு சான்றோர்க்கு ‘வெண்கொற்றக்குடைக்குரிய வெண்சாமரைக்கு உரிய சடையன் சாலி மூப்பர்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டதைச் செப்புகிறது. கொங்குப் பகுதிகளில் கிடைத்த செப்பேடுகளையும் ஓலைகளையும் ஆய்வு செய்த முனைவர் ராசு பல்வேறு தகவல்களை ஆதாரங்களுடன் தருகிறார்.

‘1453ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்லிடைக்குறிச்சி கல்வெட்டும், 1662ஆம் ஆண்டைச் சார்ந்த விக்கிரமசிங்கபுரம் கல்வெட்டும், நாடார்கள் சேர,சோழ நாடுகளில் நாட்டை நிர்வகிப்பவர்களாகவும் நாட்டின் அரசின் வரவு-செலவை கவனிக்கும் அதிகாரிகளாகவும் இருந்துள்ளதாகக் கூறுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நாடார்கள் காலங்காலமாக களரி எனும் போர்க்கலைப் பயிற்சி அளிப்பவர்களாக இருந்துள்ளனர். 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்லூர் கல்வெட்டு, தளவாயின் மிகப்பெரிய நீர்ப்பாசன பொறுப்பு தளவாய் சான்றாரிடம் இருந்ததைக் குறிக்கிறது. பாண்டிய நாட்டில் நாயக்கர் ஆட்சி நிலைபெற்றுவிட, இவர்கள் தென்காசி, கயத்தாறு, கொற்கை, கரிவலம்வந்தநல்லூர் ஆகிய பகுதிகளில் குறுநில மன்னர்களாக இருந்திருக்கின்றனர். ‘

1755ஆம் ஆண்டில் எழுதப்பட்ட குலசேகரபட்டினத்திலிருக்கும் சாசனக்கல் ஒன்று, ‘குட்டம் சந்திர மார்த்தாண்ட பணிக்க நாடன், குமார வீர மார்த்தாண்ட நாடன் முதலியோர் அப்பகுதியில் அரசாங்கப் பொறுப்பு ஏற்றிருந்த பிரதிநிதிகளாய், பிரபுக்களாய் ஜமீன்களாய் வாழ்ந்தார்கள்’ என்ற செய்தியைச் சொல்கிறது. இந்த சமுதாயப் பெருமக்கள் கொங்கு வேளாளர்களோடு இணைந்து கோவில்களுக்கு காணி உரிமை உடையவர்களாகவும், கோவில்களுக்குள் தங்கள் பெரியோர்களையும் கடவுள்களையும் வைத்திருக்கும் உரிமை உடையவர்களாகவும் இருந்திருக்கின்றனர் என்பதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன என்கிறார், ராசு.

நிலைமைக்காரர், மூப்பர், முக்கந்தர், பாண்டியகுல சத்திரியர், நட்டாத்திகள், சேர்வைக்காரர், சாணார், கிராமணி, கொடிக்கால் நாட்டார், கருக்குப்பட்டையார், ஈழவர் என பல்வேறு பிரிவினரும் கடந்த சில நூற்றாண்டுகளாக நாடார் என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படுகின்றனர். ‘நாடான் என்பவன் ஒரு நாட்டை அல்லது ஒரு பகுதியை ஆள்பவன், இது தென்னக சான்றார்களின் வழக்கமான பட்டமாக உள்ளது’ (Nadan is a rular of Nadu or district, it is the usual title of the southern Chandrans – Censes of India 1891 Volume XIIIP) எனக் குறிப்பிட்டுள்ளார் கலெக்டர் Sir H.W. Stuawart. ‘நாடார், கிராமணி வார்த்தைகள் ஒரே பொருளைக் குறிப்பனவே, நாடான் என்றால் நாட்டை ஆள்பவன், கிராமணி கிராமத்தை ஆள்பவன். முன்னது தமிழ்ச்சொல், பின்னது சம்ஸ்கிருத வார்த்தை’ என்கிறார் தர்ஸ்டன் (Thurston Edgur, Cast and Trips of South India Vol.V. pag.389).

பொ.ஆ.1584 ல் தை மாதம் 14 ஆம் தேதி வரையப்பட்ட திருச்செந்தூர் சாசனம், சிவந்தி ஆதித்த நாடன், குமாரசாமி ஆதித்த நாடன் உள்ளிட்டோரால் வழங்கப்பட்ட நன்கொடையால் மண்டபம் கட்டப்பெற்றதாகக் கூறுகிறது. பொ.ஆ.1765இல் வெளியிடப்பட்ட கொடுங்கோலூர் செப்புப்பட்டயத்தில் ‘சத்திரிய குலத்தில் உதித்தார்… சான்றார் என்று பெயர் இட்டதும், உலகமெங்கும் நாடாண்டதினால் நாடார் என்றும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போன்ற எண்ணற்ற கல்வெட்டுகள், செப்பேடுகள், கிராமியப்பாடல்கள், வில்லிசைப் பாடல்கள் சான்றோர் சமூகத்திற்கு நாடன், நாடான், நாடாள்வான், நாடாவார், நாடார் என்ற பட்டப்பெயர்கள் இருந்ததைத் தெரிவிக்கின்றன. ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கிலும், ஆங்கிலேயரின் பிற ஆவணங்களிலும் சாணார் என்று குறிக்கப்பட்ட இச்சமூகத்தினர், 1910 இல் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறைக்கு மனுக்கொடுத்து தங்கள் பெயரை ‘நாடார்’ என மாற்றிக்கொண்டனர்.

‘பனைமரத்தையும் கள்ளையும் பனை பொருள்களையும் மட்டுமே நம்பியிருந்த நாடார்கள்’ என்ற கருத்தையும் ‘வட இலங்கையில் இருந்து குடிபெயர்ந்தவர்கள்’ என்ற கருத்தையும் முன் வைத்த கால்டுவெல் அவர்களது நூல் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி திரும்பப் பெறப்பட்டது. கால்டுவெல் குறிப்பிட்டது போல, நாடார்கள் இயல்பிலேயே தாழ்ந்த நிலையில் இருந்தவர்கள் அல்ல என்றும், கற்றறிந்தோரும் போர் வீரர்களும் வர்த்தகர்களுமாய் வாழ்ந்து செழித்தவர்கள் என்றும் மேற்கூறிய ஆதாரங்களுடன் கால்டுவெல்லின் கருத்துகளை மறுக்கின்றனர் இச்சமூகத்தினர்.

விஜயநகரப்பேரரசால் தெற்கே துரத்தப்பட்டவர்கள் அங்கு திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் கொடுமை தாளமுடியாமல் தேரிக்காடுகளில் தஞ்சமடைந்தனர். திருச்செந்தூரின் தென்கிழக்குப்பகுதியில் நிலவுடைமையாளர்களாகவும் பனைத் தொழிலாளர்களாகவும் இருந்த நாடார்கள், ஆங்கிலேய ஆட்சியின்போது ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகளால், விவசாயப்பணிகளிலிருந்து வணிகத்திற்கு மாறினர். தாங்களே தயாரித்த பனை வெல்லத்தைக் கொண்டு வியாபாரத்தை ஆரம்பித்திருக்கிறாகள். நாளடைவில் மாட்டு வண்டியில் ஊர் ஊராகச் சென்று கருப்பட்டி, கருவாடு, பருத்தி போன்ற பொருள்களை விற்கத் தொடங்கினர்.

 ஒருபுறம் வணிகத்தில் காலூன்ற போராடிக்கொண்டே மற்றொருபுறம் தங்கள் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடிக் கொண்டேயிருந்தனர். முதன்முறையாக 1874ஆம் ஆண்டு மூக்கன் என்ற நாடார், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் வணங்கச்சென்றபோது தன்னை பலவந்தப்படுத்தி வெளியே தள்ளினார்கள் என்று வழக்குத் தொடுத்தார். இதனைத் தொடர்ந்து மதுரையைச் சுற்றியிருந்த பல பகுதிகளிலும் இது போன்ற வழக்குகள் வெளியே வரத் தொடங்கின. 1878இல் ஸ்ரீவில்லிப்புத்தூரிலும், 1885இல் சாத்தூரிலும், கழுகுமலையிலும் நாடார்கள் ஆலயங்களில் நுழைவதற்கு அனுமதி மறுத்து தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

1897இல் கமுதி கோயில் நுழைவுப் போராட்டம் தொடங்கியது. நீதிமன்றத்திற்கு அந்த வழக்கு வந்த போது, 1899, ஜூலை 20ஆம் நாள் நாடார்கள் கோயிலுக்குள் நுழைய நீதிமன்றத் தீர்ப்பில் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது. அத்தீர்ப்பை எதிர்த்து லண்டன் தலைமையகத்தில் (London Privy Council – இந்தியாவிலிருந்து வரும் மேல் முறையீடுகளை விசாரிக்கும் மிக உயரிய அமைப்பு) 42,000 ரூபாய் செலவு செய்து (ஒரு பவுன் 8 கிராம் தங்கம் 18 ரூபாயாக இருந்த காலகட்டத்தில்), வழக்கை நடத்தினர். ஆனால் 1908ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை லண்டன் பிரிவி கவுன்சில் உறுதி செய்து நாடார்கள் கோவிலுக்குள் நுழைவதைத் தடைசெய்தது. 

ஆலய நுழைவுக் கலவரங்களில் மிகவும் கடுமையான கலவரமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள, ஜூன் 6ஆம் நாள் 1899இல் நிகழ்ந்த ‘சிவகாசி கலவரம்’ குறித்து நடேசன் ஐயா அவர்கள் விவரிக்கும்போது, நிகழ்வுகள் கண்களில் நிழலாடுகின்றன.

“1800க்குப்பிறகு, தெற்கிலிருந்து வந்த வணிக ஆர்வம் மிக்க நாடார் சமூகத்தினர், தங்கள் வணிகத் தளத்தினை சிவகாசி நகரில் அமைத்ததுடன், கடின உழைப்பால் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட இடத்தை நோக்கி நகரத் தொடங்கினர். 1895இல் சிவகாசி சிவன் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நாடார் இன மக்களுக்கும் தேவர் இன மக்களுக்குமிடையே தோன்றிய உரசல், 1899இல் மிகப்பெரும் கலவரமாக வெடித்தது. ஜூன் 6ஆம் நாள் 5000 பேர் கொண்ட தேவர் சமூகக்குழு சிவகாசி நகரமெங்கும் பரவ, கலவரம் மூண்டது.

பத்திரகாளியம்மன் கோவில் கோபுரத்திலிருந்து ஒரு சிறுமி எதிரிகள் குறித்த செய்திகளை நாடார் இன இளைஞர்களுக்கு தகவல் கொடுத்துக்கொண்டே இருந்ததாகவும், அதனாலேயே நாடார் இனத்தவர் தங்களது காக்கும் கடவுளாக பத்திரகாளியம்மனை வணங்குவதாகவும் ஒரு செவிவழிச் செய்தியும் உண்டு.

இக்கலவரத்தில் 18 ஆண்கள் கொல்லப்பட்டனர். 886 வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டன. நகரின் மையப் பகுதியில் இருந்த பெரியத் தேரும் தீக்கிரையாக்கப்பட்டது. உடைமைகளும் களவாடப்பட்டன. இக்கலவரம் சிவகாசியோடு நிற்கவில்லை. திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், நாங்குனேரி, மதுரை என அதன் தாக்கம் பரவ, இராணுவம் வரவழைக்கப்பட்டு 1899 ஜூலை மாத இறுதியில் கலவரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.”

ஆலயப்போராட்டம் என்பது முதன்முதலில் நாடார் இனம் தொடங்கி வைத்த போராட்டம். எத்தனை உயிர், உடமை இழப்பிற்கு மத்தியிலும் தீவிரமாக தங்கள் சுயமரியாதையை தங்கள் உரிமையை மீட்க தொடர்ந்து போராடி வந்த போராட்டம்” இறுக்கத்துடன் முடிக்கிறார்.

சிவகாசி கொள்ளை தொடர்பாக முனைவர் கண்மணி கணேசன் பதிவு செய்துள்ள ஒரு நாட்டார் பாடலும் கிடைத்துள்ளது.

சித்திரை மாத்தையிலே

ஒசந்த செவ்வாய்க்கிழமையிலே

ஒம்பதாம் தேதியிலே அய்யாத்துரை

உசிரு கொடுக்கப் போனாறே

நாளும் மூணும் ஏழு – இந்த

இருளாண்டித் தேவரைக் கேளு

சாப்பிட்டுக் கைகழுவி

சகுனம் பாத்து வெடியெடுத்து

போறானாம் அய்யாத்துரை

பொன்னுசுரப் போக்கழிக்க

நாலு மூணும் ஏழு – அந்த

நாக்கியராக கேளு

ஏறினார் வில்லு வண்டி

எறங்குறார் வேங்கப்புடை

சாராய போதையினால்

சாஞ்சு விட்டார் அய்யாத்துரை

கூடப் பிறந்தவனாம்

குடிகாரன் சங்கரனாம்

குடிக்கத் தண்ணி கேட்டதுக்கு

குதித்து விழுந்து ஓடினானாம்

பணத்தை செலவழிக்க

படைகளெல்லாம் முன்னே விட்டு

பின்னால் போகச்சொல்லி

பின்னடித்தான் கருணாலபாண்டி

பழிப்பாட்டம் குத்தகையார்

பாண்டிய மன்னன் அய்யாத்துரை

பங்கு வாங்கப்போகப்போயி

பழி விழுந்து மாண்டாரய்யா

ஜாதியில் மறக்குலமாம்

சாந்தகுண அய்யாத்துரை

பண்டாரச் செட்டியல்ல

பட்டு மடிந்தாரய்யா

பழனியாண்டி தேவர்மகன்

பாண்டியமன்னன் அய்யாத்துரை

பங்கு வாங்கப்போகப்போயி

பழி விழுந்தே மாண்டாரய்யா

ஆளிலேயும் நல்லாளு…

“சிவகாசி கலவரம்தான் என்னை ‘அஞ்ஞாடி’ நாவல் படைக்கத் தூண்டியது”, என்று அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி கூறுவதிலிருந்து, சிவகாசி கலவரத்தின் துயரத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்தக் கலவரத்தைத் தொடர்ந்து அங்கிருந்து ஒரு பகுதி நாடார்கள் விருதுபட்டிக்கு இடம்பெயர்ந்தனர். ஒரு பகுதியின் தெற்கு நோக்கி நகர்ந்து தென்காசியில் குடியேறி இஸ்லாம் மதத்தைத் தழுவினர். கொங்குப் பகுதிக்கு நகர்ந்தவர்கள் கவுண்டர்கள் ஆயினர்.

தங்கள் மீதான ஒடுக்குமுறைகளை பணத்தாலும் கல்வியாலும் மட்டுமே வெல்ல முடியும் என உறுதியாக நம்பிய நாடார் சமூக மக்கள், ஒருவருக்கொருவர் கைகொடுத்து சமூகமாய் முன்னேறியவர்கள்.

நெல்லையிலிருந்து தங்கள் வணிகத்திற்காக வெளிக்கிளம்பியவர்கள் ‘பேட்டை’ என்ற அமைப்பை உருவாக்கி தமிழகம் முழுவதும் தட்சிணமாற நாடார்கள் சங்கம் என்ற பெயரில் இயங்கத்தொடங்கினர். மதுரை கீழவெளி வீதியின் வடகிழக்கு மூலையில் வேப்ப மரங்கள் அடர்ந்து நிறைந்திருந்த இடத்தில் தெட்சிணமாற நாடார் சங்கப்பேட்டையை அமைத்தனர். 3 ஏக்கர் பரப்பளவில் அன்றைய வணிகச் சந்தையாய் விளங்கிய அந்த பேட்டையை நோக்கி, தூத்துக்குடியில் இருந்து உப்பும், கருவாடும், நெல்லைச் சீமையின் கருப்பட்டியும், பனைவெல்லமும் வந்திறங்கி விற்பனை செய்யப்பட்டன. வியாபாரம் வளர வளர, அதற்கான வழிப்பயணத்தில் இளைப்பாறுதல் பொருட்டு வழிநெடுகிலும் உள்ள அன்றைய பெருங்கிராமங்களில் வண்டிப்பேட்டைகள் அமைக்கப்பட்டன. தங்கள் வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்காக தாங்கள் வணிகத்திற்குச் செல்லும் ஊர்களில் சிறிய நிலம் வாங்கி ‘பேட்டை’ எனப் பெயரிட்டனர். பேட்டையை நிர்வகிக்க நாடார் மகமை பண்டு (வரி) ஒன்றை ஆரம்பித்தனர். பேட்டையில் நிறுத்தப்படும் ஒவ்வொரு மாட்டுவண்டியும் மகமை நிதி கொடுத்தாக வேண்டும்.

சிவகாசி, விருதுபட்டி, சாத்தங்குடி, திருமங்கலம், பாலையம்பட்டி, அருப்புக்கோட்டை, கமுதி போன்ற ஊர்கள் நாடார்களின் மையங்களாக உருவாகின. அதனைத் தொடர்ந்து கோவில்பட்டி, சாத்தூர், நாகலாபுரம், புதூர், காரியாப்பட்டி, இராமநாதபுரம், உச்சிப்புளி என சார்பு நிலைப்பேட்டைகள் பட்டியல் விரிகின்றது. பெரு வணிகர்கள் மாட்டு வண்டிகளிலும் சிறிய வணிகர்கள் பொதி சுமந்த மாடுகள் மூலமாகவும் தத்தம் பொருட்களை சந்தைக்கு கொண்டு வந்தபோது, மாடுகளை வேப்பமரத்தில் கட்டி வைத்து தீவனம் தந்து வைகை ஆற்றில் இறக்கி குடிநீர் வழங்கி உள்ளனர். இந்தப்பகுதி தாய்ப்பேட்டையாக இருக்க, இதே பகுதியில் வெற்றிலைப் பேட்டை, வாழைக்காய் பேட்டை, வைக்கோல் பேட்டை, தெற்கு வாசல் பகுதியில் மரக்கறிப்பேட்டை என அமைந்தனர். நாளடைவில் தங்கள் வணிகத்தை விரிவடையச் செய்யும்பொருட்டு வாய்ப்புத்தேடி பல்வேறு இடங்களுக்கும் சென்றனர்.

அப்படியாக, சிவகாசியிலிருந்தும் விருதுநகரிலிருந்தும் தண்ணீர் பாசனம் மிக்க ஊர்களைத்தேடி, மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள கிராமங்களை நோக்கி மாட்டு வண்டியில் கிளம்பியவர்கள் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூர், திண்டுக்கல், பழனி போன்ற இடங்களில் தங்கள் வணிகத்தை விரிவு செய்தனர்.

இன்னும் ஆராய்வோம்…

சான்றுகள்

Bayly, Susan- Caste, Society and Politics in India from the 18th century to the modern Age. 1999.

Tamizhakam in 17th Century

நாடார் குல மித்திரன்

அஞ்ஞாடி – பூமணி

படைப்பாளர்

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இவரின் ‘போர்களின் தேசத்தில்’ நூல், 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூல் பரிசை வென்றுள்ளது.