பானு முஷ்டாக்கின் 2025-ம் ஆண்டிற்கான புக்கர் விருதினைப் பெற்ற சிறுகதைத் தொகுப்பாகிய Heart Lamp -இன் “Fire Rain” என்கிற சிறுகதையை வாசித்தபோது ஏனோ 1997-இல் இதே பரிசை வென்ற அருந்ததி ராயின் தாயார் நினைவிற்கு வந்தார்.
அப்போது இந்தப் பரிசை மான் புக்கர் விருது (Man Booker Prize) என்றழைத்தனர். இந்த ஆண்டு அருந்ததி ராய் எழுதி வெளிவந்துள்ள Mother Mary Comes to Me என்கிற நினைவுக்குறிப்பு நூல் அவருக்கும், அவருடைய தாயாராகிய காலஞ்சென்ற மேரி ராயிக்கும் இடையிலிருந்த சிக்கலான உறவை விவரிக்கிறது. இந்நூல் சில சர்ச்சைகளைக் கிளப்பிக்கொண்டிருப்பது ஒருபுறமிருக்க, மேரி ராய் ஒரு சிறப்புமிக்க இந்திய கல்வியாளராகவும், பெண்ணுரிமைப் போராளியாவும் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் சமூக அந்தஸ்து பெற்ற பாரம்பரிய சிரியன் கிறிஸ்தவ குமுகாயத்தைச் சார்ந்தவராக இருந்தபோதும், வேற்று சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துக்கொண்டது அவருக்கும் அவரது சமூகத்திற்குமிடையே விரிசலை ஏற்படுத்தியது. ஒர் இக்கட்டான சூழ்நிலையின் காரணமாக பூர்வீக சொத்தின் பங்கைப்பெறும் உரிமைக்காக தன் சகோதரர் மீது வழக்குத் தொடுக்கிறார்.
ஒரு பெண்ணாக தனது பெற்றோரின் சொத்தில் பங்குக் கிடைப்பதற்கு 1916-ம் ஆண்டு இயற்றப்பட்ட திருவிதாங்கூர் வாரிசுரிமைச் சட்டம் தடையாக இருந்தது. இச்சட்டதினால் அவருக்கும், அவர் சார்ந்திருந்த சமுதாயப் பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சம உரிமை மறுக்கப்பட்டிருந்தது. நீதிமன்றத்தில் வழக்கு பல நிலைகளில் விவாதிக்கப்பட்டு இறுதியில் 1986-இல் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவருக்குச் சாதமாக வரவே குடும்ப சொத்தின் பங்கைப் பெற்றார். இதில் வேதனையான செய்தி என்னவென்றால், இந்தத் தீர்ப்பு எல்லா சிரியன் கிறஸ்தவ பெண்களின் சொத்துரிமையில் சமத்துவத்தைச் சட்டரீதியாக நிலைநாட்டியுள்ளது என்றபோதும், நடைமுறையில் அவர்களுடைய குமுகாயத்தில் இன்றளவும் சொத்து சமமாகப் பகிரப்படுவதில்லை. இனி சிறுகதைக்கு வருவோம்.
“Fire Rain” சிறுகதையின் மைய கதாபாத்திரம் உஸ்மான் சாகிப் என்பவர். இவர் ஒரு முத்தவல்லியாக அவர்களுடைய வட்டாரத்தில் அந்தஸ்துள்ளவராக இருக்கிறார். மனைவியின் பெயர் ஆரிஃபா. சிறுவயது மகனுக்கு இரவு முழுக்க காய்ச்சலாக இருந்ததால் ஆரிஃபா அன்றிரவு தூங்காமல் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார். இதனால், காலையில் உஸ்மான் சாகிப் எழுந்தபின்பும் அவள் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். கோபப்படுவது பன்றிக்குச் சமமான அருவருப்பானது என்று எல்லாருக்கும் அறிவுருத்த தெரிந்திருந்த உஸ்மான் சாகிப், அந்த விதிமுறை தனக்குப் பொருந்தாது என்பது போல் அவள் மீது கோபப்படுகிறார். அதேபோல அவர் ஆசையாய் பார்த்து, பார்த்து திருமணம் செய்து வைத்த இளைய சகோதிரி, அன்றைய தினம் உஸ்மான் சாகிபிடம் குடும்ப சொத்தில் உரிமைக் கேட்டபோதும் கடுமையாக கோபப்படுகிறார். ஆரிஃபா கணவரிடம் நாத்தநாருக்காக பரிந்து பேசியது உஸ்மான் சாகிபின் காதுகளுக்கு எட்டவே இல்லை.
காலையில் வழக்கம்போல அவர் வீட்டிற்கு முன்பாக சிபாரிசிற்காகவும், பல்வேறு உதவிகள் பெறுவதற்காகவும் கூடியிருந்த கூட்டத்தில், அவரது மூத்த சகோதிரியும் வரிசையில் காத்திருக்கிறார். கைம்பெண்ணாகிவிட்ட அவளுக்குச் சுயமரியாதை இருந்தது. மகனுக்கு வேலை கிடைப்பதற்காக அண்ணனின் சிபாரிசிற்காக வந்திருந்த அவர் வீட்டிற்குள் வந்து உரிமையாக உதவிக் கோட்காமல் பொதுமக்களைப்போல வீட்டிற்கு வெளியில் நின்றுக் கொண்டிருந்தார்.
இது இவ்வாறு இருக்க, உஸ்மான் சாகிபின் உதவியாளர் தாவூத் அங்கு வந்து சேர்கிறார். கூடவே ஒரு செய்தியையும் கொண்டு வருகிறார். நிசார் என்னும் சாயம் பூசுகிற வேலை செய்யும் நபர் ஒன்றரை மாதத்திற்கு முன்பு குளத்தில் விழுந்து இறந்துவிட்டார் என்று சொன்னபோது குழுமியிருந்தவர்களிடையே சலசலப்பு ஏற்படுகிறது. நிசாரை போலீசார் இந்து மயானத்தில் அடக்கம் செய்துவிட்டனர் என்றபோது அனைவரும் குற்றவுணர்வுடன் பரிதாபப்பட்டனர். நிசார் எத்தனைப் பேரிடம் சாயம் அடித்து தருகிறேன் என்று பணத்தை வாங்கி ஏமாற்றியிருக்கிறார், அவர் சதா குடிபோதையிலிருக்கும் குடிமகன் என்பதையெல்லாம் தாண்டி அந்தப் பாவப்பட்ட முஸ்லிமுக்குக் கபரிஸ்தானில் இஸ்லாமிய முறைப்படி நல்லதொரு அடக்கம் செய்யமுடியாமல் போய்விட்டதால் ஏதாவது செய்து அவரைக் கபரிஸ்தானில் நல்லடக்கம் செய்யவேண்டும் என்ற குழு உணர்வு தொற்றுநோய் போல அனைவருக்கும் பரவுகிறது.
இதனைத் தொடர்ந்து உஸ்மான் சாகிப் பல அரசு அலுவலங்கள், காவல் நிலையம், என்று பலமுறை நடையாய் நடந்து பிணத்தை தோண்டி எடுத்து முறையான அடக்கம் செய்வதற்கு அனுமதி பெற்றுவிடுகிறார். பிணநாத்தம் மூக்கை அடைத்ததை சகித்துக் கொண்டு சவப்பெட்டியை உஸ்மான் சாகிபும் ஒரு கைபோட்டுத் துக்கிச் சென்றுக்கொண்டிருந்தபோது எதிரே குடிபோதையில் திட்டிக்கொண்டே வந்த நிசாரைப் பார்த்ததும் முதலில் விரைத்துபோனது உஸ்மான் சாகிப் தான். ஆனால், விஷயம் வெளியே தெரிந்தால் மானக்கேடு என்பதால் மௌனமாக அடக்கம் செய்துவிடுகின்றனர். அழுகி நாறியது இந்துப் பிணமா? யாருடைய பிணம்? என்பன தீர்க்கப்படவேண்டிய புதிர்களுள் ஒன்று.
உஸ்மான் சாகிபை ஆண்களின் முதலுருவாக இந்தச் சிறுகதையில் அழகாக ஆசிரியர் சித்தரித்துள்ளார். குடும்பத்தின் பெண்களிடம் கோபப்படுபவராவும், அவர் சார்ந்திருக்கும் குமுதாயத்தின் மதிப்பையும், அந்தஸ்தையும், அதிகாரத்தையும் விரும்புகிறவராகவும், சொத்தை சகோதிரிளுடன் பகிர்ந்துகொள்ள மனமில்லாதவராகவும், சமய நம்பிக்கையைத் தூக்கிப்பிடிப்பவராகவும் இருக்கிறார். நிறைவில், நிசாரின் மாண்புள்ள அடக்கத்தில் அவ்வளவு அக்கறைக் காட்டி ஒர் அரசு அலுவலகத்திலிருந்து இன்னொரு அலுவலகம் என்று அலைந்த உஸ்மான் சாகிபிற்குத் தன் மகன் பதினைந்து நாட்களாக மூளைக்காய்சலில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது தெரியாமல் போய்விடுவதில் முடிகிறது சிறுகதை.
உயிரோடு இருக்கும்போது ஒருவருக்குக் கிடைக்கிற மாலைகளைக் காட்டிலும் அதிகமாக இறந்தப் பிறகு கிடைக்கிறது என்பதே வாழ்க்கையின் எதார்த்தம். புரிந்துகொண்டவர்கள் இறப்பைத் தேடிப் பயணிக்கிறார்கள்; புரியாதவர்கள் மாலைகளைத் தேடி அலைகிறார்கள்.
படைப்பாளர்

ஜா. கிறிஸ்டி பெமிலா
ஜா. கிறிஸ்டி பெமிலா, B.E., B.D., M.Th., MA., Ph.D., காரைக்காலில் பிறந்தவர். பொறியியல் துறையில் அடிப்படைத் தகுதி பெற்று ஆசிரியர் பணியாற்றிய அனுபவம் உண்டு, அத்துறையில் நாட்டம் குறைந்து சமயத்தறையில் ஆர்வம் ஏற்படவே மதுரையிலுள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கிறிஸ்தவ இறையியலில் இளம்தேவியல் பட்டத்தையும், இஸ்லாமிய கல்வியில் முதுகலைப் பட்டத்தை ஹைதராபாதிலும் பெற்றார். பாரசீக மொழியில் முனைவர் பட்டத்தை உத்திர பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் 2023-ம் ஆண்டு பெற்றார். தற்போது தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் சமயத் துறையில் பேராசிரியையாகப் பணிபரிந்து வருகிறார்.





Simply Superb Akka