பிராமணர்களின் விருப்பத்துக்கு இசைய, திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மன் (1729-1758), நாடார் (சாணார்), ஈழவ, பரதவர் வகுப்பைச் சார்ந்த பதினைந்து குழந்தைகளை அவரது தெய்வமான அனந்தபத்மநாயருக்குப் பலியாக, திருவனந்தபுரத்தின் பல்வேறு மூலைகளில் உயிரோடு புதைத்தார். எத்தகைய பயபக்தியை பிராமணர்கள் கொண்டிருந்தார்கள் என்றால், அரசர்கள்கூடத் தங்களை வழிநடத்த அவர்களை (பிராமணர்களை) நாடுவர். – கு.ராஜய்யன் 1*
தாலியறுத்தான் சந்தை
தோள்சீலைப் போராட்டம் வேகமடைந்திருந்த காலகட்டத்தில், திருவிதாங்கூரின் ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்கள் ரவிக்கை மற்றும் தோள்சீலை அணிந்து, சந்தைகளில் நடமாடுவதில் மாபெரும் அச்சுறுத்தல் இருந்ததை அறிந்தோம். அச்சூழலில், ‘இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் ஒரு சந்தையில், ஆதிக்க சாதியினர் ரவிக்கை, மற்றும் தோள்சீலை அணிந்து வந்த சாணார் சாதிப் பெண்களின் தோள்சீலை மற்றும் ரவிக்கைகளைக் கிழித்தெறிந்து, அப்பெண்களின் தாலியையும் அறுத்தெறிந்து ரகளை செய்தனர் என்றும், அந்த சந்தை தாலியறுத்தான் சந்தை என அழைக்கப்படுகிறது’ என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் பதிவு செய்துள்ளார்கள்.
‘தம் குலப்பெண்கள் மேலாடை அணியும் உரிமை கோரி குமரி மாவட்டத்து நாடார்கள் நடத்திய தோள்சீலை போராட்டத்தை ஒடுக்க நாயர்கள் நாடார் பெண்களின் தாலியை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று வழங்கப்படுகிறது’, என்று தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் தொ.பரமசிவன்.2*

தாலியறுத்தான் சந்தை பற்றி எழுத்தாளர் குமரிமைந்தனின் பதிவு இதோ:
தோள்சீலைப் போராட்ட காலத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு சாணார்களின் வாழ்வில் ஒரு புதிய ஏட்டைத் திருப்பியது. பொற்றையடி என்னும் ஊர் அருகில் ஒரு கிழமைச் சந்தை கூடுகிறது. அதில் செட்டியார்கள் வாணிகம் செய்தனர். தோள்சீலைப் போராட்ட காலத்தில் சாணார்ப் பெண்கள் தோள்சீலை அணிந்து வந்ததை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதற்காக அவர்கள் ஆயர்கள் வைத்திருப்பது போன்ற துறட்டி அரிவாளை நீண்ட கழிகளில் பொருத்தித் தொலைவிலிருந்து பின்புறமாக நின்று அந்தத் தோள்சீலைகளைக் களைந்தார்கள். அவ்வாறு களைந்த போது ஒருமுறை ஒரு பெண்ணின் தோள்சீலையோடு அவளது தாலியையும் அறுத்தெடுத்துவிட்டது துறட்டி அரிவாள். இது சாணார்களிடையில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. அதிலிருந்து சாணார்கள் சந்தையினுள் செல்வதைத் தவிர்த்தார்கள்.
தாங்கள் கொண்டு வந்த பண்டங்களைச் சந்தைக்கு வெளியே பரப்பி விற்றனர். தேவையானவற்றை அங்கேயே வாங்கினர். இவ்வாறு ஓர் ‘உழவர் சந்தை’ உருவானது. விரைவில் செட்டியார்களின் வணிகம் சந்தையில் முடிவுக்கு வந்தது. இப்போது சாணார்கள் சந்தையினுள் வாணிகர்களாக நுழைந்தனர். இன்று சந்தை முழுவதும் அவர்கள் கைகளிலுள்ளது. இந்தச் சந்தை‘தாலியறுத்தான் சந்தை’ எனப் பெயர் பெற்றது. இந்த தகவலை குமரி மைந்தன் திரு.கேசவன் தம்பி என்ற நூலாசிரியர் ஒருவரின் வாய்மொழி வாயிலாகக் கேட்டு அறிந்து கொண்டதாகத் தரவு சொல்கிறார்.3*
மேற்சொன்ன குமரிமைந்தனின் பதிவிலிருந்து, திருவிதாங்கூரின் சில பகுதிகளில் ஆதிக்கச் சாதியினர், கலவரங்களின் போதுகூட, ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்களின் தோள்சீலைகளைத் தொட்டு இழுக்கவில்லை, துறட்டிக் கம்பினால்தான் இழுத்தார்கள் என்ற தகவல் பெறப்படுகிறது. அதாவது ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்களின் சீலையை தொட்டு இழுப்பதுகூட தீட்டு என்பதற்காக அப்படி செய்திருக்கலாம்.
அத்துடன் தாலியை துறட்டிக் கம்பு, தவறுதலாக அறுத்துவிட்டதாகவும் இப்பதிவு குறிப்பிடுகிறது. தோள்சீலைப் போராட்டக் காலத்தில் சாணார் முதலான ஒடுக்கப்பட்ட சாதியினர், தாலி அணியவும், தங்கம் அணியவும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. திருவிதாங்கூர் அரசு ‘தாலிக்கு ஆயம்’ (வரி) விதித்திருந்தது என்று அகிலத்திரட்டு அம்மானை பதிவு செய்கிறது. ஆனால் குமரிமைந்தனிடம் தகவல் சொன்னவர், ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்கள் தாலி அணிந்திருந்ததை, செட்டியார் முதலான ஆதிக்கச் சாதியினர் பொருட்டாகவேக் கருதவில்லை என்பது போன்ற பிம்பத்தை பதிவு செய்கிறார். அவரின் இந்தத் தகவல், வரலாற்றுத் தகவல்களோடு பொருந்தாத முரண் செய்தியாக இருக்கிறது. தாலிக்கு வரி கட்டாததைக் காரணம் காட்டி ஆதிக்கச் சாதியினர் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களின் தாலிகளை அறுத்தார்களா அல்லது தவறுதலாக அறுத்தார்களா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.
எவ்வாறாயினும் சாணார் (நாடார்) சாதிப் பெண்களின் ரவிக்கை மற்றும் தோள்சீலைகளைக் கிழித்து, தாலியை அறுத்து, ஆதிக்கச்சாதியினர் கலவரம் செய்த இடம் இன்றும் ‘தாலியறுத்தான் சந்தை’ என்று அழைக்கப்படுகிறது. அவ்விடம் கன்னியாகுமரி மாவட்டத்தின் பொற்றையடி ஊரிலிருந்து கன்னியாகுமரி சுற்றுலாத் தளத்துக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ளது.
இன்று இணையதளங்களில் ‘சாதிய ஆணவக்கொலை செய்வது குற்றம்’ என்று ஒருவர் பதிவு செய்தால்போதும், உடனே சில இணையதளவாசிகள், பதிவு செய்தவரை ‘பெரியாரிஸ்ட்’ என்று முடிவு செய்து விடுகிறார்கள். அத்தகைய பதிவுகளில் “நீ பெரியாரிஸ்டா? பெரியார் சொன்னது போல் தாலியை அறுத்து விட்டாயா?” என்று ஆவேசத்துடன் கேட்கத் தொடங்கி விடுகிறார்கள்.

‘இணையதளவாசி ஒருவரின் அறியாமை பதிவுக்கான புகைப்படம்’ சான்றுக்காக!
இதில் ‘திக’ என்பது திராவிடர் கழகத்தைக் குறிக்கிறது.
‘சகமனிதனின் உயிரை சாதியின் பெயரால் பறிப்பது குற்றம்’ என்று சொல்ல மனிதத்தன்மை போதுமானது. ‘பெரியாரிஸ்ட்தான் இக்கருத்தை பேச வேண்டும்’ என்ற எழுதப்படாத சட்டம் இந்த சமுதாயத்தில் எப்போது உருவானது? என்று கேட்க விரும்புகிறேன்.

‘மனிதத்தன்மை’ பேசுபவர்களை பெரியாரியத்தின் முத்திரையை குத்தி ஒடுக்கி விடலாம் என்று நினைப்பவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். பெரியாரியம் பேசுவது மனிதத்தைதான்! அதனால்தான் மனிதம் பேசுகின்ற அனைவரும் உங்களின் கண்களுக்கு பெரியாரிஸ்ட்களாகத் தெரிகிறார்கள். உங்கள் பார்வையை சரி செய்து கொள்ளுங்கள்! அப்போதுதான் மார்க்சியமும், பெரியாரியமும், அம்பேத்கரியமும் பேசுகின்ற மனிதத்தை உங்களால் அறியவும் உணரவும் முடியும்.
தாலியைப் பற்றி தந்தை பெரியார் சொன்ன கருத்து பின்வருமாறு:
“’திருமணமானவள்’ என்பதை குறிப்பதற்காக பெண்ணுக்கு தாலி கட்டப்பெறுகின்றது. ‘திருமணமானவன்’ என்பதைச் சுட்ட ஆணுக்கு எந்தவித அடையாளமும் இல்லை. இது தவறு. ஆண் பெண் இருவரும் சமம் என்பதற்கு, இருவர் கழுத்திலும் ஒருவருக்கொருவர் தாலி கட்டிக் கொள்ள வேண்டும். இல்லையேல் இருவருக்கும் தாலி இல்லாமல் இருக்க வேண்டும்.”4*
இக்கருத்தை பெரியார் சொன்னதால், பெரியாரிஸ்ட்களிடம் அநாகரீகமான கேள்விகளை முன்வைக்கும் பிற்போக்குவாதிகளுக்கு, தோள்சீலைப் போராட்டத்தின்போது, ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்களின் தாலியை அறுத்து பொறுக்கித்தனம் செய்தவர்களைப் பற்றி பேச, ஏனோ துளியும் தைரியம் வருவதில்லை. அதோடு, இந்த ரோசக்கார பிற்போக்குவாதிகள், அன்று வரலாற்றில், ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்களின் தாலியை அறுத்து வன்முறைக் கலவரங்களில் ஈடுபட்டவர்களின் செயலை ஆதரிக்கும், வலதுசாரிகளுடன்தான், இன்றைய அரசியல் களத்தில் கைகோத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வெட்கக்கேடான விசயம்.
மேற்சொன்ன தாலியறுத்த சம்பவத்தில், இன்னொன்றை குறிப்பிட வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். பொதுவாகக் கிறித்தவர்களுக்கு திருமண அடையாளம் தாலி அல்ல, மோதிரமே. இந்துக்கள்தான் தாலியை மிகவும் உணர்வுப்பூர்வமான விசயமாகக் கருதுவர். ஆக, மேலே சொன்ன சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்துச்சாணார்களாக (இந்து நாடார்கள்) இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்பது எனது கருத்து.
வரலாற்றில், ‘இந்துப் பெண்களின் தாலி மற்றும் ஆடைகளை அறுத்தெறிந்த இந்துக்களை’ கண்டிக்குமா இன்றைய இந்துத்துவம்?
தொடரும்…
படைப்பாளர்
சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.
தரவுகள்:
- ‘தமிழக நாடார்கள், ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு’ இராபர்ட் எல். ஹார்டுகிரேவ், தமிழாக்கம்: எஸ்.டி. ஜெயபாண்டியன், முதல் பதிப்பு-2019, மொழிபெயர்ப்பாளரின் பின்னிணைப்பில், பக்கம் எண்: 374.
- அறியப்படாத தமிழகம், தொ.பரமசிவன், ஆசிரியரின் முதல் பதிப்பு 1997, காலச்சுவடு முதல்பதிப்பு 2009, பக்கம் எண்: 67.
- குமரி மைந்தன் எழுதிய சாதி வரலாறுகளின் ஒரு பதம் – நாடார்களின் வரலாறு. – https://kumarimainthan.blogspot.com/2015/12/9_28.html
- தந்தை பெரியார் சிந்தனைகள், டாக்டர்.ந.சுப்பு ரெட்டியார், முதற்பதிப்பு, நவம்பர் 2001, பக்கம் எண்: 62.
- CHURCH HISTORY OF TRAVANCORE, CM.AGUR, FIRST PUBLISHED 1903, REPRINT 1990, PAGE NO: 934.




