ஜான் டேனியல் மன்றோ வேறு யாருமல்ல, திருவிதாங்கூரின் திவானாகப் பணியாற்றிய ஜெனரல் ஜான் மன்றோவின் பேரனும், வனப்பாதுகாப்பு அதிகாரியாக இருந்த அர்பன் விகோர்ஸ் மன்றோ மற்றும் மடில்டா கோல்ஹோஃப் ஆகியோரின் மகனுமே ஜான் டேனியல் மன்றோ.

திருவிதாங்கூர் – மதராஸ் எல்லைப் பிரச்னை இருநபர் ஆணையக்குழுவின் ஒரு உறுப்பினராகவே இங்கு வருகை தந்தவர், காடுமேடெங்கும் சுற்றித்திரிந்தார். 1877ல் இருநபர் ஆணையம், இந்த மலைகளின் உயர் மலைப் பகுதிகள் திருவிதாங்கூர் பிரதேசத்தைச் சேர்ந்தது என்றும், மெட்ராஸ் மாகாணத்துக்கு இதில் உரிமையில்லை என்றும் உறுதிப்படுத்தியது.
ஆனால், தோட்டக்கலையில் ஆர்வம் கொண்டிருந்த மன்றோ, தனது பயணத்தில், கண்ணன் தேவன் மலைகளில் பயிர்களை வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்தார். மூணாறு திருவிதாங்கூரின் ஒரு பகுதியாக இருந்த போதிலும், அது பூஞ்சார் அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அது அவர்களின் ‘ஜென்மநிலம்’ என்பதால், அரச குடும்பத்தினர் நில உரிமையாளர்களாக அதன்மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தனர். அதனால், இம்மலைப்பகுதிகளில் விவசாயம் செய்யும் தனது ஆவலை நிறைவேற்றுவதற்காக பூஞ்சார் அரண்மனைக்குச் சென்று, அரச குடும்பத் தலைவரான ரோகிணி திருநாள் கேரள வர்மா வலிய ராஜாவைச் சந்தித்து கண்ணன் தேவன் மலைகளை ஒரு நல்ல தொகைக்குக் குத்தகைக்குத் தருமாறு கோரிக்கை வைக்கிறார்.
அதனை ஏற்றுக்கொண்ட ரோகிணி திருநாள் கேரள வர்மா வலிய ராஜா, 1877 ஜூலை 11 -ம் நாள், கண்ணன் தேவன் மலைகளில் சுமார் 1,36,600 ஏக்கர் நிலத்தை 99 வருடங்களுக்கு ஜான் டேனியல் மன்றோவுக்கு ஆண்டிற்கு ரூ.3,000 மற்றும் பாதுகாப்பு வைப்புத்தொகை ரூ.5,000 க்கு குத்தகைக்கு விட சம்மதித்து உறுதி செய்கிறார்.

நவம்பர் 28, 1878 ஆம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு சட்டப்பூர்வ நிலை (ratified) கொடுக்கப்பட்டது. ஜூலை 26, 1879, ஆவண எண் 731 படி, மொத்தம் 17 ஒப்பந்தங்கள் மன்றோவுக்கும் பூஞ்சார் வலியராஜாவுக்குமிடையில் திருவாங்கூர் அரசின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் (அன்றைய Huzur Cutcherry – அரண்மனைச் செயலகம்) பதிவு செய்யப்பட்டன.
அதே ஆண்டில் (1879-ம் ஆண்டு) மன்றோ, தனது நண்பர்களான கிபில் டனர் (Gibble Turner) மற்றும் வில்லியம் டனருடன் A.W. Turner இணைந்து ‘வடக்கு திருவிதாங்கூர் நில நடவு மற்றும் விவசாய சங்கத்தை’ (North Travancore Land Planting & Agricultural Society) பதிவு செய்கிறார். 1878 – 79-ம் ஆண்டுகளில் A.W. Turner தலைமையில் தேவி மலைப் பகுதியில் சிங்கோனா மற்றும் சிஸால் பயிர்கள் பயிரிடப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளன. இச்சங்கத்தின் உறுப்பினர்கள் காபி, ஏலக்காய், சிந்கோனா மற்றும் சிசல் போன்ற பயிர்களை பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடத் தொடங்கினர்.

இருப்பினும் நாளடைவில் தேயிலையே இப்பகுதிக்கு சிறந்த பயிர் என்பதை அவர்கள் கண்டறிந்து பிற பயிர்களை கைவிட்டனர். சுவாரஸ்யமான செய்தி என்னவெனில், மூணாரில் தேயிலைச் சாகுபடியைத் தொடங்கியவர்கள் மன்றோவோ, டர்னரோ அல்ல. இந்தப் பெருமை, 1880 ஆண்டு மூணாரில் தேயிலை பயிரிட்ட ஏ.எச். ஷார்ப்புக்குச் செல்கிறது. இப்படியாக, இந்த மலைத்தொடர் முழுவதும் மேட்டுப்பயிரிடல் முறை அறிமுகமாகிறது.
அப்போது மலைகளைத் திருத்தி விளைநிலமாக்க, அதிக அளவில் ஆள்கள் தேவைதானே? இருக்கவே இருக்கிறார்கள் தமிழர்கள்… தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, வட ஆற்காடு, தென்னாற்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து எஸ்டேட் வேலைக்காக அழைத்து வரப்படுகின்றனர். போடிநாயக்கனூர் வரை சாலை வழியாக அழைத்து வரப்பட்டவர்கள், அதற்கு மேல் சாலை வசதி இல்லாததால், குரங்கணியிலிருந்து டாப் ஸ்டேஷனுக்கு அடர்ந்த வனப்பகுதியில் உருவாக்கப்பட்ட நடைபாதை வழியே அழைத்துச் செல்லப்பட்டனர். அதுதான் இன்று நான் நின்று கொண்டிருக்கும் குரங்கணியிலிருந்து டாப்ஸ்டேஷன் செல்லும் நடைபாதை.

ஜான் மன்றோ தனது The high ranges of Travancore என்ற 21 பக்க நூலில் டாப் ஸ்டேஷன் செல்வதற்கான பாதைகளைத் (யானை வழித்தடங்கள் உட்பட) தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். போடியிலிருந்து தேவிகுளம் செல்லும் ஒரு பாதையையும் (20 மைல்கள்), போடிநாயக்கனூரிலிருந்து வட்டவடா செல்லும் பாதை… அதாவது குரங்கணி, கொட்டக்குடி கிராமம் வழியாகச் செல்லும் கழுதைப்பாதை என்று அழைக்கப்படும் பாதையையும் (20 மைல்கள்) குறிப்பிடுகிறார். அவரது கணக்குப்படி, இந்தப்பாதை கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.
முதன்முதலில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் ஷார்ப் தேயிலை பயிரிட்டதைத் தொடர்ந்து, மேலும் பல நிறுவனங்கள் மலைத்தொடரெங்கும் தேயிலை விளைச்சலைத் தொடங்கின. 1895-ம் ஆண்டு ஜேம்ஸ் ஃபின்லே அன் கம்பெனி லிமிடெட் என்ற ஸ்காட்டிஷ் வர்த்தக நிறுவனம், தேயிலையின் வணிகவாய்ப்பைக் கண்டு, 33 தேயிலைத் தோட்டங்களை வாங்கி, தேயிலை சாகுபடி மற்றும் உள்கட்டமைப்பை கணிசமாக விரிவுபடுத்தியது. இந்த தோட்டங்களை முறைப்படி நிர்வகிக்க, கண்ணன் தேவன் ஹில்ஸ் தயாரிப்பு நிறுவனம் ( Kannan Devan Hills Corporation (KDHC)1897-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாளடைவில் மிகப்பெரிய தேயிலை உற்பத்தி மையமாக மூணாறு பகுதிகளும் கண்ணன் தேவன் மலைப்பகுதிகளும் மாறின.

அத்தனை தேயிலையை உற்பத்தி செய்தவர்கள் வாகன வசதிகளற்ற காலத்தில், எப்படி அதை மலைப்பகுதியிலிருந்து சமவெளிக்கு கொண்டு சென்றார்கள்? என்ற கேள்வி இயல்பாய் எழ… சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. மூணாறில் இருந்து டாப்ஸ்டேஷன் செல்லும் சாலையில் மோனோ இரயில்பாதை அமைக்கப்பட்டு தேயிலையும் பிற பொருள்களும் டாப்ஸ்டேஷனுக்குக் கொண்டு செல்லப்பட்டன. 1902ல் மோனோ ரயிலாக அறிமுகப்படுத்தப்பட்ட வழித்தடம், 1908ல் குறுகிய ரயில்பாதை (narrowgauge railway) ஆக மாறியது. இவ்வாறு டாப் ஸ்டேஷனுக்கு வரும் தேயிலைப் பெட்டிகள், டாப் ஸ்டேஷனில் இருந்து தெற்கே 5 கி.மீ மலைச்சரிவில் தமிழ்நாட்டின் கொட்டக்குடிக்கு ஒரு வான்வழி ரோப்வே (Ariel Ropeway) மூலம் கொண்டு செல்லப்பட்டன.

பதிவுகளை வாசிக்கும்போது ‘அந்தக்காலத்திலேயே ரோப்காரா?’ என வியப்பாக இருந்தது. ஆம், இங்கிலாந்திலிருந்து கட்டுமானப்பொருள்கள் கொண்டு வரவழைக்கப்பட்டு, ஒரு பிரமாண்டமான பொறியியல் அதிசயம் நடந்திருக்கிறது.
1880 மீட்டர் உயரத்திலிருந்த டாப் ஸ்டேஷனிலிருந்து 1200 மீட்டர் உயரத்திலிருந்த குரங்கணி வரை கிட்டத்தட்ட 5,6 கி.மீட்டர்கள் ரோப்வே போடப்பட்டு, பெரிய சரக்குவண்டியில் தேயிலைச் சாக்குகள் மற்றும் பிற பொருள்களை அனுப்பினர். மேலிருந்து தேயிலை கீழே இறங்க, கீழிருந்து வாழை, மசாலா, காய்கறி போன்ற பொருள்கள் மேலே அனுப்பப்பட்டன. குரங்கணியிலிருந்து மாட்டு வண்டிகள் மூலமாக போடிநாயக்கனூர் இரயில் நிலையம் சென்றடைந்த தேயிலை, பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இங்கிலாந்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
டாப் ஸ்டேஷன் கேரளா தமிழ்நாடு எல்லைப்பகுதியில் இருந்த குண்டலா பள்ளத்தாக்கு ரயில்வேயின் கடைசி நிலையமாகவும் கொட்டக்குடி ஏரியல் ரோப்வேயின் மேல்நிலை நிலையமாகவும் இருந்ததால் டாப்ஸ்டேஷன் என்ற பெயரால் அறியப்பட்டது. கேரளா – தமிழ்நாடு இருபுறமும் பரிமாற்றப் புள்ளியாக டாப் ஸ்டேஷன் செயல்பட்டிருக்கிறது. கொட்டக்குடி கிராமம் வான்வழி ரோப்வேயின் கீழ் நிலையமாக இருந்ததால் அதற்கு பாட்டம் ஸ்டேஷன் என்ற பெயரும் உண்டு. குண்டலா பள்ளத்தாக்கு ரயில்வே 1924 ல் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் முற்றிலுமாக அழிந்து போனது. கொட்டக்குடி ஏரியல் ரோப்வே 1950 வரை செயல்பட்டிருக்கிறது. இன்று ரோப்வே இல்லை என்றாலும், அதன் கம்பம் அடித்த காங்கிரீட் அடித்தளங்கள் மற்றும் சில இரும்புத்தூண்கள் குரங்கணிப்பாதை மற்றும் டாப் ஸ்டேஷனில் காணப்படுகிறதாம்.

இத்தகைய தேயிலைப்புரட்சி ஏற்படக் காரணமாயிருந்த மன்றோ, பின்னாட்களில் ஏலக்காய் துறையின் மேற்பார்வையாளராக பதவி வகித்து, பிப்ரவரி 18, 1895-ம் ஆண்டு இறந்தார். அவரது விருப்பத்திற்கேற்ப, அவரது அன்புக்குதிரை டௌனி என்ற வெள்ளைக்குதிரையும் குட்டிக்கானம், பீர்மேடு செயின்ட் சார்ஜ் சிஎஸ்ஐ தேவாலயத்தில் அவரது கல்லறைக்கருகில் புதைக்கப்பட்டது.

1964 ல் ஜேம்ஸ் ஃபின்லே டாடா குழுமத்துடன் இணைந்து டாடா ஃபின்லேவை உருவாக்கினார். இது இறுதியில் டாடா டீ லிமிடெட் ஆக மாறியது.
தமிழ்நாடு – கேரளா மலைப்பகுதிகளில் விளைந்த தேயிலை தமிழ்நாட்டுக்குள் நுழைந்து உலகமெங்கும் பரவக் காரணமாக இருந்த குரங்கணி – டாப் ஸ்டேஷன் வழித்தடம், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்விலும் தேயிலை வர்த்தகத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த பாதையாகக் கருதப்படுகிறது. தேனி, குரங்கணி, கம்பம், கூடலூர், உத்தமபாளையம் போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மலையோர சூழலை அறிந்தவர்களாகவும் தோட்ட வேலைகளில் அனுபவம் பெற்றவர்களாகவும் இருந்ததினால், பெரும் எண்ணிக்கையில் தோட்டத்தொழிலாளர்களாக, தேவிக்குளம், மூணார், ஆனைமுடி போன்ற பகுதிகளுக்கு இந்த வழித்தடத்தில்தான் கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்களைத்தவிர, 1871-ம் ஆண்டு முதல் பல்வேறு காலகட்டங்களில் தமிழகத்தின் பலபகுதிகளிலிருந்தும் ஐந்துக்கும் பத்துக்கும் ஆசைகாட்டி முன்பணம் கொடுத்து இந்தப்பாதை வழியாகத்தான் தொழிலாளர்களை மூணாறுக்கு அழைத்துச் சென்றார்கள். இன்றைக்கே இந்த எஸ்டேட்களில் கடுமையான குளிர் என்றால், 145 ஆண்டுகளுக்கு முன்னால்? கற்பனை செய்ய முடியாத குளிர்.
மிகுந்த மழை, அதிக குளிர், ஈர நிலம் உடல் உழைப்புக்கு சவாலான சூழ்நிலை, குழந்தைகளை விட்டுச்சென்ற மலைத்தோட்ட தொழிலாளர் பெண்களின் வலி, தனிமை என தேயிலையின் வரலாறு எந்த தேசத்திலும் சோகம்தான். பெண்கள் எதிர்கொண்ட துயர வாழ்க்கை தனிக்கதை. தோட்ட வேலைக்காக கேரளாவிற்குள் நுழையும் பெண்கள், குழந்தைகளை தாயம்மாவிடம் (தாயின் அம்மா) அதாவது குழந்தையின் பாட்டியிடம் விட்டுச்செல்வது வழக்கம். குழந்தையை சிறு வயதில் விட்டு சென்று புதிய வாழ்க்கையைத் தொடங்கும் தாயின் வலி மிகக் கடுமையானது.
குழந்தைகளை வளர்க்க ஏற்ற வசதிகள் இல்லாமை ஒருபுறம், வாழ்வாதாரம் மறுபக்கம் என இருமுனைத் துயரத்தில் பெண்கள் வதைபட்டனர். பசிக்கு அழும் குழந்தையை தாயம்மாவின் கையில் ஒப்படைத்து விட்டு, மலைத் தோட்டத்திற்குச் செல்வது போன்ற சோகம் என்ன இருக்க முடியும்? அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கண்ணீரில் நனைந்தன… பனிக்காற்று அவளது கண்ணீரோடு கலந்து அந்த மரங்களைத் துளைத்தது.
‘மதியத்தில் பனிக்காற்று
மடியில் இல்லை செல்லக் குழந்தை
தாயம்மா பிடித்த கையை நினைத்தபடி
தடுமாறி நடந்தேன் தோட்ட வழியிலே…’
தேயிலைக்காடுகளுக்குள் அசரீரியாய் ஒலித்துக்கொண்டிருந்தது ஒரு குரல்.
முதல் தலைமுறை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் சென்ற வழித்தடமான இந்தப் பாதையை (குரங்கணி – முதுவாக்குடி – டாப் ஸ்டேஷன் வழித்தடத்தை) பாரம்பரிய பாதையாக அறிவிக்கக்கோரியும் சாலை வசதிகள் வேண்டியும் பல்வேறு அமைப்பினரால், பலவிதமான போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கெட்டி தட்டிப்போன அரசு இயந்திரத்தின் ஒரு ஆணியைக்கூட எவராலும் அசைக்க முடியவில்லை. வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வுகள் நடத்தி சாலை போடுவதற்காக, 1989-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டியதுடன் தங்கள் கடமை முடிந்ததாக ஒதுங்கிக்கொண்டது.
ஒவ்வொரு தேர்தலுக்கும் குரங்கணி – டாப் ஸ்டேஷன் சாலையை வாக்குறுதிகளாக வழங்கி வாக்குகளை அறுவடை செய்ய மட்டும் எந்த அரசியல் கட்சியும் தவறுவதில்லை. இன்னும் தேனி வாழ் மக்களின் இந்தக் கனவுப்பாதை கற்பனையிலேயே இருக்கிறது.
அப்படி என்ன தேவை இந்தப் பாதைக்கு…?
டாப் ஸ்டேஷனை சுற்றிலுமுள்ள எல்லப்பை, குண்டலை, சிட்டிவாரை, வட்டவடை, செருவாரை, மாட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 26 நிறுவனங்களைச் சேர்ந்த தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. போடி, தேவாரம், சிலமலை, சின்னமனூர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த சுமார் 6,000 பேர் பல தலைமுறைகளாக அங்கு பணிபுரிந்து வருகின்றனர். குடும்ப விழாக்களுக்கும் பண்டிகைக் காலங்களிலும் மட்டுமே சொந்த ஊருக்கு வரும் இவர்கள், வனப்பகுதியில் உள்ள அனுமதியற்ற ஒற்றையடி வனப்பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். மழை, இரவு, வன விலங்குகள் என அச்சம் சூழ்ந்ததாகவே இருக்கிறது இவர்களது பயணம்.
பொருளாதார ரீதியாகவும் இந்தப் பாதையின் அவசியம் இருக்கிறது. இந்த சாலை போடப்பட்டால், மூணாறிலிருந்து டாப்ஸ்டேஷன் வரையுள்ள 33 கி.மீ தூரமும் விளையும் முட்டைக்கோசு, கேரட், சௌ சௌ, பீன்ஸ் போன்றவற்றை மிக எளிதாக போடிக்கு கொண்டுவந்து நல்ல விலைக்குக் கொடுக்க முடியும். சுற்றுலாப் பயணிகள் மூணாறு வழியாக டாப் ஸ்டேஷனுக்கு பயணிப்பதால், அருகிலுள்ள கேரளா அதிக வருவாயை ஈட்டுகிறது. இது ஒரு நல்ல சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டால், தமிழ்நாட்டின் வருவாய் பெருகும். குரங்கணி டாப் ஸ்டேஷன் பகுதியை 14 ஆண்டுகளுக்கு முன் ‘ஸ்பைசஸ் சுற்றுலாத் தலமாக’ அறிவித்து வளர்ச்சிப்பணிகள் நடந்தது. சுற்றுலா பயணிகள் ரோப்காரில் பயணிக்கும் வகையில் ரோப்கார் அமைத்திட டாடா கம்பெனி அனுமதி கோரியது. ஆனால் இன்றுவரை அதுவும் கிடப்பில் கிடக்கிறது.
மழை வலுத்து, இருட்டத் தொடங்கியதால், வீடு திரும்ப எத்தனிக்கிறோம். மீண்டும் ஜன்னல் வழியாக துணைக்கு வருகின்றன மலைகள்! ஆயிரமாயிரம் கதைகள் கொண்ட மலைகள். அந்த மலைக்காடுகள் எழுப்பும் ரகசிய ஓசையினூடே தனித்துக் கேட்கிறது தாயம்மாவின் இடுப்பில் நிற்கும் குழந்தைகளின் அழுகுரல்கள். மலைச்சிகரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கும் பனிக் கதம்பங்களில் அடர்ந்து நிற்பது ஆற்றுநீர் மட்டுமல்ல; லட்சக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வியர்வையும்தான்…
200 ஆண்டுகள் பின்னோக்கி பயணித்த களைப்பில் மனம் சோர்கிறது. வீடு திரும்பும்போது கொட்டக்குடியில் குடித்த தேநீர், வழக்கத்திற்கு மாறாக கசக்கத் தொடங்குகிறது.
தொடரும்…
படைப்பாளர்
ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன.
‘போர்களின் தேசத்தில்’ என்ற பயணக் கட்டுரை நூல் அவரது பயண அனுபவங்களைப் பேசுகிறது. இது தவிர, ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் ‘குட்டிப் பெண்களின் பெரிய கதைகள்’ என்ற சிறார் பற்றிய சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், சிறார் எழுத்து, கல்வியியல் கட்டுரைகள் என பல தளங்களில் எழுதும் ஆற்றல் மிக்கவர். ‘தேனி – பண்பாடு, வரலாறு, வாழ்வியல்’ இவர் ஹெர் ஸ்டோரீஸ் வலைதளத்தில் எழுதும் ஆறாவது தொடர் ஆகும்.
சான்றுகள்
கண்டி சீமையிலே -2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு தொடர்
Theplantersbbungalows.com – History of Munnar
The high ranges of Travancore – By J D Munro, publication 1880
Tracing a New Era: History of Plantation in Munnar – Research Paper in Mahatma Gandhi University, Kottayam.
Vibemunnar.com
Geographical and statistical memoir of the survey of the Travancore and Cochin States




