செல்லப்பிள்ளை 1955 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இப்படம் தெலுங்கு மொழியில் “வதினா” என்ற பெயரில் அதே ஆண்டு நாகேஸ்வர ராவ் நடித்து வெற்றிகரமாக ஓடியிருக்கிறது.
எழுத்து இவ்வாறு போடுகிறார்கள்.
ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரித்த
கே ஆர் ராமசாமி நடித்த
செல்லப்பிள்ளை
இயக்கம் எம். வி. ராமன்
தயாரிப்பு ஏ. வி. மெய்யப்பன்
கதை திரைக்கதை ஜாவர் சீதாராமன் .
சங்கீதம் ஆர்.சுதர்சனம்
பாடியோர் டி. எஸ். பகவதி, சுசீலா, ஜிக்கி, டி. எம். சௌந்தரராஜன்
கே ஆர் ராமசாமி
டி. எஸ். பாலையா
கே. ஏ. தங்கவேலு
பி. ஆர். பந்துலு
ஜாவர் சீதாராமன்
சாவித்திரி
கண்ணாம்பா
பண்டரிபாய்
இயக்கம் எம்.வி.ராமன்
பெற்றோர் இல்லாத மணி அவனது அண்ணன் அண்ணியிடம் வளர்க்கிறான். அண்ணன் கண்டிப்புடன் வளர்த்தாலும் அண்ணி செல்லம் கொடுத்துக் கெடுகிறார். இப்படியே மணி வளர்ந்து வாலிபனாகிறான். சூதாட்டம் அடிதடி என வாழ்க்கைத் தொடருகிறது. திருமணம் செய்து வைத்தால் திருந்துவான் என்கிறார் அண்ணி. ஏன் நான்கு குழந்தைகள் பிறந்தபின் திருந்தட்டும் என அண்ணன் கேலி செய்கிறார். மணியின் முறைப்பெண் அஞ்சலையைத் (பண்டரிபாய்) திருமணம் செய்து வைக்கலாம் என அண்ணி சொல்கிறார். மணிக்கு நடனப் பெண் லலிதாவின் (சாவித்ரி) உறவு ஏற்படுகிறது. லலிதாவிற்கு திரைப்பட நட்சத்திரமாக மாற வேண்டும் என்பது கனவு.
இந்தக்காலகட்டத்தில் அஞ்சலையின் ஒரே ஆதரவாக இருந்து வந்த அம்மாவும் இறக்க அஞ்சலை இங்கு வருகிறார். திருமணமும் நடக்கிறது. மணி, முதல் நாளே அஞ்சலையிடமிருந்து நகையை வாங்கிக் கொண்டு சாதுரியமாகப் போலி நகையைக் கொடுக்கிறான். பின் அண்ணியை ஏமாற்றி கைநாட்டு பெற்றுக் கடன் பெருகிறான். அண்ணன் வேலை செய்யும் கடையில் திருடுகிறான். அதன்பிறகு வீட்டிற்கு வருவதில்லை. வெளியில் பங்களா வாசம். இப்படி அவன் காலம் கழிகிறது.
இவை எதுவுமே அண்ணனுக்குத் தெரியாது. அண்ணன் வேலையில் இருந்து துரத்தப் படுகிறார். அண்ணியின் கையெழுத்தை வைத்து வீட்டின் மேல் வாங்கிய கடனிற்காக அண்ணனைக் கடன்காரர் நெருக்குகிறார். இந்த நேரம் மணி இருக்குமிடம் அண்ணனுக்குத் தெரிகிறது. அண்ணன் சென்றால், மிகவும் அன்பாக நடந்து கொண்டு பணம் கொடுத்து அனுப்புகிறான். ஆனால் கொடுக்கப்பட்ட பணம் கள்ள நோட்டு.
அதனால் அண்ணன் கைது செய்யப்படுகிறார். அந்தப் பணம் யார் கொடுத்தது என அண்ணன் கடைசிவரை வாய் திறக்கவே இல்லை. தன் நகைகளை அஞ்சலை, லலிதாவின் அண்ணனிடம் விற்கிறார். ஆனால் அது போலி நகை.
வீட்டை விட்டு வெளியேறிய அஞ்சலைக்கு வேலை வேண்டும். லலிதா வீட்டிலேயே வேலைக்குச் சேருகிறார். வரும் திரைப்படத் தயாரிப்பாளர் அஞ்சலையை தேர்வு செய்துவிடக்கூடாது என நினைத்து ஆண் வேடமிடச் சொல்கிறார் லலிதா. அவரும் அவ்வாறே செய்கிறார். ஒரு இக்கட்டில் கணவனைக் காப்பாற்றுகிறார். கணவருக்காக சிறையும் செல்கிறார். மணி குற்றத்தை ஒப்புக்கொண்டு இரண்டு ஆண்டு தண்டனை பெறுகிறார். தண்டனை முடிந்து இன்பமாகக் குடும்பம் வாழுகிறது.
ஒரு பெண் தாயாக இல்லாமல் தாய் மாதிரி என வாழும் சூழ்நிலையில் வளர்க்கும் குழந்தைக்கு செல்லம் கொடுத்து அதுவே வினையாக முடிவது தான் கதை. இவ்வாறு சித்திகள் சிலர் கணவரின் குழந்தையை வளர்த்து சிக்கலுக்குள்ளாவதைப் பார்க்கலாம். கண்டித்தால் பிறர் என்ன சொல்லுவார்கள் என்ற தயக்கம் அவர்களைத் தண்டிக்கவிடாமல் தடுத்து விடுகிறது.
அடுத்து ‘கல்யாணம் கட்டிவைத்தால் திருந்துவான்’ எனச் சொல்லி ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழவைக் கெடுப்பது இப்படத்திலும் தொடருகிறது.
இவ்வாறு காலம் காலமாக சொல்லிக் கொண்டு இருந்தவர்களுக்குப் பாடம் எடுத்த படம் சமீபத்தில் வெளிவந்த “கட்டா குஸ்தி”. ஒரு நகைச்சுவைப் பகுதியில் ஒரு பெண் சொல்லுவார் “முப்பது வருஷமா தறுதலையா சுத்திகிட்டு இருந்ததுங்கள நம்ம தலையில கட்டி வச்சுட்டு பொண்டாட்டி வந்தா திருந்திடுவான்னு” சொல்லிட்டு திரியுதுங்க இந்த மாமியாருங்க. இதுகள திருத்துறதா நம்ம வேல? இதுக்குத்தான் நம்மள பெத்துப் போட்டாங்களா? முப்பது வருஷமா புள்ளைங்கள திருத்த முடியாம இதுகளெல்லாம் என்னத்த கழத்திச்சுங்க” என்பார். மொழி நடை வேண்டுமானால், தவறாக இருக்கலாம். ஆனால் இது உண்மை தானே!
நாடு நடக்கிற நடையிலே நமக்கே ஒண்ணும் புரியலே என்கிற பாடல்தான் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் AVM நிறுவனத்திற்குப் பாடிய முதல் பாடல் என ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். இந்தப் படத்தில் அவர் பாடிய மற்றுமொரு பாடலான ‘போடணும் குல்லா போடணும்’ பாடல் மிகவும் பிரபலமாக இருந்து இருக்கிறது. கர்நாடக சங்கீதம் பாடிக்காட்டிய போது நகைச்சுவை பாடல் பாடிக் காட்டச் சொன்னதாகவும் அது பிடித்துப் போக AVM அவர்கள் இந்த இரண்டு பாடல்களையும் கொடுத்ததாகவும் தொடர்ந்து தன்னை வாழ வைத்ததாகவும் நன்றியுடன் அந்த நேர்காணலில் நினைவு கூறுகிறார்.
சிறிதும் பெரிதுமாக இவரது பாடல்கள் நான்கு இப்படத்தில் உள்ளன. அவற்றில் மூன்று பாடல்கள் தங்கவேலுவிற்குப் பாடியிருக்கிறார். இப்பாடலை அவருடன் இணைந்து MS ராஜேஸ்வரி பாடுகிறார்.
நாடு நடக்கிற நடையிலே நமக்கே ஒண்ணும் புரியலே
நாகரீகத் தினுசுகளாலே நல்லது கெட்டதும் தெரியலே
லேடிகள் போடும் ரவிக்கைத் துணியில்
ஆடவரின் புஷ் கோட்டுகளாம்
ஆடவர் மாதிரி பெண்கள் மேலே
அங்கி நிஜாரு வேட்டிகளாம்
கலையைப் படிச்சவன் காத்தாப் பறக்கிறான்
காக்கா புடிக்கிறவன் காரில் பறக்கிறான்
குலமகள் ராகிக் கூழைக் குடிக்கிறாள்
கூறுகெட்டுப் போனவ கும்மாளம் கொட்டுறா
உதவி என்று பல நிதிகள் திரட்டுறான்
ஊராரை ஏச்சுப் புட்டு உண்டு களிக்கிறான்
இதம் பல பேசி எலக்ஷன் ஜயிக்கிறான்
பதவிக்கு வந்ததும் பச்சோந்தி யாகிறான்
கேளம்மா கேதார கெளளத்திலே
நடக்கும்போது நெளிய வேண்டாம்
குளிக்கும்போது பாடவேண்டாம் -நீ
கண்ணாடி முன் கைகால் முகம் அசைக்க வேண்டாம்
நெளிய வேண்டாம் பாடவேண்டாம் அசைக்க வேண்டாம்
டாம் டாம் டாம்
என்ன டாம் டாம் அடிக்கிறே
உண்மைய டாம் டாம் அடிக்கிறேன்
அப்படின்னா
அப்படின்னா இனிமே நீ
சினிமா இஸ்டராக முடியாது.
ஆ
லல்லி லல்லி
டாக்டர்
யார்ரா அவன் சோடா காத்து காத்து இதுல இருக்குது காத்து
…. இப்படி தங்கவேலு, சாவித்திரி உரையாடல் போகும் விதமான நகைச்சுவைப் பாடல் இது. கேதார கெளளத்திலே என்றால் என்ன எனப் பார்த்தால், கேதாரம் என்றால் இமய மலையாம். கெளளம் என்றால் என்ன எனத்தேடிப்பார்த்தால் கெளளக்குறவஞ்சி என ஒரு நூல் இருப்பது தெரியவந்தது.
“இந்தக் கெளளக்குறவஞ்சி என்னும் நூலினைப் பற்றிப் பெயரளவில்கூட இதுவரை பயன்படுத்தியதாக அறிய முடியவில்லை. இவ்வகையில் இந்த கெளளக்குறவஞ்சி என்பது கெளளமாபுரி என்னும் இடப்பெயரைக் கொண்டு எழுதப்பட்ட நூலாகும். இதில் பாட்டுடைத் தலைவனாக காசி விசுவேசரைப் பாடப்பட்டுள்ளது “ என்கிறது இந்நூல். விரும்பியவர்கள் இந்தச் சுட்டியைப் பயன்படுத்திப் படிக்கலாம்.
போடணும் குல்லா போடணும்
போடு போடுன்னு போடணும்
நாம நல்ல இருக்க நாடு மதிக்க
நைசாக தினுச மாத்தி போடணும்
குறிப்பு தெரிஞ்ச ஆளுங்க எல்லாம் குல்லா போடறாங்க
கூட்டம் கூட்டி நாட்டு மக்கள குல்லா போடறாங்க
செல்வாக்குள்ள ஆளுங்க எல்லாம் குல்லா போடறாங்க
அத சில்லறை பசங்க காப்பியடிச்சி மாட்டிக்கிறாங்க (இந்த இடத்தில் தங்கவேலு, கே ஆர் ராமசாமி அவர்களைக் காட்டுவது சிறப்பு?
நாம நல்ல இருக்க நாடு மதிக்க குல்லா போடணும்
வால மறிச்சு கோலம் போடணும்
வெள்ள கருப்பு சிவப்பு குல்லா விதவிதமா வாங்கணும்
வினயமாக சமயம் போல தினுச மாத்திப் போடணும்
மதியில்லா மனிதர்களும் பதவியில் வரவேணுமின்னா
ஊரும் பேரும் தெரியாதவன் ஊர்வலம் வர வேணுமின்னா
இடம் பொருள் ஏவல் பாத்து ஏமாந்த சமயம் பாத்து
இது சாதா குல்லா
இது ஜரிகை குல்லா
இது பட்டுக் குல்லா
இது பனியா குல்லா
இது பரம பாகவதர் போடும் குல்லா
பஜனை குல்லா -இது
பாட்டுக்கள் பாடி பக்தி பஜனை குல்லா
உலக மக்களை சமயம் பார்த்து
உதை கொடுப்பதொரு குல்லா
கலகம் செய்து கட்சியின் பெயரால்
காசு சேர்ப்பதொரு குல்லா
இப்பாடலை, டி.எம்.சௌந்தரராஜன், ஏ.எல்.ராகவன், பி.சுசீலா மூவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள். 1950 ஆம் ஆண்டு வெளியான விஜயகுமாரி திரைப்படத்தில் குமாரி கமலாவுக்காகப் பெண் குரலில் பாடி பாடகராக அறிமுகமான ஏ.எல்.ராகவன் பிற்காலத்தில் பெரும் புகழ் பெற்றப் பாடகரானது வரலாறு. ஆண்குரல் பாடலில் இது தான் முதல் பாடலா எனத் தெரியவில்லை.
கோவில் காளை நீயப்பா
கோமாளி குட்டிப்பாப்பா
கண் மூடி தூங்கப்பா
ஆராரோ ஆராரோ ஆராரோ
கைவசமப்பா புஜுபசவப்பா
கண்மூடி தூங்கப்பா
பாவ புண்ய விவகாரம்- அது
பரமசிவன் பாரம்
பணம் வட்டி வியாபாரம் -நம்ம
பாப்பாக்கு அதுவே போறும்
கைராசி உனக்கிருக்கு
கடன் கேட்க ஆளிருக்கு -இங்கே
தாலாட்ட நானிருக்கேன் -மனம்
தளராமே நீ தூங்கு
அணுகுண்டு போட்டாலும் அஞ்சாத இளம் சிங்கம்
குயில் ஒன்று கழுகைக் கண்டால்
துள்ளியே பயந்தோடும் -பாப்பா
எட்டு ஐஞ்சு வயசிருக்கும் -பாப்பா
புட்டியில பால் குடிக்கும்
தொட்டியில தான் தூங்கும் -ரொம்ப
கெட்டிக்காரன் போல் நடிக்கும்
மதன எழில் ராஜா நீ வாராய் இப் பாடலை இயற்றியவர் கவிஞர்.கு.மா.பாலசுப்பிரமணியம். ஆர்.சுதர்சனம் இசையில், ஜிக்கி பாடினார்.
இந்தப்பாடலை விட இதில் வரும் உரையாடல் என் மனதில் மிகவும் பதிந்து இருந்தது. சிறு நரம்பு இசைக்கருவியை பாலையா வாசிக்க, சாவித்திரி வளைந்து வளைந்து ஆடுகிறார்.
மதன எழில் ராஜா நீ வாராயோ
பருவமுதே பயனுமிதே இன்பம் தாராயோ
என்னைப்போல் ஒரு பெண்ணை உன்னுடைய
கண்ணால் கண்டதுண்டோ?
இளமை பேரழகும் எங்கும் வாய்ப்பதுண்டோ -வாழ்வில்
தருணமிதுவே பாராயோ கருணை புரிந்து வாராயோ
பருவமுதே பயனுமிதே இன்பம் தாராயோ
இப்போது நடிப்பிசைப்புலவர் கே ஆர் ராமசாமி வருகிறார்.
மின்னலிடையழகும் அன்ன நடையழகும் கண்டு
என பாடல் வரும்போது அவரை சாவித்திரி பார்த்து விடுகிறார். எச்சிலை விழுங்கியவாறே “நீங்களா” என்கிறார். அவர் துப்பாக்கியை நீட்டுகிறார்.
ஏன் நிறுத்தி விட்டாய் பாடு. ம்.
உடனே பாலையா அசடு வழிய பயம் கலந்து சிரிக்கிறார்.
அதற்கு பதிலாக வரும் வசனம் “ஏன் கோவேரிக்கழுதை போல் கனைக்கிறாய்? காதல் அகராதியில் இன்னும் பல ஏடுகள் புரட்ட வேண்டும் என சிந்திக்கிறாயா? குப்பை மேட்டில் முளைத்த காளானைப் போல் சிதறப்போகிறது உன்னுடைய சிந்தனை வீரம்.
சாவித்திரி வந்து “இல்லீங்க! ஒத்திகை! என சொல்ல
Shutup கற்பின் கலங்கரை விளக்கம் நீ! காதலின் பொதுக்களஞ்சியம் நீ! பாடியே சாகும் அன்ன பட்சி போல் நீ ஆடியே சாக வேண்டும். ம் ஆடு! என அவர் மேல் நோக்கி சுட, இப்போது பாடலின் வேகம் சூடுபிரிக்கும்.
மின்னலிடையழகும் அன்ன நடையழகும் கண்டும்… என பாடல் ஆடல் தொடரும். இப்போது சாவித்திரி களைப்படைந்து விடுவார்.
ஏன் காலால் இட்டதைத் தலையால் செய்த வந்த காதலன் இப்படி பேசுகிறானே என்று ஆச்சரியப்படுகிறாயா? ஊராரின் பேச்சை உதறித் தள்ளி, உன் பொருட்டு வீடு வாசல் வேண்டியவர்களை எல்லாவற்றையும் துறந்து உன் சந்தோஷ வாழ்வுக்காக சட்டத்தின் வரம்பையும் மீறி பணம் தேடிக்கொண்டு வந்த நாயகனா இப்படி பேசுகிறான் என்று சிந்திக்கின்றாயா ம் ஆடு! என பேச
என்னைப்போல் ஒரு பெண்ணை உன்னுடைய
கண்ணால் கண்டதுண்டோ?
இளமை பேரழகும் எங்கும் வாய்ப்பதுண்டோ -வாழ்வில்
என பாடல் மீண்டும் மீண்டும் தொடங்கும். சிறுவயதில் மிகவும் ரசித்துக் கேட்ட பாடல். குறிப்பாக “ஏன் கோவேரிக்கழுதை போல் கனைக்கிறாய்?” என்பதை சொல்லிச் சொல்லி சிரித்து இருக்கிறோம்.
மதனா எழில் ராஜா நீ வாறயோ
பருவமித்தே பயன் இதுவே
இன்பம் தாரையோ
என்னை போல ஒரு பெண்
உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ
இளமை ஒன்று அழகு
இனி என்றும் வைப்பதுண்டோ
வாழ்வில் என்றும் வைப்பதுண்டோ
தருணமிதுவே பாராயோ
கருணை புரிந்து வாரயோ
பருவமித்தே பயன் இதுவே
இன்பம் தாரையோ
மின்னல் இடை அழகு
அன்ன நடையழகும் கண்டு…
உரையாடல் :……………………
மின்னல் இடை அழகு
அன்ன நடையழகும் கண்டும் வெறுப்பதேனோ
உன்னையே நான் நினைத்தே
மனம் உருகுதல் சரிதானோ
மனமும் உருகுதல் சரிதானோ
தருணமிதுவே ….தாரையோ
உரையாடல்: ………….
என்னை போல ஒரு பெண்
உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ
இளமை ஒன்று அழகு
இனி என்றும் வைப்பதுண்டோ
வாழ்வில் என்றும் வைப்பதுண்டோ
உரையாடல்: …
என்னை போல … வைப்பதுண்டோ
பி. சுசீலா குழுவினர் பாடிய பாடல் இது
தன்னாலே வரும் காசு
சொல்லாமல் போகும் காசு
என்றும் கையில் நிற்கும் இக்கட்டு மூணு ஆசு
கண்ணை மூடி காசு போட்டால்
கை நிறைய நோட்டு வரும் ஆட்டம் – சீட்டாட்டம்
தொடரும்…
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.




