அவர் பெயர் சாலி ரைட். விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண்மணியான இவருக்கு 1983ஆம் ஆண்டில் இந்த வாய்ப்பு கிடைத்தது. இதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் வாலண்டினா தெரஷ்கோவா விண்வெளிக்குச் சென்றுவிட்டார், விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் என்கிற புகழையும் பெற்றுவிட்டார். ஆனால், அமெரிக்காவில் பெண்களை விண்வெளிக்கு அனுப்புவதில் பெரிய அளவில் தயக்கம் நிலவியது. இத்தனைக்கும் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் விண்வெளிப் பந்தயம் உச்சகட்ட வேகத்தில் நிகழ்ந்துகொண்டிருந்த காலக்கட்டம் அது. ரஷ்யரான யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற பிறகு, இருபத்தி மூன்றே நாட்களில் எட் வைட் என்பவரை விண்வெளிக்கு அனுப்பியது அமெரிக்கா. இவ்வளவு போட்டி நிலவியபோதிலும் பெண்கள் என்று வரும்போது அமெரிக்கா யோசித்தது. தன் தரப்பிலிருந்து ஒரு பெண்ணை அனுப்ப 20 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.

இதற்கு முதலாவது காரணம் அப்போது இருந்த கட்டுப்பாடுகள். அமெரிக்க விமானப்படையில் விமான ஓட்டிகளாக இருப்பவர்கள் மட்டுமே விண்வெளி வீரர்களாகப் பயணிக்க விண்ணப்பம் செய்ய முடியும். ஆனால், விமானப் படையிலோ பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆகவே பெண்களால் விண்ணப்பமே செய்ய முடியவில்லை. 1972ஆம் ஆண்டில்தான் இதற்கான சட்டங்கள் தளர்வாக்கப்பட்டன. பெண்களுக்கும் விண்ணப்பம் அனுப்ப வாய்ப்பு கிடைத்தது. இதில் ஓர் அபத்தமான சுவாரசியம் என்னவென்றால், பிற தகுதிகள் எல்லாம் இருந்தால், ’விமான ஓட்டியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் விண்வெளிக்குச் செல்லலாம்’ என்று  பல ஆண் விண்வெளி வீரர்களுக்கு அமெரிக்கா சலுகை வழங்கியிருந்தது! ஆனால், பெண்களுக்கு இந்தத் தளர்வு வழங்கப்படவில்லை.

அடுத்த காரணம் நாம் எளிதில் ஊகிக்கக்கூடியதுதான். பெண்களால் இதைச் செய்ய முடியாது என்கிற பொதுவான எண்ணம். ’விண்வெளிக்குப் பெண்கள் செல்வார்கள் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை’ என்று அப்போதைய ஒரு நாசா விஞ்ஞானி கருத்துத் தெரிவித்திருந்தார். ’பெண்களை விண்வெளிக்கு அனுப்புவது தேசிய அளவில் முக்கியத்துவம் கொண்ட செயல்பாடா என்ன?’ என்று அலட்சியமாக ஓர் அதிகாரி கேட்டிருக்கிறார்.

ஒருவழியாகத் தடைகளையெல்லாம் மீறி 1983இல் சாலி ரைடுக்கு விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விண்வெளிப் பயணத்துக்கு முன்னால், நாசா குழுவினரும் ஊடகங்களும் சாலியை எப்படி நடத்தினார்கள் என்பதை அறிந்துகொண்டால் உங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கும்.

“விண்வெளியில் நீங்கள் இருக்கும்போது உங்களுக்கான அழகு சாதனப் பொருட்கள் கொண்ட ஒரு பெட்டியை உருவாக்கப் போகிறோம், அதில் என்னவெல்லாம் வைக்கலாம்? நீங்கள் உதவுங்கள்…”

“ஆறு நாட்கள் விண்வெளியில் இருக்கப் போகிறீர்கள், நூறு டேம்பான் (ஒருவகை மாதவிடாய் நாப்கின்) போதுமா?”

இவை இரண்டும் நாசா குழுவினர் அவரிடம் கேட்ட கேள்விகள். மாதவிடாய்ப் பொருளைப் பற்றித் தெரியவில்லை என்பதைக்கூடப் புரிந்துகொள்ள முடிகிறது. ’விண்வெளியில் இருக்கும்போது அழகு சாதனப் பொருள் தேவைப்படும்’ என்கிற குழுவினரின் எண்ணமும், அதற்குப் பின்னால் இருக்கும் பெண்கள் பற்றிய புரிதலும் அலுப்பூட்டுகின்றன.

சாலி ரைட்

வழக்கமாக சோவியத் யூனியனைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை Cosmonauts என்றும் அமெரிக்க விண்வெளி வீரர்களை Astronauts என்றும் அழைப்பார்கள். பெண் விண்வெளி வீரர்களின் படத்தைப் போட்டு, அதற்குக் கீழே, ’Glamonauts’ என்று பத்திரிகைகள் எழுதின- ’கவர்ச்சிகரமான விண்வெளி வீரர்கள்’ என்று இதைப் புரிந்துகொள்ளலாம். ஆண்கள் விண்ணுக்குச் செல்லும்போது வராத ’கவர்ச்சி’ என்கிற சொல், பெண்களைப் பற்றிப் பேசும்போது உடனே தலைதூக்கிவிட்டது. பத்திரிகையாளர் சந்திப்புகளில் சாலி ரைட் எதிர்கொண்ட கேள்விகள் அப்போது நிலவிய பெண் வெறுப்பு மனநிலையைத் துல்லியமாக வெளிப்படுத்தின.

’பயணத்தில் ஏதாவது சரியாக நடக்கவில்லை என்றால் நீங்கள் அழுவீர்களா?’

’உங்களுடைய இனப்பெருக்க உறுப்புகளை விண்வெளிப் பயணம் பாதிக்குமா?’

’பயணத்துக்காக என்ன அழகுசாதனப் பொருட்களை எடுத்துச் செல்வீர்கள்?’ – என்பது போன்ற கேள்விகள் வந்தன.

இந்தக் கேள்விகளை நினைத்துப் பார்க்கும்போது இன்னொரு புகழ்பெற்ற சம்பவம் நினைவுக்கு வருகிறது. அவெஞ்சர்ஸ் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகப் பல பத்திரிகையாளர் சந்திப்புகள் நிகழ்ந்தன. சூப்பர் ஹீரோக்களாக நடித்த ஆண் நடிகர்களிடம், ’எப்படிப்பட்ட உடற்பயிற்சிகள் செய்தீர்கள்? சண்டைப் பயிற்சிகள் பலமுறை நடந்தனவா? உங்களின் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்டீர்களா? எப்படிப்பட்ட காட்சிகளுக்கு டூப் நடிகர் தேவைப்பட்டார்?’ என்பது போன்ற கேள்விகளைக் கேட்ட ஊடகங்கள், படத்தின் ஒரே பெண் சூப்பர் ஹீரோவான ஸ்கார்லட் ஜொஹான்சனிடம், ’உங்களின் சூப்பர்ஹீரோ உடைக்கு அடியில் உள்ளாடை அணிந்திருந்தீர்களா?’ என்று கேட்டிருக்கிறார்கள். சர்ச்சைக்குரிய கேள்விகளைக் கேட்டு பார்வையாளர்களிடம் கவன ஈர்ப்பைப் பெறும் ஒரு செயல்பாடாக மட்டுமே இதை ஒதுக்கிவிட முடியாது. கவன ஈர்ப்புதான் தேவை என்று வைத்துக்கொண்டாலும் அதைச் செய்ய வேறு எவ்வளவோ கேள்விகள் இருக்கின்றன, உள்ளாடையைப் பற்றிக் கேட்டுத்தான் சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்பதில்லை. பெண்கள் பொதுவெளிக்கு வரும்போது எதிர்கொள்ளும் அவதூறான, அவமரியாதையான சூழலை இவை எடுத்துக் காட்டுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்னால் கருந்துளையின் முதல் ஒளிப்படத்தைப் பற்றிய ஒரு செய்தி வந்தது நினைவிருக்கலாம். இந்த நிகழ்வின்போது புகழ்பெற்றவர் கேட்டி பௌமன். கருந்துளை ஒளிப்படத்துக்கான அல்காரிதத்தை உருவாக்குவதில் இவர் முக்கியப் பங்காற்றியிருந்தார். முனைவர் பட்டம் பெற்றவரான இவர், கருந்துளை ஒளிப்படம் கிடைத்த பிறகு தன்னுடைய வியப்பைக் காட்டும்படி அந்தத் தருணத்தை ஒளிப்படமாகப் பகிர்ந்திருந்தார். அந்த நொடியிலிருந்து சீறிப் பாயந்தது சமூக ஊடகப் புயல். ’இது பல பேரின் கூட்டு முயற்சி’ என்று கேட்டி தொடர்ந்து சொல்லியிருந்தாலும், அவர் மட்டுமே இதைச் சாதித்தது போன்ற ஒரு கோணத்தில் தாமாகவே ஊடகங்கள் செய்திகளை எழுதிக்கொண்டன. இந்த அரைகுறைத் தகவலை இன்னும் அரைகுறையாகப் புரிந்துகொண்ட சமூக வலைதளவாசிகள், ’ஆண்ட்ரூ சேல் என்பவர்தான் இந்த அல்காரிதத்தை எழுதினார். இந்தச் சின்ன பெண் அவருடைய சாதனைகளைத் தன்னுடையதுபோல காட்டிக்கொள்கிறார்’ என்று எழுதத் தொடங்கினார்கள். முனைவர் பட்டம் பெற்றவரான கேட்டியைச் சாதாரண ஓர் உதவியாளராகச் சித்தரித்தனர். ’ஒரு ஆண் எல்லா வேலைகளையும் செய்து இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் அதை மறைத்து, ஒரு பெண் என்பதாலேயே கேட்டியைப் புகழ்கிறார்கள்’ என்றனர்.

கேட்டி

ஒருகட்டத்தில், அவரின் பெயரை கூகுளில் தேடினாலே, ’கேட்டி சொன்ன பொய்’ என்பது போன்ற கட்டுரைகள் முதலாவதாக வரும் அளவுக்கு இது மோசமானது. அவர் பெயரில் போலிக்கணக்குகள் உருவாக்கப்பட்டன. அவர் சொன்ன ’பொய்’ எவ்வளவு மோசமானது என்பதை விளக்கும் பல வீடியோக்கள் யூடியூபில் பதிவேற்றப்பட்டன. இதில் சம்பந்தப்பட்டிருந்த ஆண்ட்ரூ செல், ’இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வின் மையமாக ஒரு பெண் இருக்கிறார் என்பது பலருக்குப் பிடிக்கவில்லை, அதனால் இப்படிச் செய்திருக்கிறார்கள். இது பலரது கூட்டு முயற்சி, இதைக் கேட்டியும் சொல்லியிருக்கிறார். ஆகவே என் சக விஞ்ஞானி மீது இப்படிப்பட்ட அவதூறுகள் வருவதை நான் ஏற்கவில்லை’ என்று பேட்டி கொடுக்க வேண்டியிருந்தது. அதன் பிறகு சத்தம் ஓய்ந்தது. ஆனால், இவையெல்லாம் கேட்டிக்கு எப்படிப்பட்ட மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஒருவரின் செயல்பாடு பிடிக்கவில்லை என்றாலோ கருத்துகளுடன் முரண்பட்டாலோ எதிர்கருத்து வைக்காமல் அவரின் பின்னணி, தகுதி எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தி, அவரின் பொது பிம்பத்தையே தீக்கிரையாக்குவதுதானே சமூக ஊடகங்களின் நிதர்சனம்? 2020ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப அற வல்லுநர் டிம்னிட் கெப்ருவுக்கும் அதுதான் நிகழ்ந்தது. கூகுளின் மொழிசார் மாதிரிகளில் இருக்கும் அறச்சிக்கல்கள் பற்றி இவர் ஒரு விரிவான ஆய்வுக்கட்டுரை எழுதினார். இதைப் படித்த கூகுள் நிர்வாகம் இந்தக் கட்டுரையைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியது. ’கட்டுரையை மறு ஆய்வுக்கு உட்படுத்திய குழுவினரின் பெயர்களைச் சொல்லுங்கள்’ என்று டிம்னிட் கேட்க, தகவல் தர மறுத்துவிட்டு, ’அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்கிறோம்’ என்று பொய்யாக வெளியில் சொல்லிவிட்டு அவரைப் பணிநீக்கம் செய்தது கூகுள்.

டிம்னிட்

இது ஒரு பணியாளருக்கும் நிறுவனத்துக்கும் இடையிலான பிரச்னையாக அங்கேயே முடிந்திருக்க வேண்டும். ஆனால், சமூக ஊடகங்கள் குறுக்கே வந்து ஆக்கிரமித்துக் கொண்டன. கூகுளின் சில அதிகாரிகள், ’அவரின் ஆயுக்கட்டுரை அறிவியல்பூர்வமானது அல்ல’, ’இதில் போதுமான ஆய்வு மேகொள்ளப்படவில்லை’, ’பிரச்சாரத்தை அறிவியல்போல எழுதியிருக்கிறார்’ என்றெல்லாம் சமூக வலைதளங்களில் எழுதி ட்ரோல்களை முடுக்கிவிட்டார்கள். ’பாதிக்கப்பட்டவர் போலத் தன்னைக் காட்டிக்கொள்கிறார்’, ’சுமாரான ஆய்வுக்கட்டுரை’ என்பதுபோல மெதுவாகத் தொடங்கிய உரையாடல், ’ஆப்ரிக்காவுக்குத் திரும்பிப் போ’ என்பதில் வந்து  நின்றது. கறுப்பினத்தவரான டிம்னிட்டை நேரடியான இனவெறி வார்த்தைகளால் தாக்கத் தொடங்கினார்கள், அடுத்த கட்டமாக மோசமான சொற்கள் வரத் தொடங்கின. வேறு எந்தப் பதிவுமே இல்லாமல் டிம்னிட்டைத் தாக்கும் பதிவுகளை மட்டுமே கொண்ட பல புதிய சமூக வலைதளக் கணக்குகள் முளைத்தன. மிக மோசமான சமூக வலைதளத் தாக்குதலை டிம்னிட் எதிர்கொண்டார். இன்னொருபுறம் கூகுளின் பிற பணியாளர்கள் டிம்னிட்டுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதித்ததோடு, இந்நிறுவனத்துக்குள் இருக்கும் பாரபட்சத்தையும் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தார்கள். சுந்தர் பிச்சை நேரடியாகத் தலையிட்டு, பொது மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது. ஆனால், இது நடப்பதற்குள் டிம்னிட்டைச் சமூக வலைதளம் குற்றவாளிக் கூண்டிலேற்றி மோசமான வசைகளைத் தண்டனையாகக் கொடுத்திருந்தது.

இணையதளங்களில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகமான ட்ரோல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பல ஆய்வுக் கட்டுரைகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. ஸ்டெம் துறைகளில்  உள்ள பெண்களைப் பற்றிப் பேசும்போது அவர்களின் புறத்தோற்றத்துக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றன என்று மெவினா சிம்பாவும் ஜென்னி கிஸ்ஸிங்கரும் 2009இல் வந்த ஓர் ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்தார்கள். சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்கும்போதோ பிரச்னைகளில் சிக்கும்போதோ ஆண்களும் மோசமான ட்ரோலை எதிர்கொள்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு வரும் விமர்சனங்கள் பாலின வெறுப்பு நிறைந்தவையாகவும் அவர்களின் புறத்தோற்றத்தின் மீதான மிக மோசமான வசைகளாகவும் இருப்பதில்லை, இது பெண்களுக்கே அதிகம் நடக்கிறது. இதைப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பல பெண் விஞ்ஞானிகளிடம், ’உங்களுக்குப் பிடித்த லிப்ஸ்டிக் நிறம் என்ன?’, ’உங்களுக்குச் சமையல் செய்யப் பிடிக்குமா?’ என்று கேட்கப்படுகிறது. ஒரு பெண் விஞ்ஞானியின் கருத்துகளோடு முரண் ஏற்படும்போதெல்லாம் பெண் வெறுப்பு ஊடாடும் வசைகள் முன்வைக்கப்படுகின்றன. ஸ்டெம் துறைகளுக்குள்ளே சந்திக்கும் பாரபட்சத்தோடு மட்டுமல்லாமல், பொதுவெளியிலிருந்து வரும் இப்படிப்பட்ட அவதூறுகளையும் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது.

ஆராய்ச்சிக் கூடத்துக்கும் பொதுமக்களை நேரடியாக எதிர்கொள்வதற்கும் நடுவில் இன்னொரு களம் இருக்கிறது. அது என்ன களம்? அந்தக் களத்தில் ஸ்டெம் பெண்கள் என்னவாகப் பார்க்கப்படுகிறார்கள்?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’, ‘சூழலியலும் பெண்களும்’ ஆகிய தொடர்கள் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகங்களாகக் கொண்டாடப்படுகின்றன!