அந்த இடம் பார்க்க ஒரு சிறிய அறை போல இருந்தாலும், அது ஒரு மினி அருங்காட்சியகம். அதற்குள் பெரிது பெரிதாகப் பழங்காலத் தாழிகள், அரிசி புடைக்கின்ற முறங்கள், கருப்புக் கொம்புடன் ஒரு மாட்டுத் தலை, பழவேற்காட்டின் வரலாறைச் சொல்லும் வரைபடங்கள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

எல்லோரும் உண்ட மயக்கத்தில் இருந்ததால், நிவேதிதா அக்கா பழவேற்காட்டின் வரலாற்றுக் கதைகளை இப்போதைக்குச் சொல்வதா வேண்டாமா என்று தயக்கத்துடனே எங்கள் முகங்களைப் பார்த்தார்.

 “சொல்லுங்க சொல்லுங்க” என்று எங்கள் குழுவினரும் ஜோராக சம்மதம் தெரிவிக்க, அக்காவும் ஆர்வத்துடன் வரைபடங்களை எல்லாம் காட்டி விவரிக்கலானார்.

பிற்காலச் சோழர்களிடமிருந்துதான் பழவேற்காடு வரலாறு ஆரம்பிப்பதாக அந்த வரைபடத்தில் சொல்லப்பட்டாலும், சான்றுகள் என்னவோ விஜயநகரக் காலத்திலிருந்துதான் நமக்குக் கிடைக்கிறதாம். மேலும் ஆறு கிமீ தொலைவில் உள்ள திருப்பாலைவனம் திருபாலீஸ்வரர் கோயிலையும் அதற்குச் சான்றாகக் கூறுகிறார்கள். அந்தக் கோவில் பிற்காலச் சோழர்களின் காலகட்டமான பதினோராம் நூற்றாண்டில்  கட்டப்பட்டதாகவும் அந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பழவேற்காட்டில் உள்ள ஆதிநாராயணப் பெருமாள் கோயில் விஜயநகர ஆட்சிக்காலக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். அதாவது பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டு. பிறகுதான் போர்த்துகீஸியர்களும் டச்சுக்காரர்களும் உள்ளே வருகிறார்கள். அதுவும் டச்சுக்காரர்கள் மிகப்பெரிய கோட்டை ஒன்றை அங்கே கட்டமைத்துள்ளனர்.(Fort geldria)

அதேநேரம் போர்த்துகீஸியர்களின் வரவுக்குச் சான்றாக ஒரு பழமையான கிறிஸ்துவ ஆலயம் நமக்குக் கிடைக்கிறது. ஆனால் அங்கே டச்சுக்காரர்கள் ஆதிக்கம்தான் அதிகமாக இருந்துள்ளது. அதனை எடுத்துக் கட்டும் விதமாக அந்தக் கோட்டையின் வரைபடமே நம்மை வியக்க வைக்கிறது. ஆனால் இப்போதைக்கு அதன் எச்சங்கள் ஏதும் இல்லை. இருப்பினும் டச்சுக்காரர்களின் நானூறு வருட முன்கதையைச் சொல்கிறது அவர்களின் மயானப் பகுதி.

அது மட்டுமல்லாது அங்கு வாழும் முஸ்லீம்கள் எட்டாம் நூற்றாண்டிலேயே அரேபியாவிலிருந்து கடல் வழியாக இங்கே பயணம் செய்து வந்து குடியேறியவர்களாம். அழுத்தமான சான்றுகள் இல்லாவிட்டாலும் அது உண்மையாக இருக்கவும் வாய்ப்பு இருப்பதாகச் சொன்னார்.

மொத்தத்தில் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என மூன்று சமயங்களும் செழிப்பாக வளர்ந்த இடமாக பழவேற்காடு உள்ளது என்பதனை இதன் மூலம் அறிய முடிந்தது.

ஏற்றுமதி என்று பார்த்தால் ஊறுகாய்களும் வெளிநாடுகளிலிருந்து சாஸ் போன்ற பொருள்களும் இங்கே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதிலும் மிக முக்கியமாக டச்சுக்காரர்கள் கன் பவுடர் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளான சால்ட் பீட்டரையும் இங்கிருந்து ஊறுகாய் ஜாடிகளில் ஏற்றுமதி செய்துள்ளனர். மேலும் அவுரிவாக்கம் என்ற ஊர் அருகே உள்ளது. அதன் பெயர்க் காரணம் அங்கிருந்து நடைபெற்ற அவுரி (indigo) ஏற்றுமதியாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சுவாரசியமான இந்த வரலாறை எல்லாம் கேட்டு முடித்து, நாங்கள் அனைவரும் ரமணியில் ஏறிக் கிளம்பினோம். இந்த வரலாற்றுச் சின்னங்களைக் காண்பதற்கு முன்னதாக வேறு சில மனிதர்களைச் சந்திக்கும் திட்டம் இருந்தது.

ஓர் ஊர் என்பது அங்குள்ள கட்டிடங்கள் மட்டுமே கிடையாது. அவ்விடத்தை வாழ்விடமாகக் கொண்ட மனிதர்கள்தான். அதிலும் அவ்விடத்தின் பெண்களைச் சந்தித்துப் பேசுவது இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது எனலாம்.  

முன்பு பழவேற்காட்டு மீனவ சமூகத்தினரின் வாழ்க்கை முறையை ராஜலட்சுமி நமக்கு விவரித்தார் என்றால், பாத்திமா அவ்விடத்தின் கலைநுட்பமான மற்றொரு பக்கத்தைக் காட்டினார்.

பல வண்ணங்கள் தீட்டிய பனையோலைகளால் வேயப்பட்ட கூடைகள்தான் அவை. அதில் நிறைய வடிவங்களும் வகைகளும் இருந்தன. மிகப் பழமையான அந்தக் கலையைக் காப்பாற்றி வரும் அவர், அங்குள்ள பெண்களுக்கும் அதன் கலைநுட்பத்தைப் பயிற்றுவிக்கிறார். அதிலும் முஸ்லீம் பெண்கள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படாத காரணத்தால், வீட்டிலிருந்தபடியே கூடை பின்னும் இந்தத் தொழில் மூலமாக அவர்களின் வருமானத்திற்கு வழி செய்து கொள்கிறார்கள். சுயமாக நிற்கிறார்கள்.

நாங்கள் அனைவரும் பாத்திமா வீட்டு முகப்பறையில் நீள்வட்ட வடிவமாக அமர்ந்தோம். ஓரமாக உள்ள மேஜையில் கண்ணைக் கவரும் வண்ணங்களில் பனை ஓலைக் கூடைகள். எல்லோரின் பார்வையும் அதன் மீதுதான். போகும் போது எந்தக் கூடையை வாங்கலாம் என்று மனதிற்குள்ளே எல்லோரும் கணக்கு போடத் தொடங்கிவிட்டோம். அதன் பிறகுதான் பாத்திமா வந்தார். எப்படி இந்தப் பனையோலை கூடையைப் பின்னும் ஆர்வம் உண்டானது என்று அவர் கதையைக் கூறினார்.

அவருடைய ஊர் நாயுடுப்பேட்டை. இங்குத் திருமணமாகி வந்த பின், நேரம் போகாமலிருந்த சமயத்தில்தான் இந்தக் கூடைகள் செய்வதை அவர் கவனித்திருக்கிறார். அந்தச் சமயத்தில் வயதானவர்கள் சிலர் மட்டுமே இதனைச் செய்திருக்கிறார்கள். அவருக்கு இந்தக் கூடைகள் பின்னுவது மிகவும் பிடித்துப் போக, இதனை கற்றுக் கொண்டு, ஒரு சிறு தொழில்போல வீட்டிலேயே செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

பத்து வருடத்திற்கும் மேலாக இதனைச் செய்து வரும் பாத்திமாவிடம் இப்போது நூறு பெண்களுக்கும் மேல் பயிற்சி பெற்று, இந்த ஓலை கூடையைப் பின்னி வருகிறார்கள். இதற்குத் தேவையான பனையோலைகளை அவர்களே கிடைக்கும் இடங்களில் சென்று பெற்றுக் கொள்கிறார்கள். சார் ஓலை, குருத்து ஓலை என்று பனை ஓலையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வெள்ளையும் மற்றொன்று சற்றே பழுப்பு நிறத்திலும் இருந்தது. அவற்றைக் காய வைத்து மெலிதாகக் கத்திக் கொண்டு சீவிக் கொள்வதாகச் சொன்னார்கள்.

 ‘இது கையை வெட்டிவிடாதா?’ என்று கேட்டதற்கு,

‘வெட்டும்… ஆனா அதெல்லாம் அதன் நேர்த்தியை பழகுற வரைக்கும்தான்’ என்றார். மேலும் பிங்க், பச்சை, சிவப்பு என்று அந்த ஓலைகளுக்கு வண்ணமிடும் வண்ணப் பொடிகளையும் எங்களுக்கு எடுத்து வந்து காட்டினர். பட்டுப் புடவைகளுக்கு வண்ணமிடும் அந்தப் பொடிகள் பெரும்பாலும் சென்னையில்தான் கிடைக்குமாம். இந்த ஓலைகளின் வகைகளுக்கு ஏற்ப, அவற்றுக்கு வண்ணமும் கொடுக்கிறார்கள்.

‘இந்த கலர் எவ்வளவு நாளைக்கு இருக்கும்?’ என்று குழுவினர் சந்தேகம் கேட்டதற்கு எழுபது வருடப் பழமையான ஓலைப் பெட்டி ஒன்றை எடுத்துக் காட்டினார். அதன் மூடியில் கத்திரிப்பூ நிறம் இருந்தது. உள்ளே அஞ்சறைப் பெட்டி போல மூடிக்குள் மூடியாகப் பகுதிகள் பகுக்கப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

மேலும் இந்த பனையோலை கூடைகளை வாங்க நூறு முதல் ஆயிரம் வரையிலும் கூட அவர்களுக்கு ஆர்டர்கள் வருகின்றன. திருமணம், பிறந்த நாள் போன்ற விழாக்கள் நடத்துபவர்கள், விருந்தினர்களுக்குக் கொடுக்க பரிசுப் பொருளாக இந்தக் கூடைகளைக் கேட்டு மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். மிகச்சிறிய தொழிலை இத்தனை சிறப்பாக வளர்த்தெடுத்திருப்பது சாதாரண விஷயமில்லை. ஒரு வகையில் அழிந்து போக இருந்த ஓர் அற்புதமான கலையை அவர் அடுத்த சந்ததிகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.

வீட்டிலிருந்தபடி பெண்கள் தங்கள் திறமையின் மூலமாகச் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கும் பாத்திமா ஒரு சிறந்த தொழில் முனைவோர் ஆவார். மேலும் வீட்டிலிருந்தபடியே தொழில் செய்யும் அவ்வூர் மகளிர் குழுவிலுள்ள பெண்கள் சிலரையும் சந்தித்தோம்.

பழவேற்காட்டின் சிறப்பே கடல் உணவுகள்தான். அதனை மூலதனமாக வைத்து அந்த நான்கு பெண்களும் தங்கள் தொழிலைத் துவங்கி இருக்கிறார்கள். மீன் ஊறுகாய் மற்றும் இறால் ஊறுகாய்களைத் தயாரிக்கும் அவர்கள் அதனை அழகான கையடக்கமான பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கிறார்கள். மகளிர் குழுக்கள் மூலமாக இந்த யோசனை அவர்களுக்கு வந்த போதும் குழு மூலமாகக் கடன் எதுவும் வாங்காமல், தங்கள் சொந்தப் பணத்தையே முதலீடாகப் போட்டு ஊறுகாய் தயாரித்து விற்கிறார்கள்.

வரும் லாபத்தை அவர்கள் சேமிப்பில் வைத்து, பின்னர் தேவைப்படும் போது எடுத்துக் கொள்கிறார்கள். அதேநேரம் சுழற்சி முறையில் அந்தப் பணத்தை முதலீடாகவும் போட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் கதை எல்லாம் கேட்டு முடித்ததோடு அல்லாமல் அப்போதைக்கு இருந்த மொத்த ஊறுகாய் பாட்டில்களையும் நமது குழுவினர் ‘நான்’, ‘நீ’ என்று போட்டி போட்டு வாங்கிக் கொண்டோம்.

அடுத்த இடத்திற்குக் கிளம்ப இருந்த சமயத்தில் ரமணி இயங்க மறுத்து மக்கர் செய்தது.

“வண்டியை தள்ளுனாதான் ஸ்டார்ட் ஆகும்” என்று ஓட்டுநர் சொல்லிவிட்டார்.

 நம்முடைய பெண்கள் உடனடியாக வண்டியைத் தள்ள இறங்க முற்பட, அதற்குள் தோழர் கிருஷ்ணப்பிரியா, பிருந்தா சேது, காளி என சிலர் மட்டுமே அசால்ட்டாகத் தள்ளி, ரமணியை இயங்க வைத்துவிட்டார்கள்.

அடுத்தடுத்து  நாங்கள் பழவேற்காட்டின் பழமைகளைத் தேடிச் சென்றோம். அதில் முதல் இடம் டச்சுக் கல்லறை. கலைநயத்துடன் வாழ முடியும். ஆனால் கலைநயத்துடன் சாக முடியுமா? அங்கிருந்த ஒவ்வொரு கல்லறையையும் பார்த்த போது எனக்கு அப்படித்தான் தோன்றியது. அதுவும் உள்ளே நுழையும் போதே இரண்டு பக்கமும் எலும்புக் கூடுகள் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அன்பாக எங்களை வரவேற்றன.

உள்ளே வரிசையாகக் கல்லறைகள் இருந்தன. அதன் மீது குட்டி குட்டி அழகான சிற்பங்கள் மற்றும் அவர்கள் இறந்த வருடம், கூடவே டச்சு மொழியில் ஏதோ பெரிதாக எழுதப்பட்டிருந்தன. அதில் சில கல்லறைகளுக்கு மட்டும் அரைவட்ட வடிவில் மேல் தளம் அமைக்கப்பட்டிருந்தன. இறந்த பிறகும் அந்த மனிதர்களை அவர்கள் அத்தனை மரியாதையுடன் பாதுகாக்கிறார்கள் என்று தெரிந்தது.

‘பெரிய தலைகளாக இருப்பார்கள் போல’  

‘செத்த பிறகு எல்லோருக்கும் ஆறடி குழிதான்’என்பது உண்மையில்லை. அவரவர் பதவிக்கு ஏற்ப கல்லறை அமைப்புகளும் வித்தியாசப்படுகின்றன. சாவிலும்கூட இங்கே சமத்துவம் இல்லை. அங்கேயும் நாங்கள் தவறாமல் செல்பிகள் மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அடுத்த இடத்திற்குப் பயணப்பட்டோம்.

மாலையாகிவிட்டதால் எல்லோருக்கும் ஒரு டீ குடித்தால் தேவலை என்று தோன்றியது. ஆனால் இன்னும் கொஞ்சம் தாமதித்தாலும் கோயிலில் ஆதிநாராயணனுக்கு பதிலாக நாம் ஆதிசேஷன்களை தரிசிக்க வேண்டியிருக்கும் என்பதால், தேநீர் விருப்பத்தைத் தள்ளிவைத்து விட்டுக் கிளம்பினோம்.

ரமணியிலிருந்து இறங்கி நடந்து செல்லும் வழியில் ஆதிநாராயணன் கோவிலுக்குச் செல்லும் வழி என்று பெரிய பலகை ஒன்று இருந்தது.

ஆனால் பலகையில் இருந்த பளபளப்பில் ஒரு சதவிகிதம்கூட கோயிலில் இல்லை. எங்கும் புதர் மண்டி கிடந்தன. உள்ளே நுழையும் போதே சிதிலமடைந்த மண்டபம் ஒன்றைத்தான் கண்டோம். கருவறை மூடியிருந்ததால் உள்மண்டபத்தில் உள்ள சிற்பங்களையும் தூண் வடிவமைப்புகளையும் மட்டும் பார்வையிட்டோம்.

எப்போதும் போல நிவேதிதா அக்கா வரலாற்றுப் பாடம் நடத்தினார். டீ குடிக்காத காரணத்தினால் பாதிக்கு மேல் எதுவும் என் காதுக்குள் போகவில்லை. இருப்பினும் ஊமைப் படமாக அவர் காட்டிய சிற்பங்கள் எல்லாம் எங்கள் கவனத்தைக் கவரத் தவறவில்லை.

முக்கியமாக மண்டபத்தின் மேலே நுணுக்கமான வேலைப்பாடுடைய அந்த மினிசைஸ் புடைப்புச்சிற்பங்கள் ராமாயணக் கதையைப் பறைசாற்றுவதாகச் சொன்னபோது மிகவும் வியப்பாக இருந்தது.

அவற்றைப் பார்த்து முடித்து மண்டபத்தைச் சுற்றி வரவும் அங்கே கட்டுமான பணிகள் நிகழ்ந்திருப்பது தெரிய வந்தது. அந்த மஞ்சள் வண்ணப் புது கோபுரம் பழைய மண்டபத்துடன்  சற்றும் ஒட்டவே இல்லை. அதன் பழமையைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, அதை மொத்தமாக ஒழித்துக் கட்டுவது போலிருந்தது. எங்களுடைய துரதிர்ஷ்டம். ஆதிநாராயணனைப் போலவே ஆதிசேஷனும் எங்களுக்குத் தரிசனம் தரவில்லை.

அடுத்ததாக நடக்கும் தூரத்திலிருந்தது மற்றொரு பழமையான கோயில். சமயேஸ்வரர். அங்கேயும் தரிசனம் தடைசெய்யப்பட்டிருந்தது. மேலும் உள்மண்டபத்திற்குள் நுழைய முடியாதபடிக்குப் பலகைகள் வைத்து மூடப்பட்டிருந்தன. ஆனால் பெருமாள் கோயில் அளவுக்குப் புதர்கள் மண்டி இருக்கவில்லை. அதுவும் இல்லாமல் சில குழந்தைகள் முன்புற வாயிலில் சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.

அவர்களைத் தொந்தரவு செய்யாமல் உள்ளே சென்று பார்வையிட்டோம். இங்கேயும் மண்டபத்தின் மேலே சிறிய புடைப்பு சிற்பங்கள் இருந்தன. ஆனால் இது நாயன்மார்கள் வடிவங்கள் போன்று தெரிந்தது. மேலும் மண்டபத்தின் பின்புறத்திற்கு நடந்து வர, அங்கே வட்டமாகப் பெரிய கிணறு ஒன்று இருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தோம். ஓரளவு தண்ணீர் இருந்தது. மேலும் அந்தக் கிணற்றுக்கு உள்ளே இறங்கிச் சென்று தண்ணீர் எடுப்பதற்குப் பக்கவாட்டில் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த அமைப்பை வாவி என்று குறிப்பிடுகிறார்கள். சில நூறு வருஷங்களுக்கு முன்பாக எப்படியெல்லாம் அந்த வாவியைப் பயன்படுத்தி இருப்பார்கள் என்ற ஒரு கற்பனைக் கதை எனக்குள் ஓட ஆரம்பித்துவிட்டது.

கோயிலைச் சுற்றி வந்தோம். அங்கே பிரமாண்டமான உயரத்துடனும் அகலமான அடித்தண்டுடனும் அரச மரம் ஒன்று கம்பீரமாக நின்றிருந்தது. பக்கத்தில் இயல்பை விடவும் பெரிய துளசி மாடம் ஒன்றும் காணப்பட்டன.

அங்கேயும் ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். இறுதியாக அங்கேயும் ஒரு குழுப் படத்தை எடுத்துக் கொண்டோம்.

எங்களுக்குப் பொறுமையாக வழிகாட்டி வந்த மகேந்திரன் அவர்கள், அவர் வீட்டின் கழிவறையைப் பயன்படுத்திக் கொள்ளச் சொல்லி எங்களை அழைத்துச் சென்றார். அவர் வீட்டினரும் எங்களிடம் அன்பாக உரையாடினார்கள். அதன் பின் அனைவரும் ரமணியில் ஏறிக் கொண்டோம். எங்கள் முழு நாள் பயணமும் கிட்டத்தட்ட அப்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தது.

பெரும்பாலான பயணங்கள் முடியும் போது சோர்வும் அமைதியுமாகத்தான் முடிவது வழக்கம்.

‘எப்படா வீட்டுக்கு போய் சேர்வோம்’ என்றுகூட இருக்கும்.

ஆனால் இங்கே முற்றிலும் நேருக்கு மாறாகக் குத்தாட்டமும் கும்மாளமுமாக ரமணி அதிர்ந்து கொண்டிருக்க, துளியளவு சோர்வுகூட இல்லாமல் எங்கள் குழுவினர் ஆட்டமும் பாட்டமுமாகக் கொண்டாடிக் களித்தார்கள்.

ஆரவாரமான படகுப் பயணத்தில் ஆரம்பித்துப் பின் சமூக விழிப்புணர்வு பயணமாகவும் வரலாற்றுப் பயணமாகவும் தொடர்ந்து, இறுதியாக அதிரடியான ஆட்டம்பாட்டமான பயணமாக முடிந்தது.

என்னைப் பொறுத்தவரை இந்தப் பயணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத அற்புதமான பயணம். நிச்சயம் என்னுடன் பயணித்த அத்தனை பெண்களும் கூட இந்தக் கருத்துடன் ஒத்துப்போவார்கள்.

இத்தகைய அதி சிறப்பான அனுபவத்தைத் தந்த ஹெர் ஸ்டோரீஸிற்கும் நிவேதிதா அக்காவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது போன்று நிறையப் பயணங்கள் செய்யவேண்டும்.

பயணங்கள் மூலமாக நாம் புதுப்புது இடங்களை அறிந்து கொள்வது மட்டுமில்லை. நம்மையே நாம் புதிதாக உணர்கிறோம். புதுப்பித்துக் கொள்கிறோம். 

படைப்பாளர்

மோனிஷா

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சிறார் எழுத்திலும் தற்போது ஈடுபட்டுள்ளார். இவரின் ‘ஒரே ஒரு காட்டில்’ சிறார் நூலை ஹெர் ஸ்டோரீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.