மழையில் ஓடிச் சென்று டாஸ்மாக் கடைக்குள் நுழைந்தவன் இதழ்களில் ஒரு வெற்றிப் புன்னகை.

இதுபோல் அடிக்கடி அடைமழை பெய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அவன் உள்பையில் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளின் கணம் மகிழ்ச்சியைத் தந்தது.

அவனைக் கண்ட அவன் சேக்காளி,”என்ன குமாரு உங்காட்டுல மழதான் போல. நம்மளும்தான் இருக்கமே. அவன் கொண்டு உடுற எடத்துல ஒரு சவாரி, டேஷனுல இருந்து திரும்புனா ஒரு சவாரி, வழில வந்தா மறிச்சு ஏறுது ஒரு சவாரின்னு. எங்கயோ மச்சம் இருக்குது மாப்ள உனக்கு” என்று சக குடிமகன்களோடு அமர்ந்திருந்த நண்பன் வெளியே புகழ்ந்தாலும் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருப்பான் என்று தெரியாமல் இல்லை.

வழக்கமான நாட்கள் என்றால் அவனும் ஒரு கட்டிங்கில் தொடங்கி ஆரேழில் போய் படுத்து விடுவான். ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமை, மகன் வீட்டில் இருப்பான். அவனுக்குப் பிடித்த சிக்கன் பரோட்டோ வாங்கிக் கொண்டு செல்லத்தான் வந்திருந்தான்.

“லிங்கண்ணே, ஒரு சிக்கன் கொத்து. வழக்கம் போல சால்னா கொஞ்சம் கம்மியா ஊத்திக் கொத்துங்க.”

“ஏனுங் குமாரு , பையன் வந்துருக்காப்புடியா ? மழன்னுட்டு லீவு உட்டாச்சுன்னு போட்டுருந்துச்சு?” என்று கொங்குமணம் வீசிய தமிழில் கேட்டார். அவர் கேள்வி அவனை ஒரு நொடி யோசனையில் ஆழ்த்தியிருந்தது.

வழக்கமாக ஞாயிற்று கிழமை லீவுக்கு சனிக்கிழமை மாலையே போய் மகேசு கூட்டிக் கொண்டு வந்துவிடுவாளே. ஏன் வரவில்லை?

இரண்டு மாதங்கள் ஆகிறது பேச்சு வார்த்தை நின்று.

மகன் வரும்போது மட்டும் காட்டிக் கொள்ளாமல் சகஜமாக இருப்பாள். ஆனால் அவனிடமும் ஒருவித தூரத்தை இப்போதெல்லாம் உணர முடிகிறது. முன்பெல்லாம் அவன் வீட்டுக்கு வந்ததும் ஓடிவந்து, “எனக்கு சிக்கன் பரோட்டா வாங்கியாப்பா” என்று வாய்விட்டுக் கேட்கும் மகன், அதை ருசித்து சாப்பிடுவதைக் கண்டு மனம் நிறையும். ஆனால் இப்போதெல்லாம் வாங்கிக் கொண்டு குடுத்தாலும், “எனக்கு வேண்டாம். சாப்பிட்டுட்டேன்” என்று மூஞ்சில் அடித்தாற் போல் சொல்லிவிட்டு படுத்துக் கொள்வான்.

“எம் புள்ளய எங்கிட்ட இருந்து பிரிக்கப் பாக்குறியாடி?”

“இப்பகூடத் தப்பு உம்மேலன்னு உனக்குப் புரியல. எல்லாத்தையும் புரிஞ்சுக்குற வயசு அவனுக்கு வந்துடுச்சு. புள்ளய பிரிக்கற வேலல்லாம் உன் ஆத்தாகாரிக்குதான் வரும். எனக்கில்லை.‌ அத புரிஞ்சு…” என்று சொல்ல வாயெடுத்தவளை வாயிலே அடித்த சம்பவங்கள் கூட நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் இப்போதெல்லாம் கல் சிலை போல அசைவதே இல்லை அவள்.  அவன் பேசும் எதற்கும் பதிலில்லை, உணர்வற்ற ஜடம் போல்தான் நடமாடுகிறாள்.

அவன் அம்மாவின் குறுக்கீட்டால் அவர்களுக்குள் பிரச்னை வந்தது உண்மைதான். ஆனால் அதற்கு ஒருவிதத்தில் காரணம் மகேசுதான். அவனுக்கு ஒரு பெண் பிள்ளை வேண்டுமென்று ஆசை.

பெத்துக் கொள்ளலாம் என்றுதான் முடிவு செய்திருந்தார்கள். மகன் உடல் நிலை காரணமாக… எல்லாம் மாறிவிட்டது. அதற்குக் காரணம் அவன்தானே என்று குற்ற உணர்ச்சி  கொழுந்து விட்டு எரிந்தது.

வழக்கமாக அவன் சாப்பிட்டுவிட்டுதான் வீட்டுக்கு வாங்கிச் செல்வான். ஆனால் மகன் வீட்டுக்கு வந்திருக்கிறானா இல்லையா என்றே தெரியாத சூழலில் அருகில் இருந்த

விடுதிக்கு முதலில் போவதே சரி என்று தோன்றியது.

ஏனோ சொல்ல முடியாத ஒரு பதற்றம் காரணமில்லாமல் அவனைத் தொற்றிக் கொண்டது.

வாட்ச்மேன் அவனுக்குத் தெரிந்தவர்தான். கையில் ஒரு அஞ்சு பத்தை நீட்டினால் பையன் கையில் பொட்டலம் சேர்ந்து விடும். ஆனாலும் ஏனோ ஒரு திடீர் பயம் அந்த மழை நாளின் இருட்டைப் போல் அவனுக்குள் கவிந்தது.

கிளம்ப ஆயத்தமானவன் காதில் குழறலாக விழுந்த ஒரு செய்தி  நகர விடாமல் அந்த இடத்திலே நிறுத்தியது.

“தேமாங்குளமா? கடம்பாகுளமா? ஏதோ பொம்பள கெடக்கான்னு சாயந்திரம் வந்து கவுருமெண்டு ஆஸ்பத்திரிக்கு அள்ளிக்கிட்டு போனானுகளே. உசுரு கெடக்குதாம்மா?”

என்று விசாரித்தான் ஒரு குடிமகன்.

“எலே, அது நம்ம நாசரேத் ஏரில லேய்” என்று இன்னொரு உளறல் குரல் அதை மறுத்தது.

“ஏது, வெள்ளத்துல அடிச்சுட்டு போயிருச்சாக்கும்?”

“வயக் காட்டுல வேல பாக்குற பொம்பளன்னு பேசிக்கிட்டாய்ங்க . அவளுகல்லாம் ஆத்துக்குள்ளயும் குளத்துக்குள்ளயும் முங்கு நீச்ச போட்டு படிச்சதுக்கு அப்புறம்தான் நடக்கவே பழகியிருப்பாளுக, தம்மாத்துண்டு மழ அடிச்சிட்டு பெய்ருமாக்கும்? இது எதோ நாண்டுகிட்டு செத்த கேசாத்தான் இருக்கும்”

என்றதும் தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு. ஒரு வேளை மகேசாக இருக்குமா என்று அவன் கேட்காத கேள்வி அவன் உள்ளுக்குள் அரித்தது.

‘இருக்காது. அவ ரொம்ப தைரியசாலி. ராங்கிக்காரி, எத்தன அடி அடிச்சோம் நேத்து அதுக்குக்கூட அசரலயே.’

ஆனா அவளே நிறய தடவ சொல்லியிருக்காளே, ‘தங்கராசு மட்டும் இல்லைன்னா எப்பவோ நாண்டுகிட்டு செத்துருவேன்னு.’

‘இல்ல இல்ல என்ன நம்பி அந்த புள்ளய வுட்டுட்டு போவ மாட்டா!’

‘ஒருவேள போயிட்டா? ‘

“ஏனுங்க குமாரு, நீங்க இன்னிக்கு சாப்புடலயாக்கும்?” என்று விசாரித்தவாறு பரோட்டாவையும் சால்னாவையும் ஒரு நெகிழிப் பையில் போட்டு நீட்டிய லிங்கத்திடம்,

“இல்லண்ணே. நேரமாயிருச்சு, பய தூங்கிருவான்” என்றதற்கு அவர் அளித்த பதில் அவன் பயத்தை அதிகரித்தது.

“உங்க ஊருங்களா? ஏதோ குளத்துல டெட் பாடி கெடந்துதுன்னு பேசிக்கிறாங்களே. கூட ஏதோ பத்து வயசு புள்ளயும் இருந்துச்சுன்னு பேசிக்கிறாங்க?” என்றதைக் கேட்டவன் இதயம் நின்றது.

“அது பிள்ள இல்ல பையன்” என்று சப்ளையர் பையன் அவன் பேச்சு வழக்கைக் கிண்டலடிக்கவும் அவனுக்குத் தலையை சுற்றியது.

“அதத்ததானே நானும் சொன்னேன்.”

ஓடிச்சென்று வண்டியை எடுத்துக் கொண்டு மர்காஷிஸ் பள்ளி நேர்  விரைந்தான். அது கண்டிப்பாக மகேசும் தங்கராசுவுமாக இருக்காது என்று தனக்குத் தானே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே புயல் வேகத்தில் வண்டி வந்து சேர்ந்தது‌.

நல்ல வேளையாக இரவு டியூட்டி வாட்ச்மேன் மாறியிருக்கவில்லை.‌ பரோட்டா பொட்டலத்தைக் கொடுத்து விட்டவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

மழையையும் பொருட்படுத்தாமல் வாட்ச்மேன் வருகைக்காகக் காத்திருந்தவன், குட்டி போட்ட பூனை போல் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். பொட்டலத்தோடு சற்று நேரம் கழித்து திரும்பி வந்தவர், “பையன சாந்திரமே வந்து அவன் அம்மா கூட்டிட்டு போயிட்டாங்கன்னு லெட்ஜர்ல போட்டிருக்கேப்பா. வீட்டுக்குp போகாம நேரா இங்க வந்துட்டியோ?”

படைப்பாளர்:

பொ. அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.