சமீபத்தில் வந்த ஒரு செய்தி ஒன்று கவனம் ஈர்த்தது. கவலைப்படவும் வைத்தது. நாற்பத்தி இரண்டு வயதான பெண்மணி மூன்றாம் முறையாக கருவுற்றிருக்கிறார். ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பில் ஒரு மகளும், ஒன்பதாம் வகுப்பில் ஒரு மகனும் இருப்பதால் ஊர் என்ன சொல்லுமோ என்ற கவலை. அதனால் பிரசவ தேதி நெருங்கும் வரை வெளியே யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்து வீட்டிலேயே சுயபிரசவம் பார்த்திருக்கிறார்.

பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு தாயும் குழந்தையும் கவலைக்கிடமாக, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் தந்தையை அழைத்து விஷயம் சொல்லி இருக்கிறார். அது வரையிலுமே தந்தைக்கு மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரியாது என்கிறது பத்திரிகை செய்தி. அதன்பின் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, போகும் வழியிலேயே  தாயும் சேயும் உயிரிழந்து விட்டார்களாம். இன்று அந்த குடும்பம் குடும்பத்தலைவி இல்லாமல் பரிதவிக்கிறது.

இருபது ஆண்டுகள் உடன் குடும்பம் நடத்திவரும் கணவனுக்குக் கூட தெரியாமல் ஒன்பது மாதங்களும் மறைக்கக் கூடியதா கர்ப்பம்? பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் மகள், தாய் வலிக்க வலிக்கக் குழந்தை பெற்றுக் கொள்வதைப் பார்க்கலாம்; தங்கையோ தம்பியோ பிறந்தவுடன் கண்முன் இறந்து போவதையும் கடக்கலாம் என்றால், சமூகம் தெரிந்து கொண்டால் தான் என்ன? அப்படியே அந்தக் குழந்தை பிறந்து வளர்ந்தால் தான் என்ன? என்ற எண்ணம் இந்தச் செய்தியை வாசித்த யாருக்கும் தோன்றாமல் இருக்காது.

 சட்டமும் இயற்கையும் இந்தத் தாயின் கர்ப்பத்திற்கும் பிரசவத்திற்கும் ஒருகாலமும் மறுப்புச் சொல்லப்போவதில்லை. ஏனென்றால் 18 வயதை கடந்த எவரும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுப்போர், 50 வயது வரையிலும்கூட பிள்ளை பெற்றுக் கொள்வது இல்லையா? ஆனால் நம் நாட்டில் இத்தனை வயதிற்குள் திருமணம் செய்துவிட வேண்டும், திருமணம் செய்து ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாகவே குழந்தை பெற்று விட வேண்டும், நீண்ட இடைவெளி கழித்தோ, முதல் குழந்தை பதின்வயது வந்தவுடனோ தாய் கர்ப்பம் அடையக் கூடாது என்று எவ்வளவோ எழுதப்படாத விதிகள் நடைமுறையில் இருக்கின்றன. யாரும் கூறாவிட்டாலும் இத்தகைய விதிகளை தனக்குத்தானே வகுத்துக்கொண்டு பல குடும்பங்கள் சிக்கலில் மாட்டி, தவிக்கின்றன.

 உணவு, உடையைப் போலவே உடலுறவும் அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கைத் தேவைகளுள் ஒன்று. வயதான நாய் ஒன்று குட்டி போட்டால் அதற்கு யாராவது எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா? இந்த நாயின் முதல் குழந்தை தாயாகி விட்டது, அதனால் இதற்கு குட்டி போட உரிமையில்லை என்று கூறுகிறோமா? வயது முதிர்ந்த பசு, கன்று ஒன்றை ஈன்றால் எந்த மனிதனாவது வேண்டாம் என்று கூறுகிறானா? அப்படி என்றால் பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தக் கெடுபிடி?

சமூக அழுத்தத்தால் எதற்காக ஒரு பெண் அகால மரணம் அடைய வேண்டும், அதன்பின் அவளுடைய குடும்பம் ஆயுள் முழுமைக்கும் அம்மா இன்றி தவிக்கவேண்டும். அந்தக் கணவனுக்கு உண்மையிலேயே விஷயம் தெரியாதா, இல்லை தெரியாதவாறு நடித்தானா? இத்தனை கேள்விகள் நமக்குள் எழுகின்றன அல்லவா?

 அரசு, கர்ப்பகாலம் மற்றும் பேறுகால மரணங்களைத் தடுப்பதில் முழுமூச்சாக செயல்பட்டு வருகிறது. நிகழ்ந்து விடும் ஒவ்வொரு கர்ப்பகால, பேறுகால மரணமும் நுணுக்கமாக ஆராயப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது. எந்தப் புள்ளியில் தவறு நேர்ந்தது என்பது ஆராயப்படுகிறது. மருத்துவத் துறையில் இருக்கும் சம்பந்தப்பட்ட ‌அனைவருக்கும் அந்தத் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. எதிர்காலத்தில் மரணங்களை தடுப்பதுதான் இதன் நோக்கம்.

ஒவ்வொரு கர்ப்பமும், முடிந்தவரை முதல் மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்பட்டு, PICME number என்று ஒரு பதிவெண் கொடுக்கப்படுகிறது. தாய்மார்களின் உடல்நலம் குறித்த தொடர் பதிவுகள் இந்த எண்ணிற்குக் கீழ் பதிவேற்றம் செய்யப்படும். உதாரணமாக ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஐந்தாம் மாதத்தில் அதிக ரத்த சோகை காணப்பட்டு ஹீமோகுளோபின் அளவு 7 கிராம் என்ற அளவில் இருந்தால், அந்தத் தகவல் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ப்படும். உடனே மேலதிகாரிகள் சம்பந்தப்பட்ட செவிலியரைத் தொடர்பு கொண்டு, உடனடியாக அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து ரத்தம் ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று அறிவுறுத்துவார்கள். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, இரட்டைக்குழந்தைகள் போன்ற எல்லா பிரச்சனைகளுக்கும் அப்படியே. தற்போதைய சூழலில் இப்படி பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படும் கர்ப்பங்களில் பேறுகால மரணங்கள் மிகக் குறைவானதாகவும், மூடி மறைத்து வைக்கப்பட்ட பிரசவங்களில் அதிகமாக இருப்பதையும் கேள்விப்படுகிறோம்.

 திருமணத்திற்கு முன்பான கர்ப்பம், குடும்ப உறவிற்கு வெளியிலான கர்ப்பம் எந்த காலகட்டத்திலும் ஒரு பெண்ணை சமூக மற்றும் உளவியல் சிக்கலுக்கு உள்ளாக்கியே வந்திருக்கிறது. ஆணுக்கு நேரடி பாதிப்பு இல்லாத காரணத்தால் அவன் விலகியே நிற்கிறான். இத்தகைய நடவடிக்கை சரியா தவறா என்ற கேள்விக்குள் போக விரும்பவில்லை, ஒருவேளை விரும்பத் தகாத கர்ப்பம் ஒன்று நிகழ்ந்து விட்டால், அதைப் பாதுகாப்பாக சரி செய்து கொள்வதற்காக, (கலைப்பது என்ற வார்த்தையே அழுத்தம் மிக்கது என்கிறார்கள் உளவியலாளர்கள்) அத்தகைய சமயங்களில் கர்ப்பகால மரணங்களை/ உடல் பாதிப்புகளை தவிர்ப்பதற்காக அரசு புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

சமீபமாக, ‘இந்த மருத்துவமனையில் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்யப்படும். ரகசியம் காக்கப்படும்’ என்ற சுவரொட்டியை ஓட்ட வேண்டும் என்று தகுதியான அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு சுற்றறிக்கை வந்தது. MTP (Medical termination of pregnancy) act 1971 பாதுகாப்பான கருக்கலைப்பிற்கான வரையறைகளை வகுத்துக் கொடுத்திருக்கிறது. அதன் சட்டத்திருத்தம் 2020ம் ஆண்டு அமலுக்கு வந்தது.

சில மாதங்களுக்கு முன்பாக ஐம்பது வயதை நெருங்கிய பெண்மணி ஒருவர் வந்தார். கல்லூரி முடித்து வேலை பார்க்கும் அவரது மகன்தான் அழைத்து வந்திருந்தான். ‘வயிறு ஊதியிருக்கு… எதுவுமே சாப்பிட முடியலை’ என்பது அவரது பிரச்சனை. பரிசோதித்து பார்க்க, அவர் 5 மாத கர்ப்பம் என்று தெரியவந்தது. ஐந்து மாதங்களாக மாதவிடாய் வரவில்லை என்றவுடன் மாதவிலக்கு நின்றுவிட்டது என்று நினைத்துக் கொண்டார். ஏற்கனவே மூன்று பிள்ளைகளைப் பெற்றிருந்தாலும், அவ்வளவாக விவரம் தெரியாதவர் போல் இருந்தார் அந்தப் பெண்மணி. குழந்தையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றதற்கு விருப்பமில்லை என்றார்.

‘சற்றே பெரிய மருத்துவமனைக்குச் சென்று, பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ளுங்கள்; தயவுசெய்து சட்டத்துக்கு விரோதமாக கருக்கலைப்பு செய்யும் இடங்களுக்கு சென்று விடாதீர்கள்’ என்று எங்கள் மகப்பேறு மருத்துவர்கள் அறிவுறுத்தி, அதற்கான வாகன வசதிகூட ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். எப்படியோ ஒரு சட்ட விரோத மையத்திற்குத் தான் சென்றிருக்கிறார் அந்தப் பெண்மணி.

அரைகுறையாக நடந்த சிகிச்சையின் முடிவில் ஓரிரு நாட்கள் கழித்து உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் மீண்டும் எங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அதன் பின் நாங்கள் முதலில் பரிந்துரைத்த மருத்துவமனைக்கே அனுப்பப்பட்டு, ஒரு மாத கால போராட்டத்திற்குப் பின் கர்ப்பப்பை அகற்றப்பட்ட நிலையில் அரை உயிராக வீடு வந்து சேர்ந்தார். 

இதைப் போலவே இன்னொரு கிராமப்புறப் பெண்மணி. அவருக்கு சரியாகக் காது கேட்காது. எட்டாம் மாத கர்ப்பத்துடன் சென்ற ஆண்டில் வந்தார். உடன் வந்தவர், கல்லூரி படிக்கும் அவரது மகள். இனிமேல் கருக்கலைப்பு செய்வது ஆரோக்கியமானதல்ல என்று நாங்கள் கூறவும், “கடவுள் இத்தனை வயசுக்கு மேல எனக்கு புள்ளைய குடுத்திருக்காரு.. வேறென்ன செய்ய.. வேண்டாம்னா சொல்ல முடியும். முடிஞ்ச அளவு நல்லா வளர்த்துட்டுப் போறேன்” என்று அதை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டார் அந்தப் பெண்மணி. நல்ல முறையில் குழந்தை பெற்றுக் கொண்டு போனார்.

Representative Image, Photo by AMIT RANJAN on Unsplash

 குழந்தைக்கு ஒரு வயதான சூழலில் இப்பொழுது மீண்டும் வந்திருந்தார். சிறு குழந்தைக்கு காய்ச்சலாக இருக்கிறது என்று தன் தங்கையைத் தூக்கிக் கொண்டு வந்தவள் கல்லூரி படிக்கும் அக்காவே தான். அம்மாவுக்கு சரியாக காது கேட்காது என்பதால், குழந்தையின் காய்ச்சலுக்கு நாங்கள் கொடுத்த அறிவுரைகளையும் மருந்துகளை எப்படி கொடுக்க வேண்டும் என்பதையும் விவரமாகக் கேட்டுக் கொண்டாள்.

“போன வருஷம் இங்கே பொறந்த பிள்ளைதான் தாயி இவ” என்று பெருமையுடன் அறிமுகப்படுத்தினார் அந்தத்தாய். ‘என் மகள்! என் வாரிசு! எப்போது வேண்டுமானாலும் நான் பெற்றுக் கொள்வேன்’ என்று உரக்கக் கூறும் இப்படியான தாய்கள்தான் இன்றைக்கு தேவை.

இந்த தாயைப் பற்றியும் ஊரார் பேசியிருப்பார்கள். அவருக்கு காது கேட்காததால் இதெல்லாம் அவரது காதில் விழுந்திருக்காது போலும் என்று எனக்குள் ஒரு எண்ணம். இப்படியான சூழலைச் சந்திக்கும் பிற தாய்மார்களும் காது கேளாதவர்கள் போலவே நடந்து கொண்டால் நல்லதுதானே என்றும் தோன்றியது.

*ஆண், பெண் கருத்தடை முறைகள்

*MTP 1971 act சொல்வது என்ன

*மாறிவரும் சமூகம்

*ஆண்களின் பங்கு

அடுத்த பகுதியில்…

படைப்பாளர்

டாக்டர் அகிலாண்டபாரதி

கண் மருத்துவர், எழுத்தாளர், கதைசொல்லி. அன்றாட வாழ்வில் தான் சந்திக்கும் மனிதர்களையும் அவர்களின் கதைகளையும் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். சிறார் வாசகர் வட்டம் ஒன்றை நடத்திவருகிறார். நாவல்கள், சிறுகதைகள், சிறார் கதைகள், கட்டுரைகள் என பல தளங்களில் பரந்துபட்ட எழுத்து இவருடையது.