மருமகள் 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.

கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த மருமகள் 

வசனம் ஏ.எஸ்.ஏ. சாமி 

நடிகைகள் 

லலிதா 

பத்மினி

சுரபி பாலசரஸ்வதி 

எம் லட்சுமி பிரபா 

எம் சரோஜா 

எஸ் டி சுப்பு லட்சுமி 

சி டி ராஜகாந்தம் 

இந்திரா 

கே எஸ் ஆதிலட்சுமி 

கே எஸ் அங்கமுத்து 

வி சூரிய காந்தம் 

பேபி சரஸ்வதி 

நடிகர்கள்

என்.டி. ராமராவ்

டி.ஆர். ராமச்சந்திரன்

எஸ்.வி. சஹஸ்ரநாமம்

பி.ஆர். பந்துலு

டி. பாலசுப்ரமணியம்

வி.கே. ராமசாமி

நடராஜன்

டைரக்க்ஷன்  யோகானந்த்

கிருஷ்ணசாமி, ராமசாமி இருவரும் இளம் வயது முதல் நண்பர்கள். அவர்களின் பிள்ளைகள் உஷா, குமார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என ராமசாமி பேச, கிருஷ்ணசாமி பிறகு பார்க்கலாம் என்கிறார். ராமசாமி தொழில் தொடங்க நகரம் செல்ல நினைக்கிறார். அதற்கு கிருஷ்ணசாமி உதவி செய்கிறார். ராமசாமி சென்னை சென்று தொழில் தொடங்கி முன்னேறுகிறார். குடும்பத்தையும் அழைத்துச் செல்கிறார்.

உஷாவும் சென்னையில் படிக்க விருப்பம் கொண்டதால், தனது தங்கை வீட்டில் வைத்து அவரை கிருஷ்ணசாமி படிக்க வைக்கிறார். உஷாவும் (பத்மினி) குமாரும் (என்.டி. ராமராவ்) வளருகிறார்கள். இருவரின் நட்பு அங்கும் தொடருகிறது. இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என உஷா வீட்டில் நினைக்கிறார்கள். ஆனால் குமார் வீட்டில் பணக்கார இடம் தேடுகிறார்கள். இங்கும் வரதட்சணை தான் பிரச்னை. 

குமார் வீட்டில் பணக்கார இடம் தேடுகிற படியால்,  உஷாவை அப்பா நகரத்திலிருந்து அழைத்து வந்து விடுகிறார். மாப்பிள்ளையும் பார்க்கத் தொடங்குகிறார். போகுமிடமெல்லாம் படிப்பு மாத்திரம் இருந்தால் போதாது பணமும் வேண்டும் என்கிறார்கள். அதாவது வரதட்சணை சிக்கல்தான். குமாருக்கும் பெண் தேடும் படலம் நடக்கிறது. இதனால், உஷாவும் குமாரும் பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள். 

குமாரின் வீட்டின் அண்ணி சாந்தா (லலிதா). இவருக்கும் குமாரின் அம்மாவுக்கும் எப்போதும்  மாமியார் மருமகள் சண்டை. சாந்தாவின் கணவன் துரை, தாரா என்ற நடனப் பெண்ணுடன் பழகுகிறார். 

துரை மற்றும் குமாரின் தங்கை ரூபா. சூரி (டி.ஆர். ராமச்சந்திரன்) நாடகம் போடுபவராக, ஓகோ புரோடக்ஷன் நாகேஷுக்கு முன்னோடி போல வருகிறார். ரூபாவும், சூரியும் காதலிக்கிறார்கள். வீட்டில் அனைவரும் உஷாவிடம் கடுமையாகவே நடந்து கொள்கிறார்கள். குமார் மேற்படிப்புக்காக அமெரிக்கா போகிறார். 

நடனம் கற்றுக் கொள்ள தாராவிடமே ரூபா போகிறார். துரைக்கு அது பிடிக்கவில்லை (தங்கையைப் பாதுகாக்கிறாராம்). அதனால் கோபம் வருகிறது. சாந்தாவும் அங்கு வருகிறார். துரை, திருமணமானவர் என்று தாராவுக்குத் தெரியாது. திருமணமானவர் எனத் தெரியாமல்தான், தான் பழகியதாகத் தாரா மன்னிப்பு கேட்கிறார். இவ்வாறு கணவன் மனைவி இணைந்ததில் உஷாவின் பங்கு பெரும்பங்கு. உஷா, சாந்தாவுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறார். ‘நல்ல பெண்மணி’ என்ற பாடலின் இசை பின்னணியில் ஓடுகிறது. அதாவது அந்தப்பாடல் போல சாந்தா மாறுகிறார் என எடுத்துக் கொள்ளலாம். 

சூரி, ரூபா காதல் தொடருகிறது. ரூபா கருவுருகிறார். இவர்களின் பெற்றோர் காசி சென்று இருக்கிறார்கள். சூரி மாயமாகி விட்டான். உஷாவுக்கு இது தெரியவருகிறது. உஷா, ரூபாவைத் தன் தோழியின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு குழந்தை பிறக்கிறது. குழந்தையின் தாய் உஷாதான் என அனைவரும் நம்புகிறார்கள். இந்த நேரத்தில் காசியிலிருந்து திரும்பிய ரூபாவின் பெற்றோர், குழந்தையை உஷாவுடன் விட்டுவிட்டு, ரூபாவை அழைத்துச் சென்று விடுகிறார்கள். 

குமார் அமெரிக்காவிலிருந்து வருகிறார். மனதில் மனைவி மீது சந்தேகம். அது தந்த மனக் குழப்பத்தில் வண்டியைத் தாறுமாறாக ஓட்டி, விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். பார்க்கப் போன உஷாவைக் குடும்பமே சேர்ந்து தடுக்கிறது. ரூபா உண்மையைச் சொல்கிறார்.

சூரிக்கு அவரது அப்பா வரதட்சணை பேசி வேறு பெண்ணுடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்கிறார். மண மேடையில் இப்போது ரூபா இருக்கிறார். வரதட்சணையாகக் குழந்தை இருக்கிறது. அப்பா தான் சூரியை அடித்து உதைத்து அழைத்துச் சென்றவர். சூரிக்கு ரூபா மீது அன்பு எப்போதும் உள்ளது என சூரி தெரியப்படுத்துகிறார். இப்போது அப்பாவும் மனதார ரூபா மற்றும் குழந்தையை ஏற்றுக் கொள்கிறார். அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கதை நிறைவு பெறுகிறது.

வசனம் ஏ.எஸ்.ஏ. சாமி  எழுதியிருக்கிறார். இந்தத் திரைப்படத்துக்கு வசனம் எழுதியதன் மூலம், ஐந்து இந்திய முதலமைச்சர்களுடன் பணியாற்றிய பெருமையை அவர் பெறுகிறார். 

குடும்பத்தில் நடைபெறும் இயல்பான உரையாடல்களில் முத்திரை பதித்துள்ளார். கலைஞர், தனது திரைத்துறைப் பொன்விழாவில், ‘சினிமாவுக்குக் கதை வசனம் எழுத அண்ணன் ஏ.எஸ்.ஏ. சாமியிடம்தான் நான் கற்றுத் தேர்ந்தேன்’ என்று கூறி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் உரையாடல்கள் அதை உறுதி செய்கின்றன. சான்றுகள் சில.

“மண்டை ஓட்ட கழத்தி துண்டா வைச்சுடுவேன்…

மனுஷன் முரடுன்னாலும் மனசுல ஈவு இரக்கம் உள்ளவரு…

கழட்டிக் கொடுத்துட்டாரு கர்ணமகாராஜா மாதிரி… 

ஒடிஞ்சு போன ஒலிபெருக்கிகளா… 

பத்து வருஷத்துக்கு முன்னால இந்தியா கூட தான் வெள்ளைக்காரன் கையில் இருந்தது. அதுவா பேச்சி? இன்னைக்கு நெலமையிலா நெனச்சுப் பார்க்கணும்…

என்னன்னு கேக்காம இடிஞ்ச சுவர் மாதிரி உக்காந்து இருக்கிறீயே!

கஞ்சிக்கே தாளம் போட்டவ, நாலு காசு கிடைச்சதும் நவாப் சம்சாரம் மாதிரி பேசுறா…

சீவி சிணுக்கு எடுக்கிற நேரமா இது?…

அதுக்கு கூட நாள் நட்சத்திரம் இருக்கா?…

உழுகிறவன் ஏமாளின்னா எருது மச்சான் முறை கொண்டாடுமாம்… 

என் புருஷன பொம்மையா ஆட்ட வைக்கிறா; அவ புருஷன பம்பரமா சுத்த வைக்கிறா; ஏதாவது சொன்னா பத்ரகாளி அவதாரம் எடுத்துருறா… 

சக்கரவர்த்தி பரம்பரைன்னு இன்னிக்குத் தான் தெரிஞ்சுக்கிட்டேன் இனி ஒரு வேலை செய்ய மாட்டேன்…

மஞ்ச கயிறு போயி என்னைக்கு வெள்ள புடவை மாறுதோ அன்னைக்குத் தான் பெண்களுக்கு ஊர் வம்புக்கு நேரம்…

கல்யாணம் பண்றதுக்குமா அரசாங்கத்தில ஆபீஸ் வச்சிருக்காங்க?… 

திங்குற நேரம் தவிர மீதி தங்குறது கிடையாது.

லண்டனுக்குப் போனாலும் பருப்பு சாம்பார் கிடைக்கிறதா என பார்க்கும் ஊர் இது.

சொன்னவுங்களைத் தொரத்துறாங்களே கோவிந்தா”

சி.ஆர்.சுப்புராமன் இசையமைத்துள்ளார். அவரது இறப்புக்குப் பின் விஸ்வநாதன்/ ராமமூர்த்தி இணைந்து மீதி இருந்த வேலைகளை முடித்து உள்ளார்கள். 

உடுமலை நாராயணகவி, பாடல்கள் அனைத்தையும் எழுதியுள்ளார். 

‘சின்ன சின்ன வீடு கட்டி’ பாடல் இருமுறை வருகிறது. குழந்தைகளுக்காக ஜிக்கி மற்றும்  ஏ.பி. கோமளா பாடியுள்ளார்கள். பெரியவர்களுக்கான பாடலை  ஏ.எம். ராஜா மற்றும்  பி.ஏ. பெரியநாயகி பாடியிருக்கிறார்கள். கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது. குறிப்பாக குழந்தைப் பாடல் இனிமையோ இனிமை.

சின்ன சின்ன வீடு கட்டி

சிங்கார வீடு கட்டி

பெண்ணு மாப்பிளை வச்சு ஆடுவோமே 

நாம் ஒண்ணாக சேர்ந்து விளையாடுவோமே 

சுண்ணாம்பு கல்லு மணல் சுவராக்குவேன் 

நானும் சுவராக்குவேன் 

கேணி தண்ணீரும் கொண்டு வந்து நான் தாரேன் 

கூட நான் வாரேன் 

கண்ணாடி பீரோ ஒண்ணு வீட்டில் வைக்கணும் 

நம்ம வீட்டில் வைக்கணும் 

அதிலே கல்கண்டு மிட்டாய் வாங்கி பூட்டி வைக்கணும் 

உள்ள பூட்டி வைக்கணும் 

ஜன்னல் வைச்ச சமையல் கட்டு வேண்டாமோ 

தட்டு முட்டு சாமான்கள் எல்லாந்தான் வேணும் 

நாம் வீடும் குடியாவோம் 

சுகம் நீடும்படி வாழ்வோம் 

வயதில் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வோமே 

நான் சோறாக்கி போட்டுவிட்டு நாத்து நடுவேன் 

நான் காடு காத்து பசு மாடு மேய்ப்பேன் 

நான் வீடு காப்பேன் தினம் விளக்கு வைப்பேன் 

நான் பாடுபட்டுத் தேடுவேன் அப்பன் போலெ 

நான் பாதுகாத்துக் கொள்ளுவேன் அம்மா போலே 

நாம் ஒண்ணாக சேர்ந்து வாழ்வோமே 

மனஸ்தாபம் குடும்ப சண்டை வரக்கூடாது 

ஆமாம் வாழ்நாளை வீணாக்கக் கூடாது 

சண்டை கூடாது 

இஷ்டப்பட்டுக் கட்டும் வீட்டில் இரண்டு பேறும் வசிக்கணும் 

கஷ்ட நஷ்டம் எது வந்தாலும் கட்டிய வீட்டைக் காக்கணும் 

கனவிலும் நினைவிலும் இணைபிரியாத 

தெய்வீக காதலுக்கிணை ஏது 

மனதினிலே உனையே மறவாமலே ஓவியம் போலே 

மகிழ்வேனி மேலே அன்பே வாழ்வில் 

எந்நாளும் இன்பம் அதனாலே 

இளமையிலே பயமில்லாமலே வளர்ந்த காதலமுதே 

எங்கே சென்றாலும் பிரேமை உலகில் 

ஈருடல் ஓருயிர் நாமே 

மலரின் மணமே ஆடும் சிலையே 

உலகில் உண்டோ இல்லையே 

வானமளாவில் பறந்தாலும் வந்திடுமே என் மாடப்புறா 

ஒரு நாளும் மறவேனே உஷா 

வசந்த மலர் தேனே 

உனை நான் பிரிந்தாலும் உள்ளம் 

பிரியாதுன்னைத்தானே 

இதய வானிலே உதய சந்திரிகா 

ஈடில்லாத எழில் மானே 

இகமே சுகமாய் புகழ் மாலையுடன் 

எனதாருயிரே வருவேனே 

இந்தப் பாடல் நான் பார்த்த வீடியோவில் பாடல் இல்லை. பாடலாக இருக்கும் வீடியோவும் ஒலி மட்டும் தான் உள்ளது. காட்சி எதுவும் இல்லை. மிகவும் இனிமையான புகழ் பெற்ற பாடல். ஏ.எம். ராஜா மற்றும்  பி.ஏ.பெரியநாயகி பாடியிருக்கிறார்கள். 

‘நீ தான் என் சொந்தம்’ என ஒரு பாடல் வருகிறது. அதுவும் தமிழ்ப் பதிப்பில் இல்லை. ஆனால் தெலுங்கு பாடல் உள்ளது. அது சென்னையைச் சுற்றிக் காட்டுகிறது. 

நாயகியின் அப்பா, அப்போதே நகையை விற்று, நகரத்தில் கொண்டுபோய் பெண் குழந்தையைப் படிக்க வைக்கிறார். படித்தாலும் படிக்கவில்லை என்றாலும் வரதட்சணைதான் முன்னணியில் இருக்கிறது எனத் திரைப்படம் சொல்கிறது. அமைதியாக இருக்கும் பெண்ணை அடிமைப்படுத்துகிறார்கள். இப்படி ஒருவிதமான கலவையாகக் குடும்பத்தைக் காட்டியிருக்கிறார்கள். இன்றும் இவ்வாறான குடும்பங்களைப் பார்க்கலாம். 

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. ஹெர் ஸ்டோரிஸில் இவர் தொடராக எழுதிய விளையாட்டு பற்றிய கட்டுரைகள் ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’ என்ற பெயரில் நூலாகவும், சினிமா கட்டுரைகள் ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்ற பெயரில் நூலாகவும் ஹெர் ஸ்டோரிஸ் வெளியிட்டுள்ளது.