இன்னும் 134 வருடங்கள் ஆகுமாம். நிலவில் பிளாட் வாங்குவதற்கா என்கீறீர்களா? இல்லை…இல்லை. பூமியில் வாழும் மனிதர்கள் பாலின வேறுபாடின்றி எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளும் அதிகாரமும் பரவலாக்கப்பட இன்னும் 134 வருடங்கள் ஆகும். கல்வி, ஆரோக்கியம், பொருளாதாரப் பங்கேற்பு, அரசியல் பிரதிநிதித்துவம் இப்படி எல்லாவற்றிலும் பாலினச் சமத்துவத்தை அடைய நாம் இன்னும் பல தலைமுறைகள் காத்திருக்க வேண்டி உள்ளது.

உலகப் பொருளாதார அமைப்பால் வெளியிடப்பட்ட, உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2024இன் படி, இப்போது இருக்கும் இதே வேகத்தில் சென்றால் இன்னும் 134 ஆண்டுகளுக்குள் நம்மால் பாலினச் சமத்துவத்தை எட்ட முடியும் என்று கூறுகிறது.

இந்தப் பட்டியலில் இந்தியா 129வது இடத்தில் உள்ளது; இன்னும் சொல்லப் போனால், சென்ற வருடத்தைவிட இரண்டு இடங்கள் சரிந்து 129வது இடத்திற்கு வந்துள்ளது

பொருளாதாரப் பங்கேற்பு, பங்கேற்றலுக்கான வாய்ப்பு, கல்வி, ஆரோக்கியம் அரசியல் அதிகாரம் ஆகிய நான்கு பரிமாணங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவெளியை ஆய்வு செய்து இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

இதில் நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, இப்போது இருக்கும் இதே வேகத்தைப் பராமரிப்பது, குறைந்தபட்சம் அதையாவது செய்தால் நமக்குப் பின் வரும் சந்ததியினராவது பாலின வேறுபாடின்றி எல்லா வாய்ப்புகளையும் பெறுவர். ஆனால், நடப்பதையெல்லாம் பார்த்தால் இந்த வேகத்தைப் பராமரிப்பதே கஷ்டம் என்று தோன்றுகிறது.  இன்னும் இன்னும் பெண்களைப் பின்னுக்குத் தள்ளும் எல்லா முயற்சிகளும் நம் சமூகத்தால் முன்னெடுக்கப்படுகின்றன. 

உயர் கல்விக்கான அகில இந்திய ஆய்வு நிறுவனம் 2024இல் வெளியிட்ட அறிக்கையின்படி பாலினச் சமத்துவக் குறியீடு இந்தியாவில் 1.01 என்கிற அளவில் இருக்கிறது. அதாவது உயர் கல்வி கற்கும் ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக உள்ளனர்.

நாடு தழுவிய நிலையில் இத்தகைய கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டாலும், பெரும்பாலும் கல்வியில் முன்னேறிய மாநிலங்களான தமிழ்நாடு கேரளா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களே இதற்குப் பெரும்பங்கு வகிக்கின்றன. பெரும்பாலான வட இந்திய மாநிலங்களில் பெண்களின் உயர்கல்வி இன்னமும் கனவாகத்தான் இருக்கிறது.

இப்படி உயர் கல்வி கற்றவர்கள், கல்லாதவர்கள் என்று எல்லாப் பெண்களும் வேலைக்குச் சென்று குடும்பப் பொருளாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்துகிறார்களா? பொதுவெளியில் இயங்குகிறார்களா?

தேசியப் புள்ளியியல் அலுவலகத்தால் எடுக்கப்பட்ட தொழிலாளர் கணக்கெடுப்பின்படி வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்கேற்பு விகிதம் 33% இருக்கிறது. இதற்கு முந்தைய (2021-22) கணக்கெடுப்பைவிட 4.2% இது அதிகரித்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் நாம் இதில் 70% என்கிற நிலையை அடைய வேண்டும். 

இந்தியாவில் பெண்கள் சராசரியாக 7.2 மணிநேரம் தினமும் ஊதியமில்லாத வீட்டு வேலையில் செலவிடுகிறார்கள். ஆனால், ஆண்கள் வீட்டு வேலைக்காகச் செலவிடும் சராசரி நேரம் வெறும் 2.8 மணிநேரம் மட்டுமே. சில குடும்பங்களில் இது பூஜ்ஜியமாகக்கூட இருக்கிறது.

அது மல்டி நேஷனல் கம்பெனியில் பணிபுரியும் பெண்களோ வீட்டு உதவியாளர் வேலை செய்யும் பெண்களோ அவர்களின் மீதான குடும்பப் பராமரிப்பு, வீட்டு வேலைகளின் சுமை மட்டும் குறைவதேயில்லை. நாம் இன்னும் ஆண்கள் சமைக்கும் ஜோக்குகளுக்குச் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.     

கிட்டதட்ட 8 மணிநேரம் இப்படிப்பட்ட ஊதியமற்ற வீட்டு வேலைகளில் ஈடுபடும் பெண்களால் அலுவலக உயர்பதவிக்கான போட்டிகளில் ஆண்களுக்கு நிகராக நிற்க முடிவதில்லை. வேலை வாய்ப்புகளில் உயர் பதவிக்கான படி நிலைகளில் பெண்கள் மிகவும் மெதுவாகத்தான் மேலே ஏற முடிகிறது.

கோவிட் பெருந்தொற்று காலம் இரு பாலினத்தவரையும் சமமாகத்தான் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுப்பியது. ஆனால், பெருந்தொற்றுக்குப் பிறகான சூழ்நிலை என்பது மூன்று வகையான வாய்ப்புகளை உருவாக்கியது. சில நிறுவனங்கள் மீண்டும் அலுவகம் வரச் சொன்ன போதும், பெரும்பாலும் வீட்டிலிருந்து வேலை செய்வது அல்லது இரண்டு நடைமுறைகளும் கலந்த, அதாவது வாரம் இருமுறை அலுவலகம் சென்றும் மீதி நாட்களில் வீட்டில் இருந்து பணிபுரியும் நடைமுறையும் செயல்பாட்டில் உள்ளன. நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத ஆண்கள் அலுவலகம் செல்லத் தொடங்கி விட்டனர். ஆனால், இருபது சதவீதப் பெண்கள்கூட அலுவலகம் திரும்பவில்லை.  வீட்டிலிருந்து பணிபுரிவதைத் தங்களுக்குக் கிடைத்த ஒரு நல் வாய்ப்பாகக் கருதி அதையே தொடரவும் செய்கின்றனர். 

இப்படி ஒரு வாய்ப்பு அமையாத காலத்தில் குடும்பப் பொறுப்புகளுக்காக வேலையைத் துறந்த பெண்கள் ஏராளம். தன் குழந்தைகளின் படிப்படியான வளர்ச்சியை அருகிலிருந்து பார்க்க முடியாமல் போனதால் ஏக்கம் கொண்டவர்கள் ஏராளம். தற்பொழுது வீட்டில் இருந்து பணிபுரியும் வாய்ப்பு இருப்பதால், இந்தக் கவலைகளுக்கு இடமில்லை. வேலையையும் பார்த்துக்கொள்ளலாம், குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளலாம்.   

மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது மிக வசதியாகத் தோன்றும் இந்த வாய்ப்பு, உண்மையில் ஒரு பின்னடைவுதான், பெண்களைப் பொறுத்தவரை. மிக முக்கியமாக இவர்கள் இழப்பது வாய்ப்புகளை. “அந்த டீமில் ஒரு சீனியர் மேனேஜர் பொசிஷன் காலியாக உள்ளது. நீகூட அந்த ஒர்க் நல்லா பண்ணுவியே… அப்ளை பண்ணிப் பாரேன்” என்று போகிறபோக்கில் தூவப்படும் சில வாய்ப்புகள் உங்கள் காதுகளுக்கு எட்டாமலே போய்விடும். 

ஆண்களை முன்னிறுத்திய நமது சமூக அமைப்பில், வீட்டிலிருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பதற்குக் குடும்பம் என்கிற அமைப்பிலிருந்து எதிர்ப்புகளே எழுவதில்லை எல்லாக் காலத்திலும். ஏனெனில் அப்போது அதிகாரப் பரவல் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படப் போவதில்லை.

ஏதோ ஒரு வேலை, வீட்டில் இருந்து பணிபுரியும் வாய்ப்பு என்று இருந்து விட்டால் யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை. ஆனால், வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டிய அவசியம் நேரும்போதுதான் பெண்களின் குடும்பப் பொறுப்புகள் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு நினைவூட்டப்படுகின்றன. ’நான் ஒரு நல்ல அம்மா இல்லையா’ என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்டு சுய பரிசோதனை செய்ய வேண்டிய நிலைக்கு வெகு வேகமாகத் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலையில்தான் வீட்டிலிருந்து பணிபுரிவது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. எந்தவிதக் குற்ற உணர்ச்சிக்கும் ஆளாகாமல், குடும்பப் பொறுப்பையும் கவனித்துக் கொள்ள முடிகிறதே என்று சமரசம் செய்து கொள்கின்றனர். ஆனால், அலுவலக வேலையை வீட்டிலிருந்து செய்வது என்பது மீண்டும் தங்கள் காலில் போடப்பட்ட மற்றொரு விலங்கே.   

பாலினச் சமத்துவம் என்னும் சிகரத்தைத் தொட இன்னும் பல காத தூரம் பயணிக்க வேண்டி இருக்கும்போது இளைப்பாற கிடைத்த நிழலில் வீடு கட்டிக் கொள்வது புத்திசாலித்தனமல்ல. வீட்டிலிருந்து பணிபுரிவதற்காக நீங்கள் அமரும் சுழல் நாற்காலி உங்கள் வெளியுலக இயக்கத்தை முடக்கிப் போடும் சக்கர நாற்காலியாகவே கருதப்படும்.

வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்து, குடும்பத்துக்காகப் பொருளீட்டும் நிலைக்கு உயரும்போதும், திருமணமானபின்,  பொருளாதாரத்தையும்  அதிகாரத்தையும், நடைமுறைச் சிக்கல்களையும் வாழ்க்கைப் பாடுகளையும் பங்கிட்டுக்கொள்வது, தனது குழந்தைகளின் மீதான அனைத்துக்குமான முடிவெடுக்கும் அதிகாரத்தில் பங்கேற்பது, இப்படி அனைத்தும் கைவரப் பெற்றால் மட்டுமே பெண்கள் சமூகப் பங்காற்றுதலில்  தன்னிறைவு அடைந்ததாக கருத முடியும்.

மொத்தக் குடும்ப அமைப்பின் பொருளாதாரத்துக்குத் தன்னாலான பங்களிப்பைச் செய்வதோடு, வீடு, வாகனம் என்று தன்  உழைப்பைக் கொண்டு தன்  பெயரில்  வாங்கும் தருணம் மட்டுமே  பெண்களின் சுயமரியாதை தலைநிமிர்ந்து நிற்கும் தருணம்.

பெண் குழந்தைகள் என்றால் சீட்டுக் கட்டி நகை சேர்த்து வைப்பது மட்டுமே அம்மாவின் கடமை, அதற்குள்ளாக மட்டுமே உள்ள அதிகாரத்தை நினைத்து மகிழ்ந்து கொண்டு இருக்காமல், பெண் குழந்தைகளின் கல்விக்காகவும் வேலை வாய்ப்புக்காகவும் எந்தத் தடையையும் சொல்லாமல் ஊக்கப்படுத்தி முன்னேற்றிச் செல்வதே ஒட்டுமொத்த சமூகத்துக்கான பங்களிப்பு என்று உணரும்போது, இந்தப் பாலினச் சமத்துவ இடைவெளி அடுத்து வரும் தலைமுறைகளில் நாம் நிலவுக்குச் செல்லும் முன்னரேவாவது சரி செய்ய வேண்டும்.

அது டீக்கடையோ பாராளுமன்றமோ பெண்களுக்கான வெளி என்பது இன்னமும் காலியாகத்தான் உள்ளது. நாம்தான் நமக்கான இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

படைப்பாளர்:

தரங்கிணி

எல்சீவியர் என்னும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். வாசிப்பில் நாட்டம் உடையவர். பெண்ணியம் சார்ந்த சமூக முன்னெடுப்புகளில் பங்களிப்பதில் ஆர்வம் உடையவர்.