அகதி – 1:

அவள் நன்கு படித்த பொறியியல் பட்டதாரி. ஏதாவது ஓர் அலுவலகத்தில் சேர்ந்து வேலையைக் கற்றுக் கொண்டு  சிறு அளவிலேனும் சொந்தமாகச் செய்ய வேண்டும் என்று கண்கள் விரியச் சொல்வாள். இடையில் உறவுப் பையனோடு காதல். இறுதியாண்டு முடிக்கும் முன்பே நிச்சயதார்த்தம். கடைசி செமஸ்டரை முடித்தவுடன் கல்யாணம். பத்திரிகையை என்னிடம் நீட்டியவளிடம்,”உன் லட்சியம் என்னம்மா ஆச்சு?” என்றேன். “கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்குப் போகலாம்னு அவங்க வீட்ல சொல்லிட்டாங்க” என்றாள் உற்சாகமாக. நானும் சந்தோஷப்பட்டு வாழ்த்தினேன். இப்போது கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கடந்துவிட்டது. என்ன செய்கிறாள் என்று விசாரித்தபோது, “ஒன்றிரண்டு மாதங்கள் போகட்டும், நீ என்கூட ஆபீஸ் வந்து வேலைகளைக் கவனிச்சுக்கோ” என்றிருக்கிறான் மாப்பிள்ளை. நான்கைந்து மாதங்கள் கடந்தும் அவர்கள் அமைதியாக இருக்கவே, இவள் மீண்டும் மீண்டும் கேட்டபோது, “நீ ஒண்ணும் வேலைக்கெல்லாம் போக வேண்டாம்.. வீட்டு வேலைகளைக் கவனிச்சுட்டு, அம்மா, அப்பாவைப் பார்த்துக்க” என்று பதில் வந்திருக்கிறது. “பொறியியல் படித்து விட்டுப் பொரியல் செய்து கொண்டிருக்கிறேன் ஆன்ட்டி” என்கிறாள் வருத்தத்தோடு. இடையில் அக்கம் பக்கமும், உறவுகளும் கொடுத்த அழுத்தத்தில் மாமியார், “எப்போ குட் நியூஸ் சொல்லப் போறே?” என்று வேறு குடைகிறார். கோயில் கோயிலாக அலைந்து கொண்டிருக்கிறாள். 

அகதி -2:

இவள் நன்கு படித்துவிட்டு, தகவல் தொழில்நுட்பத் துறையில் கை நிறைய சம்பளம் வாங்குகிறாள். தன்னுடன் பணிபுரியும் இளைஞனைக் காதலித்து, இருவரும் திருமணமும் செய்து கொண்டார்கள். சில மாதங்கள் மகிழ்ச்சிகரமாக ஓடிய வாழ்க்கையில் இப்போது ஓர் இடி. இருவர் சம்பளமும் கை நிறைய வருவதால் வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழலாம் என்றிருந்தவளுக்கு முதல் அதிர்ச்சியாகத் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டான் மாப்பிள்ளை. சரி இப்போதெல்லாம் ஹவுஸ் வொய்ஃப் மாதிரி ஹவுஸ் ஹஸ்பெண்ட் என்று வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன் எனச் சொல்லுவாரோவென்று எண்ணினாள். அடுத்த அதிர்ச்சியாக அதுவும் முடியாதென்று சொல்லி விட்டு சும்மா படுத்துப் பொழுதைப் போக்குகிறானாம். இடையில் ஒரு பெண்குழந்தை வேறு. வீட்டுவேலை, குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பு, சம்பாத்தியம் என்று எதிலும் மாப்பிள்ளை ஈடுபடுவது இல்லை. இருவர் வீட்டிலும் பஞ்சாயத்து பண்ணவும் யாரும் தயாராக இல்லை. “வாழ்க்கை நரகமாயிடுச்சு” என்று இயலாமையில் புலம்புகிறாள். 

அகதி -3:

இந்தப் பெண் படிக்கும் போது உடன் பயிலும் சீனியர் மாணவரைக் காதலித்தாள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் காதல் வளர்ந்து வீட்டுக்குத் தெரிந்து பிரிக்கப்பட்டது. அவளைவிட வயது சற்று மூத்த ஒருவருக்கு அவளது முந்தைய காதல் விவகாரத்தைச் சொல்லியே கல்யாணம் செய்து கொடுத்தார்கள். நல்லவிதமாக, பெருந்தன்மையாகக் கல்யாணம் செய்து கொண்டவர், நாட்கள் நகர தனது சுய முகத்தைக் காட்டத் தொடங்கினார். சந்தேகம், திடீர் திடீரென வீட்டுக்கு வருவது, அவளது செல்போனை ஆராய்வது என்று அவளைக் காயப்படுத்தத் தொடங்கினார். அவர்களது மகனும் தந்தையைப் பார்த்துத் தாயை மதிக்காமல் நடந்து கொள்கிறான். மகள் இப்போதுதான் சின்னஞ் சிறு குழந்தை. “வீட்டை விட்டுப் போயிறலாம்னா.. அப்பாவும், அம்மாவும் குடும்ப கௌரவம் போயிரும்.. சொந்தக்காரங்க மத்தியில் அசிங்கமாயிரும்னு அழறாங்க.. மீறி வெளியில் போனா, சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவேன்? குழந்தையை என்ன பண்றது?.” என்று அழுகிறாள்.

அகதி -4:

பெருநகரத்தில் பிறந்து, வளர்ந்து, படித்துப் பணிபுரியும் ஒரு பெண். சொந்த ஜாதியிலேயே வரன் வேண்டும் என்று திருமணத் தகவல் மையத்தில் பார்த்துப் பார்த்துத் தேடியெடுத்த ஒரு கிராமத்து மாப்பிள்ளை. அவனும் நன்கு படித்துப் பணிபுரிந்து, கை நிறைய சம்பாதிப்பவன்தான். கட்டம், சதுரம், வட்டமெல்லாம் ஜாதகத்தில் பார்த்துச் சலித்தெடுத்துத் திருமணம் செய்து கொண்டார்கள். ஒரு மாதம்கூட முடியவில்லை. அந்தப் பெண் அம்மா வீட்டுக்குப் போய்விட்டாள். மாப்பிள்ளை வீட்டில் காரணம் கேட்டபோது, “பெண்ணுக்குத் தோசை வட்டமாகச் சுடத் தெரியவில்லை.. கோலம் போடத் தெரியவில்லை.. வீட்டு வேலை எதுவும் தெரியவில்லை” என்று மாமியார் அலுத்துக் கொண்டார். அந்தப் பெண்ணோ, “தினமும் காலைல எந்திரிச்சு வந்தா, சுத்தமா இருக்கியா? போய்த் தலைக்குக் குளின்னு எல்லார் முன்னாடியும் சொல்றாங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு” என்றாள். வேலையை ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள். தினமும் வீட்டு வேலை சம்பளம் இல்லாமல் செய்ய ஆள்தான் தேடியிருக்கிறார்கள். அப்புறம் பல பஞ்சாயத்துகள் வைக்கப்பட்டும் பலனின்றி விவாகரத்து பெற்றுவிட்டார்கள். அதன் பிறகு அந்த மாப்பிள்ளை தனக்கேற்ற மாதிரி தோசை வட்டமாகச் சுடத் தெரிந்த, கோலம் போடத் தெரிந்த, வீட்டையும், தன்னையும், பெற்றோரையும் கவனித்துக் கொள்வது மட்டுமே லட்சியமாகக் கொண்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டான்.

அகதி -5: 

நன்கு படித்த பையன் தன் சொந்த அத்தை மகளையே திருமணம் செய்து கொண்டான். காதல் மணமெல்லாம் இல்லை. உறவுகள் கூடி நடத்தி வைத்த திருமணம்தான். திருமணமான நாளில் இருந்தே இருவருக்கும் ஒத்துப் போகவில்லை. மாப்பிள்ளை பயங்கர சந்தேகப் பிராணி. வெளி வாசல், கடைக்குக் கூட மனைவியை அனுப்புவதில்லை. தானே பொருட்கள் எல்லாம் வாங்கித் தந்துவிடுவான். யாரிடமும் பேசக் கூடாது. வீட்டை விட்டே வெளியில் வரக் கூடாது. மீறி எதற்காவது வாசலுக்கு வந்தால், “எவனைப் பார்க்க வந்திருக்கே?” என்பது போன்ற கடுஞ் சொற்கள் பிரயோகிக்கப் பட்டன. ஒரு மகள் பிறந்தாள். குழந்தையிடம்கூட மனைவியை ஒட்ட விடவில்லை. தன்னுடைய தாய் வீட்டுக்குக் குழந்தையைக் கொண்டு போய் விட்டுவிட்டான் மாப்பிள்ளை. வாரம் ஒருமுறை மட்டுமே குழந்தையைப் பார்க்க அனுமதி. இப்போது குழந்தை ஏழாவது படிக்கிறாள். பருவமடைந்தும் விட்டாள். குழந்தையிலிருந்தே தாயின் அரவணைப்பில் இல்லாததால் மகளுக்கு அன்னையிடம் அவ்வளவு ஒட்டுதல் இல்லை. “ஏன் இவ்வளவு பிரச்னை உங்களுக்குள்? பேசித் தீர்த்துக் கொள்ளலாமே” என்றால், “பேச வந்தால்தானே தீர்க்க முடியும்.. பேசணும்னு கூப்பிட்டாலே குடிச்சிட்டு வந்து அடிப்பான். அவருக்கு இன்னொரு பொண்ணோட தொடர்பு இருக்கு. அவ கூட வீடியோ கால் பேசுறதை நிறையத் தடவை பார்த்திருக்கேன்” என்றாள் கேவலுடன். “அதனால்தான் நான் ஏதாவது கேட்டுருவேனோன்னு என்னை வம்புக்கு இழுத்து அடிச்சு வாயை மூடிடுறான்” என்றவள், “அப்பப்போ வெளியில் போயிரலாம்னு தோணும்.. ஆனா பொண்ணைப் பெத்து வெச்சிருக்கேன். இந்த சொசைட்டி என்ன சொல்லும்? வெளியே போனா சாப்பாட்டுக்கு என்ன பண்றது? நான் படிக்கவும் இல்லை” என்று கண்ணீர் வடித்தாள்.

கல்யாணம் என்கிற ஒன்று சமூகம் கொஞ்சம் முன்னேறிய பிறகு கொண்டு வரப்பட்ட ஏற்பாடு. குடும்பம் என்கிற அமைப்பு, அது முழுக்க முழுக்க ஆணின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. அதன் மூலம் தாய்வழிச் சமூகமாக இருந்தவர்கள் தந்தைவழிச் சமூகமாக மாற்றினார்கள். இந்தக் கல்யாணங்கள் ஒருவரது வாழ்க்கையில் நுழைந்து ஏற்படுத்தும் மாற்றங்கள்தாம் எத்தனை!. கல்யாணங்களில் நூறு சதவீதம் பெண்களுக்குத்தான் சுமைகள் ஏற்றப்படுகின்றன. இன்னும் எவ்வளவு பெண்ணியம் பேசினாலும் எழுதினாலும், போராடினாலும் பெண்கள்தாமே சமைத்துக் கொண்டிருக்கிறோம்?

அன்றைய பெண்களில் ஒன்றிரண்டு விழுக்காடு மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தார்கள். அதிலும் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே பொருளாதாரச் சுதந்திரம் பெற்றிருந்தார்கள். நேற்றைய பெண்கள் கல்வியறிவு பெற்றார்கள். பொருளாதாரச் சுதந்திரம் ஓரளவு பெண்களுக்கு மட்டுமே வாய்த்தது. அவர்களும் வாங்கிய சம்பளத்தைப் புருஷனிடம் ஒப்படைத்து விட்டு, ஒரு காபிக்காக அவனிடமே கையேந்தியிருந்தார்கள். இன்றைய பெண்கள் ஓரளவு வாங்கிய சம்பளத்தைத் தனக்காகச் செலவு செய்யத் துணிந்திருக்கிறார்கள்.

இந்தக் கல்யாணங்கள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் தனக்கென்று ஒரு பாதுகாப்பு வேண்டும். அது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், பொருளாதார நிலை சரியில்லாமல் இருந்தாலும் ஒருவருக்கு இன்னொருவர் உதவிக் கொண்டு அனுசரணையாக இருந்து, உறவுச் சங்கிலியின் கண்ணிகள் அறுந்து போகாமல் காத்துக் கொள்ள வேண்டிதான் திருமணங்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் மேற்கண்ட கல்யாணங்களினால் யாருக்கு நிம்மதி இருந்ததென்று சொல்லுங்கள் பார்க்கலாம். சுற்றியிருப்பவர்கள் என்ன சொல்லுவார்களோ என்கிற காரணத்தால் மட்டுமே நிறைய கல்யாணங்கள் செய்யப்படுகின்றன. அடுத்தவர் வாயை அடைக்க வாழ்வைப் பணயம் வைக்க வேண்டுமா?. கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை. நிறைய உறவுகள் கசப்பும் வெறுப்புமாகப் போலியான வாழ்க்கையைத்தான் வாழ்கின்றன. ஆனால் அந்த உறவில் இருந்து விடுவித்துக் கொள்ளும் துணிச்சலைப் பெண்ணுக்குக் கல்வியறிவும் பொருளாதாரச் சுதந்திரமுமே வழங்க இயலும். அதனால் பெண்கள் சுயமாக வாழ விரும்பினால் கல்வியைக் கட்டாயம் பயில வேண்டும். அது தரும் தன்னம்பிக்கையை வேறு எதனாலும் தர முடியாது.

திருமணம் என்கிற உறவு நிபந்தனைகள் அற்றதாக வெளியில் தெரிந்தாலும், அது கண்ணுக்குத் தெரியாத கணக்கற்ற நிபந்தனைகளைப் பெண்கள் மீது மட்டுமே விதிக்கிறது. திருமணம் செய்து கொள்ளும் போது, “உங்க பெண்ணுக்குத் தானே செய்யறீங்க.. உங்க இஷ்டம்” என்று அலங்காரமாகப் பேசி வரதட்சணை கொடுக்க நிர்ப்பந்திக்கிறார்கள். திருமணத்தில் தாலி பெண்ணுக்கு மட்டுமே கட்டப்படுகிறது. “நீ இன்று முதல் இந்த ஆணுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் கட்டுப்பட்டவள்” என்று அது மறைமொழி பேசுகிறது. திருமணம் ஆனவுடனே கணவன் வீட்டுக்குத்தான் மனைவி போக நேர்கிறது. மறுநாளில் இருந்தே கரண்டியை அவள் கையில் கொடுத்து விடுகிறார்கள். புதுச் சூழல் பழகிக் கொள்ள வேண்டும் என்று மறைமுகமாகக் கட்டாயம் செய்கிறார்கள். கணவனின் பெற்றோருக்குப் பணிவிடைகள் செய்து, கவனித்துக் கொள்ள வேண்டும் என்று காலங்காலமாகப் போதிக்கிறார்கள். அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனால் அவளால் உடனிருந்து கவனித்துக் கொள்ள முடியாதபடி இந்தச் சமூகம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அவளால் பண உதவிகூடச் செய்ய இயலுவதில்லை. மகளிடம் இருந்து பண உதவி பெறுவதைத் தன்மானப் பிரச்னையாக உருவகித்து வைத்திருக்கிறார்கள். 

 இவையெல்லாம் தவறுதான். ஏனென்றால் இவை அனைத்துமே முழுக்க முழுக்க ஆணின் கண்ணோட்டத்தில் அமைக்கப் பட்டவை. இருவர் இணைந்து ஒரு புதிய உறவை உண்டாக்கும் போது அங்கு பணமும் அவசியம்தான். ஆனால் அது மட்டுமே அவசியம் இல்லை என்கிற புரிதலும் வேண்டும். திருமணம் ஆடம்பரமாகவோ அல்லது எளிமையாகவோ எப்படி நடந்தாலும் தாலி என்கிற ஒன்றைப் பெண்ணுக்கு மட்டும் கட்டக் கூடாது. தமிழர் வாழ்வில் தாலி என்பது கிடையாது. தாலி என்கிற ஒன்று திரைப்படங்களின் தயவால் (?) தான் புனிதமாக்கப்பட்டுச் சீரழிகிறது. ஒன்று இருவரும் பரஸ்பரம் தாலி கட்டிக் கொள்ள வேண்டும். அல்லது தாலியே இல்லாத கல்யாணங்களாக இருந்தால் நல்லது. சமையல் என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஏனென்றால் பணி நிமித்தமோ அல்லது படிப்பு நிமித்தமோ வெளியூர் அல்லது வெளியிடங்களில் தங்க நேரிடும் போது, தரமற்ற உணவகங்களில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. நாமே சுயமாகச் சமைக்கும் போது அது இன்னும் ருசிக்கும். கரோனா, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் சுய சமையல் தெரிந்தவர்கள் அதிகம் பாதிப்பின்றி இருந்தார்கள் என்பது உண்மைதானே. வீட்டில் எல்லா வேலைகளையும் ஒருவர் தலையிலேயே கட்டாமல் குறைந்தபட்சம் அவரவர் உடைகளைத் துவைத்துக் கொள்வது, அவரவர் சாப்பிட்ட தட்டுகளைக் கழுவி வைப்பது, வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வது போன்ற காரணங்களால் எல்லாருக்குமே நேரம் மிச்சமாகும் என்பது எவ்வளவு நல்ல விஷயம். தம்பதியர் இருவருமே பணிக்குச் செல்லும் போது இத்தகைய வழக்கம் இருவருக்குமே இன்னும் அன்யோன்யத்தைத் தூண்டும். அதேபோல் குழந்தையைப் பராமரிக்கும் வேலையையும் தம்பதியர் இருவரும் இயல்பாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதனால் பின்னாட்களில் யாரும் யாரையும் விரல் நீட்டிக் குற்றம் சுமத்தத் தேவையில்லை இல்லையா?.

ஆணின் பெற்றோரைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு.. அவனுக்கு இருக்கும் போது, பெண்ணின் பெற்றோரை அவள் தானே கவனித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இருவரும் இணைந்து ஒருவருக்கு இன்னொருவர் உதவிக் கொண்டு இருவர் பெற்றோரையும் கவனித்துக் கொள்ளலாம். ஒரு திருமணம் என்பது இத்தனை கமிட்மென்ட்களைத் தன்னுள் அடக்கியிருக்கிறது. இந்தப் புரிதல்கள் இல்லாமல், ஊருக்குப் பயந்து திருமணம் செய்வதைவிட சும்மா இருப்பது தவறில்லை. அதேபோல் திருமணம் செய்து கொள்வதும், கொள்ளாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம்.

இப்போது திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் உறவு முறை பெருகிவிட்டது. இந்த ‘லிவிங் டுகெதர்’ உறவு சரியா, தவறா என்கிற விவாதத்துக்குள் இப்போது போக வேண்டாம். ஏனென்றால் உலகத்தில் உருவான எல்லாமே மாற்றத்துக்குட்பட்டது. அதற்குத் திருமணம் என்கிற அமைப்பும் விதிவிலக்கு அல்ல. கட்டற்ற பாலுறவை நெறிப்படுத்த திருமணம் என்கிற அமைப்பு ஏற்பட்டது. இந்த அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக நாளை இதுவும் மாற நேரிடலாம். எதற்கும் மனத்தைத் தயாராக வைத்துக் கொள்வோம்.

படைப்பாளர்:

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.