வாசிக்கும் பழக்கம் கொண்ட பெண்கள் அலுவலகங்களிலும் வீடுகளிலும் கணனிகளில் இயங்கத் தொடங்கியதும் இணையத்தில் தேடியது தங்கள் மனதிற்குப் பிடித்தமான எழுத்துகளைத்தான். அப்படித்தான் குடும்ப நாவல்கள் என்று அடையாளப்படுத்தப்படும் ஜனரஞ்சக பெண்ணெழுத்துகள் இணைய உலகத்தில் அடியெடுத்து வைத்தன.

என்னதான் பிளாக் (Blog) இணைய எழுத்துகளுக்கு ஆரம்ப நிலையாக இருந்தாலும் இணையதளங்களே (website) மிகப் பெரிய வாசிப்பு பட்டாளத்தை எழுத்தாளர்களுக்கு உருவாக்கித் தந்தன எனலாம்.

அப்படியாக இரண்டாயிரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் குடும்ப நாவல்களுக்கு என்று பிரத்தியேகமாக இயங்கிய தளம்தான் ‘அமுதாஸ்’. வார இதழ்கள், மாத இதழ்கள் மூலமாக மட்டுமே குடும்ப நாவல் உலகத்தில் நுழைந்த பெண்கள் இணையம் மூலமாகவும் நுழைய ஆரம்பித்தது அமுதாஸ் தளத்தின் வழியாகத்தான்.

அதுவரை குடும்ப நாவல்களைப் பதிப்பிக்க வேண்டுமெனில் அருணோதயம் பதிப்பகத்தைத்தான் அணுக வேண்டும். ரமணிசந்திரனைத் தொடர்ந்து எழுத வந்த பல பெண் எழுத்தாளர்கள் அடையாளம் கண்டுகொண்டு பதிப்பித்த பெருமையும் அவர்களையே சாரும்.

அப்படியாக அருணோதயம், அறிவாலயம், அருண் நிலையம், பிரியா நிலையம், நாகம்மை பதிப்பகம் போன்றவை குடும்ப நாவல்களைப் பதிப்பித்தன. இப்பதிப்பகங்களின் எழுத்தாளர்கள் மட்டும் பெண்கள் இல்லை. புத்தகமாக வாங்கி வாசிப்பவர்களும் பெண்கள்தாம்.

பெண்கள் தங்கள் நாவலை மேற்குறிப்பிட்ட இப்பதிப்பகங்களில் பதிப்பிக்க வேண்டுமென்றால் தங்களது படைப்புகளை அச்சிட்டு ஸ்பைரல் செய்து அனுப்ப வேண்டும். அதனை மூன்று பேர் கொண்ட குழு வாசித்துப் பதிப்பிக்கலாமா, வேண்டாமா என்ற முடிவை எடுப்பார்கள். ஆனால், அவ்வளவு சீக்கிரத்தில் அது நடந்துவிடும் காரியம் இல்லை. நிறைய நாவல்கள் படிக்கப்படாமலேகூட நிராகரிக்கப்படும்.

ஆனால், அமுதாஸ் தளம் வந்த பிறகு எல்லாம் தலைகீழானது.  நாவல்கள் நேரடியாக வாசகர்களைச் சென்றடைந்த பின்னரே பதிப்பகங்களுக்குச் சென்றன. வாசகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுக் கொண்டாடப்பட்ட பின்னரே புத்தகமாக வெளி வந்தன.

அதுதான் மின்னிலக்க (டிஜிட்டல்) எழுத்திற்கான மகிமை. அப்படியாக இணையத்தில் பிரபலமான சில குடும்ப நாவல் எழுத்தாளர்கள் தங்களுக்கு என்று தனி இணையத்தளத்தையும் ஆரம்பித்தனர்.

அவரவர்களின் தளங்களில் படிக்கவென்று உருவாகிய வாசகர் வட்டங்கள் மூலமாக நாளடைவில் சிலர் பணம் ஈட்டவும் செய்தனர். கூகிள் ஆட் சென்ஸ் (Google adsense) பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். தளங்களில் வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும், அதில் வரும் விளம்பரங்களின் சொடுக்குகளைப் பொறுத்தும் அத்தளங்களுக்கு டாலர்கள் வரும். அவற்றின் எண்ணிக்கை நூறு டாலர்களைத் தொடும் போது அது அந்த இணையத்தளத்தின் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

இப்படி எல்லாத் தளங்களும் பணம் ஈட்டி விடுவதில்லை. ஆனால், கணிசமாக ஒரு நாளைக்குப் பத்தாயிரம் பார்வையாளர்கள் வரை போகும்போது இது சாத்தியமாகிறது. அப்படிப் பார்க்கும்போது அந்தத் தளத்தில் இருபது, முப்பது எழுத்தாளர்களாவது தொடர்ந்து எழுத வேண்டும். 

அவ்வாறு எழுதுகிறவர்களுக்குப் புத்தகம் பதிப்பித்துத்  தரும்  வாக்குறுதியைக் கொடுக்கும் போது அவர்களும் தொடர்ந்து அத்தளங்களில் எழுதுவார்கள். அப்படியாக நிறைய குடும்ப நாவல் எழுத்தாளர்கள் தள உரிமையாளரிலிருந்து பதிப்பகத்தினராகப் பரிணமித்தார்கள்.

தங்கள் நூல்களைப் பதிப்பித்துக் கொள்வதோடு தங்கள் தளத்தில் எழுதும் மற்ற பெண்களுக்கும் புத்தகங்கள் பதிப்பித்துத் தந்தார்கள். மேலும் அவர்கள் தளத்தில் நாவல் போட்டிகள் அறிவித்து, அதில் சிறந்த எழுத்துகளைத் தேர்ந்தெடுத்து அவற்றையும் புத்தகமாக வெளிக்கொண்டு வந்தார்கள். அது மட்டுமன்றி இப்போட்டிகள் வழியாகப் பார்வையாளர்கள் எண்ணிக்கை தாறுமாறாக ஏறியது. இதில் வியாபாரமும் நடந்தது. சக பெண்களின் திறமைகளை கைதூக்கிவிடுவது போலவும் ஆனது.

என்னையும் அப்படிதான் ஒரு பெண் எழுத்தாளர் கைதூக்கிவிட்டார். ஆனால், நானாகப் புத்தகம் பதிப்பிக்கத் தேடிச் சென்றது லேடிஸ் விங்க்ஸ் தளத்தின் உரிமையாளரை. அமுதாஸ், பெண்மைக்குப் பிறகு நிறையப் பெண் எழுத்தாளர்கள் கூடும் இடமாக இருந்தது லேடீஸ் விங்க்ஸ் தளம். அத்தளத்துடன் சிறகுகள் பதிப்பகமும் இணைந்திருந்தது.

வாட்பேட் எழுத்தாளர் மூலமாக அத்தள நிறுவனரின் எண்ணைப் பெற்றுப் பேசினேன். அவர் எனக்கு நம்பிக்கை தரும்விதமாகப் பேசினார். ஆனாலும் என் நாவலைப் பதிப்பிக்கும் வாக்குறுதியை எல்லாம் தந்துவிடவில்லை.

அவர் தளத்தில் எனது நாவலைப் பதிவேற்றம் செய்து, அது அங்கே படிக்கும் வாசகர்களுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே புத்தகமாகப் போட்டுத் தருவதாகச் சொன்னார். அது கொஞ்சம் நியாயமான நிபந்தனையாகத் தோன்றியதால் நான் அதற்கு ஒப்புக் கொண்டேன். அந்தச் சமயத்தில் நிறையத் திறமையான எழுத்தாளர்கள் லேடீஸ் விங்க்ஸ் தளத்தில் எழுதிக் கொண்டிருந்தார்கள். இருப்பினும் வாட்பேட் செயலியில் இருந்த அளவுக்குப் பெரிய கூட்டமாக இல்லாவிட்டாலும் அவற்றுள் இயங்கியவர்கள் பலரும் குடும்ப நாவல்களுக்கான பிரத்தியேக வாசகர் கூட்டமாக இருந்தார்கள். 

இந்தக் கூட்டத்தைக் கவர நல்ல கதை மட்டும் போதாது. நல்ல எழுத்தும் வேண்டி இருந்தது. வாட்பேட் செயலியைப் பொறுத்தவரை அதிகபட்சம் இரண்டு மூன்று வரிகளில் கருத்துகள் வரும்.

ஆனால், லேடீஸ் விங்க்ஸில் கதையை அலசி ஆராய்ந்து ஒரு முழுப் பக்கத்திற்கு அத்தளத்தின் வாசகர்களால் விமர்சனங்கள் எழுதப்படும்.  

என்னுடைய முதல் நாவலுக்கு பவித்திரா நாராயணன் என்கிற தோழர் முகநூலில் நீண்ட விமர்சனம் ஒன்றை எழுதி இருப்பதாகக் கேள்விப்பட்டேன். உடனடியாக எனது பழைய ஃபேஸ்புக் ஐடியை தூசிதட்டி எடுத்து, அந்த விமர்சனத்தைத் தேடிக் கண்டுபிடித்து வாசித்தேன். அந்த விமர்சனத்தின் கருத்துப் பெட்டியிலும் நிறைய வாசகர்கள் கதையை வாசித்துவிட்டு பாராட்டி எழுதினார்கள்.  

ஒரு சின்ன பாராட்டுக்கும் அடையாளத்துக்கும் ஏங்கிக் கொண்டிருக்கும் மனதிற்கு இத்தனை பெரிய பாராட்டு கிடைத்தால் அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதை எந்த வார்த்தைகளாலும் கொண்டும் விவரிக்க முடியாது.

கடந்த நான்கைந்து வருடங்களில் இது போன்ற நிறைய  விமர்சனங்களைப்  பார்த்துவிட்ட போதிலும் பவித்திரா நாராயணன் எழுதிய விமர்சனம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று.  

அதன் பிறகு லேடீஸ் விங்க்ஸ் தளத்தில் நான் பதிவிட்ட இரண்டாவது நாவலான ஆதியே அந்தமாயும் வாசகர்கள் கவனத்தையும் விமர்சனங்களையும் பெற்றது.

இந்தப் பாராட்டுகளும் புகழ்ச்சிகளும் என்னை இன்னும்  வெறித்தனமாக  எழுதவும் வைத்தது. அப்படி இரண்டாவது நாவலை எழுதி முடிக்கவிருந்த சமயத்தில்தான் வாட்பேடில் என்னைத் தொடர்ந்த பதிப்பக உரிமையாளர் மற்றும் குடும்ப நாவல் எழுத்தாளர் ஒருவர் அவராக வந்து என்னுடைய நூலைப் பதிப்பிக்க விருப்பம் தெரிவித்தார். அவரும் அப்போது தனியாக ஓர் இணையதளம் வைத்து நடத்தி வந்தார்.

அவரது பதிப்பகம் வழியாக 2018இல் சென்னை புத்தகக் காட்சியில் என்னுடைய முதல் நாவல் வெளியானது. அதாவது என்னுடைய மூன்றாவது நாவல் முதல் புத்தகமாக உருப்பெற்றது. அதனைத் தொடர்ந்து எனது பதிப்பகத்தினருக்கு உரிமையான தளத்தில் பத்திற்கும் மேற்பட்ட நாவல்களைக் கிட்டத்தட்ட இரண்டே வருடங்களில் எழுதி முடித்தேன்.

அவற்றில் நான்கு நாவல்கள் அடுத்தடுத்து பதிப்பிக்கவும் பட்டது. ஆனால், காதலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்கள் மட்டுமே பதிப்பிக்கப்பட்டன. மற்ற நாவல்கள் கிடப்பில் போடப்பட்டன. ஒரு வகையில் காதல் மற்றும் குடும்பம் என்கிற வரையறையைத் தாண்டி நான் வித்தியாசமாக முயிற்சித்து எழுதிய நாவல்கள் எதுவுமே புத்தகமாக வரவில்லை. அதில் போட்டிக்காக எழுதி வென்ற நாவல் ஒன்றும் அடக்கம்.  எழுதிய ஒரே ஒரு நாவலை அச்சில் பார்த்துவிட ஆசைப்பட்ட நான் தற்சமயம் என்னுடைய அத்தனை  நாவலையும் புத்தகமாகப் பார்க்க விரும்பியது கொஞ்சம் பேராசைதான். என்ன செய்வது? கிடைத்ததை வைத்துத் திருப்தியடையாத அற்ப மனித மனம்தானே நம்முடையது எல்லாம்.  

இதில் பதிப்பகத்தினரின் தவறென்று எதுவும் இல்லை. பணம் போட்டு வியாபாரம் செய்யும் போது நாம் எல்லாருமே லாபம் பார்க்கவே விரும்புவோம். நான் முன்பே சொன்னது போல ரொமான்ஸ் ஜெனர்களுக்கு இந்தளவுக்கான மதிப்பு வித்தியாசமான களங்களுக்கு இல்லை.

ஏன் எனக்கேகூட இன்று வரையில் அமேசான்  கிண்டிலில்  லாபம் சம்பாதித்துத்  தருபவை என்றால் ஸ்டீரியோடிப்பிக்கலாக நான் எழுதிய ஒரு காதல் கதைதான். அப்படி இருக்கும் போது என்னுடைய பேராசைக்காக என் பதிப்பகத்தாரை  ரிஸ்க்  எடுக்கச்  சொல்வது  எப்படிச் சரியாக இருக்கும்?

அதனால் போட்டியில் வென்ற த்ரில்லர் நாவல் ஒன்றை 2020 சென்னை புத்தகக் காட்சியில் நானே பதிப்பித்து வெளியிட்டேன். பிஓ டியில் இருநூறு காபிகள் அடித்தேன். இரண்டு பாகம். நானூறு புத்தகங்கள்.

கண்காட்சி முடிந்த அடுத்த மாதமே கரோனா லாக்டவுன் வந்துவிட்டது. நல்ல வேளையாகப் போட்ட நாவல்கள் அத்தனையும் புத்தகக் காட்சியிலேயே  விற்றுத் தீர்ந்துவிட்டன. அதேநேரம் கொஞ்சம் முன்னரே இந்த லாக்டவுன் மட்டும் வந்திருந்தால் என்னுடைய பணம் மொத்தம் ஸ்வாஹாவாகி இருக்கும். புத்தகம் மொத்தமும் விற்கப்படாமல் முடங்கியும் போயிருக்கும்.

அதனால் ஏற்படுகிற நஷ்டத்தைவிடவும் அவை விற்காமல் தேங்கிப் போய்விடுவதனால் ஏற்படுகிற மன உளைச்சல் என்பது மிக மிக மோசமானது.

அதேநேரம் அந்தளவான பணநஷ்டத்தைக்கூடச் சமாளிக்கும் அளவுக்கான பொருளாதார நிலையிலும் நான் இல்லை என்பதுதான் உண்மை. இருப்பினும் என்னுடைய எழுத்தையும் வாசகர்களையும் நம்பி குருட்டாம்போக்கில்தான் அத்தகைய முயற்சியைச் செய்தேன்.  

ஆனால் மீண்டும் அப்படியொரு விஷப் பரீட்சையை நான் எடுக்கவே இல்லை. அதன் பிறகு நான் வேறொரு பதிப்பகத்தில் இணைந்தேன். அவர்கள் மூலமாக என்னுடைய அத்தனை வகையான நாவல்களும் புத்தகமாக வெளிவந்தன.

இருப்பினும் அறிவியல், துப்பறிவு, சமூகம் போன்ற வகையறாவில் எழுதப்பட்ட நாவல்களைவிட ரொமான்ஸ் நாவல்களுக்கே இங்கே எப்போதும் மதிப்பு அதிகம். அந்த வகை புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகம். விற்பனையும் அதிகம். 

பெண்களின் எழுத்துகள் குடும்ப நாவல்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஆரம்பக் கட்டங்களில்கூட இப்படிக் குண்டுசட்டியில் குதிரை ஓட்டவில்லை. குடும்பக் கதைகளாகவே இருந்தாலும் அவை பல்வேறு உறவுகளை வைத்துப் பல விதமான கோணங்களில் எழுதப்பட்டன. ஆனால், இன்றைய நாவல்களில் பலவும் கணவன் மனைவி உறவை மட்டுமே மையப் புள்ளிகளாக வைத்துச் சுழல்கின்றன. அப்படியே காதலாகக் கசிந்துருகுகின்றன.

சரி போகட்டும். அந்தக் காதல் கதைகளின் கருக்களாவது அவர்களின் சொந்த கற்பனையா என்றால் அதுவும் இல்லை. பெரும்பாலானவை டிக்டோவாக காப்பி அடித்து எழுதப்பட்ட மில்ஸ் அன் பூன் வகையறா கதைகள்.

அது என்ன மில்ஸ் அன் பூன்? அதற்கும் குடும்ப நாவல் உலகத்திற்குமான தொடர்பு என்ன? 

(தொடரும்)

படைப்பாளர்: 

மோனிஷா. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர்.  இன்று வரையில் இணையத்தில் 27 நாவல்களை எழுதி முடித்திருக்கிறார். அவற்றில் இருபது நாவல்கள் புத்தகமாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.   

பெண்ணியம் சார்ந்த கருத்துகளும் சூழலியல் சார்ந்த விழிப்புணர்வுகளும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன.