பொன்முடி 1950ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இப்படத்தின் கதை, கவிஞர் பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் எனும் குறுங் கவிதைக் காப்பியத்தில் இருந்து வந்தது. அது ஒரு துன்பியல் காப்பியம். பிற்பகுதியில் கலைஞர் சிறிது சேர்த்து, இன்பமான திரைப்படமாகப் பொன்முடியை முடித்து வைத்து இருக்கிறார்.

எதிர்பாராத முத்தம் 1938 ஆம் ஆண்டு, மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்ட கவிதை வடிவிலான கதை. நூலை வாசிக்க விரும்புவோர் கீழ்கண்ட இணையதளத்தில் வாசிக்கலாம்.

https://www.chennailibrary.com/bharathidasan/ethirpaaraathamuththam.html

திரைப்படத்தில் பாரதிதாசனார் குறித்தோ கலைஞர் குறித்தோ எழுத்துப் போடும் போது போடவில்லை.

திரைப்படத்தை இயக்கியவர் எல்லிஸ் R டங்கன். எல்லிஸ் துரை குறித்து வாசிக்கும் போதுதான் எல்லிஸ் என்று ஓர் இயக்குநர் இருந்தார் என்பதே எனக்குத் தெரியவந்தது. ஹாலிவுட்டில் உடன் பயின்ற மாணிக் லால் டாண்டனுடன் நந்தனாரில் இணைந்து பணியாற்றிட எல்லிஸ் ஆர்.டங்கன், அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து திரைப்படங்களை இயக்கி இருக்கிறார் என்னும் போது வியப்பாகத்தான் இருந்தது.

திரைப்படத்தை மார்டன் தியேட்டர் தயாரிக்க ஐயா ஜி.இராமநாதன் இசை அமைத்து இருக்கிறார். 1940ஆம் ஆண்டு ஹரிஹரமாயா திரைப்படம் முதலே ஜி.இராமநாதன் இசை அமைத்து இருந்தாலும். இந்தத் திரைப்படத்தில் பாடல் ஒன்றும் பாடியிருக்கிறார்.

ஆண் நடிகர்கள்

நரசிம்ம பாரதி

ஆர்.பாலசுப்ரமணியம்

சக்கரபாணி

காளி என்.ரத்தினம்

ஆழ்வார் குப்புசாமி

ராம கிருஷ்ணன்

கே.கே.பெருமாள்

கருணாநிதி

ஏழுமலை

பெண் நடிகர்கள்

மாதுரி தேவி

சரஸ்வதி

தனலட்சுமி

முத்துலட்சுமி

லலிதா

நடனம்

லலிதா-பத்மினி

சின்ஹா குழு

1950 பொங்கலன்று இந்தப் படம் வெளியானது. திரைப்படத்திற்கான எழுத்துப் போடும்போதே, அடடா எனத் தோன்றியது. முத்துகளால் எழுத்தை வடிவமைத்து, அருகில் ஆங்காங்கே சங்குகளை வைத்து அழகாக வடிவமைத்து இருந்தார்கள்.

‘தேசமெங்கும் நல் வளம் பொங்கும் தொழிலாலே சேவை செய்தே வாழ்ந்திடும் தொழிலாளர்கள் நாமே’ என முத்து குளித்தல் செய்யும் மீனவர் வாழ்வைக் காட்டுவதுடன் திரைப்படம் தொடங்குகிறது. நாயகன், நாயகி இருவரின் குடும்பமும் முத்து வணிகர்கள் என்பதால், முத்து பிறக்கும் இடத்தில் இருந்து கதையும் பிறப்பது நன்றாகவே இருந்தது.

பொன்முடியின் அப்பாவும் பூங்கோதையின் அப்பாவும் பொன்முடியின் கடையில் சந்திக்கிறார்கள். இருவரும் முத்து வணிகர்கள்; நண்பர்கள். இதனால் பொன்முடி பூங்கோதை இருவரும் ஒன்றாகவே எங்கும் செல்கிறார்கள். விளையாடுகிறார்கள். ஒருநாள், பொன்முடி பூங்கோதையை இருவரும் மாப்பிள்ளை, மணப்பெண்ணாக விளையாடிக் கொண்டு இருக்கும்போது, இருவரின் அம்மாவும் வந்துவிட இருவரும் ஓடுகிறார்கள். அப்படியே ஓடி, இருவரும் வளர்ந்து, மாமல்லபுரத்தில் ஆடிப்பாடுவதைக் காட்டுகிறார்கள். இதுதான் மாமல்லபுரத்தில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாகக்கூட இருக்கலாம். பிற்காலத்தில் இவ்வாறு பல திரைப்படங்களில் ஓடிக்கொண்டு இருக்கும் போது, சைக்கிள் ஓட்டிக் கொண்டு இருக்கும்போது, குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாக போல் காட்டுவதை நாம் பார்த்து இருக்கலாம். அவற்றிக்கு முன்னோடி என இதைச் சொல்லலாம்.

இவர்கள் வளர்ந்த பிறகு அப்பாக்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரிவால், இவர்களும் பிரிக்கப்படுகிறார்கள். பெண்ணுடைய அப்பாவின் எதிர்ப்புதான் பலமாக இருக்கிறது. எதிர்ப்பையும் மீறி இவர்களின் காதல் வளருகிறது; சந்திப்பு தொடருகிறது. ஊரில் மதுரை வீரன் கூத்து நடக்கிறது. மதுரை வீரனாக, லலிதாவும் பொம்மியாக பத்மினியும் நடித்து இருக்கிறார்கள். பத்மினி அம்மா பிற்காலத்தில், மதுரை வீரன் திரைப்படத்தில் பொம்மியாக நடித்து இருக்கிறார்கள்.

ஊரில் கூத்து நேரத்தில் பொன்முடி, பூங்கோதை இருவரும் சந்திக்கிறார்கள். இதைப் பார்த்த பூங்கோதையின் வீட்டு வேலையாள், அவரின் அப்பாவிடம் சொல்ல, பூங்கோதை வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார்.

இந்தக் காலகட்டத்தில் அந்த ஊருக்குக் குமரகுருபரர் வருகிறார். தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. அன்பே சிவம். சைவம்தான் உலகில் பழமையானது. அதைவிட தமிழ் பழமையானது. நமது பண்பாட்டை எட்டுத்திக்கும் சொல்வதற்காகவேதான் பயணம் போவதாக அவர் சொல்கிறார்.

பூக்கட்டி விற்பவரிடம் பூங்கோதை கடிதம் கொடுத்து அனுப்புகிறார். பூக்காரர் வேடத்தில், பொன்முடி வந்து பூங்கோதையைச் சந்திக்கிறார். பூங்கோதையின் தந்தை பொன்முடியைக் கட்டி வைத்து அடிக்கிறார். மகன் அடிபட்ட செய்தி அறிந்த பெற்றோர், பொன்முடியை வடநாட்டிற்கு முத்து வணிகத்திற்கு அனுப்புகிறார்கள்.

பூங்கோதைக்குத் திருமண ஏற்பாடு அப்பா செய்கிறார். பூகோதையின் தோழி புனிதாவின் சித்தப்பா மகனுடன் ஒரு குழு வடக்கே வணிகத்திற்குப் போகிறார்கள். அவர்களுடன், ஆண் வேடத்தில் பூங்கோதையை அனுப்பி வைக்கிறார் புனிதா. பூங்கோதை, பொன்முடியைத் தேடிச் செல்கிறார்.

பூங்கோதை போனபின், அப்பா அழுகிறார். அவரது அழுகையில் இருந்த உண்மையைப் பார்த்த புனிதா, உண்மையைச் சொல்கிறார். பூங்கோதையின் அப்பா, பொன்முடி அப்பாவைப் போய்ச் சந்திக்கிறார். இருவரும் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்து விடலாம் என முடிவு செய்கிறார்கள். இதைப் பிள்ளைகளிடம் போய்ச் சொல்வதற்கு, அவரவர் வீட்டு வேலைக்காரர்களை அனுப்புகிறார்கள். இரு வேலைக்காரர்களும் வடக்கு நோக்கிப் புறப்படுகிறார்கள்.

தெற்கிலிருந்து வடக்கே சென்று கொண்டிருக்கும் பூங்கோதை குழுவும், வடக்கில் வணிகத்தை முடித்துக் கொண்டு வரும் பொன்முடியின் குழுவும் ஏறக்குறைய அருகருகில் வந்த இடத்தில், சக்தி வழிபாடு செய்யும் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களுக்குக் கொள்ளைதான் தொழில். “பொன்னும் பொருளும் நிறைந்த தமிழ்நாட்டு வணிகர் கூட்டம் வருகிறது. தென்னாட்டவர்கள், கொடை உள்ளம் கொண்டவர்கள். ஆனால், காரணம் சொல்லிக் கேட்க வேண்டும்” எனக் குழு முடிவு செய்து யாகம் வளர்க்க பணம் வேண்டும் என்று, பொன்முடி குழுவிடம் கேட்கிறார்கள்.

“நாங்கள் தென்னாட்டார், தமிழர்கள், சைவர், கொலை வேள்வியைக் கட்டோடு வெறுப்பவர்கள். நீதியான செயல்களுக்குக் காசு கொடுக்க தமிழன் தயங்க மாட்டான். அக்கிரமமான காரியங்களுக்கு அரைக்காசுகூடத் தர மாட்டான்” என்கிறார் பொன்முடி.

பொன்முடி தன்னைத் தேடிவரும் பூங்கோதையை எதிர்பாராத விதமாகச் சந்திக்கிறான். இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திப்பதால் ஆர்வ மிகுதியால் ஒருவரை இன்னொருவர் முத்தமிட்டுக்கொள்ள, அந்த நேரத்தில், பொன்முடியைக் கொலை செய்யத் துரத்திவந்த காளாமுகன் வெட்டிவிட, பொன்முடி இறந்து விடுகிறார். உடனே பூங்கோதையும் இறந்துவிடுகிறார். இருவர் தந்தைமாரும் தருமபுரம் மாசிலாமணித் தேசிகரிடம் சென்று தம் மக்களின் வரலாற்றைச் சொல்கிறார்கள். அவர், ‘வடநாட்டில் சைவம் வளர்ப்போம், கொலை நாட்டம் போகும்!’ என்று ஆறுதல் கூறி, குமரகுபரரை வடநாட்டுக்கு அனுப்புகிறார் என்பதாக எதிர்பாராத முத்தம் காவியத்தை, பாரதிதாசனார் முடித்துவிடுகிறார்.

குமரகுருபரர் பாடல்கள், தமிழ்ப் பாடல் செய்யுள் பகுதி மூலம் நமக்கு அறிமுகமானவைதான். பதினேழாம் நூற்றாண்டில் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த குமரகுருபரர், காசி சென்றதாக வரலாறு சொல்கிறது. திருமலை நாயக்கர் முன்னிலையில் குமரகுருபரரால் மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் பாடப்பட்ட ‘மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்’ பிள்ளைத்தமிழ் இலக்கிய வகையில் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

தருமபுரம் மடத்தின் தலைவர் ஆணைப்படி, இவர் காசிக்குச் சென்றார் என வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. இருப்பினும் அதில் எதற்காக அவரை வடநாடு செல்ல உத்தரவிட்டார் என்பது குறித்து எந்த விவரமும் இல்லை. பாவேந்தர் அதற்கான காரணத்தை ஒரு புனைவு வடிவில் எழுதியதே எதிர்பாரத முத்தம்.

ஆனால், கதையை அவ்வாறு முடிக்க விரும்பாத இயக்குநர், கலைஞர் மூலம் கதையை இன்பமாக முடித்து இருக்கிறார். இதற்காகவே, குமரகுருபரர் வருவதாக இருவரும் இணைந்து, கதையின் நடுவிலேயே காட்சியை அமைத்து இருக்கிறார்கள்.

இங்கு, பொன்முடியைப் பலிகொடுக்க வடவர்கள் பிடித்துக் கொண்டு செல்கிறார்கள். அதை, வந்து பூங்கோதையிடம் சொல்கிறார் ஒருவர். குரல் கேட்டதும், கேட்ட குரல் போல இருப்பதால் கூர்ந்து பார்த்தால், பிற்காலத்தில் பல படங்களில் அப்பாவாக நடித்தவர், அவர் பெயர் K K சவுந்தர். இறுதியில் ஜெயம் திரைப்படத்தில் ரஹீம் பாய் ஆக நடித்து இருக்கிறார். இது அவரது முதல் திரைப்படமாகக்கூட இருக்கலாம்.

பூங்கோதை வீர வசனம் பேசுகிறார். அனைவரும் பொன்முடியை மீட்கச் செல்கிறார்கள். அங்கு, பொன்முடி, “காளி, உன் பெயரால் இப்படி அக்கிரமம் செய்ய விடுவாயா?” என அவரும் வீரமாகப் பேசுகிறார். அந்த நேரம் பூங்கோதையின் குழு சென்று அவரைக் காப்பாற்றுகிறது.

இந்தச் சண்டை நடக்கும்போது குமரகுருபரர் அங்கே வந்து விடுகிறார். ‘தமிழர்களே வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய நீங்கள் ஏன் இவ்வாறு சண்டை போடுகிறீர்கள்?’ எனக் கேட்க, இவர்கள் உண்மையைச் சொல்கிறார்கள்.

பொன்முடியும் பூங்கோதையும் ஊர் வருகிறார்கள். திருமணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகத் திரைப்படம் நிறைவடைகிறது.

நாயகனும் நாயகியும் தொட்டு, அணைத்து மிக இயல்பாக, விரசமில்லாமல் தங்கள் காதலை வெளிப்படுத்தும் விதமாக காட்டியிருந்தார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் தொட்டு நடித்தது குறித்து நிறைய விமரிசனங்கள் இருந்ததாக இணையம் சொல்கிறது.

வழக்கம்போல மாதுரி தேவி நடிப்பில், வீர வசனத்தில், சோகத்தில் என அனைத்திலும் மிகவும் சிறப்பாகச் செய்து இருக்கிறார்.

காளாமுகனாக எம்.ஜி.சக்ரபாணி வருகிறார். நாயகியின் அப்பாவாக வரும், ஆழ்வார் குப்புசாமி சிறப்பான நடிப்பை வழங்கி இருந்தார்.

‘நீல வானும் நிலவும் போல செந்தமிழ் நாட்டையே சிந்தையில் வாழ்த்தியே’ என்று தொடங்கி ‘நம் ஜீவாதாரமே செல்வம் ஆகுமே ‘ என்று தொடரும் பாடல் போன்றவை மிகவும் இனிமையாக உள்ளன.

பூக்கட்டி விற்பவரிடம் பூங்கோதை கடிதம் கொடுத்து அனுப்புகிறார். கடிதத்தின் நடுவில் பூங்கோதையின் முகத்தைக் காட்டுவது என்பது எல்லாம், அந்தக் காலகட்டத்தின் புதுமையான தொழில்நுட்பமாக இருந்து இருக்க வேண்டும்.

திருமணம் பேசும்போது, பையன் என்ன படித்து இருக்கிறார் எனக் கேட்க, பையன் ஆனா ஆவன்னா தெரியும் எனச் சொல்லும்போது. இத வச்சு திருக்குறளே எழுதலாம் என வேலைக்காரர் நடிகர் கருணாநிதி கேலியாகச் சொல்கிறார்.

பையனின் அப்பா, ‘ஏழு கட்டு வீடு இருப்பதாகச் சொல்கிறார். பணம் மட்டும் நிறைய இருந்தா, படிச்ச புலவர்கள் எல்லாம் நம்ம வீட்டு வாசலில் கிடப்பாங்க’ என்கிறார். பரிசம் ஐயாயிரம் வராகன் தருகிறேன். பெண்ணுக்குப் பத்து காணி நிலம் எழுதி வைக்கிறேன். வைரத்தோடு, வைர மூக்குத்தி, வங்கி, வளையல், மாங்கா மாலை, கல்யாணம், சங்கீதம், சதிர் கச்சேரி, போக்குவரத்து எல்லாம் என் பொறுப்பு” என்கிறார். அதாவது சதிர் கச்சேரி என்பதுதான் அன்று சொல்லாடலாக இருந்து இருக்கிறது.

மேலும் ‘நீங்க பெண்ணை அழைச்சுக் கிட்டு வந்தால் போதும்’ என்கிறார். அதாவது பையன் வீட்டில்தான் சீர் கொடுத்து இருக்கிறார்கள். செலவுகளும் செய்து இருக்கிறார்கள்.

சமீபத்தில் ஓர் அம்மாவிடம் பேசும்போது, அவர்களும் இதே கருத்தைச் சொன்னார்கள். அவர்களுக்கு 1964ஆம் ஆண்டு திருமணம் நடந்து இருக்கிறது. அப்போது, வரதட்சணை முறை வந்து விட்டதாம். ஆனால், அதற்கு கொஞ்ச காலம் முன்புகூட, பெண்ணுக்குப், பணம் கொடுக்கும் வழக்கம்தான் இருந்திருக்கிறது. ஒரு வீட்டில் முந்தைய தலைமுறையில் மூன்று பெண்கள். அடுத்த தலைமுறையில் மூன்று ஆண்கள். அதனால், ஆறு சீர்வரிசை தொடர்ச்சியாகக் கிடைத்ததாகச் சொன்னார்கள். 1964 ஆம் ஆண்டு நடைபெற்ற அவர்கள் திருமணக் காலத்தில்கூட, மாமியார் பணம் எனப் பெண்ணின் அப்பா வைப்பாராம். அதை அப்படியே மணப்பெண்ணிடம், மாமனார் கொடுத்துவிடுவாராம். மிகச் சில குடும்பங்களில் மட்டும் திருமணச் செலவிற்கு எனச் செலவளித்ததை எடுத்துவிட்டு, மீதியைக் கொடுப்பார்களாம். கீழே இருக்கும் படம் அவர்களது திருமணத்தின் போது எடுத்தது.

காலம் எவ்வாறு மாறிவிட்டது என்பதைக்கூட இது போன்ற திரைப்படங்கள் உணர்த்துகின்றன.

(தொடரும்)

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.