பரிணாம வளர்ச்சியில் மனித இனம் தோன்றியதும் முதலில் உண்டான உணர்ச்சி பசியாகத்தான் இருந்திருக்கிறது. விவரம் தெரிவதற்கு முன்னரே பசிக்கு உணவு உண்ணுவதை மனிதர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். வேட்டையாடி உணவுத் தேவையைப் பூர்த்தி செய்திருக்கிறார்கள். பிறகு இயற்கையாக விளைந்த காய்கள், கனிகள், கொட்டைகள், பருப்புகள் போன்றவற்றை ருசித்திருக்கிறார்கள். அப்புறமாகத்தான் விவசாயத்தைக் கண்டுபிடித்தார்கள். சாப்பிடுவது எல்லா உயிர்க்கும் பிறப்புரிமை.

சங்க கால இலக்கியங்களில் தமிழர்கள் ஆறு பருவங்களுக்கும் பொருத்தமான உணவை உண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். குழந்தைகள், வயதானவர்கள் என்று‌ பார்த்து சமைத்திருக்கிறார்கள். பசு, எருது முதலானவற்றின் மாமிசங்களை உண்டதற்கான குறிப்புகள் ரிக் வேதத்தில் காணப்படுகிறது. நமது உணவுத் தட்டில் என்ன உணவு இருக்க வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், நம் நாட்டில்தான் உணவு மீது மதச்சாயம் பூசப்படுகிறது. சாதிப் பாகுபாடும், வர்க்க பேதமும் உணவில்கூட இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்புகூட தோசை குறித்த சர்ச்சை எழுந்தது. ஆதிக்க சாதியினர் சுடும் தோசை மெல்லியதாகவும் ஒடுக்கப்பட்ட சாதியினர் சுடும் தோசை தடிமனாகவும் இருக்கும் என்கிற அரிய (?) கருத்து முத்து உதிர்க்கப்பட்டது. பிராமணாள்ஸ் கஃபே, ஐயங்கார் பேக்கரி, ஐயர் மெஸ் என்கிற பெயரில் செயல்படும் உணவு விடுதிகள் தங்கள் உணவு ‘சுத்தமானது’ என்று காட்டவே இப்படிப் பெயரிட்டன. அதே போல் அசைவ உணவு விடுதிகள் முனியாண்டி விலாஸ் போன்ற பெயர்களில் அறியப்பட்டன. உணவகத்தின் பெயரில்கூட ஆதிக்க சாதியினர் சுத்தமான, சிறப்பான உணவு வகைகளைச் சமைப்பார்கள் என்றும், ஒடுக்கப்பட்ட மக்கள் அசுத்தமாக இருப்பார்கள் என்றும், அவர்கள் சமைக்கும் உணவின் மீது வெறுப்பு தோன்றுமாறு பொதுப்புத்தியில் திணித்திருப்பார்கள்.

அசைவ உணவு வகைகள் சாப்பிடுபவர்கள் குறிப்பாக மாட்டுக் கறி சாப்பிடுபவர்கள் இரண்டாம்பட்சமாக நமது சமூகத்தில் பார்க்கப்படுகிறார்கள். பழந் தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் வெள்ளாடு, செம்மறியாடு, மான், முயல், ஆமை, மீன், நண்டு, கோழி, காடை, உடும்பு, பன்றி என அனைத்தையும் தின்றதாக சங்க இலக்கியத்தின் வழியாக அறிகிறோம். பெரும்பாலான விளிம்பு நிலை மக்கள் ராகி, தினை, கம்பு உள்ளிட்ட சிறுதானிய வகைகளில் கூழ், புட்டு, சோறு என்று சமைத்துச் சாப்பிட்டனர். அரிசிச் சோறு விசேஷ தினங்களில் சமைக்கப்பட்டது. சங்ககால மதுரையில் இனிப்பு அடை, மோதகம் போன்றவை விற்ற வணிகர் பற்றிய குறிப்பு சங்கப்பாடலில் காணக் கிடைக்கிறது. இரவு நேரத்தில் மதுரையில் பல சிற்றுண்டிக் கடைகள் அப்போதே இருந்திருக்கின்றன. உணவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் மனித இனம், அந்த உணவைப் பக்குவப்படுத்திக் கொடுக்கும் பெண்களை வயிறார நிம்மதியாகச் சாப்பிட விடுவதில்லை என்பதுதான் உண்மை.

என் தோழி ஒருத்தியின் கணவர் அவள் மீது செலுத்திய ஆதிக்கத்தை அவளது உணவுத் தட்டிலும் செலுத்துகிறார். அவர் இயற்கை வாழ்வுப் பிரியர் என்பதால் உணவில் அரை உப்பு, புளி கூடவே கூடாது. பச்சை மிளகாயா ஐயோ. அசைவம் மூச். தோழியோ பிறந்த வீட்டில் மீன் குழம்பும் கறிக்குழம்புமாகச் சாப்பிட்டவள். வக்கணையாகச் சாப்பிட்டுப் பழகியவள். திருமணத்திற்குப் பிறகு கணவரின் விருப்புக்கேற்ப வேறுவழியின்றி மாறிவிட்டாள். கிட்டத்தட்ட இருபத்தியாறு ஆண்டுகள் காரசாரமாகச் சாப்பிட்டுப் பழகிய நாக்கு மூன்று வருடங்களாகச் சுரணையற்ற சோறு சாப்பிடுகிறது.

அவளிடம்,”உனக்குப் பிடிச்ச மாதிரி நீ தனியா சமைச்சுக்கம்மா. இல்லேனா வெளியில் சாப்பிட வேண்டியது தானே?” என்று கேட்டேன். அதற்கு,”தனியா எனக்குன்னு சமைக்க முடியுமாக்கா? இப்பவே ஆபிஸ் வர டைம் லேட்டாயிட்டே இருக்கு. அதுவுமில்லாம எங்க வீட்டுக்காரர் உடம்புக்கு ஆகாத ஐட்டங்கள்னு நிறைய மளிகைப் பொருட்களை வாங்கித் தர்றதில்லை. பத்தியமாத்தான் சமைக்கணும்னு சொல்லி அடிக்கடி கிச்சனை செக் பண்றாரு. புளியை ஒளிச்சு வெச்சிருந்ததைக் கண்டுபிடிச்சு, அரை கிலோ புளியை அப்படியே குப்பைக் கூடையில் கொட்டிட்டாருக்கா…” என்றாள் வருத்தத்துடன். வெங்காயம் சாப்பிட்டால் முடி நரைத்து விடுமென்று வெங்காயத்துக்குத் தடா. பூண்டு சூடு என்று ரசத்துக்கு மட்டும் ஒற்றைப் பூண்டுக்கு அனுமதி. எண்ணெய் ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் மட்டுமே. காபி, டீ குறித்துப் பேசவே கூடாது. அவள் லிஸ்ட் போடப்போட எனக்கு மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியவில்லை. எல்லாரும் இயற்கை உணவை வாழ்வில் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டால் அவரோ அதையே வாழ்வாக வரித்துக் கொண்டவர் என்று தெரிந்தது. எங்களுடன் சேர்ந்து அவ்வப்போது வெளியில் சாப்பிடுவாள். அவரிடம் மூச்சுவிட மாட்டாள்.

என் தந்தையும் பத்தியமாகச் சாப்பிட்டவர்தான். ஆனால், அவரது உணவுக் கொள்கையை எங்கள் மீது திணித்ததில்லை. அவருக்குப் புளி, மிளகாய் சேர்க்காமல் சமைத்துவிட்டு, எங்களுக்குக் கொஞ்சம் சேர்த்து அம்மா தினமும் இரண்டு சமையல் செய்வார். எனக்கு விவரம் தெரிந்த பின் அம்மாவின் சிரமத்தைக் குறைக்க அப்பாவுக்குச் செய்யும் சமையலையே சாப்பிட்டுப் பழகிவிட்டேன். அப்புறம் எப்படி இருந்தாலும் சாப்பிடப் பழகிவிட்டேன். என் மகளுக்கும் பழக்கிவிட்டேன். இதுதான் சாப்பிட வேண்டும் என்று நினைப்பதெல்லாம் இல்லை. கெட்டுப் போகாத எதையும் ருசித்து விடுவோம்.

இந்திய ஆண்களின் விருப்பத்திற்குத் தானே இன்றும் வீடுகளில் சமையல் செய்யப்படுகிறது. எத்தனை வீடுகளில் பெண்கள் தனக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைத்திருக்கிறார்கள்? எத்தனை வீடுகளில் பெண்கள் முதலில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள்? அப்படிப் பெண்கள் முதலில் சாப்பிடுவது பெருங்குற்றம் என்றுதானே அவளது மரபணுக்களில் போதிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் மனைவி அல்லது தாய் பரிமாறினால் மட்டுமே சாப்பிடும் ஆண்கள் குலத் திலகங்கள் வழக்கொழிந்து போய்விடவில்லை. அவனுக்குப் பிடித்ததை எல்லாம் அவன் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, தனக்குப் பின்னால் சாப்பிடுபவளுக்கு இருக்கிறதா, இல்லையா என்று கூடப் பார்க்காமல் வயிற்றைத் தடவிக் கொண்டு, ஏப்பம் விடும் ஆண்கள் இருக்கிறார்கள். சாப்பிடும் உரிமை இருக்கும் போது சமைக்கும் உரிமையும் அவனுக்கு உண்டு என்பதை உணர்த்த வேண்டும். சமைக்கும் உரிமை இருக்கும் பெண்ணுக்கு முதலில் சாப்பிடும் உரிமையும் உண்டு. இதை முதலில் நாம் மூளையில் புகுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் எப்போது பார்த்தாலும் சமையலறையில் கிடந்து நேரத்தை வீணாக்குவதைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு பெரியவர்,”இத்தனை பொம்பளைங்க ஹோட்டல்ல சாப்பிடுறாங்களே… இவங்க வீட்ல சமைக்க மாட்டாங்களா?” என்றார். “ஏன் தாத்தா பொம்பளைங்கதான் வீட்ல சமைக்கணுமா? அவங்களுக்கும் ஆயிரத்தெட்டு வேலை இருக்கும்ல? ஆம்பளைங்க வீட்ல சமைச்சு வெச்சா இவங்க ஏன் ஹோட்டல்ல சாப்பிடுறாங்க?” என்றேன். அமைதியாகி விட்டார்.

உடலுக்கு நல்லது பார்த்துச் சாப்பிடுவது தவறில்லை. ஆனால் எங்காவது வெளியூர்ப் பயணம் சென்றாலோ, அல்லது தொலைதூரக் கோயில்களுக்குச் சென்றாலோ கட்டுச் சோறு சமைத்து எடுத்துச் சென்று, குடும்பத்தார் சாப்பிட்டார்களா என்று பார்த்து, மிச்சம் மீதியை வழித்துப் போட்டுக் கொண்டு, பாத்திரங்களைச் சுத்தம் செய்து, பத்திரப்படுத்தி, தான் பயணம் போன நோக்கமே மறந்து போகும் பெண்களே… எங்காவது செல்லும் போது முடிந்தவரை கைவீசிச் செல்லுங்கள். தினமும் சாப்பிட்ட உணவை விடுத்து புது இடங்களில் புதுப்புது உணவுகளை ருசியுங்கள். கிடைத்த உணவுகளை சாப்பிட்டுப் பழகுங்கள். குடும்பத்தினரையும் பழக்குங்கள். இந்தப் பொறப்புதான் நல்லா ருசிச்சுச் சாப்பிடக் கிடைச்சிருக்கு. வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.