சோசியல் மீடியால இப்பல்லாம் டாபிக் பெண்களை குறி வச்சுத்தான் இருக்கு. ‘பெண்களுக்கு நகைச்சுவை வராது’ன்னு ஆரம்பிச்சு ‘பெண்கள் நைட்டி போடக்கூடாது’ ன்னு முடியுது. ஆக மொத்தம் ‘நீ பேசவும் கூடாது, ஆல்சோ நாங்க சொன்னா மாதிரி ட்ரெஸ் போட்டு சமத்தா இருக்கணும்.’ நல்லா இருக்கு சார் உங்க டீடைலு. அதி முக்கியமான சமூக விஷயங்கள் தீ புடிச்சு எறிஞ்சுட்டு இருக்கும்போது கோல்டு காபி சாப்ட்டானாம் ஒருத்தன்… அதுல கூட ‘விக்டிம் நாங்கதான்’னு வந்துடறாய்ங்க.

சரி இவன்தான் இப்படினு பாத்தா… இவனுவ போடற போஸ்ட் கீழ அதுக்கு மேல சில்லறை இருக்குதுங்க. ‘நைட்டி போட்டா உள்ள இருக்கறது எல்லாம் தெரியுது… உள்பாவாடை போடக் கூடாதா?’ன்னு சமூகத்துக்காக குரல் கொடுக்கற சமுத்திரக்கனி ரேஞ்சுக்கு பீல் பண்ணுதுங்க. தெரியாமத்தான் கேக்குறேன்… அது எப்படி சார் பெண்கள் பாவாடைக்குள்ள உங்களோட கட்டுப்பாடு வந்துச்சு? காத்து ப்ரீயா போறதுக்குக்கூட இவனுங்க கிட்ட பெர்மிஷன் வாங்கித்தான் போகணும் போல. ‘சேலை கட்டித்தொலைச்சாத்தான் என்ன?’னு தன் பொண்டாட்டிகிட்ட பேச வேண்டியதுல்லாம் இங்க பேசறாங்க. ஆற்றாமைல அனத்தமா இருங்கடே.

அடிக்கிற வெயிலுக்கு ட்ரெஸ் ஒரு கேடு. அக்னி நட்சத்திரம் வேற ஆன் தி வே…

சரி மண்டசூட்டுலதான் இப்படினு நெனச்சா, நகைச்சுவையா பேசறேன்னு ‘பெண்களுக்கு நகைச்சுவை வரலை’ன்னு பேசறது. பொண்டாட்டி ஜோக்ஸ்ல பெண்ணியம் இல்லன்னு பொங்கி எழறதுக்கு முன்னாடி, அதுல ஜோக் முதல்ல இல்ல தோழிஸ்! சோ மனசே… ரிலாக்ஸ் ப்ளீஸ். காமன் சென்சுல பின்தங்கி இருக்க இவங்களப் போன்ற ஆண்களுக்கு ஹுயூமர் சென்ஸ் பத்தி பேச வக்கு கிடையாது.

ஊர்ப்பக்கம் ‘எச்ச துப்பி வம்புக்கு கூப்பிட்றது’ன்னு சொல்லுவாங்க… அதாவது ரோட்ல போற ஒருத்தன் மேல வேணும்னே எச்ச துப்பி, ‘சண்டைக்கு வா’ன்னு வெறுப்பேத்துறது. இவங்க சோசியல் மீடியால பண்றதும் அதேதான்!

‘பெண்களுக்கு உள்ளாடைகள் வச்சு ஸ்டாண்ட் அப் காமெடி பண்ணத்தான் தெரியும்’னு சொல்றது கூட ஒரு ஸ்டொமக் பர்னிங்தான். பெண்கள் ஸ்டாண்டப் பண்றதையே ஏத்துக்க முடியாத நீ, என்னிக்கு நாங்க காமெடி பண்றோம்ன்னு சொன்னா நம்பப் போற? உனக்காகலாம் நாலு காமெடி சொல்லி பெண்களுக்கும் காமெடி வரும்ன்னு சொல்றது டைம் வேஸ்ட். அதுக்கு பேசாம உப்புமா பண்ணி சாப்பிடலாம். அதாவது முழுசா வெந்துருக்கும். இவனுங்கள மாதிரி அரைகுறையா வெந்து, ‘நானும் பாதிக்கப் பட்டிருக்கேன்’னு உப்புமா ஒரு நாளும் போஸ்ட் போடாது.

‘குடும்ப வன்முறைகள்ல ஆண்கள் பக்கம் நியாயம் இருக்கு’ன்னு சிம்பதிலயே ஜிலேபி சுட்டு அதுலயே ஸ்வீட் ஸ்டால் வச்ச ஒரு புண்ணியவான என்னத்த சொல்ல? கேட்டா ஆண்கள் குரலுக்கு இவரு வடிகாலாம். என்னமோ இவங்க சொல்றதுலாம் திருக்குறள்ன்னு இவங்க நெனப்பு. எப்படி சார் உங்கள பத்தி வாய் கூசாம நீங்களே தம்பட்டம் அடிச்சுக்குறீங்க?

‘மென்ஸ் டே எங்களுக்கு கொண்டாடறது இல்ல’ன்னு ஆரம்பிச்சு, ‘ஹாய் அழகே’ன்னு இன்பாக்ஸ்ல முடியுது இந்த கவிஞர் கொசுத்தொல்லை. கவிஞர் அய்யா ஒன்னு பேருக்கு ஏத்த மாதிரி கவிதை எழுதுங்க, இல்ல பேசாம உங்க முகநூல் ஐடி பேரை மாத்துங்க. அவன் அவன் பம்பிள் ஆப்ல ஜில்ஜில்ன்னு சுத்திட்டு இருக்கான்… நீர் என்னையா அறுதப்பழசா இருக்கீரு. அட்லீஸ்ட் ‘நீயும் நானும் ஒன்னு, ஐயங்கார் பேக்கரி பன்னு’ அப்டின்னாச்சும் அனுப்பலாம். சோ சாட். அந்த கவிஞர்கூட தன்னை கவிஞர் இல்லனு ஒத்துப்பாரு. இவனுங்க பண்றது காமெடி இல்ல அப்டினு இவனுங்க என்னிக்கு ஒத்துக்குவாங்களோ? பாபா ரஜினி மோட்ல கண்மூடி மந்திரம் சொல்லச் சொல்கிறார் இந்தப் பதிவர்.

ஆடை நாகரீகம் பற்றி பேசறப்ப அடிப்படை நாகரீகமே இவங்க பதிவுகள்ல இல்ல. கிலோ கிலோவா வன்மத்தை கக்க… எது பேசினா சர்ச்சை வரும்னு டீ ஆர் பி பதிவுகள்தான் இருக்கு. சர்ச்சைக்கு எதிரா யார் பேசறாங்களோ அவங்களையும் சர்ச்சை வலைல சிக்க வைக்கறதுதான் இன்னிக்கு ட்ரெண்ட். காணொளிகளோட அதே தாக்கம் எழுத்துகளுக்கு இன்னும் இருக்கு. எழுத்து மீடியத்தோட வலு இன்னும் முழுசா குறையல.

இந்த மாதிரி விஷப் பதிவுகள் போட்றவங்களுக்கு இத்தனை ஆதரவாளர்கள பாத்தா காமெடியா இருந்தாலும் பயம் வர்றத தடுக்க முடில. தான் சொன்ன கருத்துக்கு சர்ச்சை வந்தா அதையே வச்சு மீம் போட்டு அதையே கன்டென்ட் ஆக்கி பிரச்னையை பெருசு பண்றதுதான் காமெடி; அதை ஆதரிக்க பெண்கள் இல்லனு சொல்றது அதைவிடப் பெரிய காமெடி. குத்திட்டு, ‘எப்படிடா நீ கத்தலாம்?’னு கேக்கற மாதிரி இருக்கு. இதுல பல அறிவாளி குரூப்ஸ் இன்பாக்ஸ்ல போடற வேஷமும் வெளி வேஷமும் வேற.

ஆண்டவா ஒன்னு இவனுங்கள திருத்து, இல்ல இவங்க போடற போஸ்ட்டை நிறுத்து. இப்படிக்கு பொம்மிஸ் நைட்டி போட்டு பெண்மையை உணர்ந்த நொடியில் எழுதிய பதிவு. பை தி வே அழுக்காற வரையும் இதேதான் போட்டு சுத்துவேன் ஏன்னா சாமான் செட்ட சாமுத்திரிகா பட்டு போட்டு தேய்க்க சொல்லி போத்திஸ் ஆட் இன்னும் வரல. நான் அப்படியே அதைக் கட்டினாலும் நீ சொல்லி செய்ய மாட்டேன். எனக்கு தோணும்போது போட்டோ எடுத்து அனுப்புறேன், அதுவரை நீ வன்மத்தை கக்கிட்டு சுத்து.

‘டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல’ன்னு சொல்றதுக்கு முன்னாடி, சோசியல் மீடியா இஸ் தி ஒர்ஸ்ட்… ஒத்துக்கங்க. இதை சொன்னா, ‘இங்க ஏன் இருக்கீங்க?’ன்னு எதிர்க்கேள்வி வரும். அதுக்கு முன்ன, ‘நீ ஏன் போலி ஐடில அத்தனை பேருக்கு மெசேஜ் பண்ற?’ன்னு கேட்டதுக்கு பதில் வராது. வந்தாலும், ‘சும்மா ட்ரை பண்ணேன். புடிக்கலைன்னா நீ பிளாக் பண்ணு’னு பதில் வரும். முன்னாடியே பிளாக் ஆவோம்னு தெரிஞ்சும் ட்ரை பண்றத என்னத்த சொல்ல?

பெண்களை சுத்தித்தான் இவங்க உலகம் இருக்கு. ‘என் ஊரு சிங்கார சென்னை’ன்னு சொல்லிட்டு சென்ட்ரல் ஸ்டேஷன்ல பான்பராக் போட்டு துப்பற பயலுக்கும் சோசியல் மீடியால பெண்களுக்கு எதிரே வன்ம போஸ்ட் போடறவனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லங்க. இடம்தான் வேற. இவங்க எதை விரும்புறாங்களோ அதேதான்… வச்சு செய்ய்யுங்க இவங்க நம்மள வெறுக்கற வரையும். நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா!

இன்னும் கொஞ்சம் ஜாலிக்கு தோழி பூர்பா ரே எழுதியிருக்கும் இந்த ஆங்கிலக் கட்டுரை

முகப்பு ஓவியம் நன்றி: சித்ரா ரங்கராஜன்

படைப்பு:

மீரா

மீரா. வயது முப்பது. மாநிறம். ஐடி ஊழியர். அம்பத்தூர்வாசி. காணாமல் போனால், தேடாமல் இருப்பது நல்லது. இருப்பதை உண்டு உறங்கும் உங்களைப் போல் ஒருவள்.