நானாக நான் – 2


நம் வாழ்வில் முக்கியமான பல அரசியல்கள் உண்டு. சாதி அரசியல், மதம் சார்ந்த அரசியல், கடவுள் சார்ந்த அரசியல், பொருளாதாரம் சார்ந்த அரசியல். இப்படி எல்லா அரசியல்களிலும் பிரதானமானது ஆண் பெண் அரசியல்.

தாய்வழிச் சமூகத்திலிருந்து தந்தைவழிச் சமூகமாக நாம் மாறிய பின்னர் பெண்களை இரண்டாம் பாலினமாகப் பார்க்கும் மனப்பாங்கும் ஏற்பட்டது எனலாம். ‘இந்தத் தமிழ் தமிழ் அப்படின்னு பேசறது இப்ப எல்லாம் ஃபேஷனா போச்சு.’ ஒரு திரைப்படத்தில் வரும் வசனம் இது. இதைப் போலவே பெண்ணியம் என்றோ பெண்களின் உரிமை என்றோ பேசினால் தலைத்தெறிக்க ஓடும் ஒரு கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. கொஞ்சம் ஆழமாகவும் நுட்பமாகவும் யோசித்தால் இதைப் பேச வேண்டிய அவசியம் ஏன் இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள இயலும்.

தாய்நாடு, தாய் மொழி என்றெல்லாம் கொண்டாடும் இம்மண்ணில்தான் இந்து ஆகமக் கோயில்களில் இதுவரை பெண் அர்ச்சகர்கள் இல்லை. கிறித்துவத்தில் பெண் போப் ஆண்டவரை இதுவரை இவ்வுலகம் கண்டதில்லை. இஸ்லாத்தில் நபிகளில் ஒரு நபிகூட பெண் நபியாக இருந்ததாகச் சரித்திரமே இல்லை. இது வெறும் தலைமை ஆசனத்தை ஆண்களுக்காக ஒதுக்கி இருக்கிறார்கள் என்பதைத் தாண்டி புனிதம் என்று வரும் ஒன்றோடு இணையாகப் பெண்ணினத்தை வைக்க இச்சமூகம் ஒருபோதும் தயாராக இல்லை என்பதையே குறிக்கிறது. கடவுளோடு மிக நெருக்கமாக உறவாடும் உரிமை ஆணுக்கே உள்ளது என்பதைவிட அபத்தமான வாக்கியம் வேறு என்னவாக இருக்க முடியும்?

வீட்டிற்கு வெளியே சாதியப் படிநிலைகளைப் போல வீட்டிற்கு உள்ளே ஆண் பெண் படிநிலைகள் கண்ணுக்குத் தெரியாத ஒரு படிமமாக மறைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ‘என் மகளை எப்படி வளர்த்து இருக்கிறேன் தெரியுமா, ஒரு ஆம்பள புள்ளையப் போல வளர்த்து இருக்கிறேன்’ என்று மார்தட்டி கூறும் பெற்றோர்களை நாம் பார்த்திருக்கிறோம். அதுவே ஓர் ஆணிடம், ‘என்னடா பொம்பளைய போல ஒளிஞ்சிருக்க, போய் புடவையக் கட்டிக்கோ, வளையல போட்டுக்கோ’ என்ற சொற்கள், அதைவிட உச்சபட்ச வசை அந்த ஆணுக்கு வேறில்லை என்று அவனை நினைக்க வைக்கிறது. ஆக ஒரு பெண், ஆணைப் போல இருக்கிறாள் என்பது வாழ்த்து செய்தியாகவும், ஓர் ஆண் பெண்ணைப் போல் இருக்கிறான் என்பதை இழிவாகவும் பார்க்கும் இச்சமூகத்தில் மாற்று சிந்தனை என்பது எவ்வளவு அவசியமானது என்பதும் தெளிவாகப் புலப்படுகிறது.

நீதிமன்றமே சட்டப்படி ஒப்புதல் அளித்தாலும் பெண்களை கேரளா ஐயப்பன் கோயிலுக்குள் விட மாட்டோம் என்று கூறும் அடிப்படைவாதம் தொடங்கி பல்வேறு பிரச்சனைகளுக்குப் பெண்ணின் மாதாந்திர உதிரப்போக்கைக் காரணம் காட்டுவது பேதைமையின் உச்சம். இயற்கையாக நடக்கும் பெண்ணின் உதிரப்போக்கை, தீட்டு என்று விலக்கும் மடமையைக் குறித்துப் பேசத் துணிந்த ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதே ஆறுதல்.

உலகத்தில் உள்ள பெரும்பான்மையான வசைச் சொற்கள் பெண்களை அல்லது பெண்ணின் உடல் பாகங்களை வைத்தேப் பேசப்படுவதின் பின்னாலுள்ள உளவியல்தான் என்ன?

மதம் என்ற ஒன்று பெரும்பாலும் பெண்களின் உரிமைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. மதங்களின் அடிப்படைவாதத் தன்மையிலிருந்து நாம் மீள வேண்டியது மிக மிக அவசியம். பெண்ணின் உடல் பாகமான யோனியில் பாவ யோனி, புண்ணிய யோனி என்றெல்லாம் ஒன்று உண்டா? பெண்களின் பாவ யோனி பற்றிப் பேசுகிறது இந்து தர்மத்தின் சில நூல்கள். கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் நாம் கட்டுண்டு கிடக்கும் போது நம் மேல் சுமத்தப்படும் அடிமைத்தனங்களை நாம் கேள்வி கேட்பதில்லை என்பது எவ்வளவு வருத்தப்படக்கூடிய உண்மை.

மத அரசியலை முழுமையாக அழிக்கக்கூடிய ஆயுதம் நம் அறிவு மட்டுமே. ‘தெளிந்த நல்லறிவு’ என்று குறிப்பிடுவானே அய்யன் பாரதி, அப்படியான நல்லறிவே நம்மை பகுத்தறிவுப் பாதையை நோக்கி நடத்திச் செல்லும்.

பெண் வெறும் அலங்காரப் பதுமையல்ல. அவள் என்ன உடை உடுத்த வேண்டும்? எப்படி உடுத்த வேண்டும்? தலைமுடியை எவ்வளவு வைத்துக்கொள்ள வேண்டும்? நகை அணிய வேண்டுமா? வேண்டாமா? அவள் வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்ற எல்லாமுமே பெண்களுக்கான உரிமை என்று பேசும்போது பெரியாரின் முற்போக்கு சிந்தனையை யோசிக்காமல் இருந்துவிட முடியாது.

பெண்களை அனுமதிக்காத கேரளத்தின் ஐயப்பன் கோயிலில் ஒரு முறை என் நண்பர் சென்றிருந்த போது அவருடைய பணப்பை பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது. அவருடைய வாகன உரிமம் அட்டை உட்பட பணமும் திருடப்பட்டது. நண்பர் வீடு திரும்பிய பிறகு தன் பணப்பை களவாடப்பட்டது பற்றிக் கூறினார். மேலும் இருமுடியை இறக்கி வைத்த பின்னர் சபரிமலையிலேயே பக்தர்கள் என்ற பெயரில் இருக்கும் போலிகள் சிலர் சிகரெட் புகைப்பதையும் கண்டதாகக் கூறினார். சில மதுக்கடைகளில் சாமி டம்ளர் என்று பிரத்தியேகமான டம்ளர்கள் ஐயப்பனுக்கு மாலை போட்டுள்ளவர்கள் குடிப்பதற்காகவே உபயோகிக்கப்படுகிறதாம். உண்மையில் இறை பக்தியில் முழுமையான விரதமிருந்து கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்றாலும் இப்படி ஒழுங்கற்ற முறையில் குடி, புகைப் பழக்கம், திருட்டுச் செயல் போன்ற பல்வேறு தீய குணங்களுடனும் சில மனிதர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லத்தானே செய்கிறார்கள்?

இவ்வளவு தீயப் பழக்கங்களுடன் கோயிலுக்குச் செல்லும் ஆண்களை அனுமதிக்கும் சமூகம் பெண்ணின் இயற்கையான உடல் உபாதைகளுக்காக அவளை அனுமதிப்பதில்லை என்பது எவ்வளவு வருந்தத்தக்கது.

தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் (Infibulation) பெண்ணின் யோனியில் உணர்ச்சியைத் தூண்டும் பகுதிகளை வெட்டி எறிதல் எனும் முறை இன்னும் முழுமையாகத் தடை செய்யப்படவில்லை. இளம் பெண்களுக்கு மயக்க மருந்துகூடக் கொடுக்காமல் ஏதேனும் துருப்பிடித்த கத்தியைக் கொண்டோ பிளேடைக் கொண்டோ பெண்ணின் யோனியின் சதையை வெட்டி எறிந்து, பின்பு அப்படியே மயக்க மருந்து இல்லாமல் தைப்பது என்ற வழக்கம் இன்னும் இருக்கிறது என்பதைக் கேட்கும்போதே நமக்கு குலை நடுங்குகிறது. பெண்ணின் உணர்வை, உணர்ச்சியை அகற்றும் உரிமை வேறு ஒரு மனிதனுக்கு யார் அளித்தது?

அதைப் போலவே ஈரான், பெகரின் போன்ற நாடுகளில் சில இடங்களில் முத்அஃ அதாவது பெண்ணின் தந்தையிடம் குறிப்பிட்ட பணத்தை தந்துவிட்டு, இளம்பெண்களைச் சில மாதங்களுக்குத் திருமணம் செய்தல் எனும் முறை இன்னமும் அமலில் இருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திலிருந்து அதிகபட்சம் அறுபது வருடங்கள் வரை இப்பந்தம் நீளலாம். விவாகரத்து, மணமுறிவு எதுவுமின்றி பெண்களை அந்த ஆண்கள் குறிப்பிட்ட ஒப்பந்த நாட்கள் முடிந்த பின் விட்டுவிட்டுச் சென்றுவிடலாம். அப்பெண் கருவுற்று இருந்தாலும் அவளுக்கு அந்த ஆணின் மூலமாகப் பிள்ளைகள் இருந்தாலும் அந்த ஆணுக்கு அதில் எவ்வித பொறுப்பும் இல்லை.


ஒரு சில விஷயங்களை மட்டுமே கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். பெண் என்பவளைச் சக உயிராகக்கூடப் பார்க்க மறுக்கும் இச்சமூகத்தில் பெண்ணின் விருப்பு வெறுப்புகள் அவளைச் சார்ந்ததாக முற்றிலுமாக மாற வேண்டும். பெண்ணின் உடல் சார்ந்த, மனம் சார்ந்த முடிவுகள் அவளது முழுமையான உரிமையாக மாற வேண்டும். பயணிப்போம் பெண்ணின் உணர்வுகளோடு மிக அண்மையாக.

காற்றடிக்கும் திசையில் துடுப்போடு கடலில் பயணிப்பது மிக எளிது. எதிர்த் திசையில் பயணிக்கும் போது வீரியமான சவால்கள் ஏற்படுவது இயல்பே. நம் உரிமைகளை மீட்க எத்திசையிலும் பயணிப்போம். தொடர்ந்து பேசுவோம்.

கதைப்போமா?

படைப்பாளர்:

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.