வாய்ப்புகள் எல்லாருக்கும் அவ்வளவு எளிதாக அமைந்து விடாது. ஆனால், அமைந்த வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்வதும், நிலைநிறுத்திக்கொண்ட வாய்ப்பில் வளர்வதும், கிடைத்த வாய்ப்பிற்குப் பெருமை சேர்ப்பதும் அரிதான ஒன்றுதான். அதற்கு கடுமையான உழைப்பும் பொறுப்புணர்வும் ஆர்வமும் அத்தியாவசியம். கல்கியின் பேத்தி என்கிற அடையாள அட்டையுடன் அறிமுகமானாலும் நதிபோல பல ஆண்டுக்காலம் சீரான உழைப்பு, திறமை மற்றும் நல்ல எழுத்து வளம் போன்ற காரணங்களால் தனக்குக் கிடைத்த வாய்ப்பிற்குப் பெருமை சேர்த்தவர் சீதா ரவி. 25 ஆண்டுகள் பத்திரிகையாளராக இருந்தவர், எழுத்தாளர் சீதாரவி தன்னுணர்வுகளை நம்மோடு பகிர்ந்துகொண்ட போது…

“1958 இல் சென்னையில் பிறந்தேன். வளர்ந்ததும் சென்னையில்தான். அப்பா கல்கி ராஜேந்திரன். எழுத்தாளர் கல்கியின் மகன். அம்மா விஜயா. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வளர்ப்பு மகள். உடன் பிறந்தவர்கள் இருவர். தங்கை லட்சுமி. தம்பி ஹரி கிருஷ்ணன். தம்பி தற்போது உயிருடன் இல்லை.

எங்களுடையது உற்சாகமான இளமைப் பருவம்தான். மகிழ்ச்சிக்குக் குறைவே இல்லை. வீட்டிற்கு எதிரிலே பள்ளி. படித்தது பத்மா சேஷாத்ரி என்னும் சென்னையின் இப்போதைய பிரபல பள்ளியில் (பாலபவன் என்பது அப்போதைய பெயர்.) பள்ளிப் பருவமும் ரொம்ப இனிமையாக அமைந்தது.

வீட்டில் பாட்டி, அத்தை, அப்பா, அம்மான்னு எல்லாரும் கதை சொல்றவங்களா இருந்தாங்க. அதுலும் குறிப்பா அப்பா யோகாசன பயிற்சியினூடே நிறைய கதைகள் சொல்வார். அவர் கதைகளைக் கேட்பதற்காகவே ஒழுங்காக யோகாசனப் பயிற்சிகள் செய்வோம்.

வீட்டில் நிறைய புத்தகங்கள் இருக்கும். வீட்டில் எல்லாரும் பெரும்பாலும் வாசிக்கிறவங்கதான். அதனாலே வாசிப்பும் எழுத்தும் ரத்தத்தில் ஊறிய விஷயமாக இருந்தது. நான் குழந்தையாக இருந்தபோதே ஒரு பாணியில் (பேட்டர்ன்) நோட்டில் கிறுக்குவேனாம் எழுத்துபோல. அதிலும் ஆங்கிலத்தை கோடுகளாகவும், தமிழை வட்டவட்டமாகவும் எழுதுவேனாம். எழுதுவதோடு மட்டுமல்லாமல் அதை ஊரிலிருக்கும் அத்தைக்குக் கடிதமாகப் போடவேண்டும் என்று அம்மாவிடம் அடம்பிடிப்பேனாம். (சிரிக்கிறார்) எழுதுவதில் மட்டுமல்லாமல் சிறுவயதில் இருந்தே வாசிப்பிலும் ஆர்வம் இருந்தது.

அத்தை ஆனந்தி கலாஷேத்ராவில் நாட்டியம் பயின்றதோடு, ஆசிரியராகவும் இருந்தார். அதனால் எங்களை கலாஷேத்ராவிற்கு அடிக்கடி அழைத்துச் செல்வார். அங்கே நிறைய நிகழ்ச்சிகள் பார்ப்போம். அப்போதே நாட்டியம், பாட்டு, அரங்க அமைப்பு, ஆடை வடிவமைப்பு, மேக் அப் எனக் கலைகள் சார்ந்த அத்தனை நுணுக்கங்களையும் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். கலைகள் மீதும் இலக்கியத்தின் மீதும் இயல்பாக ஆர்வம் உண்டாகியது.

ஆனால், எத்திராஜ் கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியம் படிக்கும் போது எழுத்தின் மீது ஆர்வம் கூடியது. கல்லூரி ஆண்டுமலர்களில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். அது பிரசுரமானதுடன் ஆசிரியர்களிடம் நன்மதிப்பையும் பெற்றுத் தந்தது. ‘உன்னிடம் நல்ல எழுத்துத் திறமை இருக்கிறது. நிறைய எழுது’ என அவர்களின் ஆசியும் கிடைத்தது. கல்லூரியில் சொல்லிக் கொடுத்த இதழியல் படிப்பும் பின்னாளில் உதவியது. பத்திரிகை ஒன்றில் பணிக்கு அமர்ந்தேன். அப்படிப் பத்திரிகையாளராகப் பணிபுரிந்து வந்த நாளில்தான் கல்கியில் பணிபுரியும் வாய்ப்பு யதேச்சையாக அமைந்தது. அப்பா கல்கி இதழின் ஆசிரியராக இருந்தார். ஆள் பற்றாக்குறையால் கல்கி அலுவலகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டேன்.

முதலில் கல்கி அலுவலக வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மணியார்டர் அனுப்புவது, கணக்கு வழக்குகளைப் பார்ப்பது, கடிதங்களை வாசிப்பது, சீரமைப்பது போன்ற வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன்.

1981 இல் எனக்குத் திருமணம் ஆனது. கணவர் ரவி பிஸினஸ்மேன். கூட்டுக்குடும்பமாக இருந்தேன். கூட்டுக்குடும்ப வாழ்க்கை, ஒரு நிதானத்தைக் கற்றுக்கொடுத்தது. ஓழுக்கத்தைக் கற்றுக்கொடுத்தது. இந்தப் பண்புகள் யாவும் என் பணியின்போது பெரிய உதவியாக இருந்தது.

இப்படிப் போய்க்கொண்டிருக்கும் போது ஒரு துணையாசிரியர் வேலைக்கு வராமல் போன ஒரு நாளில் கல்கி இதழின் அந்த வேலைகள் எனக்குக் கொடுக்கப்பட்டன. தொடர்ந்து அதனை இரண்டாண்டுகள் சீராகச் செய்ததன் பலனாக துணையாசிரியர் பதவி நிரந்தரமாகக் கிடைத்தது. அதுதான் வாழ்க்கையின் திருப்புமுனை.

துணையாசிரியராகப் பணியாற்றும்போது நிறைய கதைகள் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நூற்றுக்கணக்கான கதைகள் கல்கி அலுவலகத்துக்கு வரும். பரிசீலனைக்காக என்னிடம் வரும் கதைகளிலிருந்து நல்ல கதைகளை அலசி ஆராய்ந்து, வடிகட்டி இரண்டாம் சுற்றுக்கு ஆசிரியரிடம் அனுப்ப வேண்டும். கதைகளை ரீரைட் செய்ய வேண்டி இருக்கும். நல்ல கதைகளை முதன் முதலில் வாசிக்கிற நல்ல அனுபவமும் நிகழும். அப்படி நிதமும் கதைகள் வாசிக்க வாசிக்க எனக்கும் கதைகள் எழுத வேண்டும் என்கிற ஆசை வந்தது.

ஒருநாள் மகளிர் மட்டும் பேருந்தில் தவறுதலாக ஏறியதால் ஓர் இளைஞன் அவமானப்படுத்தப்பட்டான். அந்தச் சம்பவம் என்னை வெகுவாகப் பாதித்தது. அந்த நிகழ்வை வேறு ஒரு பெயரில் கல்கி அலுவலகத்துக்கே கதையாக எழுதி அனுப்பினேன். நல்ல வேளையாக அது தேர்வுக்கு மற்றொரு துணையாசிரியடம் சென்றது. அந்தக் கதையைத் துணையாசிரியர் தேர்வு செய்து ஆசிரியருக்கு அனுப்பினார். பின் ஆசிரியரும் அந்தக் கதையைப் பிரசுரத்துக்குத் தேர்வு செய்தார். கதை வெளியானது. மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. மணியார்டர் அனுப்ப வேண்டி அலுவலத்தில் விலாசம் கேட்டபோதுதான் அந்தக் கதை எழுதியது நான்தான் என உண்மையை எல்லாரிடமும் முதன் முதலாகச் சொன்னேன். முதல் கதை வெளிவந்தால் மகிழ்ச்சியடையாதவர்களே இருக்க முடியாது. ஆனால், எனக்கு மகிழ்ச்சியோடு நம்பிக்கையும் சேர்ந்து உண்டானது.

அதாவது ஒரு பிரபல பின்னணியில் இருந்து வரும்போது, அவங்க பெயருக்காக நம்ம கதைகளைத் தேர்ந்தெடுத்து, பேருக்குச் சும்மா நல்லா இருக்கு என்று சொல்லிடுவாங்களோ என்பதற்காகத்தான் வேறு பெயரில் எழுதினேன். அது யாருக்கும் தெரியாமலே என் கதை சிறப்பாக இருக்கிறது என அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது என் தன்னம்பிக்கையை உயர்த்தியது. நிறைய எழுத வேண்டும் என்கிற உந்துதலை கொடுத்தது அந்தக் கதைதான். அப்பாவும் ‘நல்லாதானே எழுதுற, இனி தேவைப்படும் போது கல்கி இதழுக்குக் கதை எழுது’ என அனுமதி அளித்தார்.

அதன் பிறகு இதழுக்குக் கதைகள் தேவைப்படும்போது கதைகள் எழுத ஆரம்பித்தேன். சில நேரம் ஓவியத்துக்குத் தகுந்த கதைகள் எழுத வேண்டி இருக்கும். சில நேரம் சிறப்பிதழுக்கு ஏற்றாற்போல் கதைகள் எழுத வேண்டி இருக்கும். அதை எல்லாம் எழுத ஆரம்பித்தேன். இசைப்பின்னணி உண்டு என்பதாலும், இசையைப் பற்றி அறிந்திருந்ததாலும் கல்கி இதழில் ஆண்டுதோறும் வெளிவரும் இசைச் சிறப்பிதழுக்கு இசை சார்ந்த கதைகள் நிறைய எழுதி இருக்கிறேன். அத்தையிடம் கற்றுக்கொண்ட கலை சார்ந்த நுணுக்கங்கள் மிகவும் உதவியாக இருந்தன. இசை நுணுக்கங்களைக் கொண்டு எழுதும் அந்தக் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவையாக இருந்தன. மொத்தத்தில் இதுவரை எத்தனை கதைகள் எழுதி இருப்பேன் என்றே தெரியாது. கணக்கே வைத்துக்கொள்ளவில்லை.

பத்திரிகையில் பணியாற்றியதால் மற்ற பத்திரிகைகளில் நான் எழுதவில்லை. பணி ஓய்வுக்குப் பின்பே அமுதசுரபி இதழுக்குக் கதைகள் எழுத ஆரம்பித்தேன். மொத்தத்தில் நான் எழுதிய கதைகளில் ஒன்றிரண்டு சுமாராக இருந்திருக்கலாம். ஆனால், ஏன் இப்படிக் கதை எழுதி இருக்கிறோம் என்று எண்ணுமளவு மோசமான கதைகளை நான் ஒருபோதும் எழுதியதில்லை. அங்கீகாரத்துக்காகவும் எப்போதும் எழுதினதில்லை. அப்படி யோசித்ததே இல்லை.

எல்லாருக்கும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள பிளாட்பார்ம் கிடைக்கிறதே ஒரு அங்கீகாரம்தான். எல்லாருக்கும் வாய்ப்புகள் கிடைக்கணும். எனக்கு அந்த பிளாட்பார்ம் ரெடிமேடாவே கிடைச்சது. அதனால அங்கீகாரத்தைப் பற்றி எல்லாம் கவலைப்படாம நான் ஓடிட்டே இருந்தேன்.

ஆனால், என்னவென்றால் ஒரு பத்திரிகை உலகில் இருக்கும் போது, அந்தப் பத்திரிகைத் தர்மத்துக்கு உட்பட்டுதான் எதையும் செய்ய வேண்டி இருக்கும். அந்த வட்டத்துக்குள்ள செயல்பட வேண்டி இருக்கும். அது என் மனசுக்கு நல்லா பழகினதால் சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி இயல்பான கதைகளும் எழுதி இருக்கேன். சவாலான கதைகளும் எழுதி இருக்கேன். நிறைய வாசிக்கும்போது நம் மனதில் நிறைய நல்ல விதைகள் விழும். அந்த விதைகளை ஒழுங்கா பராமரிச்சா நல்ல அறுவடை கிடைக்கும். அப்படி நிறைய வாசிச்சதன் பலன் எனக்கு ரொம்பவே கிட்டுச்சு. எழுத்து, சிந்தனை எல்லாம் ஒரு அமைப்புக்குள்ள கட்டுப்பட்டது. தன்னைத்தானே செதுக்கிக்கொள்ள உதவியது என்றும் சொல்லலாம்.

பெண்ணியக் கதைகள் அப்படின்னு தனிப்பட்ட முறையில் திணிச்சு எதையும் எழுதியதில்லை. மனித உணர்வுகளைப் பேசும் கதைகளை, மனதில் தோன்றுவதை உணர்வுபூர்வமாக எழுதினேன். கேள்விகள் கேட்கும் கதாநாயகிகளையும், போராட்டம் செய்யும் கதைநாயகிகளையும் படைத்திருக்கிறேன். ஆனால், அது எதுவுமே வலிந்து திணிக்கப்பட்டதில்லை.

நிறைய பேருடைய கதைகளை ரசிச்சுப் படிச்சிருக்கேன். ஆனால், ஒரு சிலருடைய கதைகள் மட்டும், படித்து முடித்து சில மணி நேரம் ஆன பின்பும் நம் சிந்தனையை ஆக்கிரமித்திருக்கும். அவ்வளவு சீக்கிரம் அந்தச் சிந்தனையிலிருந்து நம்மால் வெளிவர முடியாது. ஆர். சூடாமணி, வையவன், அசோகமித்திரன், இந்திர பார்த்தசாரதி, பிரபஞ்சன் போன்றோரின் எழுத்துகள் அப்படியானவை. இப்போ ஏனோ சமீப காலமாகப் பத்திரிகைகள் வாசிப்பதில் ஒரு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. படிக்க ஆரம்பிக்கும் போதே இந்தக் கட்டுரை இந்த ரீதியில்தான் செல்லும் என்று அனுபவரீதியான ஒரு புரிதல் இருப்பதால் ஒரு விலகல் வந்துவிட்டது.

தாத்தா கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் தற்போது திரைப்படமாகி இருப்பது, மிகவும் மகிழ்ச்சிக்கு உரிய விஷயம். எவ்வளவோ விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு எழுத்து, பல லட்சம் வாசகர்களால் வாசிக்கப்பட்ட எழுத்து, பல காலங்களுக்குப் பிறகு திரைப்படமாகி இருப்பது என்பது அந்த எழுத்தின் வலிமைதானே! அதுமட்டுமல்லாமல் அந்தத் திரைப்படம் இப்படியொரு வெற்றி பெற்றது. மக்களிடமிருந்து இப்படிப்பட்ட ரெஸ்பான்ஸ் வந்தது எல்லாமே மிக்க மகிழ்ச்சிதான். நான் தாத்தாவைப் பார்த்ததில்லை. ஆனால், பாட்டி தாத்தாவைப் பற்றி நிறைய என்னிடம் சொல்லியிருக்காங்க. தாத்தா இப்படிப் படிப்பார், இப்படி எழுதுவார்னு தாத்தாவைப் பத்திதான் எப்பவும் பேசிக்கிட்டே இருப்பாங்க. அவர்கள் சொல்வதைக் கேட்டு கேட்டே அவர்மீது வியப்பும் மரியாதையும் அதிகமாகிவிட்டது.

என்னுடைய இத்தனை வருட அனுபவத்திலிருந்து பெண்களுக்குச் சில விஷயம் சொல்லணும் என்றால், வாழ்க்கையை அதன் போக்கிலே ஏத்துக்கணும். அது வர்ற வழியில் எதிர்கொள்ளணும். வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் அதீத மகிழ்ச்சி, அதீத துயரம் இரண்டுக்குமே அர்த்தமில்லைன்னு நினைக்கிறேன். ஏன்னா, அவை மாறிக்கிட்டே இருக்கும். பெண்கள் தங்களுடைய தேவைகளைப் போராடித்தான் பெற வேண்டும் என்கிற சூழல் வந்தால் போராடத் தயங்கக் கூடாது. போராடும் முறைகளை அவங்கவங்க வாழ்வியல் சூழலுக்குத் தகுந்த மாதிரி தனது ஆளுமை, மதிநுட்பத்தால் வடிவமைச்சுக்கணும். Don’t give up” என்று கூறி முடித்த எழுத்தாளர் சீதா ரவி, தன் அங்கீகாரத்தைத் தேடாவிட்டாலும் அங்கீகாரம் அவரைத் தேடி வந்தது!

(தொடரும்)

படைப்பாளர்:

ஸ்ரீதேவி மோகன்

ஏழு ஆண்டுகால பத்திரிகையாளரான ஸ்ரீதேவி மோகன், குமுதம், தினகரன் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியிருக்கிறார். 2015–ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். 2018-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத்தில் மதம், சமூகம்’ பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை அளித்துள்ளார். எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி மற்றும் திருவையாறு ஐயா கல்விக்கழகம் இணைந்து நடத்திய எட்டாவது தமிழ் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

­