அநுத்தமா


வை.மு.கோதைநாயகி, ஆர்.சூடாமணி போன்ற தமிழின் வெற்றிகரமான பெண் எழுத்தாளர்கள் வரிசையில் குறிப்பிடத்தக்கவர் எழுத்தாளர் அநுத்தமா. தமிழ்நாட்டின் ‘ஜேன் ஆஸ்டின்’ என்றழைக்கப்பட்டவர். அல்லயன்ஸ் பதிப்பகத்தின் நூற்றாண்டு விழாவில் அநுத்தமாவின் புத்தகங்கள் மீள்பிரசுரம் செய்யப்பட்ட போது அவை வெகு சீக்கிரத்தில் விற்றுத் தீர்ந்ததே அவரது எழுத்துகளின் வெற்றிக்கு ஒரு முக்கிய சாட்சி.


அநுத்தமாவின் இயற்பெயர் ராஜேஸ்வரி. பூர்வீகம் வட ஆற்காடு மாவட்டம். பிறந்தது சென்னையை அடுத்த நெல்லூரில். 1922, ஏப்ரல் 16 அன்று பிறந்தார். தந்தை சேஷகிரி ராவ் வனத்துறை அதிகாரி. அம்மா இல்லத்தரசி. அவரது தந்தைக்கு அடிக்கடி பணி மாறுதல் நேரிடும். அதனால் பள்ளி வசதிகள் அதிகம் இல்லாத பகுதிகளில் அவர்கள் குடும்பம் வசிக்க நேர்ந்தது. எனவே தாமதமாகத்தான் அநுத்தமாவின் பள்ளிப்படிப்பு
தொடங்கியது.

பதினான்கு வயதில் திருமணம். கணவர் பத்மநாபன் மின்சாரத் துறையில் பணியாற்றி வந்தார். திருமணமானதால் படிப்புத் தடைப்பட்ட போதும், சிறிது கால இடைவெளிக்குப் பிறகு, புகுந்த வீட்டின் உறுதுணையுடன் மேல்படிப்பைத் தொடர்ந்தார். திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் கழித்து மெட்ரி குலேஷன் தேர்வு எழுதி, சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.

தன் மனைவியின் ஆற்றலை பத்மநாபன் பூரணமாக உணர்ந்திருந்தார். இணைபிரியா அன்றில்களாக இருந்த அநுத்தமா-பத்மநாபன் தம்பதிக்கு குழந்தைகள் கிடையாது. அநுத்தமாவிற்குப் புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் உண்டு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நிறைய புத்தகங்களை வாசிப்பார். ஆங்கிலம், தமிழ் என்று பாராமல் மற்ற மொழி கதைகளையும் வாசிப்பார். கணவருடன் கதைகள் குறித்து உரையாடுவார்.

பொழுதுபோக்காக தனது 25வது வயதில் இவர் யதேச்சையாக எழுதி வைத்த ஒரு கதையை கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு அனுப்ப, இவரது முதல் கதையான ‘அங்கயற்கண்ணி’ அப்போட்டியில் இரண்டாம் பரிசுப் பெற்று பிரசுரமானது. அதன் பிறகே அவருக்குத் தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. பெண்கள் வெளியே வருவதே கடினமாக இருந்த காலத்தில் அநுத்தமாவின் கணவர் வீட்டைச் சேர்ந்தவர்கள் அவர் எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தனர். அந்த உற்சாகத்தில் அவர் நன்கு எழுத ஆரம்பித்தார்.

எழுத ஆரம்பித்திருந்த புதிதில் ‘நீ அபாரமா எழுதுறம்மா, நிறைய எழுது’ என்று சொல்லி அவரின் மாமனார் ராஜேஸ்வரிக்கு ‘அநுத்தமா’ என்கிற புனைபெயர் சூட்ட, அந்தப் பெயரிலே எழுத ஆரம்பித்தார். கலைமகள் நடத்திய புதினம் போட்டியில் இவரது ‘மணல் வீடு’ புதினம் முதல் பரிசு பெற்றது. இவரது ‘ஒரே ஒரு வார்த்தை’ என்கிற புதினம் மனோதத்துவரீதியில் தமிழில் வெளிவந்த முதல் நாவல். இவரது நாவலகள் மக்களின் மனதைக் கவர்ந்ததோடு தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருது உட்பட பல விருதுகளையும் பெற்றன.

‘மாற்றாந்தாய்’ என்கிற சிறுகதைக்கு ‘ஜகன்மோகினி’ இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் தங்கப் பதக்கம் பரிசாகக் கிடைத்தது. பிரபலங்கள் பலரது பாராட்டைப் பெற்ற ‘நைந்த உள்ளம்’ நாவல் இன்றளவும் பெருமளவு விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஒன்று. மத்தியதர வர்க்கப் பெண்களின் வாழ்வியலை எளிமையாக எழுத்துகளில் பதிவு செய்தவர் அநுத்தமா. அவர் தன் எழுத்துகளில் பெண்ணியமோ அரசியலோ பேசவில்லை. 1950களின் வாழ்க்கையை, பண்பாட்டை மிகைப்படுத்தாது சித்தரிப்பவை இவரது கதைகள்.

குடும்பம், வாழ்க்கை, முரண்கள், உறவுச் சிக்கல்கள் போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே இவரது படைப்புகள் உள்ளன. கதைமாந்தர்களின் நுணுக்கமான உணர்ச்சி நிலைகளை இவரது கதைகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. இவரது கதைகள் எளிமையானவை. குடும்பங்களில் ஏற்படும் பிரச்னைகளையும், காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் பேசுபவை. அவருக்கென திட்டவட்டமான பண்பாட்டு மதிப்பீடுகள் இருந்தன.

300 சிறுகதைகள், 22 புதினங்கள், 15க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியிருக்கிறார். மணல் வீடு, ஒரே வார்த்தை, கேட்ட வரம் இதெல்லாம் இவரது குறிப்பிடத் தகுந்த நாவல்கள். குழந்தைகளுக்கான படைப்பிலக்கியத்திலும் இவருடைய பங்களிப்பு கணிசமானது. குழந்தைகளுக்கென நான்கு நுல்களை எழுதி இருக்கிறார். ‘கம்பீர கருடன்’, ‘வானம்பாடி’, ‘வண்ணக்கிளி’, ‘சலங்கைக் காக்காய்’ எனப் பறவைகளை மையமாக வைத்து எழுதி இருக்கிறார்.

இந்தச் சிறுவர் புத்தகங்களுக்கான ஓவியத்தையும் அநுத்தமாவே வரைந்திருந்தார். பறவை இனங்களின் மீது இவருக்கு ஆர்வம் அதிகம் உண்டு. பறவைகளின் குணாதிசயங்களைக் குறித்து மட்டும் எழுதினால் அது ஓர் ஆராய்ச்சிப் புத்தகமாக இருக்கும் என்பதால் சிறுவர் கதாபாத்திரங்களை அமைத்து அந்தக் கதைகளில் பறவைகள் குறித்துப் பேசி இருக்கிறார். அவரைச் சந்திக்க வரும் குழந்தைகளுக்கு அந்தப் புத்தகங்களைப் பரிசாகக் கொடுப்பாராம்.

ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம், ரஷ்யன் மற்றும் பிரெஞ்ச் மொழிகளைக் கற்றவர். இவருடைய படைப்புகள் கன்னடத்திலும், இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழ் வளர்ச்சிக் கழக விருது, கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு உள்பட பல விருதுகளைப் பெற்றவர். சில நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார். உலக வரலாறு பற்றிய அவருடைய பொது அறிவும் வியப்பை அளிக்கும் வண்ணம் இருந்தது.

ஓயாமல் எழுதியதில் கழுத்து நரம்புகள் பாதிக்கப்பட்டு அடிக்கடி நரம்புத் தளர்ச்சிக்கு ஆளானார். 2010, டிசம்பர் 3 அன்று தனது 88 வயதில் காற்றோடு கலந்துவிட்டார்.

எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன்

“சிறந்த எழுத்தாளராக இருந்த அநுத்தமாவை அவரது குடும்பத்தினரும் நன்கு கொண்டாடி ஊக்குவித்தனர். அவரும் குடும்பத்தை அந்த அளவிற்கு மதித்தார். குடும்பத்தின் மீது மிகவும் பாசமாக இருந்தார். அநுத்தமாவின் ‘கேட்ட வரம்’ புதினம் அவருக்கு அதிகம் புகழைத் தந்தது. சிறுகதைகளைவிட அவரது நாவல்கள் வலிமை வாய்ந்தவை. வெளிதேச அன்பர்கள் சிலர் இன்னமும் சென்னை வந்தால் அல்லயன்ஸ் பதிப்பகத்தில் அநுத்தமாவின் புத்தகங்களை வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

இவரது கதைகளை அங்கீகரித்து பிரசுரித்த கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ, அநுத்தமாவை தங்கை என்றே மேடைகளில் அறிமுகப்படுத்துவார். அநுத்தமாவும் கி.வா.ஜாவை அண்ணன் என்றே குறிப்பிடுவார். கி.வா.ஜா கேட்டுக்கொண்டபடி இவர் கதைகளை எழுதித் தள்ள அநுத்தமாவின் கணவர் பத்மநாபன் அதனை அழகாக அடுக்கிப் பிரதி எடுத்து தருவார். விசாலமான மனம் கொண்டவர் அநுத்தமா. பாசமானவர். யாரைப் பற்றியும் வம்புதும்பு பேச மாட்டார். பொறாமைப் படமாட்டார். கிடைத்த வரைக்கும் சந்தோஷம் என்று நினைப்பார். கிடைக்காதவற்றை குறித்து ஆதங்கப் படமாட்டார். பரிசு, விருது இவற்றைவிட வாசகர்களின் அங்கீகாரம் முக்கியம் என்று கருதியவர்.

தி. ஜானகிராமனின் இரங்கல் கூட்டத்திற்கு சி.சு. செல்லப்பா, கஸ்தூரி ரங்கன் போன்றோருடன் அநுத்தமாவும் வந்திருந்தார். எல்லாரும் தி.ஜா. குறித்துப் பேசினர். அங்கு ஆங்கிலேயர் இருவர் வந்திருந்தனர். அவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக கால் மணி நேரம் ஆங்கிலத்தில் தி.ஜா. குறித்துப் பாரம்பரிய உடையில் இருந்த அநுத்தமா பேச எல்லாருக்கும் ஆச்சரியம். அநுத்தமா சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும்கூட.

எழுத்தாளர் அகிலன் ஒருமுறை, ‘சமையலுக்கு மட்டுமல்ல, கதைகளுக்குப் பாத்திரங்களைச் சமையல் அறையில் இருந்து எடுக்கிறாயே’ என்று பாராட்டி இருக்கிறார். அந்த அளவிற்கு குடும்பத்தில் உள்ள உறவுகளுக்குள் ஏற்படும் நெருக்கம், நெருடல் இவற்றை வைத்தே அநுத்தமா அழகாக கதைகள் எழுதுவதை அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ராஜம் கிருஷ்ணன், வாஸந்தி இவர்களைப் போல் இவர் கள ஆய்வு செய்து கதைகள் எழுதியதில்லை. குடும்பம்தான் இவரது கதைகளின் பாடுபொருள்.தனது எழுத்துகள் படிப்பவருக்கு நிம்மதி தர வேண்டும். அவர்களது மனதில் கீழ்த்தரமான எண்ணங்கள் இருந்தால் அவற்றை மாற்ற வேண்டும் என்று விரும்பினார்.

அவர்களது சகோதரனும் அவரது மனைவியும் ஒரு விபத்தில் இறந்து போக கொஞ்ச காலம் பெரும் துயரத்தில் இருந்தார். எல்லாரிடமும் பாசப் பிணைப்புடன் இருந்தார். 80 வயதுக்கு மேல் வாழ்ந்து மனநிறைவோடு மண்ணுலகை விட்டு விடைபெற்றார். அவரது எழுத்துக்கு அழிவு இல்லை. இந்தக் காலத்திலும் அவரது எழுத்துகள் கதையுலகை அலங்கரித்துக்கொண்டுதான் இருக்கின்றன.”

அல்லயன்ஸ் பதிப்பகம் ஸ்ரீனிவாசன்

“எங்கள் நிறுவனத்துடன் அநுத்தமா அவர்களுக்கு 60 வருடங்களுக்கு மேலாக நல்ல பழக்கம் உண்டு. அசாதாரணமான பெண்மணி அவர். மிக மிக புத்திசாலி. அவரது நாவல்கள் சித்திரம் வரைந்தது போல் இருக்கும். காட்சிகள் அவ்வளவு தெளிவாக விளக்கப்பட்டிருக்கும். நேரடிக் காட்சிகளை எழுத்தில் கொண்டு வரக்கூடிய அசாத்திய திறமை அவருக்கு உண்டு. அன்றாடம் குடும்பங்களில் நிகழக்கூடிய நவரசங்களையும் அவரது கதைகள் எடுத்துச் சொல்லும்.

சிஸ்டர் சுப்புலட்சுமி பற்றி மோனிகா ஃபெல்டன் எழுதிய புத்தகத்திலுள்ள விஷயங்கள் தமிழ் மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்று நினைத்த ராஜாஜி ‘அதனைச் செய்ய நீதான் சரியான பெண்மணி. இந்தப் புத்தகத்தை நீ மொழியாக்கம் செய்ய வேண்டும்’ என்று அநுத்தமாவைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அநுத்தமா அதனை மொழியாக்கம் செய்தார். அது கல்கியில் தொடராக வெளிவந்தது. பெரியோர்களால் பாராட்டப்பட்ட பெருமைக்குரியவர் அநுத்தமா.

பல இதழ்களில் வெளிவந்த அவரது சிறுகதைகளைத் தொகுத்து அல்லயன்ஸ் பதிப்பகத்தில் 5 புத்தகங்கள் வெளியிட்டோம். அவரது கதைகளைத் தேடி எடுத்துத் தொகுக்க நான் உதவியாக இருந்தேன். நடக்க முடியாதபோதும் கதைகள் தொகுக்கும் போது சின்னப் பெண் போல உற்சாகமாகிவிடுவார். அடிக்கடி அவரது வீட்டிற்குச் சென்று அவரைப் பார்ப்பேன். வயதான காலத்தில் அவருக்கு எழுத வேண்டும் என்று ஆசை இருந்தாலும் அவரால் எழுத முடியாமல் கைகள் தளர்ந்து போனபோது நான் அவரை, கதை சொல்லச் சொல்லி டேப் ரெக்கார்டரில் ரெக்கார்ட் செய்து அந்தக் கதைகளையும் புத்தகத்தில் இணைத்தேன். அவரது படைப்புகளை 95 சதவீதம் புத்தக வடிவில் கொண்டு வந்துவிட்டோம்.

என்னை எப்போதும் சின்னப் பையன் என்று சொல்வார். ‘நான் வளர்ந்துட்டேன் மாமி. நான் இன்னும் பையன் இல்லை’ என்று சொல்வேன். ‘நீ எங்களுக்குச் சின்ன பையன்தான்’ என்பார். என் தந்தை இறந்த செய்தி கேட்டு வந்தவர், ‘நீ இப்ப பெரியவனாயிட்ட. உங்க அப்பா உன்னைப் பெரியவனாக்கி பொறுப்பை எல்லாம் உன்னிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்’ என்று சொல்லி வருந்தினார்.

ஒருமுறை எனது காலத்தில் அவரது புத்தகம் ஒன்றில் உரிமை ஆசிரியர் என்பதற்குப் பதிலாக, பதிப்பகத்தாருக்கு என்று வந்துவிட்டது. அதை நானும் கவனிக்கவில்லை. அதனை கவனித்த அநுத்தமா சோவிடம் அது குறித்துச் சொல்லியிருக்கிறார். சோ என்னைக் கேட்டதும் என் தவறை உணர்ந்த நான், அநுத்தமாவிடம் நேரடியாகச் சென்று ‘அந்தப் புத்தகத்தின் அந்தப் பக்கத்தை மட்டும் கிழித்துவிட்டு உரிமை ஆசிரியருக்கு என்று அச்சிட்டு அதன் எல்லாப் பிரதிகளிலும் ஒட்டி விடுகிறேன் அல்லது அந்த இடத்தில் மட்டும் ஸ்டிக்கர் ஒட்டி விடுகிறேன்’ என்று சொன்னேன். அதற்கு அவர் ‘நீ உன் தவறை உணர்ந்துவிட்டாய் அது போதும். அது அப்படியே இருக்கட்டும்’ என்று கூறி அதன் காப்பி ரைட்டை எனக்கே கொடுத்துவிட்டார். இறுதி காலங்களில் ‘நீயே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார், அதன்படியே அவர் காலத்திற்குப் பின் அவரது கொழுந்தனார் அநுத்தமாவின் மொத்தப் புத்தகத்தின் உரிமையையும் எனக்கே கொடுத்துவிட்டார். இது அவர் மீதும் அவர் கதைகள் மீதும் நான் வைத்திருந்த மரியாதைக்கு எனக்குக் கிடைத்த பாக்கியம் என்றே சொல்லவேண்டும்.

நாங்கள் அந்தக் காலக்கட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளைச் சேர்த்து ‘கதைக்கோவை’ என்கிற நூலை வெளியிட்டோம். அதில் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் 30 சதவீதத்திற்கும் மேல் இருந்தன. ஆண் பிள்ளைகளுக்கே கட்டுப்பாடுகள் இருந்த காலத்தில் அவ்வளவு அருமையான கதைகளை பெண்கள் எழுதி இருந்திருக்கிறார்கள். அவர்களது திறமைகளைக் குறைத்து எடை போட முடியாது. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் அநுத்தமாதான். அவர்களது கதைகளில் ஆபாசம் இருக்காது.

அவரது நூல்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். அதில் ‘கேட்டவரம்’ நாவல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அவரை, ‘கேட்டவரம் பாளையம் அநுத்தமா’ என்று சிலர் சொல்வதுண்டு. அந்தப் புத்தகத்தைப் படித்தால் கேட்டவரம் பாளையம் ஊருக்குப் போகவேண்டும் எனத் தோன்ற ஆரம்பித்துவிடும். அந்த அளவிற்கு கிராமத்து நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக எழுதி இருப்பார். அநுத்தமா இறந்து போயிருக்கலாம். ஆனால், அவர்களின் புத்தகங்கள் அழியாத தன்மை கொண்டவை.”

எழுத்தாளர் உஷா சுப்ரமணியம்

“எனது மாமியார் ராஜம்மாளும் எழுத்தாளர் அநுத்தமாவும் தோழிகள் என்பதால் அநுத்தமாவை நான் பல முறை சந்தித்திருக்கிறேன். எனது மாமியார் அவரை உரிமையாக ராஜேஸ்வரி என்றே அழைப்பார். முதன் முறையாக அவரது வீட்டிற்குச் சென்றபோது என் மாமியார் அவரை ராஜேஸ்வரி என அழைப்பதைப் பார்த்து நான் அவர் யாரோ என்று நினைத்திருந்தேன். பிறகுதான் தெரியும் எங்களுடன் கதைகள் குறித்துப் பேசிக்கொண்டே சிற்றுண்டி செய்து கொடுத்த அந்த எளிய பெண்மணி பெரிய எழுத்தாளர் அநுத்தமா என்று.

எந்த பந்தாவும் இல்லாமல் சாதாரண பெண்மணியைப் போல் இருப்பார். அவர்களுடையது கூட்டுக்குடும்பம். அதில் அனைவரும் அன்பாக ஒற்றுமையாக இருப்பார்கள். நான் ஒருமுறை அவர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவர் ரஷ்யன் கல்சுரல் சென்டரில் பேசச் சென்றிருக்கிறார் என்றார்கள். சாதாரண பெண்மணியாக இருந்த அவருக்கு அங்கு என்ன வேலை என நான் நினைத்தபோது என்னுடன் வந்திருந்த எழுத்தாளர் லஷ்மி, அநுத்தமா ரஷ்ய மொழியில் வல்லவர் என்கிற விஷயத்தை எனக்குத் தெரிவித்தபோது ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அந்தக் காலக்கட்டத்தின் மிகப்பெரிய எழுத்தாளர் அநுத்தமா. அவரது கதைகள் பொதுமக்களிடம் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. ஆனால், தான் பெரிய ஆள் என்பது போல் இல்லாமல் எல்லாரிடமும் அன்பாக பழகுவார்.”

எழுத்தாளர் வாஸந்தி

“பாசாங்குத்தனமே இல்லாத, பொய்மை என்பதே அறியாத ஜீவனாக வாழ்ந்த அபூர்வ மனுஷி. அவரது எழுத்துக்கும் சொந்த வாழ்வுக்கும் எந்தப் பேதமும் இல்லை. ஆதர்சம் என்று எதை நம்பினாரோ அதன்படி வாழ்ந்தவர். குறைகள் இருந்திருக்காதா? நிறைய இருந்திருக்கும் சாமானியருக்கு. அவற்றின் நிழலே தன்மீது படியாமல் பார்த்துக்கொண்ட விவேகம் அவராகப் பழகிக்கொண்டதாகப் படுகிறது. பிரபஞ்சத்தின் தோன்றல்கள் அனைத்தையும் ஆத்மார்த்தமாக நேசித்ததாலேயே அவருக்கு அது சாத்தியமாயிற்று எனத் தோன்றுகிறது. அவரது பரந்த வாசிப்பும் தார்மீகப் பண்புகளில் அவருக்கு இருந்த ஆழ்ந்த நம்பிக்கையும் அவரைப் பதப்படுத்தியிருக்கலாம். தாமரை இலை நீர்போல வாழ்வது சுலபமல்ல. எழுத்தாளர்கள் சுலபத்தில் நொறுங்கிவிடும் இயல்பு உடையவர்களாக அறியப்படுபவர்கள். அதனாலேயே அநுத்தமா அபூர்வப் பிறவியாகத் தெரிகிறார்.”

படைப்பாளர்:

ஸ்ரீதேவி மோகன்

ஏழு ஆண்டுகால பத்திரிகையாளரான ஸ்ரீதேவி மோகன், குமுதம், தினகரன் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியிருக்கிறார். 2015–ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். 2018-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத்தில் மதம், சமூகம்’ பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை அளித்துள்ளார். எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி மற்றும் திருவையாறு ஐயா கல்விக்கழகம் இணைந்து நடத்திய எட்டாவது தமிழ் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

­­