சரோஜா ராமமூர்த்தி (1921 – 1971)
சாகித்ய அகாடமியால் நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்ட பெருமைக்குரியவர். சிறந்த காந்தியவாதி. மிகச் சிறந்த எழுத்தாளர். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கியது. இத்தகைய பெருமைக்கெல்லாம் உரியவர் பழம்பெரும் எழுத்தாளர் சரோஜா ராமமூர்த்தி. ஸரோஜா ராமமூர்த்தி என்றும் குறிப்பிடுவார்கள். இவர் குறித்த அருமை பெருமைகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் அவருடைய மகள் சரஸ்வதி.
“அம்மா காஞ்சிபுரத்தில் 1921 ஆம் ஆண்டு பிறந்தார். அம்மா பிறந்த போது அம்மாவுடைய அப்பா ராமச்சந்திரன் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக திருக்கழுக்குன்றத்தில் வேலையில் இருந்தார். அம்மாவோடு கூடப் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள். அம்மாதான் மூத்தவர். அம்மாவிற்குப் பதினோரு வயது இருக்கும்போது அம்மாவுடைய தாயார் கிரிஜா அம்மாள் இறந்துட்டாங்க. அதனால் அம்மா தன் சகோதரர்களோடு பெங்களூருவில் உள்ள அத்தை வீட்டில் வளர்ந்தார். கைக்குழந்தையான தன் தம்பியை அம்மாதான் பார்த்து வளர்த்தார்.
அம்மா அந்தக் காலத்திலேயே கான்வென்ட்டில் சீனியர் கிரேடு வரை படித்தார். அப்போது தமிழில் வெளிவரும் இதழ்களை எல்லாம் வாசிக்க ஆரம்பித்தவர், தன்னோட 16 வயதிலே எழுதவும் ஆரம்பிச்சிட்டார். முதல் சிறுகதை விகடனில் வெளிவந்தது. தொடர்ந்து நிறைய எழுதிட்டிருந்தார். நவீனத் தமிழ் எழுத்தாளராகச் சிறப்பான முறையில் எழுதி வந்தததால் அவரின் கதைகள், தொடர்கதைகள் பலவும் விகடன், கலைமகள், சுதேசமித்திரன் போன்ற பல இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தன.
வீட்டில் அவருக்குத் திருமணம் செய்ய நினைத்திருக்கிறார்கள். ஆனால், அம்மாவிற்கு நிறைய கதைகள் எழுத வேண்டும் என்று விருப்பம். அதனால் கொஞ்சம் தாமதமாகத் திருமணம் செய்யலாம் என்று நினைத்திருக்கிறார். அதனால் திருமணம் கொஞ்சம் தள்ளிப் போனது. அம்மாவுடைய கதைகள் நிறைய இதழ்களில் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில் அம்மா சென்னையிலுள்ள ஆலந்தூரில் வசித்துவந்தார்.
அதே பகுதியில் வசித்துவந்த எனது அப்பா பி.ஏ. முடித்து ஏஜிஎஸ் நிறுவனத்தில் வேலைப் பார்த்துவந்தார். அப்பாவும் து.ரா. என்கிற பெயரில் கதைகள் எழுதிவந்தார். இலக்கியத்தில் ஈடுபாடு இருந்த காரணத்தினால் மாலை நேரத்தில் விகடன் அலுவலகத்தில் கல்கிக்கு கதைகளை எடிட் செய்வது போன்ற வேலைகளில் உதவியாக இருப்பார். அப்படி ஒரு முறை கல்கி ஒரு கதையைக் காண்பித்து, ‘இந்தக் கதை சிறப்பாக இருக்கிறது. இதை உன் பகுதியைச் சேர்ந்த பெண்தான் எழுதி இருக்கிறார்’ என்று சொல்லி இருக்கிறார். அம்மா நெருங்கிய உறவினர்களின் வீட்டுத் திருமணம், நவராத்திரி விழா போன்றவற்றில் பாடுவார். அப்படி ஒரு நிகழ்வில் அம்மாவைச் சந்தித்த அப்பா, ‘உன் கதை நன்றாக இருந்தது. நிறைய எழுது’ என்று சொல்லி இருக்கிறார்.
அக்கம்பக்கத்து வீடு என்பதால் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் திருமணப் பேச்சு ஏற்பட்டு, திருமணம் முடிவாகியது. அந்த நேரத்தில் தன் தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக அம்மா மும்பையில் உள்ள தன் பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்தார்.
அம்மாவிற்கு தேசபக்தி அதிகம். காந்தியின் மீதோ தெய்வீக பக்தி. எந்த அளவிற்குப் பக்தி என்றால் காந்தி ஒரு முறை தாதர் ரயில்வே நிலையத்தில் இறங்கும்போது தன்னிடம் இருக்கும் கைத்துண்டு ஒன்றை நீட்டி சுதந்திரப் போராட்டத்திற்குத் தங்களால் இயன்றதை அளிக்க வேண்டும் என்று அங்கிருந்த பொதுமக்களிடம் கேட்டுள்ளார். இது காந்தியடிகளின் வழக்கம் என்பது நாம் அறிந்த விஷயம். அங்கு தாதர் ரயில் நிலையத்தில் நின்றிருந்த அம்மாவிடமோ காந்தியடிகளிடம் கொடுப்பதற்குப் பணம் எதுவும் இல்லை. என்ன செய்வது என்று யோசித்த அம்மா, தன் கையில் இருந்த ஒரு ஜோடி தங்க வளையல்களைக் கழற்றி அந்தத் துண்டில் போட்டிருக்கிறார். அதைக் கண்ட மகாத்மா, ‘உன் தங்க வளையல்களைப் போடுகிறாயே. வீட்டில் கேட்டால் என்ன சொல்வாய்?’ என்று இந்தியில் கேட்டிருக்கிறார். அதற்கு ‘காந்தி கேட்டார் கொடுத்துட்டேன்’ எனச் சொல்வேன் என்று சொல்லி இருக்கிறார் அம்மா. காந்தி புன்னகையுடன் விடைபெற்றிருக்கிறார். அதேபோல் வீட்டிற்கு வந்தபின் பாட்டி கேட்டதற்கு அந்தப் பதிலையே சொல்லி இருக்கிறார். அதைக் கேட்ட பாட்டி ‘அப்ப காந்தியையே உன் கல்யாணத்தை நடத்தச் சொல்லு’ என்று சொல்லி இருக்கிறார். இந்தச் சம்பவத்தை அம்மா எங்களிடம் பகிர்ந்திருக்கிறார்.
அம்மா காந்தியடிகளைப் பற்றி அப்பாவிடம்கூட அடிக்கடி பேசிக்கொண்டிருப்பாராம். காந்தி இதைச் செய்யச் சொன்னார். இப்படிச் சொன்னார். அதையெல்லாம் கேட்டு நடக்க வேண்டும். சிலர் கேட்பதில்லை. அது நல்லதில்லை என்றெல்லாம் எப்பவும் பேசும் அளவு காந்தியின் பக்தையாக அம்மா இருந்திருக்கிறார்.
அப்படிப்பட்டவர் மும்பையில் தங்கியிருந்தபோது அங்கே வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டு தடை செய்யப்பட்ட பாரதியார் பாடலைப் பாடியுள்ளார். அதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு இவருடைய தந்தையைப் பற்றி விசாரித்து அறிந்த காவலர்கள், அவரும் காவல் துறையைச் சேர்ந்தவர் என்பதாலும் சின்னப் பெண் என்கிற காரணத்தினாலும் அம்மாவை இரண்டு நாட்களில் விடுதலை செய்திருக்கிறார்கள்.
ஆனால், சென்னையில் இருந்த அம்மாவின் அப்பாவுக்கோ இதனால் வேலைக்குப் பாதகமாகி டிகிரேட் நிலைக்குச் சென்றிருக்கிறார். எனவே, ஏற்கெனவே சினத்தில் இருந்தவர் மகள் மீது இன்னும் அதிகமாக கோபமாகி இருக்கிறார். அம்மா தன் தந்தை தன்னோடு சண்டையிட்ட விஷயத்தை எங்களிடம் சொல்வார். ‘நானோ பிரிட்டிசாருக்காகப் பணி புரிகிறேன். நீ சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறாய். நான் உனக்குத் திருமணம் செய்து வைக்கப் போவதில்லை’ என்று கடுங்கோபத்தோடு பேசி இருக்கிறார் தாத்தா. அதனால் அம்மாவின் பாட்டி ‘உனக்கு 21 வயது ஆனதும் நாங்களே திருமணம் செய்து வைக்கிறோம்’ என்று கூறி மும்பை அழைத்துச் சென்றிருக்கிறார். அதன்படியே, அம்மாவின் மாமா முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார். அப்பா சென்னையில் இருந்து மும்பை சென்று அம்மாவைப் பதிவு திருமணம் செய்திருக்கிறார். பின் அங்குள்ள மகாலட்சுமி கோயிலில் சாமி முன் வைத்து தாலி கட்டி சென்னை அழைத்து வந்திருக்கிறார். அந்தக் காலத்தில் பதிவுத் திருமணம் எல்லாம் அபூர்வம். ராஜாஜி, கல்கி ஆகியோரிடமிருந்தெல்லாம் தனது திருமணத்திற்கு வாழ்த்து வந்ததாக அம்மா கூறுவார். அந்த வாழ்த்துகளை அம்மா பத்திரமாக எடுத்து வைத்திருந்தார்.
திருமணத்திற்குப் பிறகும் அம்மாவின் எழுத்து தடைபடவில்லை. அப்பாவும் எழுத்தாளர் என்பதால் அம்மா எழுதுவதை அப்பா தடை செய்யவில்லை. அம்மா எழுதுவதற்கு அப்பா நல்ல ஊக்கம் கொடுப்பார். அம்மா கதை எழுதியவுடன் அப்பாவிடம்தான் முதலில் காண்பித்து கருத்து கேட்பார். அப்பாவும் அப்படியே தன் கதைகளை அம்மாவிடம் கொடுத்து கருத்துச் சொல்லச் சொல்வார். அப்பா எங்களிடம் அம்மாவைப் பற்றி, ‘நான் எழுதுறதெல்லாம் என்ன கதை? அம்மா ரொம்ப அருமையாக எழுதுவாங்க’ என்று பெருமையாகச் சொல்வார். இருவரும் கருத்தொருமித்த ஆதர்ச தம்பதி. இருவரும் காந்தியின் வார்தா ஆசிரமத்தில் இருந்துள்ளனர்.
நிறைய எழுத்தாளர்களின் படைப்புகளை அம்மா வாசிப்பார். கல்கிதான் அம்மாவிற்குப் பிடித்தமான எழுத்தாளர். அம்மாவைத் தேடி நிறைய எழுத்தாளர்கள் வீட்டுக்கு வருவார். வசுமதி ராமசாமி, அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன், கோமதி சுப்ரமணியம் (பேச்சாளர் சுகிசிவத்தின் தாயார்) எல்லாரும் அம்மாவுடைய தோழிகள். எல்லாரும் வீட்டுக்கு வருவார்கள். எழுத்தாளர் தேவன் வருவார். மற்றபடி அம்மாவிற்கு தேசபக்தியைப்போல கடவுள் பக்தியும் அதிகம். காஞ்சி பெரியவர் எந்த ஊருக்குப் போனாலும் வாய்ப்பு கிடைத்தால் அம்மா அங்கு சென்று ஆசிப்பெற்று வருவார்.
ரொம்ப புத்திசாலியான பெண்மணி. ஒருமுறை டெல்லி சென்றிருந்தபோது பார்லிமெண்ட் செஷன் பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதன்படி ஒருவரின் உதவியின் மூலமாக அந்த செஷனைப் பார்த்திருக்கிறார். அம்மா 650 சிறுகதைகளுக்கும் மேலாக எழுதி இருக்கார். 8 நாவல்கள் எழுதி இருக்கார். இரண்டு குறுநாவல்கள் எழுதியுள்ளார். ஆனால், அம்மா விளம்பரம் தேடிக்கொண்டதே இல்லை. அம்மா இவ்வளவு எழுதி இருக்கார் என்று எங்களுக்கே தெரியாது. சாகித்ய அகாடமியின் கூட்டத்தின்போதுதான் நாங்களே தெரிந்துகொண்டோம். இப்போது நிறைய பேர் எஃப்எம், யூடியூப் போன்றவற்றில் அம்மாவின் கதைகளை வாசிப்பார்கள். இவர்கள் எங்கிருந்துதான் எடுக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும்.
நாங்கள் மொத்தம் ஏழு சகோதர, சகோதரிகள். நாங்கள் பள்ளிக்கூடம், கல்லூரிவிட்டு வரும்போது அம்மா எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஒரு டேபிளில் அமர்ந்து எழுதிக்கொண்டிருப்பார். அம்மா என்ன எழுதுகிறார்கள் என்றெல்லாம் தெரியாது. பெரிய எழுத்தாளர் என்றும் தெரியாது. சுதேசிமித்திரனில் தொடராக வந்துகொண்டிருந்த நாவல் ஒன்றின் பகுதியினை சாண்டியல்யனிடம் வாரா வாரம் நான்தான் பள்ளிக்குச் செல்லும்போது கொண்டு சென்று கொடுப்பேன்.
அம்மாவின் பனித்துளி நாவல் ரொம்ப பிரபலமாக்கியது. அம்மா பனித்துளி நாவல் எழுதியபோது நிறைய தோழிகள், ‘இந்த நாவலை எழுதியது உங்க அம்மாதானே நாங்க பார்க்கணும்’ என்று சொல்லி அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு வருவார்கள். அவர்களுடைய அம்மாக்களோ அம்மாவை நவராத்திரிக்கு வரச்சொல்லி வற்புறுத்துவார்கள். அப்போதுதான் அம்மா ஒரு பெரிய எழுத்தாளர் என்று உணர்ந்தேன். அம்மாவுடைய அருமை பெருமையைக் காலந்தாழ்ந்த பின்னே நாங்கள் புரிந்துகொண்டோம்.
பெண்கள் தைரியமாக, தானே தன் காலில் நிற்க முடியும் என்பதுபோல்தான் கதைகள் எழுதுவார். பெண்களின் உரிமைகளைப் பற்றி எழுதுவார். பெண்களை மதிக்க வேண்டும் என்பார். இவற்றை எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் வாழ்விலும் பிரதிபலித்தார். ஆம் பெண்களுக்கு ஒரு பிரச்னை என்றால் தைரியமாக நேருக்கு நேர் நின்று கேள்விகள் கேட்பார். அப்படித்தான் ஒருமுறை எங்கள் வீட்டின் முன் கடை வைத்திருந்த ஒரு ஆள், தன் மனைவியைப் போட்டு அடித்தபோது தடுத்து நிறுத்தி, ‘நீ இப்படி பொம்பளையைப் போட்டு அடிக்கிறதா இருந்தா உடனே இந்த இடத்தைக் காலி பண்ணிடு. பொண்டாட்டியைத் தெருவில் வைத்து அடித்து அசிங்கப்படுத்தாதே. அவமானப்படுத்தாதே. அது தப்பு. பெண்ணை மதிக்கக் கத்துக்கோ’ என்று சத்தம் போட்டார். அதன் பிறகு அந்தக் கடைக்காரர் அமைதியானார்.
16 வயதில் எழுத ஆரம்பித்த அம்மா, தனது 66 வயது வரை 50 ஆண்டுகள் ஓயாமல் எழுதிக்கொண்டிருந்தார். பத்திரிகைகளுக்காக என்றில்லாமல் தனது திருப்திக்காக எழுதிக்கொண்டிருந்தார். ஆனால், தனது மருமகனான எனது சகோதரியின் கணவர் எழுத்தாளர் சுப்ரமணிய ராஜு விபத்தொன்றில் தனது நாற்பது வயதில் காலமானபோது அம்மா தன் மகளைப் பார்த்து மிகவும் மனமுடைந்து போனார். அத்துடன் எழுதுவதை நிறுத்திவிட்டார். கேட்டால் ‘என்னவோ எழுதத் தோன்றவில்லை’ என்பார். அதன்பிறகு தான் அவர் மனத்துயரத்தினால் எழுதுவதில்லை என்று நாங்கள் புரிந்துகொண்டோம். அம்மா 70 வயதில் காலமானார். அம்மாவின் கதைகள் ஹெர் ஸ்டோரிஸில் புத்தகமாக வர இருக்கிறது. இப்படிப்பட்ட பெண்மணியின் மகள் என்பது பெருமையாக இருக்கு” என்றார் மகிழ்ச்சியுடன் சரஸ்வதி.
படைப்பாளர்:
ஸ்ரீதேவி மோகன்
ஏழு ஆண்டுகால பத்திரிகையாளரான ஸ்ரீதேவி மோகன், குமுதம், தினகரன் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியிருக்கிறார். 2015–ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். 2018-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத்தில் மதம், சமூகம்’ பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை அளித்துள்ளார். எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி மற்றும் திருவையாறு ஐயா கல்விக்கழகம் இணைந்து நடத்திய எட்டாவது தமிழ் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார்.