கருப்பை அதிகாரம் – 2

ரஷ்யாவில் இருந்து வெளியாகும் ‘ஸ்போர்ட் எக்ஸ்பிரஸ்’ ஊடகத்துக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப் பதக்கம் வென்ற ரஷ்ய நீச்சல் வீராங்கனை அல்லா சிஷ்கினா அளித்துள்ள பேட்டியில் உடலுறவு தன்னுடைய வெற்றிக்கும் அதீத பலத்துக்கும் கைக்கொடுத்தது என்று கூறிய செய்தியை தமிழின் பிரதான ஊடகம் ஒன்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. கலாச்சாரக்காவலர்கள் சிலர் அச்செய்தியின் பின்னூட்டத்தில் குடிகொண்டு, ‘அய்யோ காலங்கெட்டு போயுடுத்து!  கலி முத்திடுத்து’, என்றவாறு பெண்களை காமத்திலிருந்து தனித்து  களமிறங்கினர்.

காமம் பற்றி பெண் பேசுவது நம் மரபல்ல, நம் கலாச்சாரமல்ல சாம்பாரில் கத்திரிக்காயில்லை என்ற கணக்காக கோபம் கொண்டெழும் நம் சமூகம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பெண் காமம் அற்றவள் அல்ல; இயற்கையில் காமம் நுகரக்கூடிய பெண்களை ஆண்மைய சமூகம் ஒடுக்கி காமத்தில் ஆண் நுகரும் பண்டாமாக மாற்றி நிறுவியிருக்கின்றது.

போலியான இதுபோன்ற கட்டுக்கதைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் உடைவதுதான் இயற்கையின் நியதி. இன்றைய காலத்தில் பெண் கல்வியும் பெண்களின் சுயமும் அறிவியலோடு கைகோர்த்து பெண்களுக்கும் காமத்திற்குமான இன்றியமையாத தொடர்புகளை விவரித்து வருகின்றன.

ஆதியில் வலிமையுடன் திகழ்ந்த பெண்களிடமிருந்து இடைப்பட்ட காலங்களில் அந்நியப்படுத்தப்பட்ட காமம் பெண்களை வலிமையற்றவர்களாக நிறுவியது. வயிற்றுப் பசிக்கு தகுந்த நேரத்தில் உணவளிக்காமல் தொடர்ந்து பட்னி போடுவதன் மூலம் ஒருவரை பலவீனமாக்கச் செய்ய முடியும். அது போலவே பெண்களுக்கு இயல்பாய் எழும் காமப் பசிகளுக்கு பட்டினி இட்டும் காமப்பசியை மறக்கடித்தும் பெண்களை வலிமை இழக்கச் செய்துள்ளனர்.

கருப்பையில் காமம் கிளர்ந்தெழும் பொழுது அதனை வெளிப்படுத்தி அடைவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாலும், தொடர்ந்து காமத்தேவையை தகுந்த நேரத்தில் ஆற்றாமல் புறக்கணித்ததன் விளைவுகளாலும் தேவை இல்லாத நேரங்களில் திணிக்கப்பட்ட முறையில்லாத ஆணாதிக்கக் காம வெறிகளாலும்  வருந்தித் தேய்ந்த பெண்ணுடல், கருப்பையிலிருந்து வரும் காம அதிர்வுகளை அனுபவித்திட முடியாதபடி மரத்துப்போனது.

பெண்களுக்கு காம உணர்வுகள் கிடையாது; காமத்தை வெளிப்படுத்தக்கூடிய பெண்கள் பெண்களே கிடையாது என்றவாறு ஆண்மைய சமூகம் கட்டமைத்துக்கொண்டது. தாமாக உவந்து காமுறும் பெண்களை  தொன்மங்கள் அரக்கியாகவும், படுமோசமானவர்களாகவும், மனிதத் தன்மையற்றவர்களாகவும் சித்தரித்தன.

அந்தப்புரத்தில் ஆயிரக்கணக்கான பெண்களை வைத்தும் முறையற்ற காமச் செயல்களில் ஈடுபட்டும் வந்த ஆண்களை தொன்மங்கள் வீரனாகவும் தலைவனாகவும் கொண்டாடியிருக்கின்றன.

தொன்மங்களின் வழி மரபை புரிந்து கொள்ளும் பெண்கள் அடக்கத்தையும் ஒடுக்கத்தையும் பெண்களின் பிறவி குணமெனக் கருதி தங்களை காமத்துக்கு அப்பாற்பட்டவர்களாக நிலைநிறுத்திக் கொண்டனர். இவ்வாறு எதிர்ப்பாற்றலின்றி இயக்கப்பட்ட பெண்ணுடலில் அச்சமும் மடனும் நாணும் பயிர்ப்பும் தொற்று நோய்கள் போல தொற்றிக்கொண்டன.

Photo by Maru Lombardo on Unsplash

பெண்கள் மீது திணிக்கப்பட்ட இது போன்ற இயற்கைக்கு ஒவ்வாத போலிகளை பொருட்படுத்தாமல் சில இலக்கியங்கள் பெண்களின் காமத்திற்கும் இடமளித்துள்ளன. 

சிறு கோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்

உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே!

(குறுந்தொகை – 18)

பலா மரத்தின் சிறிய கிளையில் பெரிய பலாப்பழம் தொங்குவது போல இவளது சிறிய உயிரில் பெரிய காம உணர்வு ஒட்டிக்கொண்டுள்ளது என்று ஒரு பெண்ணின் காம உணர்வை தோழி கூற்றாக மேற்கண்ட சங்க இலக்கியம் பதிவு செய்திருக்கின்றது. 

இலக்கியத்தில் சில இடங்களில் காமத்தை பெண்களே பதிவும் செய்திருக்கின்றனர். காமத்தேவை மிகுந்த பெண்ணொருத்தி இரவு நேரத்தில் செய்வதறியாமல் முட்டிக்கொள்வதா, தாக்கிக்கொள்வதா என்று துடிப்பதை ஔவையார்,

முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்

ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு

ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்

அலமரல் அசைவளி அலைப்பவென்

உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே

(குறுந்தொகை – 28)

இப்பாடலில் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்.

“பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப்

  புணர்வது ஓர் ஆசையினால் என்

  கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து

   ஆவியை ஆகுலம் செய்யும்” 

என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பதிவு செய்துள்ளார்.

இன்று வரை தமிழின் கலை இலக்கிய வடிவங்களில் பதிவு செய்யப்படுகின்ற காமம் என்பது பெரும்பாலும் ஆண் வயப்பட்டதாகவும் ஆண்களின்  உணர்ச்சிகளைத் தூண்டிவிடுபவையாகவும் மட்டுமே சுருங்கிக் கிடப்பது வறட்சி நிலையைக் காட்டி நிற்கின்றன. தொன்மங்கள் எவ்வாறு சுயமாகக் காமுறும் பெண்களைத் தவறான பாத்திரங்களாக சித்தரித்ததோ அதையேதான் கருவாகக் கொண்டு இன்றைய தமிழ் சீரியல்கள் இயங்கி வருகின்றன என்பது அறிவின்பால் உள்ள வளர்ச்சியின்மையைக் காட்டுகின்றது.

தங்களுக்கு எழுகின்ற காமத்தை கணவனிடத்திலோ காதலனிடத்திலோ அல்லது நண்பர்களிடத்திலோ பகிர்ந்து கொண்டால் எங்கே நம்மை கீழான பெண் என்று கூறிவிடுவார்களோ? பாலியல் தொழிலாளிகளுடன் ஒப்பிட்டு விடுவார்களோ? என்ற அச்ச உணர்வின் பெயரில் பல பெண்கள் காமத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர்.

சில பெண்கள் காமத்தை தவறான நடத்தையாகவே கருதுகின்றனர். சுய இன்பம் கொள்வது,  விரும்பிய நேரத்தில் காதல் துணையை அழைத்து காமம் ஆற்றுவது போன்றவற்றையெல்லாம் பாவமென கலை இலக்கியப் பண்பாட்டுச் சூழல் தொடர்ந்து பெண்களிடத்தில்  வலியுறுத்தி வருகின்றது.

பெண்களின் உணர்வோடு பேசுகின்ற பொழுது சமூகம் காதலை வேறாகவும் காமத்தை வேறாகவும் பிரித்துப் பார்க்கின்ற போக்கைத் தொடர்ந்து காண முடிகின்றது. காமத்தையும் காதலையும் பிரிப்பதே மோசடியான ஒன்று. அதிலும் பெண்களைக் காமமற்ற காதலுக்கு மட்டுமே உரியவர்களென நிறுவ முயல்வது அறமற்ற போக்காகும்.

காதல் என்பது காமத்தாலும் ஈர்ப்பாலும் பிணைப்பாலும் பின்னிப் பிணைந்த ஒரு சமூக உறவு நிலையாகும். அதிலிருந்து காமத்தையோ அல்லது பிரிதொன்றையோ எடுத்துவிட்டால் அது முற்றுபெறாதக் காதலாகவே கருதப்படும்.

முற்றுபெறாத காதலோடுதான் இங்கு பல பெண்கள் இல்வாழ்க்கை நடத்தி குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர் என்பது வேதனைக்குரிய ஒன்று.  முற்று பெறாத காதலை பெண்ணுக்கும் முறையில்லாத காதலை ஆணுக்கும் அமைத்துத்தர மட்டுமே தகுதியுடையதாய் சமூகத்தின் அடிப்படைகள் இருக்கின்றன.

பெண்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை முறைக்கு தூய்மையான அன்பு அவசியம்,  தூய்மையான அன்பைத்தான் பெண்கள் எதிர்பார்க்கின்றனர் என்ற புரிதலில் இயங்குவது பெண்களை மென்மேலும் சுரண்டவே வழிவகை செய்யும்.

பெண்களின் காமத்தைத் தூண்டி இன்புறச் செய்யும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் சீர்நிலையானது பெண்களின் எலும்புகளின் பலத்திற்கும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் அடித்தளமாய் அமைகின்றன.  பெண்களின் காமப் பொழுதுகளை அதிக அளவில் சுரக்கின்ற ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் தீர்மானிக்கின்றன.

கருப்பையை வெறும் குழந்தை வளர்த்துத் தரும் உறுப்பாக மட்டுமே பெண்கள் கருதக்கூடாது. காமத்தின் அடிநாதமாகக் கருப்பை திகழ்கின்றது. மாதவிடாய் சுழற்ச்சி நின்ற பின் கருப்பையில் தோராயமாக 14 நாற்களில் கருமுட்டை திரண்டதும் ஓவலேசன் நிகழும். இந்த சமயத்தில் கருப்பையின் தயார் நிலையை அறியும் மூளை ஈஸ்ட்ரோஜனை அதிக அளவில் சுரக்கக் கட்டளையிடும். கருப்பையில் தொடங்கும் காமம் உடல் முழுவதையும் ஆட்கொள்ளும். உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் வேட்கையைக் கடத்தும்.

காமத்திற்காய் தாயாரான உடல் முதலில்  இன்பத்தை வேண்டி நிற்கும். கண்டுகொள்ள மறந்தாலும் புணர்ச்சிக்கு உரிய உறுப்புகளின் வளமை,  மார்பகக் காம்புகளின் விறைப்பு போன்ற செய்கைகளின் மூலம் கவனத்தை ஏற்படுத்தும். காமத்தின் பேரின்பத்தை அடைந்து உடலையும் உளவியலையும் குதூகலமாக்கும் சமயம் இதுவாகும். இந்த சமயங்களில் காமச் செய்கைகள் என்பது பெண்களுக்கு அவசியமான ஒன்றாகும்.

பெண்கள் தங்களின் உடல் மற்றும் உளச் சோர்வுகளை நீக்கி உற்சாகமடைய மாதம் ஒரு முறை ஏற்படும் காமப் பசியை தணித்துக் கொள்ள வேண்டும். காதல் துணையிருப்பின் நேரடியான மற்றும் பாதுகாப்பான கூடலையும் காதல் துணையில்லாது இருப்பின் அல்லது வாய்ப்புகள் அமையாத பட்சத்தில் சுய இன்பத்தில் ஈடுபடுவதும் பாவத்திற்குரிய செயல்களல்ல என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண் துணை அழைக்கும் பொழுதெல்லாம் புணர்ச்சி கொள்ள உடன்படுவது பெண்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்குமே தவிர, உடலியல் ரீதியாக துளியளவு சுகத்தையும் ஏற்படுத்திக் கொடுக்காது. பசிக்கின்ற பொழுது தொடர்ந்து  நிராகரிக்கப்படும் உணவுகளை பசிக்காத வேளைகளில் உட்கொள்வதானால் வயிற்றில் உபாதைகள் ஏற்படுவதைப் போலதான் காமமும். தேவையுள்ள பொழுது ஆற்றுவதன் மூலமே ஆரோக்கியத்தை பேண முடியும்.

மாதவிடாய் ஏற்படுவதற்கு முந்தைய கட்டத்தில் திடீரென ஏற்படுகின்ற உளவியல் ரீதியிலான சோர்வு,  பிறழ்வு,  காரணமில்லாத கோபம் வெறுப்பு போன்றவற்றிற்கு ஆரோக்கியமான நிலையில் பேணப்படாத காமமும் ஒருவகையில் காரணமாகின்றது.

ஓவ்யூலேசன் சமயத்தில் பொங்கியெழும் காமத்தை சரிவரக் கையாண்டு இன்புறுவதால் உண்டாகும் அமைதி, அந்த மாதத்தையே மகிழ்ச்சிகரமானதாக்கும். கருமுட்டை வெளிவரும் காலத்தில் ஏற்படும் காமத் தேவைகளை இன்புற்றுத் தணித்துக்கொள்ளாவிடின்  எவ்வித பேரின்பத்தையும் நிகழ்த்தாமல் தானே எரிந்து தணிந்து வெளியேறத் தயாராகும் பொழுது சில துன்பங்களை உடலில் ஏற்படுத்தி விட்டுச் செல்லும். 

ஒவ்வொரு மாதமும் பொங்கியெழும் காமத்தை சூழலின் பொருட்டு ஒரு சில மாதங்களில் புறக்கணிப்பது,  சுயத்தில் பக்குவப்படாத பதின்பருவங்களில் காமத்தை கையாளக்கூடாது எனத் தீர்மானிப்பது போன்றவை எல்லாம் உடலில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது.

தொடர்ந்து காமத்தை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பது,  காமம் என்றால் என்னவென்றே அறியாமல் வற்புறுத்தலின் பேரில் இல்லறத்தில் அடியெடுத்து வைத்துக் காலத்தை வெறுமையுடன் கழிப்பது, காமம் ஒவ்வாத காலங்களில் கணவனின் வன்புணர்வுகளை சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்துவது போன்ற நடவடிக்கைகள் பெண்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை ஆகும்.

கருப்பை காமத்திற்கான தேவையை வெளிப்படுத்தாத நேரங்களில் புணர்வது என்பது தேவை இல்லாத ஆணியாகும்.  காமத்தை சரி வரக் கையாள்வது பெண்களின் நலனுக்கு உகந்ததாகும்.

ஆண்களின் காமத்தை பெண்களின் காமத்திலிருந்து தொடங்கக் கூடிய ஒன்றாக நெறிப்படுத்த வேண்டும் அதுவே காமத்தின் பேரானந்தத்தையும் அறத்தையும் கற்பிக்கும்.

தொடரும்.

கட்டுரையின் முந்தைய பகுதியை வாசிக்க:

படைப்பாளர்:

கல்பனா

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மலசர் பழங்குடிகளின் சமூகப் பண்பாட்டு இயங்கியல் என்னும் பொருண்மையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டுவருகிறார். சர்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.