இங்கே திருமணங்கள் ஒரு குடும்பத்திலிருந்து இன்னொரு குடும்பத்திற்குப் பெண் மட்டும் தரவில்லை. வரதட்சணை என்று மறைமுகமாகக் கொஞ்சம் நிதி பரிமாற்றம் நடைபெறுகிறது. மியூச்சுவல் ஃபண்டுக்கு எக்ஸ்பெக்டட் ரிட்டன் இருப்பது போல, திருமணம் என்கிற முதலீட்டில் குழந்தைகள், வீட்டின் ஸ்திரத்தன்மை, சமையல், மனைவி செய்ய வேண்டிய கடமைகள் போன்ற எதிர்பார்ப்புகள் இருக்கின்றன .

இந்தியத் திருமணங்களில் தங்கம் முக்கிய இடம் வகிக்கிறது. இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு தங்கத்திற்கு மதிப்பு ஏறி இருக்கும். ஆனால், அந்த வீட்டில் அந்தப் பெண்ணுக்கு இருக்கும் நிலைமையோ பிறரைச் சார்ந்து , திருமணத்திற்கு முன் இருந்த உடல் பலமும் குறைந்து, தன்னைப் பற்றிய சுய சிந்தனை துறந்து, தனக்காக நேரம் செலவழிக்காமல் முட்டி வலியோடு முனகிக்கொண்டே வீட்டு வேலைகளை முடித்து, பின் மாலையைத் தொலைக்காட்சி பெட்டியின் முன்னே கழித்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அடுத்த நாளுக்குத் தயாராகிக் கொண்டு கழிகிறது.

இதில் வேலைக்குப் போகும் பெண்ணின் வாழ்க்கையும் ஒண்ணும் பெரிய வித்தியாசம் இல்லை. இருவருக்குமே தன்னைப் பற்றிய மதிப்பீடு சரியாக இல்லை. இந்தச் சமூகம் கொண்டிருக்கும் பெண்களின் மீது அவர்கள் அழகு, குணம் பற்றிய மதிப்பீடுகள் அவர்களைக் குழப்புகின்றன. புதிதாக அறிமுகமாகும் அழகு சாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்து விளம்பரங்களும் பெண்களையே குறிவைத்துத் தாக்குகின்றன.

ஆணைப் பொறுத்தவரைத் திருமணம் நல்ல இன்வெஸ்ட்மென்ட். அதன் மூலம் அவனுக்கு ஏற்றபடி ஒரு வாழ்க்கைத் துணையும் சிறிது நிதியும் தன் பெயரை முதல் எழுத்தாகப் போட்டுக் கொள்ள ஒன்று, இரண்டு குழந்தைகள் வாரிசாகக் கிடைக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் எல்லாம் கைவிட்டுப் போனாலும் முதலுக்கு மோசமில்லாமல் அடுத்த அத்தியாயம் தொடங்கலாம்.

பெண்ணைப் பெற்றவர்களுக்குத் தங்கத்தைச் சேர்த்து வைப்பது இன்றியமையாத ஒன்று எனச் சமூகத்தில் எழுதப்படாத விதி. திருமணச் சந்தை தங்கத்தை முதலீடாக வைத்துப் பெண்ணை பை ப்ராடக்டாக (bye product) ஆக வைத்துள்ளது போல் சில சமயங்களில் தோன்றுகிறது.

அன்று குழந்தைத் திருமணங்களில் அறியாதவர்கள் அறிமுகமாகி அன்போடோ அன்பு இல்லாமலோ குடும்பம் என்கிற கட்டமைப்பைக் காத்து வந்தனர். ஒரு வீடு ஒரு வாசல் என்பது போல  வீட்டிற்குச் சம்பாதிப்பவர் கணவர். வீட்டைப் பார்த்துக் கொள்பவர் மனைவி (maintenance, HR). செலவுகள், முக்கியத் தேவைகள் ஓரளவு பொதுவானவை. (finance budget) மனைவிக்காக அவர் ஆசைக்காக எப்பொழுதாவது பணம் ஒதுக்கப்படும். அவருக்குப் பிடித்த சேலையை அவர் வாங்கிக் கொள்ளலாம். இதுவே குடும்ப பட்ஜெட். பிள்ளைகள் பிறந்த பிறகு பிள்ளைகள் வளர்ப்பு அவர்களைப் படிக்க வைப்பது போன்ற செலவு, சொந்த வீடு கட்டுவது ,பேங்க் லோனை அடைப்பது, இன்சூரன்ஸ் பாலிசி, பென்ஷன் இப்படித்தான் பணப்புழக்கம் .

ஆனால் இன்றைய திருமணங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். இருவர் ஏற்கனவே பெற்றோரின் முதலீட்டில் படித்து வேலைக்குப் போய், ஒருவேளை அவர்களுக்கு லோன் இருக்கலாம். அல்லது திருமணச் சமயத்தில் லோன் தேவைப்படலாம். அதை அடைக்க வேண்டிய பொறுப்பு தொடங்கி பொதுவான வீட்டு செலவுகள், வங்கி கணக்கு, வாகனம் எனப் பாதி கிணறு தாண்டிய இவர்களுக்குத் திருமணம் நடைபெறுகிறது . ஆணோ பெண்ணோ ஏற்கெனவே அவர்கள் ஒரு வாகனம் வைத்திருப்பார்கள். ஒரு வங்கிக் கணக்கு இருக்கும். கிரெடிட் கார்டு இருக்கும். அதில் அவர் சுபாவத்திற்கு ஏற்ப சேமிப்போ கடனோ இருக்கலாம் . இவையெல்லாம் திருமணத்திற்கு முன் வெளிப்படையாக யாரும் கேட்பதில்லை. சொல்வதில்லை.

திருமணம் என்று வந்துவிட்டால்  நாம் இன்னும் ஜாதகத்தை வைத்து, நல்ல நாள் பார்த்து ஆடம்பரச் செலவு செய்து பெண்ணிற்கும் நகை போட்டு ப்ரீ வெட்டிங்  ஷுட் (pre wedding photo shoot) என்கிற புது வகையான செலவுகள் செய்து  கேளிக்கைகளோடு நடைபெறும் திருமணத்தில் முக்கியக் கேள்விகள் எல்லாம் ஓரம் ஒதுக்கப்படுகின்றன. அந்தப் பெண் சம்பாதிப்பது அவளுக்காகவா அவளது கணவருக்காகவா சில சமயம் அந்தக் குடும்பத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அந்தச் சம்பளத்தில் ஒதுக்க வேண்டுமா, ஒரு மாத செலவு எவ்வளவு  இருக்கும்?  கடன் உண்டா? திருமணத்திற்கு அதிகம் செலவு செய்துவிட்டால் யார் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கட்டு முடிப்பது? அந்தப் பெண்ணின் சம்பளம் எவ்வளவு? அந்தக் கணவர் பாக்கெட்டுக்குள் போகுமா அல்லது அவளது வங்கிக் கணக்குக்குள் போகுமா என்பதெல்லாம் அந்தப் பெண்ணின் சாமர்த்தியத்தைப் பொருத்து இருக்கிறது.

பெண்கள் சாமர்த்தியசாலிகள்தான். ஆனால் திருமணத்தில் பல முடிச்சுகள் இருக்கின்றன. பெண்மை என்பதே விட்டுக் கொடுத்துப் போவதுதான் என்பது ஒரு முடிச்சு. கணவன் தான் தன்னைக் கடைசி வரை காப்பாற்றப் போகிறான் என்பது இரண்டாவது முடிச்சு. கணவரின் இன்பத் துன்பங்களையும் சேர்த்தே அவள் மணந்து கொள்கிறாள். இப்படிக் காலத்திற்கேற்ப பல கேள்விகள் வெளிப்படையாகப் பேசப்படாமல் வெறும் தங்கம் சொந்த வீடு இருக்கிறதா என்று பழைய காலம் போல டிகிரி படித்த மாப்பிள்ளை நல்ல சம்பளத்தில் நல்ல கம்பெனியில் வேலை செய்கிறார் என்பது மட்டுமே தலைப்புச் செய்திகளாக இருக்கும் சில இடங்களில் தடுமாற்றம் காண்கிறது. அவருக்கு எந்த விஷயத்துக்காகச் செலவு செய்ய வேண்டும். அப்படிச் செலவுகள் செய்த பின் எண்ணம் இன்றும் இரண்டு பேருக்கும் எது முக்கியமான செலவு எது முக்கியமான தேவை என்பதில் ஒத்த கருத்து இருக்கிறதா என்பதெல்லாம்விடக் கல்யாணம் எவ்வளவு விமர்சையாக நடக்க வேண்டும், எந்த மண்டபத்தில் நடக்க வேண்டும், எந்த போட்டோகிராபர் வைக்க வேண்டும் என்பதெல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. பின்னாளில் நினைத்துப் பார்க்கும்போது வேதனைக்குரியதாக அமையலாம்.

அப்போது பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணமே வேண்டாம் என்று சொல்லவில்லை. ஓரளவு அனுபவம் பெற்ற பெண்ணை சுயமதிப்போடு நடத்த தடைகள். அவள் விடுதலை உணர்வோடு வாழ்வைத் தொடர அவளுக்கு அவள் கைக்கு மட்டுமே எட்டக்கூடிய நிதி இருக்க வேண்டும் .

 ஒரு குடும்பத்துக்கான எமர்ஜென்சி ஃபண்டை (emergency fund) பற்றிப் பேசும்போது ஒரு குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை சரியில்லா விட்டால் மருத்துவமனைச் செலவிற்கு ஒருவரின் சம்பளப் பணத்தை விட மூன்று மடங்கு அல்லது ஆறு மடங்கு பணம் வங்கியில் சேமிப்பாக ஃபிக்சட் டெபாசிட் ஆக இருக்க வேண்டும். அப்பொழுது எதிர்பாராத விபத்து அல்லது மருத்துவச் செலவு ஏற்பட்டால் அதைச் சமாளித்து மீண்டு வர முடியும் என்று கூறப்படுகிறது.

ஆனால் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை இதற்கு வேறு அர்த்தம் இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் நிபுணரானவர் இவர் பெண்களுக்கான எமர்ஜென்சி ஃபண்டுக்கு இப்படி விளக்கம் தருகிறார். இது பெண்ணுக்கு ஏன் முக்கியம் என்றால் அவருக்குப் பிடிக்காத உறவு அவரைக் கொடுமைப்படுத்தும் கணவரிடம் இருந்து குடிகாரக் கணவனிடம் இருந்து அல்லது உடல் அளவு துன்புறுத்தும் உறவுகள் இடம் இருந்து பிரிந்து தன்னை நிலைப்படுத்திக் கொள்ள இந்த எமர்ஜென்சி கண்டு உதவும் என்று கூறுகிறார் இதைப் பெண்களின் பெற்றோர்கள் உணர வேண்டும்.

பெண்கள் புத்திசாலித்தனமாகத்தான் தங்க நகைகளை அணிந்து கொண்டிருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஏனென்றால் பெண்ணுக்கு உடனடியாகக் கையில் கிடைக்கக்கூடியது தங்க நகைகள், அவள் பெயரில் வங்கிக் கணக்கு அல்லது மற்ற வகையில் பணம் இல்லாத  நிலையில் தங்கம் அவளுக்குத் துணை நின்றது. அதை எப்பொழுதும் விட்டு விட வேண்டாம் என்று பெண்கள் இறுகப் பற்றியுள்ளோம்.

ஆனால் தொடர்ந்து இதே மட்டும் செய்து வர முடியாது, தங்கம் மட்டுமே காப்பாற்ற முடியாது பிற வகைகளிலும் நமது முதலீடு பறந்து விரிந்து இருந்தால் பெண்ணின் பெருந்தக்க யாவுள என்பது உண்மையாகும்.

படைப்பாளர்:

தென்றல். சென்னையில் பணிபுரியும் கதிரியக்க மருத்துவர். வாசிப்பில் நாட்டம் கொண்டு புலனங்களில் புதுக்கவிதை எழுத ஆரம்பித்து வளரி கவிதை இதழின் பொறுப்பு ஆசிரியர் மற்றும் பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பின் தலைவராகவும் இலக்கிய உலகில் அடி எடுத்து வைத்திருக்கிறார். 2023இல் வளரி எழுத்துக்கூடத்தின் மூலம் ’பெண் எனும் போன்சாய்’ கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.