“அம்மா… பாரும்மா நந்து இன்னும் தூங்குறான்…” என்று பெரியவன் குரல் கொடுக்க, “நந்து… நந்துக்குட்டி எழுந்து வா…” என்று சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்து பெயருக்குக் குரல் கொடுத்துவிட்டு, சமையலைத் தொடர்ந்தேன். அவனிடம் போனால் வேலை முடியாது, எல்லாம் மறந்து, கொஞ்சலில்தான் முடியும்.

” நேரமாச்சு, பாதி சமையல் கூட முடியல… சீக்கிரம் தேங்காய அரைச்சி குடுப்பா…” என்று அருகிலிருந்த சிவாவிடம் கேட்டேன்.

” கொஞ்சம் சீக்கிரம் எழுந்தால் என்ன? கடைசி நேரத்துல எங்கிட்ட கத்தினா?” என்று மிக்சி சத்தத்துக்கு இணையாக அவரும் கத்த, பாதி புரிந்தும், புரியாததுமாக அவரை முறைப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. ஒரு ரிசர்ச் ஆர்ட்டிகல் எழுதும் வேலை ஒரு வாரமாக இழுத்துக் கொண்டிருக்கிறது. கல்லூரியில் வகுப்பைத் தாண்டி எதையும் யோசிக்க முடியவில்லை. இரவு கண்விழித்தால்தான் கொஞ்சமாவது கட்டுரையில் முன்னேற்றம் ஏற்படும்.

“நைட் படுக்கும் போது மணி 12:30, காலை எழுந்தது 5:30 மணிக்கு. இன்னும் எவ்வளவு சீக்கிரம் எழுந்திரிக்கணும் சார்?” என்று கேள்வியையே பதிலாகக் கேட்டேன்.

” எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கிட்டு என்கிட்ட எகிறுனா?” என்பது எப்போதும் போல் சாரின் பதில். அடுத்த பாயிண்ட்டை நான் எடுப்பதற்குள், “இன்னும் உன் செல்லப்பிள்ள எழுந்திரிக்கல…” என்றார்.

“அவன எழுப்புங்கப்பா.”

” ஐயோ என்னால முடியாது… குழம்பை நான் பார்த்துக்குறேன். நீ போய் எழுப்பு.”

கடுப்புடன் கரண்டியை அவர் மண்டையில் போடுவதாக நினைத்துக் கொண்டு, தரையில் நொங்கென்று வைத்தேன்.

“நந்துகுட்டி, இன்னும் என்னடி தூக்கம்? மணி ஏழாகுது” என்று கொஞ்சிக் கொண்டே தூக்கினேன். கொஞ்சம் கோபம் குரலில் தெரிந்தாலும் சாருக்கு மூட் ஆஃப் ஆகிவிடும். அப்புறம் அவர் எழுந்து பள்ளிக்குக் கிளம்புவது உன்னைப் பிடி, என்னைப் பிடிதான். என் குரல் கேட்டபோதே தலைவர் எழுந்துவிட்டார். ஆனால், கண்ணைத்தான் திறக்கவில்லை. நான் வருவதைப் பார்த்ததும் கண்ணை மூடியிருப்பான் வாலு. “செல்லக்குட்டிக்கு என்னாச்சு…எப்பவும் சீக்கிரம் எழுந்திடுவாரே… இன்னைக்கு என்னாச்சு?” என்று கன்னத்தில் ஒரு முத்தம் தந்ததும் சுவிட்சைப் போட்டதுபோல் கண்ணைத் திறந்து, உடனே வாயும் திறந்தார்.

” அம்மா இன்னைக்கு என்னை ஸ்கூல்ல இருந்து நீ கூட்டிட்டு வரீயா?”

” என்ன தங்கம், திடீர்னு? எப்பவும் உங்க கிரஷ் மிஸ்தானே ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வருவாங்க! நீயும் ஃபிரண்ட்ஸ் கூட ஜாலியா வருவ.”

” நான்தான் தினமும் மிஸ் கூட வரேனில்ல… இன்னைக்கு நீ கூட்டிட்டு வந்தா என்னவாம்?”

“இல்ல கண்ணா…உன்ன ஸ்கூல்ல இருந்து கூப்பிடணும்னா பர்மிஷன் போடணும். அது இன்னைக்கு முடியாது செல்லம். அம்மா இன்னொரு நாள் சீக்கிரம் வந்து கூட்டிட்டு வரேன், சரியா?”

“அதெல்லாம் முடியாது, இன்னைக்கே கூட்டிட்டுவா. எல்லா அம்மாவும் தினமும் கூட்டிட்டுப் போறாங்க, ஒருநாள் கூட்டிட்டு வரமாட்டியா?”

எதைச் சொன்னால் நான் உருகிடுவேன் என்று அவனுக்குத் தெரியும்.

” சும்மா சொல்லாதே… டூ வீக்ஸ்க்கு முன்னகூட நான் வந்தேனில்ல?”

“அப்ப இன்னைக்கும் வா.”

” சும்மா கடுப்பேத்தாத நந்து, சீக்கிரம் எழுந்து வா. நேரமாகுது, பஸ் போயிடுச்சுன்னா, அப்புறம் அவ்வளவு தூரம் வண்டிலதான் போகணும்.”

“எதுக்கு காலைலேயே அவன்கூட மல்லுக்கட்டறே? அம்மா வருவா. நீ எழுந்து கிளம்பு.” – அப்பா புள்ளையைச் சமாதானம் செய்கிறாராம்!

“சும்மா ஏதாவது சொல்லி ஏத்திவிடாதப்பா. அப்புறம் பிடிச்சா விடமாட்டான். ரொம்ப அக்கறை இருந்தா நீங்க சீக்கிரம் வந்து உங்க புள்ளைய கூட்டிட்டு வாங்க.”

“ஐயோ, சாயந்திரம் நிறைய வேலையிருக்கு. லேட்டாகும்.”

“அப்ப வாய மூடிட்டிருக்கணும்” என்று பேச்சு அடுத்த கட்டத்திற்கு நகர உதவியாக, “நீ வரலனா நான் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்” என்று கத்த ஆரம்பித்தான்.

“ரொம்பக் கோவப்படுத்துற நந்து. ரெண்டு வச்சாதான் அடங்குவ” என்று கத்தியவளைக் கண்டு குழந்தை அரண்டுதான் போனான். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த சிவா, “சரி, அவன நான் பார்த்துக்குறேன். நீ கிளம்பு” என்றார்.

“எதாவது பண்ணுங்க. இன்னைக்கு பஸ்ஸைப் பிடிக்க வாய்ப்பே இல்ல” என்ற கடுப்புடன் கிளம்ப ஆரம்பித்தேன். முதல் அவர் கிளாஸ் முடிந்து டிபார்ட்மென்ட் வந்து போனை எடுத்துப் பார்த்தால் இரண்டு மிஸ்டு கால். சிவாதான், பார்த்ததும் ஒருவிதப் பதற்றம். உடனே கால் செய்தேன். எடுக்கவில்லை. மனதில் ஏதோ ஒரு குழப்பம்.

காலையில் நடந்த களேபரத்தில் பஸ்ஸை விட்டுவிட்டேன். வேறு வழியில்லாமல் டூவிலரிலேயே காலேஜ் வந்தேன். 25 கிலோமீட்டர். ஒரு நிமிடம் தாமதத்தால் பஸ்ஸை விட்டுவிட்டால், போக வர இரண்டு மணிநேரம் ஸ்கூட்டர் ஓட்ட வேண்டும்.

இருவரும் வேலைக்குச் செல்கிறோம் என்றாலும் முதலில் கிளம்புபவள் நான்தான். எனக்குப் பிறகு ஒரு மணி நேரம் கழித்துப் பெரியவர், அடுத்த அரை மணிநேரத்தில் சிறியவர் பள்ளிக்குக் கிளம்புவார். இருவரையும் கிளப்பி அனுப்பும் பொறுப்பு சிவாவுக்குதான். நான் கிளம்பும்போது சமையல் மட்டும் முடிந்திருக்கும். பிள்ளைகளை அனுப்பிய பிறகு அவர் கிளம்ப வேண்டும். பிள்ளைகளின் பள்ளி வீட்டுக்கு அருகில் இருப்பதும், காலை கோர்ட் வேலைக்கு 10 மணிக்கு மேல் போனால் போதும் என்பதும் கொஞ்சம் ஆறுதலான விஷயம். ஆனால், சிட்டி கோர்ட்டுக்குப் போகும் நாட்களில் அவருக்குக் கூடுதல் பிரஷர். போன் அடித்தது. சிவாதான்.

“என்னாச்சு கரெக்டா போயிட்டியா?”

“வந்திட்டேன்பா… பஸ் பிடிக்க முடியல… வண்டிலேயே வந்துட்டேன்.”

“சரி விடு. இனி சீக்கிரம் கிளம்புற வழியப் பாரு. அப்புறம் ஈவ்னிங் சீக்கிரம் வந்து நந்துவ கூப்பிட்டுக்க. ரொம்ப அடம்பிடித்தான். ஒரு நாள்தானே?”

“ஏம்ப்பா நீங்களும் புரியாம பேசுறீங்க? முடிஞ்சா பர்மிஷன் போட மாட்டேனா? லாஸ்ட் அவர் கிளாஸ் இருக்கு. பர்மிஷனெல்லாம் போட முடியாது. போன தடவையும் இப்படித்தான் கேட்டான், சரின்னு போய்க் கூட்டிட்டு வந்தேன். இன்னைக்கும் அடம்பிடிக்குறான். அதுவும் இன்னும் ஜாஸ்தியா. சும்மா அவன என்கரேஜ் பண்ணாதீங்க.”

“சரிம்மா இந்த முறை மட்டும்.”

“இல்லப்பா வாய்ப்பே இல்ல. கிளாஸ்க்கு டைமாகுது. பை.”

போனை கட் செய்வும், ஷர்மிளா கிளாஸ் முடிந்து டிபார்ட்மெண்ட் வரவும் சரியாக இருந்தது.

“ஹாய் மேம், கிளாஸ் போகல?”

“இதோ கிளம்பிட்டேன்.”

“என்ன காலையிலேயே டென்ஷன்?”

” அதெல்லாம் ஒண்ணுமில்ல. காலையில வீட்ல ஒரு பஞ்சாயத்து. இப்ப அதன் தொடர்ச்சி.”

” என்னாச்சு?”

“வந்து சொல்றேன்” என்று கிளம்பினேன்.


திருமணமும் கல்லூரியில் விரிவரையாளராகப் பணியில் சேர்ந்ததும் ஒரே காலகட்டத்தில்தான். திருமணம் முடிந்து ஒன்றரை வருடத்தில் பெரியவன் பாரதி பிறந்தான். குழந்தையை மாமியார் பார்த்துக் கொண்டதாலும், பெரிய கமிட்மெண்ட் இல்லாததாலும் சுமூகமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அடுத்த குழந்தை ஆசை இருந்தாலும், சமாளிக்கப் பயந்து தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தோம். இடையில் நாத்தனாருக்கும் குழந்தை பிறக்கவே, மாமியார் மறுபடியும் பிஸியாகிட்டார்.

ஏழு வருடங்களுக்குப் பிறகு இந்த நந்து பிறந்தான். முதலில் கொஞ்சம் பயந்தாலும் பிறகு ரொம்ப ஆர்வத்துடன் அடுத்த குழந்தையை எதிர்பார்த்தோம். பிறக்கப் போவது தம்பிதான் என்று அண்ணன் பாரதி உறுதியாக நம்பினார். அப்படியே தம்பியும் பிறந்தார். நீண்ட இடைவெளியில் ஒரு குழந்தை, அவன் சேட்டைகளில் மகிழ்ந்த, திளைத்த காலம் அது. பிரசவகால விடுமுறை முடிந்து, கல்லூரி செல்லும் நாள் நெருங்க நெருங்க பதற்றம் தொடங்கியது. மாமியாரால் தனியாகக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியாத சூழ்நிலை, குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆள் அமர்த்தியும் சரிவரவில்லை. கொஞ்ச நாட்கள் குழந்தையை அம்மா வீட்டில் விட்டிருந்தோம். அதுவும் தொடர முடியவில்லை.

ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போவதே கேள்விக் குறியாக ஆனது. ஒரு வயதேயான குழந்தையைக் காப்பகத்தில் விடுவது என்னும் முடிவு சாதாரணமானதில்லை. நன்கு விசாரித்து, வீட்டுக்கு அருகில் ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுத்தோம். கல்லூரிக்கு லீவு போட்டு குழந்தையுடன் முதல் சில நாட்கள் போய் வந்தேன். அவனை அங்கு விட்டுட்டு வரும்போது குழந்தை அழுவதைப் பார்க்க முடியாது.

அந்தக் கஷ்டத்தையெல்லாம், என்னைவிட சிவாதான் அதிகம் அனுபவித்தார். குழந்தையைக் குளிக்கவைத்து, உணவு தந்து, முதலில் நான் கல்லூரிக்குக் கிளம்பிவிடுவதால் அவர்தான் அவனை கிரஷில் விடவேண்டியிருந்தது. தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை பேபி கேரியர் பேக்கில் அணைத்தவாறு வண்டியில் கொண்டுவிடுவாராம். நான் வருத்தப்படுவேன் என்று அவர் என்னிடம் சொன்னதில்லை.

அக்கம்பக்கத்தில் உள்ள பெண்கள் என்னிடம், “நீயெல்லாம் ஒரு அம்மாவா? குழந்தையைவிட உத்யோகம், பணமா முக்கியம்?” என்று கேட்டார்கள்.

“உன் புள்ள கிரஷ் போற அழகை நீ பார்க்கணுமே… என்னென்ன பேக் பண்ணணும்னு அவர் லிஸ்ட் போடறதும், பள்ளிக்கூட வாசலுக்குப் போவதற்குள் பையை எடுத்துக் கொண்டு, நீ போப்பா என்று பெரிய மனித தோரணையோடு ஆயாவுடன் போவதும் அடடா… ஒருநாள் லீவு போட்டு பார்!” என்பார்.

மாலை குழந்தையைக் கூப்பிடப் போனால் லேசில் வரமாட்டார். ஆயாக்களுக்கு உதவி செய்வார். கிரஷுக்குள் போனதும் இவர் பெருமைகளை, அன்று இவர் செய்த சேட்டைகளைச் சொல்வார்கள். கேட்க கேட்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். சிறிது காலத்தில் பள்ளியிலும் சேர்த்துவிட்டோம்.


சமீபகாலமாகச் சிறு மாற்றம் காணமுடிந்தது. அதிலும் இன்று நடந்தது அதீதம். என்ன பிரச்னை என்று பிடிபடவில்லை.

கிளாஸ் முடிந்து வருவதற்குள், ஷர்மிளா, சுனிதா, ராகவன் எல்லோரும் வகுப்பு முடித்து ஏற்கெனவே திரும்பியிருந்தார்கள்.

என்ன பிரச்னை என்று ஷர்மிளா ஆரம்பிக்க, நடந்ததை விவரித்தேன்.

“நந்து கிரஷுக்கு ரொம்ப ஜாலியா போவான்னுதானே சொல்லுவீங்க… என்ன திடீர்னு?”

“தெரியல. கேட்டாலும் பெருசா ஒண்ணும் சொல்லல. அடிக்கடி, நான் வந்து ஸ்கூல்ல இருந்து அழைத்துப் போகணும்னு கேட்குறான். இன்று ரொம்ப அடம், ரொம்ப திட்டிட்டேன்.”

சுனிதா ஏதோ யோசித்தவளாய், “கிரஷுல யாராவது புது ஆட்கள் சேர்ந்திருக்காங்களா?”

“ புதிதாக ஒரு கல்லூரி மாணவி சேர்ந்திருக்காங்க. காலையிலிருந்து மதியம் வரை பிளே ஸ்கூல் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தர உதவியா இருக்காங்க. மாலை அபாகஸ், இந்தி சொல்லித் தர ரெண்டு ஆசிரியர்கள் ஒரு ஆண், ஒரு பெண் வராங்க. நந்துகூட அவன் ஃபிரண்ட்ஸ் ஹிந்தி டியூஷன் சேர்ந்திருக்காங்க, நானும் சேரப்போறேன்னு கேட்டான். இப்பதானே ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்டு படிக்குற, அப்புறம் சேருன்னு சொன்னேன். முடியாது என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் டியூசன் படிக்குறாங்க, நானும் போறேனு அடிம்பிடிச்சு சேர்ந்தான். ஏன் கேட்குறீங்க?”.

” மேம், ஏதேதோ கேள்விப்படறோம். கொஞ்சம் கவனமா இருக்குறது தப்பில்லையே.”

“என்னங்க பயமுறுத்துறீங்க?”

“குழந்தைகளை அம்மா, தாத்தா, பாட்டினு வளர்க்கணும்” என்று ராகவ் சொன்னார்.

”பொறுமையா அவனிடம் பேசி, பிரச்னையைத் தெரிஞ்சுக்கோங்க” என்றாள் ஷர்மிளா.

” அது முடியாதே, லாஸ்ட் அவர் கிளாஸ் இருக்கு..”

” அட, நான் பார்த்துக்குறேன். கிளம்புங்க.”

கொஞ்சம் நிம்மதியோடு வண்டியை ஸ்டார்ட் செய்தேன். நல்ல வெயில், டிராஃபிக் வேறு. அவன் வகுப்பு தேடிப் போவதற்குள், அவன் ஹிந்தி மிஸ் கையைப் பிடித்துக் கொண்டு, அவன் தோழர்களுடன் கதைப் பேசிக்கொண்டு வந்துகொண்டிருந்தவனை உற்றுப் பார்த்தேன். என்னைத் தேடுவதாகவே தெரியவில்லை. ஏமற்றமாக இருந்தது . அவர்கள் அருகில் சத்தமில்லாமல் நின்றதும் நந்துக் குட்டி முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிய, எதற்கோ உற்சாகமாகக் கத்தப் போனவன் அவங்க மிஸ் அருகில் இருப்பதை பார்த்ததும் அடக்கி வாசித்தான். என்னை பார்த்ததும் புன்னகைத்த மிஸ்,
“என்ன மேம், இன்னக்கி சீக்கிரமா?” என்றாள்.

நந்துவை பார்த்துக்கொண்டே, “ஆமாம், இன்னும் சீக்கிரம் வரணும்னு நினைத்தேன்.கொஞ்சம் லேட்டாயிடுச்சு. கூட்டிட்டுப் போகவா?.

“ஷ்யூர்.”

உற்சாகமாக வண்டியில் ஏறப் போனவர் ஐஸ்கிரீம் கேட்டார். ஐஸ்கிரீம் சாப்பிட்டவாறே வண்டியில் ஏறி உட்கார்ந்தார். இதுதான் நேரம் என்று வண்டியோட்டிக் கொண்டே, ”ஏன் தங்கம், அம்மாவ இன்னக்கி சீக்கிரம் வரச் சொன்ன? ஸ்கூல்லயிருந்து கூப்பிடச் சொல்லி அடம்பிடிச்ச? நீதான் குட் பாயாச்சே… எப்பவும் இப்படி அடம்பிடிக்க மாட்டீயே. கொஞ்ச நாளா சீக்கிரம் வந்து கூட்டிட்டுப் போகச் சொல்றே? வேற கிரஷ் பார்க்கலாமா?” என்று கேட்டேன்.

” என் ஃபிரண்ட்ஸ், மிஸ் விட்டு எங்கேயும் போக மாட்டேன்.”

” அப்ப ஏண்டா இன்னக்கி இவ்வளவு அடம்?”

” இல்லம்மா, இன்னக்கி ஹிந்தி டெஸ்ட். படிக்க மறந்ததுட்டேன். அதான் லீவு போட்டுடுலாம்னு உன்ன வரச் சொன்னேன்” என்றான்.

அதிர்ச்சியில் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளிடம், ”டியூசன்ல கூடவா டெஸ்ட் வைப்பாங்க? ஒரே போர்” என்று கைகளில் வழியும் ஐஸ்கிரீமை நக்க ஆரம்பித்தான். எனக்கு ஒரேஒரு குழப்பம்தான்… அவன் கன்னத்தைத் திருகலாமா, கடிக்கலாமா?


படைப்பாளர்

முனைவர் அ.வெண்மணி

ஒரு தனியார் கல்லூரியில் புள்ளியியல் துறையில் துணைப் பேராசிரியராக பணிபுரியும் முனைவர் அ.வெண்மணி, 20 ஆண்டுகாலமாக கல்விப்பணியில் தொடர்கிறார். கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளைத் தாண்டி, கலை, இலக்கியச் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர். மாணவர் பருவத்திலிருந்தே சமூகச்செயல்பாடுகளில் தீவிரமாக செயல்பட்டுவரும் இவர் தற்காப்புக்கலை, நடனம் முதலியவற்றில் முறையான தேர்ச்சிப்பெற்றவர். சமூக ஊடகங்கள், புத்தகம், குறும்படம், சினிமா, அரசியல், தோட்டக்கலை, பயணம் போன்ற விஷயங்களில் ஆர்வத்துடன் செயல்படும் இவர் ஒரு புதுமை விரும்பி!