எத்தனையோ துன்பப்பட்டு பெண்களுக்கான கல்வி முன்னோக்கி நகர்ந்து வந்துள்ளது. அப்படியும்கூடப் பெண்கள் உயர் கல்வியைப் பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இன்றும் கல்வி கற்பதற்கு ஒரே மாதிரியான வாய்ப்புகள் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. கிராமம், நகரம், குடும்பச் சூழல் எனப் பல வகையான வேறுபாடுகள் போன்ற விலங்குகளை எல்லாம் அறுத்தெறிந்த பிறகுதான் பள்ளிக்குள் நுழைகின்றனர்.

அவ்வாறு பள்ளிக்குள் வந்த பிறகு அவர்கள் பல்வேறு விதமான கல்வி மறுக்கப்படும் சூழலுக்கு உள்ளாகிறார்கள். பொதுவாகவே இருபால் குழந்தைகளுக்கும் இது போன்ற கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படும் பிரச்னைகளைக் காணலாம். குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்குக் கூடுதல் பிரச்னைகள். அவர்களுக்கான கல்வி வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக அரசு ஊக்கத் தொகை கொடுக்கக்கூடிய திட்டங்களை எல்லாம் தற்போது கொண்டு வந்துள்ளதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், பெண்களுக்கான கல்விச்சூழல் பள்ளிகளில் எவ்வாறு உள்ளது என்பது ஆய்வுக்குரியதே.

கல்விச் சூழலில் குழந்தைகள் சந்திக்கும் ஏராளமான பிரச்னைகளை நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். கற்றல் சூழல் அவர்களுக்கு ஏதுவாக இல்லை. அது குறித்துப் பொதுவாக ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என்று பார்க்காமல் குழந்தைகள் என்று நாம் எடுத்துக்கொண்டால், கல்வி என்பது குழந்தைகளுக்கான கல்வியாக இருக்கிறதா என்று நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

யாருக்கான கல்வியை நாம் தருகிறோம் என்று தெரியவில்லை. மதிப்பெண்கள் சார்ந்து இயங்கக் கூடிய கல்வி முறையால் தான்  நாம், அனிதா என்ற மாணவியை நீட் தேர்விற்கான பலியாக இழந்தோம். மருத்துவம் படிக்கும் கனவுடன் இருந்த அனிதா பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அவரால் நீட் தேர்வு காரணமாக பயம் ஏற்பட்டு, தற்கொலை செய்துகொண்டதை மறக்கவே முடியாது.

அதேபோல லாவண்யா என்ற மாணவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதியில் தற்கொலை செய்துகொண்ட செய்தியை ஊடகங்கள் செய்தியாக்கி வந்தன. அங்கேயும் முன் நிற்பது மதிப்பெண்கள் தாம். குறைந்த மதிப்பெண்கள் பெற்றுவிடுவோம் என்ற காரணத்திற்காக இறந்தார் என்று அவருடைய வாக்குமூலத்தில் குறிப்பிட்டதாகச் சொன்னார்கள்.

அவற்றை எல்லாம் நாம் புறந்தள்ளிவிட முடியாது. அனிதாவைப் போலவும் லாவண்யாவைப் போலவும் மன உறுதி இல்லாத குழந்தைகளை, பயம் தின்னும் குழந்தைகளை, வாழ்வியல் திறன் மேம்படாத குழந்தைகளை அல்லவா இந்தக் கல்வி முறை உருவாக்குகிறது என்பதிலிருந்து ஆரம்பிப்போம்.

குழந்தைகளுக்கான கல்வி இங்கு முழுமையாகத் தரப்படுகிறதா? அதற்கு ஏராளமான ஆய்வுகள் நடத்த வேண்டியிருக்கிறது. நமக்குக் கிடைக்கும் பதிலில் எதிர்மறை பதில் தான் பெரும்பாலானதாக இருக்கும்.

பெற்றோருக்குப் பொறுப்பு இல்லையா என்று கேட்டோம். இப்போது துறைக்கும் அரசுக்கும் வெகுவாகப் பொறுப்பு உள்ளதைச் சுட்டிக் காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 24 ஆம் தேதி பத்தாம் வகுப்பு கணிதப் பொதுத் தேர்வு நடைபெற்றது . அதில் கவனம்கொள்ளாமல் அல்லது திட்டமிட்டு கவனிக்கத் தவறிய அம்சங்களைக் காண முடிகிறது.

ஏற்கெனவே குழந்தைகள் இரு வருடங்களாகப் பள்ளிக்கு வராமல் கற்றல் இடைவெளியில் அதிகமாக இருந்த சூழல். எட்டாம் வகுப்பு அவர்கள் சரியாகவே படிக்கவில்லை. ஒன்பதாம் வகுப்பிலோ பள்ளிக்கே வரவில்லை. புத்தகங்களையே பார்க்காத குழந்தைகள் தாம் பெரும்பாலும் அரசு பள்ளிகளில் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் மனதில் வைத்து ஒரு வினாத்தாள் தயாரிப்பு செய்யாமல் தேர்வு என்பது வடிகட்டுதல், உனக்குக் கணக்குப் பாடம் தேவையா, நீ இதை விட்டுப் போக வேண்டும் என்று வெளியேற்றும் விதமாக, மிகவும் கடினமான ஒரு வினாத்தாளைத் தயார் செய்திருந்தனர், கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள் .

இதில் நாம் என்ன புரிந்துகொள்வது?

அடிப்படைப் புரிதலன்றி குழந்தைகளுக்கான கல்வியாக இல்லாமல், தங்களுடைய மேம்பட்ட அறிவைக் காட்டுவதாக வினாத்தாள் தயாரிப்புக் குழுவினர் இருந்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

யாரின் நலனுக்காகத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன? குழந்தைகளுக்காகவா அல்லது இது போன்ற ஆசிரியர்களின் திறமைகளை மெச்சவா?

Portrait of happy teens looking at camera with smiles

இதைக் கல்வித்துறை ஆராய வேண்டும். இது ஒரு சாதாரண விஷயமல்ல. தேர்வு பயம் என்பது எத்தனை தூரம் கொடியது என்பதைத் தான் அனிதாவின் மரணம் திரும்பத் திரும்ப நமக்குக் காட்டுகிறது. எனில் ஓர் அனிதாவுக்கு மட்டுமல்ல, எத்தனை லட்சம் குழந்தைகள் படித்தாலும் அனைவருக்குமே மனதில் தேர்வு குறித்த பயம் உள்ளது. அப்போது நம் கல்வி முறையை மாற்ற வேண்டிய தேவை உள்ளது. குழந்தைகளுடன் பேச, உரையாட, அவர்களுக்குப் பிடித்தமானவற்றைச் செய்ய ஏதுவான சூழலை அமைக்க வேண்டும். அப்படியான கல்விச்சூழல் நம்மிடம் இருக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.

அத்தனை வருடப் படிப்பில் அனிதாவுக்காக ஒரே ஓர் ஆசிரியர் மனம் திறக்கும் அளவிற்கு இருந்திருந்தால் இப்படியான ஒரு மரணம் நிகழ்ந்து இருக்குமா என்பது நமது ஐயம்.

அதேபோல லாவண்யாவை எடுத்துக்கொண்டால் அப்பள்ளியில் நல்ல மதிப்பெண் பெறக்கூடிய ஒரு மாணவி விடுதியில் தங்கிப் படிக்கிறார். அவருக்காக தோழியோ அல்லது ஆசிரியரோ இல்லாமல் போய்விட்டனரா? அப்படியான சூழலைக்கூடவா இன்றைய கல்விச் சூழல் தரவில்லை என்பது நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று.

எனில், நம்பிக்கையற்ற மனநிலையையும் தோற்றுப் போய்விடுவோம் என்ற மனப்பான்மையும் விதைக்கும் கல்வி முறையாக இருப்பதற்கு இவர்கள் இருவரையும் உதாரணமாகக் கூறலாம். இது இவர்கள் இருவருக்கு மட்டுமல்ல, மொத்த தமிழ்நாட்டின் பள்ளிக்குழந்தைகள் அனைவருக்குமான ஒரு மனநிலை.

கல்வி என்பதைத் தேர்வாகவும் தேர்ச்சி மதிப்பெண்ணாகவும் வேலைக்கான ஓர் ஆயுதமாகவே கவனிக்கிறார்களே ஒழிய, கல்வி என்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அல்லது ஒவ்வொருவரும் தங்களை வளர்த்துக்கொள்ள, இந்தச் சமூகத்திற்கு உகந்த மனிதராக வாழ உங்களைத் தகவமைத்துக்கொள்ள உதவக்கூடிய ஒரு சாதனம் என்று இங்கு குழந்தைகளுக்குச் சொல்லித்தரப்படவே இல்லை என்பதுதான் உண்மை.

கல்வியின் முக்கியத்துவத்தையும் அல்லது கல்வி கற்க வேண்டிய அவசியத்தையும் குழந்தைகளுக்குத் தராமலேயே, பெற்றோரின் மீதும் குழந்தைகள் மீதும் குற்றம் சொல்வதும், அவர்கள் சரியில்லை என்று பொதுவாகப் பேசுவது அர்த்தமற்றவை. அரசிடம் குழந்தைகளுக்கான ஒரு நல்ல கல்வித்திட்டம் இருக்க வேண்டும். ஏராளமான பணம் செலவழிக்கும் திட்டங்களாக இல்லாமல், குழந்தைகளை அடிப்படையிலிருந்து சிந்திக்கத் தூண்டக்கூடிய, மகிழ்ச்சியாகக் கற்கக்கூடிய ஒரு கல்வித்திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் .

அதற்கு கல்வித் துறையும் அரசும் ஆசிரியர்களும் கல்வி மீது ஆர்வம் கொண்டவர்களும் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் நமக்குப் பொருளுள்ள ஒரு கல்வித்திட்டம் கிடைக்கும். அரசுக்கு மிகுந்த பொறுப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு ஆளுமை பண்புகளும் வளரவில்லை, அறிவும் வளரவில்லை, சிந்தனைத் திறனும் வளரவில்லை, வாழ்வியல் திறனும் வளரவில்லை. இப்படி எதுவுமே வளராத ஒரு கல்வி முறையை நாம் தொடர்ந்து அழுத்தமாகக் கொடுத்துக் கொண்டிருப்பது வெறும் பாடப் பொருளை மட்டுமே அடிப்படையாக கொண்டு, திரும்பத் திரும்ப அவர்களைத் துன்புறுத்துவது என்பது தான், இது ஒரு மிகப் பெரிய வன்முறை.

ஆகவே பெற்றோருக்குப் பொறுப்பு உளதைப்போல, அரசுக்கும் நல்லதொரு கல்வியைக் குழந்தைகளுக்கும் வழங்க வேண்டும் என்ற புரிதல் வேண்டும். அதற்காக ஏராளமான தொடர் பணிகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது.

அதற்கு ஆசிரியர்களும் ஏராளமான செய்திகளை, உண்மை நிலவரங்களை, கல்வித் துறையிடம் தெரிவிக்க வேண்டியத் தேவை இருக்கிறது.

கல்வித்துறைக்குச் சொல்ல வேண்டிய, உணர்த்த வேண்டிய, கல்வித்துறை சார்ந்த, ஆர்வமுள்ள, கல்வி சார்ந்து இயங்குபவர்கள், சமூகத்தின் வளர்ச்சியில் ஆர்வமுள்ளவர்கள் என எந்தத் தரப்பிலிருந்தும் அரசுக்குப் பரிந்துரை செய்யலாம். அரசும் கல்வித்துறையும் இணைந்து கல்வியில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அனிதாக்களையும் லாவண்யாக்களையும் போல இல்லாமல் சிந்திக்கக்கூடிய தைரியமான மாணவர்களை உருவாக்கிட, எதிர்காலச் சமுதாயமும் வளம்பெற வைக்க முடியும்.

இல்லை என்றால் குழந்தைகள் மீது குறை சொல்லிக்கொண்டு, அவர்கள் உருப்பட மாட்டார்கள், அவர்களைத் திருத்த முடியாது என்று வசை பாடிக்கொண்டே இந்தச் சமூகத்தை அழித்துவிடும் சூழலில் தான் நாம் தள்ளப்படுவோம். ஆகையால் முக்கியமாக நல்ல கல்வி முறையை அறிமுகப்படுத்தக்கூடிய பொறுப்பு அரசிடமும் கல்வித்துறையிடமும் இருக்கிறது. அப்போதுதான் வைரமுடைய நெஞ்சு படைத்த குழந்தைகள் உருவாவார்கள்.

ஆண் குழந்தை என்ன, பெண் குழந்தை என்ன? எல்லாக் குழந்தைகளும் அப்பொழுதுதான் சிறப்பான ஓர் இடத்தை நோக்கி நகர முடியும் என்கிறார் லட்சுமி டீச்சர்.

(தொடர்ந்து பேசுவோம்)

படைப்பாளர்:

சு உமாமகேஸ்வரி

உமாமகேஸ்வரி , அரசுப் பள்ளியில் ஆசிரியர் , கல்வி முறை குறித்தும் வகுப்பறை செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். பாடப்புத்தகம், பாடத்திட்டம் ஆகியவற்றைத் தாண்டி குழந்தைகளது மன உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் மதித்து, அதற்கு ஏற்புடைய சூழலை அமைத்துத் தர முயற்சி மேற்கொள்பவர்.