சைடோக்ரோம்சி என்கிற நொதிப்பொருளைக் கண்டறிந்தவர். கருவுற்ற பழங்குடியினப் பெண்கள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்ட குழந்தைகளின் நல்வாழ்வுக்கு உதவும் உணவுப் பொருட்களைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர். தனது ஆராய்ச்சிக்காகக் குடியரசுத் தலைவர் விருது பெற்றவர். இத்தனைக்கும் மேலாக கமலா சொஹொனிக்கு ஒரு முக்கியமான பெருமை உண்டு. இந்தியாவில் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி இவர்தான். ஆனால், அறிவியல் ஆராய்ச்சிக்குள் நுழைவதற்கு அவர் பெரும்பாடுபட வேண்டியிருந்தது.
உயிர்வேதியியல் துறையில் பட்டம் பெற்ற சொஹொனி, ஆராய்ச்சிக்காக இந்திய தேசிய அறிவியல் கழகத்துக்கு விண்ணப்பத்தைச் சமர்பித்தார். ஆனால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. நிராகரித்தவர் அறிவியல் கழகத்தின் அப்போதைய இயக்குநரும் நோபல் பரிசு பெற்ற முன்னணி விஞ்ஞானியுமான சர்.சி.வி ராமன். விண்ணப்பத்தை நிராகரிக்க அவர் சொன்ன காரணம், “அறிவியல் கழகத்தில் நான் பெண்களைத் தேர்ந்தெடுக்கப்போவதில்லை, பெண்களால் அறிவியல் ஆராய்ச்சியில் சிறப்பாகப் பங்களிக்க முடியாது.”

கமலா சொஹொனி மனம் தளரவில்லை. சர்.சி.வி.ராமனின் அலுவலகத்துக்கு முன்னால் அகிம்சை முறையில் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தினார். ஒரு கட்டத்துக்கு மேல் ராமனால் அதை உதாசீனப்படுத்த முடியவில்லை, அதிகாரபூர்வமாக அவரது விண்ணப்பத்தை நிராகரிக்க வேறு காரணமும் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆகவே பல்வேறு நிபந்தனைகளோடு, “இது தற்காலிகமான தேர்வுதான், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு நீங்கள் கவனிக்கப்படுவீர்கள், அதில் தேறினால் மட்டுமே தொடர்ந்து ஆராய்ச்சி செய்யலாம்” என்பது போன்ற ஒரு சூழலில் கமலாவை ஆராய்ச்சி செய்ய அனுமதித்தார். கமலா அறிவியல் கழகத்துக்குள் நுழைந்தார். இந்த நிகழ்வு இந்திய அறிவியல் கழகத்திற்குள் பெண்கள் வருவதற்கான கதவைத் திறந்துவிட்டது.

இது நடந்து பல ஆண்டுகள் கழித்து இந்தியப் பெண் அறிவியலாளர்கள் கூட்டமைப்பின் விழாவில் பேசும்போது கமலா இவ்வாறு கூறினார்:
“ராமன் ஒரு சிறந்த விஞ்ஞானியாக இருந்தாலும் அவரது பார்வை குறுகியதாக இருந்தது. நான் பெண் என்பதாலேயே அவர் என்னை நடத்திய விதத்தை ஒருபோதும் மறக்கவே முடியாது. அது எனக்கு ஒரு பெரிய அவமானம். அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு மிகவும் அதிகமாக இருந்தது. நோபல் பரிசு பெற்ற ஒருவரே இப்படி நடந்துகொள்ளும்போது நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?” என்று வேதனையுடன் பேசினார்.

கமலா சொஹொனியைத் தேர்ந்தெடுக்க முடியாது என்று மறுத்த சர்.சி.வி ராமனைப் போல எத்தனையோ பேர் பெண் விஞ்ஞானிகளைத் தேர்வு செய்வதிலும் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதிலும் பாகுபாடு காட்டியிருக்கிறார்கள். இப்போதும் அந்தப் பாகுபாடு பல இடங்களில் இருக்கிறது. “இயற்பியல் என்பது ஆண்களால் உருவாக்கப்பட்டது. ஆண்களால் கட்டமைக்கப்பட்டது. பெண் விஞ்ஞானிகளைவிட ஆண் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகள் மேம்பட்டவையாக இருக்கின்றன” என்று 2019ஆம் ஆண்டில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார் பிரபல இயற்பியலாளர் அலசாண்ட்ரோ ஸ்ட்ரூமியா. “உயிரியல்ரீதியாகப் பெண்கள் ஆண்களிடமிருந்து வேறுபட்டவர்கள். தொழில்நுட்பத்துறைகளில் அவ்வளவாகப் பெண்கள் இல்லாததற்கு இந்த வேற்றுமைதான் காரணம்” என்று கூகுள் நிறுவனத்தின் மென்பொருள் வல்லுநர் ஒருவர் கூறியிருக்கிறார்.

2005ல் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் லாரன்ஸ் சம்மர்ஸிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “அறிவியல் மற்றும் பொறியியலின் உயர் பதவிகளில் பெண்கள் ஏன் அவ்வளவாக இல்லை?” என்று கேட்டதற்கு, “அதற்குக் காரணம் மரபணுக்கள்தாம். இயல்பாகவே பெண்களுக்குக் கணக்கும் அறிவியலும் வராது” என்று பதில் சொல்லியிருக்கிறார்.
மில்ட்ரெட் கோன் என்கிற ஓர் உயிர்வேதியியலாளருக்கு 20 ஆண்டுகள் போராடிய பிறகே அவரது துறையில் வேலை கிடைத்தது. தலைமை ஆராய்ச்சியாளர் பெண் என்பதால் களப்பணிக்கு உதவ முடியாது என்று விலகிக்கொள்ளும் ஆண் உதவியாளர்கள் பலர் உண்டு என்று எழுத்தாளர் அனிதா மணி குறிப்பிடுகிறார். தனது ஆராய்ச்சிக்காக லாஸ் அலமோஸுக்குச் சென்ற அணுவியலாளர் டார்லீன் ஹாஃப்னை அங்கிருந்த மனித வளத்துறை உள்ளே அனுமதிக்கவேயில்லை. “ஒரு பெண் எப்படி வேதியியலாளராக இருக்க முடியும்? இதில் ஏதோ சந்தேகம் இருக்கிறது” என்கிற வாதத்தோடு அவரைப் பல நாட்கள் காக்கவைத்த பின்பே ஆராய்ச்சிக்கூடத்துக்குள் அனுமதித்தார்கள்.

செர்ன் என்கிற புகழ்பெற்ற அணு ஆராய்ச்சி மையத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 1980களில் அங்கு நிலவிய சூழல் மிகவும் மோசமாக இருந்தது. அங்கே பணியாற்றிய மொத்த பெண் இயற்பியலாளர்களில் 10% மட்டுமே முழு ஊதியம் வழங்கப்பட்டது! பாக்கி இருக்கும் அத்தனை பேருக்கும் பாதி ஊதியமா என்று ஆச்சரியப்பட வேண்டாம். செர்ன் அதிகாரிகளுக்கு அவ்வளவு தாராள மனம் இருக்கவில்லை. பாக்கி இருக்கும் 90 விழுக்காட்டில் 4% பெண்களுக்குப் பாதி ஊதியம். அப்படியானால் மிச்சம் இருக்கும் 86% பெண்களுக்கு? ஊதியமே கிடையாது. இதற்கு செர்ன் வைத்திருந்த பதில்தான் அபத்தத்தின் உச்சம். இந்தப் பெண் அறிவியலாளர்களின் கணவர்கள் ஏற்கெனவே செர்ன் ஊழியர்களாம், அதனால் மனைவிகளுக்குத் தனியாக சம்பளம் தரத் தேவையில்லையாம். இந்தப் பிரச்னைகளை விரிவாக ஆராய்ந்துள்ளார் மேரி கைல்லார்ட் என்கிற இயற்பியலாளர்.

ஸ்டெம் துறையில் இருக்கும் மேலாளர்கள், பெண்களைவிட ஆண்களைத் தேர்ந்தெடுக்கவே விரும்புகிறார்கள், அதிகமாக ஆண்களுக்குத்தான் வாய்ப்பளிக்கிறார்கள் என்று 2015இல் வந்த ஓர் ஆய்வுக்கட்டுரையில் உறுதிசெய்கிறார் ஸ்டமார்ஸ்கி கைலின். 2013 நிலவரப்படி, ஸ்டெம் துறைகளில் இருக்கும் பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கை இருமடங்கு அதிகம் என்கிறார் ஆராய்ச்சியாளர் லாண்டிவர்.
2015ஆம் ஆண்டில் டிம் ஹண்ட் என்கிற ஓர் அறிவியலாளர் பெண் விஞ்ஞானிகளுக்கு எதிராகப் பேசிய சில கருத்துகள் இணையத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டன. அந்தச் சூழலில், பணியிடத்தில் தாங்கள் சந்தித்த பல பாகுபாடுகளைப் பெண் ஆராய்ச்சியாளர்கள் பகிர்ந்துகொண்டார்கள். மூத்த ஆராய்ச்சியாளர் ஒருவர், “இதன் செயல்முறையை நான் உனக்குச் சொல்லித்தரப் போவதில்லை. நீ கற்றுக்கொள்வாய், ஆனால் கல்யாணம் செய்துகொண்டு ஆய்வுக்கூடத்தை விட்டுப் போய்விடுவாய். உனக்கு சொல்லிக்கொடுத்தால் என் நேரம்தான் வீணாகும்” என்று தன்னிடம் சொன்னதாக ஒரு பெண் ஆராய்ச்சியாளர் வருத்தத்துடன் பதிவு செய்தார்.

பொறியியல் பட்டதாரிகளில் பெண்களைவிட ஆண்களுக்கே வேலை கிடைக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்று தனது 2014ஆம் ஆண்டு ஆய்வுக்கட்டுரையில் கூறுகிறார் ப்ரதீப் சௌத்ரி. அதிலும் குறிப்பாக, ஒரு நிறுவனத்தில் தொழில்நுட்ப ரீதியான, உற்பத்தி ரீதியான பணியிடங்களில் ஆண்களும், ஆலோசனை, மேலாண்மை, நிதித்துறை போன்றவை சார்ந்த பணியிடங்களில் பெண்களும் அதிகமாகப் பணியமர்த்தப்படுகிறார்கள் என்று அவரது ஆய்வு தெரிவிக்கிறது. மாநிலத்தைப் பொறுத்து இந்த ஆய்வின் முடிவுகளில் சிற்சில வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால், இந்தியாவின் சராசரி இப்படித்தான் இருக்கிறது. பொறியியல் துறைகளைப் பொறுத்தவரை பெண்களுக்குக் கணிப்பொறி சார்ந்த துறைகளும் ஆண்களுக்கு மெக்கானிக்கல் போன்ற துறைகளும் பொருந்தும் என்கிற ஓர் எண்ணம் இந்திய சமூகத்தில் இருப்பதாகப் பதிவு செய்கிறார் நம்ரதா குப்தா.
“9-5 வேலைகள்தாம் பெண்களுக்குச் சரிப்பட்டுவரும், ஆண்கள்தாம் ஆராய்ச்சிக்குத் தகுதியானவர்கள்” என்பதும் ஒரு பொதுவான நம்பிக்கை. ஆராய்ச்சி சார்ந்த வேலை பெண்களுக்கு ஒத்துவராது என்கிற எண்ணம் பரவலாக இருக்கிறது. ஒரு சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் என்பவர் நேரம் காலம் இல்லாமல் வேலை செய்தாக வேண்டும், எப்போது வேண்டுமானாலும் ஆராய்ச்சிக் கூடத்துக்கு வரத் தயாராக இருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதை “Male Model of Work” என்கிறார்கள். அறிவியலுக்கு அர்ப்பணிப்பு உணர்வு அவசியம்தான். ஆனால், ஆண்மைய சமூகக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு பெண் அறிவியலாளர்களும் அதேபோன்ற ஒரு வேலை வடிவத்துக்குள் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. குழந்தையைக் கவனிக்கவேண்டிய பொறுப்பும் வீட்டு வேலைகளும் பெண்களுக்குச் சுமையாக இருக்கின்றன. ஆகவே இந்த அமைப்புக்குள் இருந்துகொண்டு பெண்கள் வேலை செய்கிறார்கள் என்பதைப் பணியிடங்கள் உணரவேண்டும். அந்தச் சுமையைக் குறைக்க சமூகம் தயாராக இல்லை என்பதற்காக, பெண்களை வேலைக்கு அமர்த்துவதையே தவிர்ப்பது என்ன நியாயம்?

“இதில் மேலும் சில அம்சங்களைச் சேர்த்துப் பார்க்கவேண்டும்” என்று அறிவியல் எழுத்தாளர்கள் ஆஷிமா டோக்ராவும் நந்திதா ஜெயராஜும் வலியுறுத்துகிறார்கள். வேலைவாய்ப்பில் மதத்தையும் சாதியையும் சேர்த்தால் என்னவாகும் என்பதைக் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை தலித்தாக இருப்பவர்களின் வேலைவாய்ப்புக்கான சாத்தியக்கூறு 33% குறைவு என்றும், இஸ்லாமியராக இருந்துவிட்டால் வேலைவாய்ப்பு சாத்தியக்கூறு 66% குறைந்துவிடுகிறது என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். பெண் என்கிற பாலின அடையாளத்தோடு இதுபோன்ற அடையாளங்களும் வேலைவாய்ப்பில் குறுக்கிடுகின்றன.

Leaky Pipeline என்று ஒரு கருத்தாக்கம் உண்டு. பத்து அடி கொண்ட ஒரு குழாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் இரண்டு அடிக்கு ஒருமுறை ஓர் ஓட்டை இருக்கிறது என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அதற்குள் தண்ணீரை ஊற்றினால், இரண்டு அடிக்கு ஒருமுறை தண்ணீரின் அளவு குறைந்துகொண்டே வரும், இல்லையா? அதிலும் குழாயின் இறுதிக்கு வந்துசேரும் நீர் மிகவும் குறைவாகத்தானே இருக்கும்? அறிவியல் துறையிலும் அதுதான் நடக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். அறிவியலில் பள்ளிப் படிப்பு – இளங்கலை – முதுகலை – முனைவர் பட்டம் – வேலை என்று ஒவ்வொரு நிலையிலும் பெண்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிறது என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

1988இல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகளை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். அமெரிக்காவின் உயர்நிலைப் பள்ளிகளில் அறிவியல் பாட மாணவர்களில் 37% பெண்கள். பத்தாம் வகுப்புக்கு மேல் இந்த நிலை மாறிவிடுகிறது. அடுத்தகட்டமாக 22% மாணவியர் மட்டுமே அறிவியல் படிப்பில் நீடிக்கிறார்கள், மீதம் இருப்பவர்கள் வேறு பாடங்களை நோக்கிச் சென்றுவிடுகிறார்கள். கல்லூரியில் இதன் விழுக்காடு 15% மட்டுமே, அதாவது கல்லூரியில் அறிவியல் படிப்பவர்களில் 15% மட்டுமே பெண்கள். அடுத்தகட்டமாக அறிவியலில் முனைவர் பட்டம் பெறுபவர்களைக் கவனித்தால் அதில் 10% மட்டுமே பெண்கள். முனைவர் பட்டம் பெற்றுவிட்டு, துணை பேராசிரியராகப் பணியாற்றுபவர்களில் 7% மட்டுமே பெண்கள், அதற்கும் அப்பால் தேடிப் பார்த்தால் நிரந்தரப் பணியிடம் பெற்றுப் பேராசிரியராக இருப்பவர்களில் 3% மட்டுமே பெண்கள். இதைத்தான் ஒழுகும் குழாய் என்கிற உருவகம் சுட்டிக்காட்டுகிறது.

இன்னும் விவாதம் முடியவில்லை. அறிவியலைக் கற்றுத் தேர்ந்தபிறகு அதே துறையில் வேலை கிடைப்பதிலும் சரியாக வேலை செய்வதிலும் பெண்களுக்கு மேலும் பல பிரச்னைகள் உண்டு. அவை என்ன?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’, ‘சூழலியலும் பெண்களும்’ ஆகிய தொடர்கள் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகங்களாகக் கொண்டாடப்படுகின்றன!