அண்மையில் படித்த கட்டுரை ஒன்றில் மெனோபாஸான ஒரு பெண் அதைத் தன் கணவரிடமிருந்து மறைத்துள்ளார். எப்போதும்போல ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் தனியாக இருந்து மூன்று ஆண்டுகள்வரை நடித்துள்ளார்.
எதற்காக இப்படிச் செய்தார்? உண்மையில் அப்படி நடந்துகொள்வார்களா? மெனோபாஸில் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்று அறிந்துகொள்ளும் ஆவலோடு சில பெண்களைத் தொடர்புகொண்டு பேசினோம்.
சரிதா: கணவருக்குத் தெரிந்தால் தன்னைவிட்டுப் பிரிந்துவிடுவார் என்ற பயம். மாதவிடாய் முடிந்துவிட்டால் குடும்ப வாழ்க்கைக்கு தகுதியில்லை என்ற பயத்தில் அப்படி நடித்திருக்கலாம். கிராமங்களில் இப்படியான பிற்போக்குத் தனம் அதிகம் இருக்கிறது. அதன் பிறகு அவளுடன் எப்படி ஒரு ஆணால் வாழ முடியும்? என்று பேசுவார்கள். இரண்டாவது திருமணம் செய்துகொள்வதையோ, வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதையோ சரி என நியாயப்படுத்துவார்கள்.
நின்றாலும் தவறு நிற்காவிட்டாலும் தவறு. நல்லவளுக்கு நாற்பது என்ற பழமொழியைச் சொல்லி நிற்காதவர்களை கெட்டவளாக்கிவிடுவார்கள்.
எனக்குத் திருமணமாகி சென்ற போதும், என் மாமியருக்கு நிற்கவில்லை. “அது நின்றுவிட்டால் கண்ணு தெரியாமல் போய்விடும். அதனால் அது வருவதே நல்லது” என்றார் மாமியார். மாதவிடாய் நிற்கும் வயதில் வெள்ளெழுத்துப் பிரச்சினை வரும். அதைத்தான் கிராமத்தில் மூடநம்பிக்கையாக இப்படி என் மாமியார் மனதில் பதிய வைத்திருக்கிறார்கள்.
என்னுடைய அம்மா ஊர் ஊராக வேலைக்கு நடந்து செல்ல வேண்டும். மெனோபாஸோடு நடந்து செல்ல முடியாது. வீட்டிற்கு வந்தாலும் ஓய்வெடுக்க முடியாது. ஏனெனில் நான் தலைப்பிரசவமாகி வீட்டில் இருந்தேன். எனக்கும் வேலை செய்ய வேண்டும். சித்த வைத்தியரை நாடினார். கடுக்காப்பூவை எருமை தயிரில் வைத்து மாதவிடாயின் மூன்று நாள்களும் சாப்பிடச் சொன்னார். மூன்று மாதங்கள்தான் சாப்பிட்டிருப்பார். நின்றுவிட்டது.
என் அத்தை சபரிமலை செல்வதை வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்தவர். மாதவிடாய் எப்போது நிற்கும் என்று ஆவலோடு காத்திருந்தார். நின்றதும், அப்பாடா என்ற விடுதலை உணர்வை அடைந்தார். சபரிமலைக்கு புறப்பட்டார்.
பக்கத்து வீட்டு அத்தைக்கு அந்த நேரத்தில் கோபம் அதிகம் வந்தது. எப்போதும் கனிவு ததும்பும் அழகான முகம். மெனோபாஸில் கோபமும் எரிச்சலும் கொண்டு சிடுசிடுப்பான நபராக மாறினார். தன்னைக் கட்டுப்படுத்த ஆன்மீகத்தில் ஈடுபட்டார். ஊர்ஊராக, கோவில் கோவிலாகச் சுற்றினார். கடைசியில் உடுக்கை சத்தம் கேட்டால் ரோட்டில் துணிவிலக சாமி ஆடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
புனிதா: எனக்கு அப்போது அதிக உதிர போக்கானது. சந்தேகப்பட்டுதான் மருத்துவரிடம் சென்றேன். கருப்பை வாயில் நீர்க்கட்டி இருந்தால், அதை மட்டும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். ஆனால் உங்களுக்கு கர்ப்பப்பையையே எடுக்க வேண்டும் என்றார். நான் அதைத்தான் பலம் என்று நம்பியிருந்தேன். அது இல்லாதபோது பாதுகாப்பில்லாமல் உணர்கிறேன்.
செல்வி: மூட்டு வலி அதிகமாக இருந்தது. இரவில் படுத்ததும் முதல் அரை மணி நேரம் உறங்கிவிடுவேன். அதன்பிறகு தூக்கம் கலைந்தால், விடிய விடிய சிவராத்திரிதான். சுற்றி இருப்பவர்கள் உறங்க, நான் மட்டும் உறங்காமல் விழித்திருப்பது ஆத்திரத்தைக் கூட்டும். மளமளவென உடல் எடை கூடியது. வயிறு கர்ப்பிணிபோல் தனித்து பெருத்தது. கை சதை தொளதொளவென இருந்தது. மூச்சு முட்டும். வயிறு முட்டும். முகத்தில் தாடி மீசை எல்லாம் கண்டபடி முளைத்தது. நம் உடலில் ஏற்படும் மாற்றத்தை, முதுமை தன்மையை நம் கண்ணாலேயே பார்ப்பதால் அழுகையும் கோபமும் பீறிட்டது. உடல் ரீதியான பிரச்னை மனதையும் பாதித்தது. கண்மண் தெரியாமல் கோபம் வரும். வீட்டில் உள்ளவர்கள் நான் மோசமாக நடந்துகொள்வதாகப் பேசுவார்கள். இதனால்தான் இந்த மாற்றங்கள் என்று எனக்கே புரியாதபோது, குடும்பத்துக்கு எப்படிப் புரியும்?
அந்த நேரத்தில்தான் எனக்கான கடமைகள் அதிகரித்திருந்தன. பிள்ளைகள் பிளஸ் டூ, நுழைவுத்தேர்வு போன்ற முக்கிய கட்டத்தில் இருந்தார்கள். கல்லூரியில் அவர்களைச் சேர்த்துவிட்டதால், பிரிவுத் துயர் ஒருபுறம். மாமியார், மாமனார் படுக்கையில் விழுந்தார்கள். கணவருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் வந்தன. என் பிரச்னை போதாதென குடும்பத்தின் அத்தனை பிரச்னையையும் என் தலையில் விழுந்தது. யாரும் என்னை கவனிக்க வேண்டாம். என்னைப் பார்த்துக்கொள்ள எனக்கு நேரம் இல்லாதபோது என் மூர்க்கத்தனம் அதிகரித்தது. மாதாந்திர மாதவிடாய்க்கே கோபப்படுபவள் நான். இதனால்தான் இது என்று தெரியாமல் அப்போது அதிக அவஸ்தைபட்டேன்.
தனலட்சுமி: கலவையான உணர்ச்சி குவியலாக இருந்தேன். ஒருபுறம் அப்பாடா நிம்மதி. எங்கேயாவது வெளியில் போக பயந்துபயந்து செல்ல வேண்டாம். எந்த தேதியில் வரும் என்று யோசிக்க வேண்டாம். பாதுகாப்பு உபகரணங்களை தூக்கி சுமக்க வேண்டாம். பயனின்றி அதை வைத்துக்கொண்டு, எரிச்சல்பட வேண்டாம். அலட்சியமாகச் சென்று அசிங்கப்பட வேண்டாம். இப்படியான நன்மைகள் இருந்தபோதிலும், இனம் புரியாத வருத்தம் இருந்தது. இத்தனை நாள் கூடவே இருந்தது இடத்தை காலிசெய்யும்போது தோன்றும் வெற்றிடம் அது. டெலிவரி முடிந்ததும் தோன்றும் ஒரு நிசப்த, வெறுப்பு மனநிலை வந்தது.
மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டேன். உடல் பாடு அதிகம். ஓராண்டிற்கு வராமல் இருந்தால் மட்டுமே மெனோபாஸ் என்றார் மருத்துவர். ஆறு மாதம் வராமல் இருக்கும். சரி நின்றுவிட்டது என்று நினைத்தால் அடுத்து பதினைந்து நாளில் வந்து ஆட்டிப்படைக்கும். நான்கு வருடம் இப்படி அவஸ்தைப்பட்டேன். எதற்கெடுத்தாலும் அழுகை வரும். என்னை யாரும் கவனிப்பதில்லை என்று தோன்றும். எல்லோரும் இருந்தும் யாரும் இல்லாத உணர்வை கொடுக்கும்.
எனக்குத் திருமணமானபோது, மாமியாரின் அம்மா உயிரோடு இருந்தார். அந்தப் பாட்டி மனப்பிறழ்வு கொண்டவர். 50 வயதில் அப்படி ஆகியிருக்கிறார். நான்கு பெண் குழுந்தைகள், வீட்டு கஷ்டத்தால் பாட்டி அப்படி இருப்பதாக தாத்தா நினைத்துக் கொண்டார். கொஞ்சம் சுதாரித்திருந்தால், பாட்டியை பிறழ்விலிருந்து தடுத்திருக்கலாம். ‘அதற்கு மெனோபாஸ்தான் காரணம். நீங்கள் சரியாக கவனிக்கவில்லை’ என்றாராம் மருத்துவர். நபரைப் பொறுத்து தன்மை மாறும் என்றாலும் விழிப்புணர்வு இருந்தால் நல்லது. மாதவிடாய் நின்றதும் சில ஆண்டுகளில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டேன்.
பூங்கோதை: எதுவும் தெரியாமல்தான் கடந்துவந்தேன். இதில் உடல் கஷ்டம் ஏதும் அனுபவிக்கவில்லை. நீங்கள் சொல்வதைப்போல் ஹார்மோன் பிரச்னையால் கோபப்பட்டிருக்கலாம். அந்த நேரத்தில்தான் கணவனைப் பிரியும் மிகப்பெரிய முடிவை எடுத்தேன். ஆனால் இந்த நிமிடம் வரை எடுத்த முடிவு தவறு என்று நினைக்கவில்லை. மெனோபாஸை சராசரியாகத்தான் கடந்திருக்கிறேன்.
கலா: அப்போதுதான் தோல் சுருங்கி, முதுமை தட்ட ஆரம்பித்தது. முதலில் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதன்முறையாக ஒருவர் ஆண்ட்டி என்று அழைக்கும் போது ஏற்படும் அதிர்ச்சி, அயற்சி அது. பிறகு அதுவே பழகிக்கொள்வதைப்போல் முதுமையும் பழகிக்கொண்டது.
இந்த சூழலைக் கடக்க பெண்கள் எளிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யலாம். ஜிம் சேரலாம். திசுக்களுக்கான பயிற்சி எடுக்கலாம். கால்சியம் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட்டால் கேன்சர் வரும் என்பதால் அதை மட்டும் தவிர்க்கலாம். மெனோபாஸ் அறிகுறிகள் பற்றிய புரிதல் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் அல்ல, குடும்பத்துக்கும் இருந்தால் நல்லது.
படைப்பாளர்
ஸ்ரீதேவி கண்ணன்
ஸ்ரீதேவி கண்ணன், கடலூர் மாவட்டம். சென்னையில் அரசுப்பணியில் இருக்கிறார். சொல்ஒளிர் கானகம், TNPSC தேர்வு வழிகாட்டி போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். 5 கிண்டில் நூல்களைப் பதிப்பித்துள்ளார். இணைய வார இதழ், மல்லிகை மகள் போன்ற இதழ்களில் எழுதிவருபவர்.