சில நாட்கள் இது நடக்கும்

அதிகாலையிலிருந்தே அந்த நாள்

உனக்கெதிராகச் சதி செய்வதாக

ஒவ்வொரு நிமிடமும் உன்னை

முறைத்துப் பார்த்துவிட்டு நகர்வதாக

ஒவ்வொரு பார்வையும்

உன் கழுத்தை நெறிக்கப் போவதாக

உன் கைகளும் கால்களுமே

உனக்கெதிரான சதியில் சேர்ந்துவிட்டதாக

உன் நகங்கள் திடீரெனப் பெரிதாகி

உன்னைக் கீறி

ரத்த விளாராக்கிவிடும் போல

உன் கைகளை ஒன்றோடொன்று

இறுக்கமாகக் கோத்தபடி

உன் பாதங்களை உற்றுப் பார்த்தபடி

அமர்ந்திருப்பாய்

அப்போது உன் அலைபேசி

சட்டென ஒளிரும்

ஒரு செய்தி

எங்கோ தூரத்திலிருந்து ஒரு கை

எல்லாச் சதிகளையும்

கூட்டித் தள்ளிவிடும்

உன்னை ஏந்திக்கொள்ளும்

அதில் நீ அமர்ந்து

சுற்றிமுற்றிப் பார்ப்பாய்

உன் சின்ன உலகம் தெரியும்

அதைத்

தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய்

***

ஒரு அழகனைப் போகவிட்ட கதை

உள்ளே வரும்போதே பரபரப்பாக வந்தான்

சட்டையைக் கழற்றினான்

எங்களுக்கு நேரம் அதிகம் இருக்கவில்லை

நானும் பரபரப்பாக இருந்தேன்

தயாராக இருந்தேன்

அவனைப் பிடித்துப்போக

அவனிடம் மடங்கிப்போக

ஆரம்பித்த நாட்கள்

அருகில் என்பதையும்விட

அருகில் வந்து சிரித்தான்

உன் மார்பில் முடியில்லை

அதனாலென்ன என்பதைப் போல்

ஏறிட்டுப் பார்த்தான்

அதனால் ஒன்றும் பிரச்சினையில்லை

அழகாக இருப்பதற்கும் மார்பில் முடிக்கும்

என்ன தொடர்பு

அழகாக இருப்பதற்கும் மார்புக்கும்

என்ன தொடர்பு

அழகாக இருப்பதற்கும் உடலுக்கும்

என்ன தொடர்பு

நான் சொன்னதை அவன் தவறாகப்

புரிந்துகொண்டுவிடக்கூடாது

அதனால் பேசிக்கொண்டிருந்தேன்

அழகாக இருப்பதற்கும் அழகுக்கும்

என்ன தொடர்பு

கவனமாக என் கண்களை

அவன் மார்பிலிருந்து

கீழிறக்காமல்

அவன் விருட்டென்று வெளியே போனான்

அவன் நிஜமாகவே அழகன்

அவன் மார்பின் வலப்பக்கத்தில்

ஒரு சின்னத் தழும்பு இருந்தது

அதைப் பற்றிப் பேச்செடுத்திருக்கலாம்

அதுவும் மோசமாக முடிந்திருக்கலாம்

எப்போதும்

படுக்கையறையில்

உடல்கள்

வேறொரு ஜோடிக் காதுகளைத்

திறந்து வைத்திருக்கின்றன

மற்றவர் சொல்லாததை

சொல்ல நினைக்காததை

கேட்டுவிடுகின்றன

திரும்ப அவனைப் பார்க்கவில்லை

***

(இந்தக் கவிதைகள் சமீபத்தில் உயிர்மை பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் ‘உன் சின்ன உலகத்தைத் தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய்’ கவிதைத் தொகுப்பில் வெளியானவை. அடுத்த வாரம் முதல் கவிஞரின் புதிய படைப்புகள் நம் பக்கத்தில் வெளியாகும்!)

கவிஞர்:

பெருந்தேவி

மரபிலக்கியம், நாட்டாரியல், நவீன இலக்கியம் என எந்தக் களம் என்றாலும் அதில் சிறப்பாக எழுதக்கூடியவர் கவிஞர் பெருந்தேவி. தெளிவான சமகால அரசியல் பார்வை கொண்டவர்; நுட்பமான உணர்வுகளை நேர்மையுடன் எழுதி வருபவர். அமெரிக்காவின் சியெனா கல்லூரியில் மானுடவியல் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ‘பெண் மனசு ஆழம் என 99.99 சதவித ஆண்கள் கருதுகிறார்கள்’, ‘அழுக்கு சாக்ஸ்’, ‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்’, ‘இறந்தவனின் நிழலோடு தட்டாமாலை ஆடும்போது கீழே விழாதிருப்பது முக்கியம்’, ‘தேசம்-சாதி-சமயம்’, ‘உடல் பால் பொருள்’, ‘இக்கடல் இச்சுவை’, ‘வாயாடிக் கவிதைகள்’ என பல நூல்களை எழுதியுள்ளார். குறுங்கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என எந்தக் களத்திலும் அடித்து ஆடும் ஆற்றல் கொண்டவர். தமிழின் மிக முக்கியமானக் கவிஞர்களில் ஒருவர்!