தக்காளி விலை உயர்ந்ததைப் பற்றிய பேச்சு வீட்டில் வலுத்துக் கொண்டிருந்த போது பொருளாதாரத்தைப் பற்றிய பேச்சும் சூடுபிடிக்க ஆரம்பித்தது. மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற கருத்து ஒரு பக்கம் இருக்க, விளைச்சலில் இருக்கும் சவால்கள் மறுபக்கம் அச்சுறுத்திக் கொண்டிருந்த சூழலில்தான் உலக நாடுகளில் பசுமை புரட்சி ஏற்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்ட பஞ்சத்தால் வாடிய மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது இந்தப் பசுமை புரட்சிதான். தொழில்நுட்ப சாதனங்களை வேளாண்மையில் பயன்படுத்தி விளைச்சலை அதிகரிப்பதுதான் பசுமை புரட்சி. பொதுவாகவே ஒரு வருடத்திற்கான பயிர் உற்பத்தி என்பது அந்த வருடத்தின் பருவநிலை மாற்றங்களைப் பொறுத்ததாக இருக்கும். அது தவிர பயிர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும் களைகள், விளைச்சலைப் பாதிக்கும் பூச்சிகள் போன்றவையும் எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் இயற்கை சீற்றங்களும்தான் ஒரு வருடத்திற்கான பயிர் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தவிர்த்துத் தேவையான உணவு பொருட்களின் உற்பத்தியை எந்தவிதப் பாதிப்புமின்றி அடைவதற்காக நீர்பாசன முறை, ஏர் உழுதல் போன்றவற்றில் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்பட்ட போது உணவு பற்றாக்குறை தீர்ந்ததோடு, உலக மக்கள் தொகையின் பெரும்பான்மை பசியிலிருந்து தப்பியது. பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டிற்கு வந்ததும் இந்தப் பசுமை புரட்சியில் இருந்துதான்.

தாவரங்களின் வளர்ச்சிக்குப் பயன்படும் வளங்களை அப்படியே உணவு உற்பத்திக்குத் திசை திருப்பியதுதான் அதிக விளைச்சலுக்கான காரணம். தாவரங்களில் சிலவற்றிக்கு இயற்கையாகவே சில குணங்கள் உண்டு. உதாரணமாக நெல் சாகுபடியில் அதிக உயரம் வளராத, ஆனால் அதிக விளைச்சலைத் தருகின்ற ஒரு ரகம் உண்டு என்றால் அந்த ஒரே ஒரு வகை நெல்லை மட்டும் தொடர்ந்து சாகுபடி செய்வது, அந்த நெல்லின் மரபணுவைப் பரிசோதனை செய்து, அதை எடுத்து பிற நெல் வகைகளில் இணைத்து, பிற நெல் வகைகளையும் இந்த ஒரு குறிப்பிட்ட நெல் வகையைப் போல் மாற்றுவது போன்றவற்றால்தாம் உற்பத்தி அதிகரித்தது. இந்த முறையைக் கண்டுபிடிப்பதற்காகப் பல ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தனர். உணவு முறையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது இந்தப் பசுமை புரட்சி தான்.

ஏர் உழுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கலப்பைகளும் காளை மாடுகளும் டிராக்டர்களால் இடம் மாற்றப்பட்டன. இயற்கை வேளாண்மை கொஞ்சம் கொஞ்சமாகத் தொழில்நுட்பத்தின் பிடியில் சிக்கியது. நாட்டுக் காய்கறிகள் அனைத்தும் கலப்பு (hybrid) காய்கறிகளாக மாறின‌. உணவு பொருட்களின் உற்பத்தி அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் உணவு பொருட்களின் உருவ அளவும் அதிகரித்தது. ஒரே செடியில், மேல் பகுதியில் தக்காளியையும் வேர் பகுதியில் உருளைக்கிழங்கையும் வளர்த்து அதற்கு போமாட்டோ (pomato) என்று பெயரும் வழங்கப்பட்டது. இன்று நாம் உண்ணும் காய்கறிகள், பழங்கள் அனைத்துமே பசுமை புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களால் உருவானவைதாம்.

இது ஒருபுறம் இருக்க, பசுமை புரட்சியின் தொழில்நுட்பங்களின் மேம்பாட்டிற்காகப் பல மரபணு ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருந்தன.‌ இதன் விளைவாக மரபணு மாற்றப்பட்ட விதைகள் விநியோகிக்கப்பட்டன. நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு, இந்த விதைகளில் இருக்கும் மரபணுக்கள் பூச்சிகளை எதிர்க்கும் ஆற்றல் உடையதாக மாற்றப்பட்டன. அதிக விளைச்சலை தருவதற்காகச் சில மரபணுக்களில் குறிப்பிட்ட பிறழ்வுகள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டன. கடும் வானிலையை தாங்குவதற்காகவும் சில மரபணு பிறழ்வுகள் ஆராய்ச்சியாளர்களால் புகுத்தப்பட்டன.

சரி, இதெல்லாம் விளைச்சலை அதிகரிப்பதற்காகத் தான் என்று வைத்துக் கொண்டாலும் இந்த மரபணு பிறழ்வுகளால் ஏற்படும் மறைமுக விளைவுகளையும் பாதிப்புகளையும் பற்றிய புரிதல் இன்னும் நம்மிடத்தில் இல்லை. இயற்கையில் ஏற்படும் மாற்றங்களைச் சமன் செய்ய வேறோர் இடத்தில் அதற்கு இணையான மாற்றம் ஏற்படும் என்பதுதான் நியதி. அந்த நியதியின் அடிப்படையில் மனித இனத்தின் வளர்ச்சிக்காக, இயற்கை உயிரினங்களின் மரபணுக்களில் செயற்கையாகப் புகுத்தப்பட்ட பிறழ்வுகளைச் சமன் செய்ய, இயற்கை ஏற்படுத்திய மாற்றங்களையும் அதன் விளைவுகளையும் நம்மால் கணிக்க முடியாது.

இந்த மரபணு மாற்றப்பட்ட உணவுகளையும் கலப்பு காய்கறிகளையும் பழங்களையும் உண்பதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஏராளம். ஆனால், அவை யாவும் நம்‌ கண்களுக்குப் புலப்படுவதில்லை. பூச்சிக்கொல்லிகளில் இருக்கும் ரசாயனம் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தற்போதைய தலைமுறையினர் பருமனாக இருப்பதும், இளம் வயதிலேயே சர்க்கரை (diabetes), கொழுப்பு (cholesterol) போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளாவதும் இந்த உணவுமுறை மாற்றத்தால்தான்.

பழங்களில் விதை இருப்பது இயற்கை. ஆனால், விதையற்ற பழங்களைச் செயற்கையாக விளைவிப்பதால் இயற்கையின் சமநிலை குலைகிறது. கூட்டுப் பயிரிடுதல் என்னும் முறை இயற்கை விவசாயத்தின் ஒரு முக்கியமான அங்கம். தென்னை மரங்களுக்கு நடுவே வாழை மரங்களை நடுவது, தண்ணீர் பற்றாக்குறையின் போது தென்னை மரத்திற்கு வாழை மரங்களிலிருந்து நீர் பரிமாற்றம் நடைபெறும் என்பதற்காகத்தான். இந்தக் கூட்டுப் பயிரிடுதல் முறை தற்போது அழிந்து போனதற்கும் இதுபோன்ற இயற்கை வேளாண்மை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாமல் போனதற்கும் ஒருவகையில் இந்தத் தொழில்நுட்ப சாதனங்கள்தாம் காரணம்.

இயற்கை உரங்களில் முக்கியமான ஒன்றுதான் சாணம். இதை அடிப்படையாகக் கொண்டுதான் ஏர் உழுதலில் காளைகள் பயன்படுத்தப்பட்டன. ஏர் கலப்பைகள் மண்ணை உழுது மண்புழுக்களுக்கு உதவியதை ஒரு போதும் டிராக்டர் செய்ததாகத் தெரியவில்லை. மண்புழுக்களைப் பற்றித் தெரிந்த கடைசித் தலைமுறையினர் நாம்தான். இலைகள் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி யோசிப்பவர்கள் வேரைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை. ஒரு செடி முழுமையாக வளர இவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்றால் அவ்வளவு கால அவகாசத்தை நாம் கொடுத்துதான் ஆக வேண்டும். ஆனால், உணவு பற்றாக்குறையால் பயிர் வளர்ச்சியின் கால அளவை குறைப்பதற்கான விதைகள் செயற்கையாக உருவாக்கப்படுகின்றன. அந்த விதைகளில் இருந்து பயிர் வேகமாக வளர்கிறது. ஆனால், ஆரோக்கியம் கேள்விக்குறியாகி நிற்கிறது. இன்றைக்கு நம்மிடையே இருக்கும் குழந்தையின்மைக்கும் இது போன்ற உணவுகள்தாம் காரணம். மருத்துவமனைகளும் கருத்தரித்தல் மையங்களும் பெருகிப் போனதற்கு விதைக்குள் இருக்கும் வளங்கள் சுருங்கிப் போனதுதான் காரணம்.

அதிக உணவு, குறைவான ஆரோக்கியத்திற்குப் பழகிப் போன தலைமுறையினராக நாம் இருக்கையில் வாயில் நுழையாத வியாதிகளை எதிர்கொள்ளும் தலைமுறையாக நம் வருங்கால தலைமுறைகள் இருக்கும். இயற்கையாக இருப்பவை யாவும் இயற்கையாக இருக்கட்டும். நம் கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்ப சாதனங்களும் இயற்கையோடு ஒன்றி வாழ்வதற்குப் பயன்படுத்தப்படட்டும்.


(தொடரும்)

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார்.