சுவர்க்கம் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு ஒரு தர்க்கரீதியான பதில் கிடைத்துவிடும்; ஆனால், சுவர்க்கம் எப்படியிருக்கும் என்ற கேள்விக்குப் பதிலளிப்பது சமயதிற்குச் சமயம் வேறுபடுவதோடு, இது ஒருவரது சமய நம்பிக்கைகளோடு தொடர்புடையதால் பெரும்பாலும் இத்தகைய கேள்விகள் கேட்பதைப் பற்றுறுதியாளர்களும், சமயத் தலைவர்களும் ஊக்கப்படுத்துவதில்லை.
மேலும், இறந்த பிறகு யாரும் உயிரோடு வந்து நமக்குத் தெரிந்த பொது வரலாற்றில் அறிவுப்பூர்வமாக சுவர்க்கம் பற்றி விவரித்ததில்லை. சுவர்க்கம் இருக்கிறது எனும் பட்சத்தில், யார் அதை அடையத் தகுதிப் பெற்றவர்கள் என்பதை நிர்ணயிக்கும் உரிமை யாருக்கிருக்கறது என்ற வினாவை பெண்ணியவாதிகள், முற்போக்குச் சிந்தனையாளர்களும் பல சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறார்கள். சுவர்க்கம் குறித்த பாலினப் பார்வையை எப்படி இருக்கிறது என்ற கோள்விக்கான விடையைத் தேடும் முயற்சியின் வெளிப்பாடே இந்தக் கட்டுரை.
இந்த வருடத்திற்கான உலக புக்கர் விருதினைப் Heart Lamp என்கிற பானு முஷ்டாக்கின் சிறுகதைத்தொகுப்பு பெற்றது. கன்னடத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழ்பெயர்க்கப்பட்ட கதைக்கெகுப்பின் முதல் கதையே ஏன் இந்த உயரிய விருதை இந்நூல் பெற்றுள்ளது என்பதை நியாயப்படுத்தியது.

இவர் முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசலில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உரிமைக்காக போராடியதால் மூன்று மாத சமூக விலக்கை தண்டனையாகப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் கதையில் தனது கணவரை மிகவும் சுவாரஸ்யமாக அறிமுகம் செய்கிறார். தன் கணவரை ‘பதி’ என்று அழைப்பதா? அல்லது வழக்கமாக ‘தேவரு’ என்ற சொல்லையும் இணைப்பதா? என்று கேட்டுவிட்டு, எவ்வாறு பெண்கள் எந்த சமயத்தைச் சேர்ந்தவராகயிருந்தாலும், ஆண்களுக்கு அடிமைகளாக இருப்பதை வலியுறுத்துகிறார்கள் என்றுக் குறிப்பிடுகிறார்.
இஸ்லாம் சமயத்தைப் பொறுத்தவரை ஆன்மிக அளவில் ஆண்களும், பெண்களும் சமம். ஆனால், எதார்த்த்தில் பெரும்பாலும் கணவரின் தேவைகளையும் பூர்த்து செய்வது நல்ல பெண்களில் குணங்களாக கருதப்படுவதோடு சுவர்க்கம் செல்லுவதற்கான தகுதியாகவும் படிப்பிக்கபடும்போது பாலின சமத்துவம் அடிவாங்குகிறது. திருக்குர்ஆனில் இந்தக் கருத்து இடம்பெறவில்லை என்றபோதும், பரவலாக இரத்தசாட்சியாக இறக்கும் நபர்களுக்கு (ஆண்கள் மட்டும்) சுவர்க்கத்தில் 72 கன்னிப்பெண்கள் வழங்கப்படுவார்கள் என்ற பாரம்பரியம் அவ்வாறு இரத்தசாட்சிகளாக மரிப்பதை உயர்த்திப்பிடிக்கிறது. பல நேரங்களில் சமயத்தில் சொல்லப்படுவதறகும், நடைமுறையில் கடைப்பிடிப்பதற்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன.
இந்து சமயத்தின் வைதீக மெய்யியலை அடிப்படையாக, அதாவது வேதங்களை அடிதளமாக கொண்ட கருத்தியல்கள் பெண்களை சுவர்க்கம் சென்றாலும் கணவனுக்குப் பணிவிடை செய்வதற்காக மட்டுமே அனுமதிக்கப்படுவதாக விளக்குகிறது.
கிறிஸ்தவ சமயத்தில் ஆன்மா உண்டென்ற நம்பிக்கை இருப்பதோடு ஆன்மாவிற்குப் பாலின வேறுபாடு கிடையாது என்கிற நம்பிக்கை இருப்பதால், ஓரளவிற்கு சமத்துவம் சுவர்க்கத்தில் இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால், அங்குப் போய்ச்சேருவதற்குத் தேவையான பண்புகள் பல. அவைகளில் ஒன்று கணவருக்குக் கீழ்படியவேண்டும் என்பது திருமண ஒப்பந்தத்தில் ஏறெடுக்கப்படும் முக்கியமான கூறுபாடு. எதுவாயினும் இயேசு கிறிஸ்து இன்னொரு உலகைப்பற்றிக் கூறவில்லை, இவ்வுலகில் கடவளுடைய அரசு வருக என்று வேண்டிக்கொள்ளக் கற்றுத்தந்தார் என்று விவாதிப்போரும் உண்டு.
இவ்வாறு இவ்வுலகில் சமத்துவம், இல்லை. சுவர்க்கம் என்பது நிஜமோ, புனைவோ, இறந்த பிறகாவது நிம்மதியாக இருக்க பெண்களுக்கு உரிமை இருக்கும் என்று இடமில்லை.
அட, இந்த உலக வாழ்க்கையில் பெண்களின் உழைப்பைச் சுரண்டி அடிமையாக வைத்திருப்பதற்காக சுவர்க்கம் என்ற ஒன்று கண்டுப்படிக்கப்பட்டதோ? பொறுங்கள். நான் இறந்தபிறகு அங்கு போய்விட்டு திரும்பிவந்து இதற்கான விடையைச் சொல்கிறேன்!
படைப்பாளர்

ஜா. கிறிஸ்டி பெமிலா
ஜா. கிறிஸ்டி பெமிலா, B.E., B.D., M.Th., MA., Ph.D., காரைக்காலில் பிறந்தவர். பொறியியல் துறையில் அடிப்படைத் தகுதி பெற்று ஆசிரியர் பணியாற்றிய அனுபவம் உண்டு, அத்துறையில் நாட்டம் குறைந்து சமயத்தறையில் ஆர்வம் ஏற்படவே மதுரையிலுள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கிறிஸ்தவ இறையியலில் இளம்தேவியல் பட்டத்தையும், இஸ்லாமிய கல்வியில் முதுகலைப் பட்டத்தை ஹைதராபாதிலும் பெற்றார். பாரசீக மொழியில் முனைவர் பட்டத்தை உத்திர பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் 2023-ம் ஆண்டு பெற்றார். தற்போது தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் சமயத் துறையில் பேராசிரியையாகப் பணிபரிந்து வருகிறார்.




