”பழைய துணி வாங்குறது… இந்தாப்பா,  இங்க வா, எத்தன பொடவ போட்டா கொடம் குடுப்ப?”

“யக்கா, அஞ்சு பொடவ போட்டா ஒரு கொடம் இல்லனா ஒரு பக்கெட்டு கா.”

“நாலு பொடவ தரேன் ஒரு கொடத்த குடுத்துட்டுப் போ”

”இல்ல யக்கா, கட்டுபடி ஆகாது, ஒரு துணிக்கு எனக்கு ஒரு ருபாதான்கா தேறும், முடியாது கா.”

“இந்தா, இதுல நாலு பொடாவ இருக்கு, கொடம் தந்தா தா இல்லாட்டி போ, வேற யாராவது வந்தா போட்டுக்குறேன்.”

“சரி குடுக்கா, இன்னா யக்கா துணியெல்லாம் ரொம்ப மோசமா இருக்கு?”

“பழைய துணி வாங்குறவனுக்குப் புது துணியா தர முடியும், தந்தா தா, இல்லாட்டி போ”.

“சரி குடுக்கா, இருட்ட போகுது, அப்புறம் பொழுது சாஞ்சா, இதுவும் தர மாட்டே, நேரமாச்சி வூட்டுக்குப் போகணும். ”

தூங்குமுஞ்சி மரத்தின் அடியில், தூங்காமல் காத்திருந்தாள் காஞ்சனா.

“இன்னடி, புள்ளைங்க எல்லாம் தூங்கியாசா?”

“எல்லாம் தூங்கிடுச்சிங்கயா, சின்னது மட்டும் பொறண்டு பொறண்டு படுத்துக்கிட்டு இருக்கு, பாவம் பசி பசினு, சோறு வேணும்னு ஒரே அழுகை. நீ சிக்கிரம் வருவ, அரிசி வாங்கிப் பொங்கிப் போடலாமுன்னு பாத்ர்தா, நீ இப்போதான் வர, நாடாரு கடையில எவ்வோளோதான் கடன் சொல்றது, நீ ஏன்யா இவ்ளோ லேட்டா வர்ற?. எதாச்சும் காசு தேருச்சா?”

“இல்லடி, காலையில இருந்து சைக்கில மெதிச்சதும், டயர் தேஞ்சதும்தான் மிச்சம். சரின்னு, இருக்குற துணியவாது, மொதலாளிக்கிட்ட போட்டு, காசு வாங்கலாம்னு பார்த்தா, டயர் வெடிச்சு போச்சு, அத சரி பண்ணிட்டு வர இம்மா நேரம் ஆச்சு, இந்தா , இந்த இருபது ருபாய வெச்சி நாளைக்குப் புள்ளைங்களுக்குச் சோறு ஆக்கிப் போடு.”

“அட போயா, இப்போ பசியில தூங்குதுங்க, நாளைய கதைய நாளைக்குப் பாக்கலாம். போயி டீயும், பண்ணும் வாங்கிவா, நா போயி அதுங்களை எழுப்புறேன், இந்தாயா டீ தூக்கு, இதைக் கொடுக்கதான் கீழ வந்து இம்மா நேரமா ஒக்காந்து இருந்தேன், இல்லாட்டி நீ தானே மறுபடியும் மூணு மாடி ஏறி எறங்கணும். சரி டி நீ போய் புள்ளைங்கல எழுப்பு, நா டீ வாங்கியாறேன்.”

“ஏய், எந்திரிங்க, அப்பா டீ வாங்க போயி இருக்காரு, எந்திரிங்க, ஏய், ஈஸ்வரி எந்திரி, தங்கச்சிங்கள எழுப்பு. இப்போ, எழுப்புனாதான், இதுங்கல குடிக்க வெச்சி, நா கொஞ்சம் சூடா டீய வாயில ஊத்த முடியும், வயிரு கபகபனு இருக்கு,  காலையில இருந்து பச்சைத் தண்ணிக்கூடப் பல்லுல படல, அழுக்குத் துணிய தோவச்சி, காய வெச்சி, மடிச்சி வெக்குறதுக்கே நேரம் செரியா இருக்கு. நேரம் இருந்தா மட்டும் என்ன? என்ன  இருக்கு துண்ணுறதுக்கு? அடுப்புல இருக்குற சாம்பல் கூட ஈரமாதான் இருக்கு, பல்லு வெலக்கக்கூட ஒதவல,  ஏய் எந்திரிங்க, அப்பா வந்தாச்சு.”

“டீ வாங்கியாந்துட்டேன், இந்தா புள்ளைகள எழுப்பி தந்துட்டு, நீயும் குடிச்சுட்டு தூங்கு, நா போய்க் குளிச்சிட்டு வரேன்.”

“நீயும் ஒரு வாய் குடிச்சிட்டுப் போயா, சூடு ஆறினா நல்லா இருக்காது.”

“இல்லடி காலையில இருந்து தெரு, தெருவா அலஞ்சது, கசகசனு இருக்கு. நா போய் குளிச்சிட்டு வரேன், நீ போய் புள்ளைங்கள பாரு.”

குழந்தைகளை எழுப்பி, ஒவ்வொருவருக்கும், டீயும் ஒரு பன்னும் தந்தாள். தனக்கும் கணவருக்கும் தேவையான டீயைத் தூக்கில் வைத்து மூடினாள்.

கடைசிப் பிள்ளை மட்டும் அழுதது.

”எனக்கு பன் வேண்டாம் போ, நீ அப்பா வந்தா சோறு செஞ்சி தரேனு தானே சொன்ன? எனக்குச் சோறு வேணும் பசிக்குது” என்று அழுதபடியே கால்களை உதைத்ததில் குழந்தையின் டீ டம்ளர் சாய்ந்து டீ கீழே சிந்தியது.

அழுது புலம்பும் குழந்தையின் வார்த்தைகளில் தெரிந்த வறுமையைவிட  அவளுக்கு, தரையில் சிந்திய டீயில் வறுமை அதிகம் தெரிந்தது. அழுத குழந்தையை அடித்து, மிரட்டி பன்னை வாயில் திணித்தாள். அவளுடைய டீயை குழந்தைக்குக் கொடுத்தாள். குழந்தைகளை மீண்டும் உறங்க வைத்துவிட்டு, ஒரு பன்ணை எடுத்து உண்ணத் தொடங்கினாள்.

வறண்டு போன அவளின் நாவினால் பன்னை விழுங்க முடியவில்லை. கண்கள் பிதுங்க மெல்ல விழுங்கினாள். கணவன் வந்ததும் அவனுக்கு டீயையும் பன்னையும் கொடுத்துவிட்டு, டீ தூக்கையும் டம்ளர்களையும் கழுவ தொடங்கினாள். தூக்கில் ஒட்டி இருந்த கடைசி டீ துளிகளை, நாவை வெளியில் தள்ளி, தூக்கை மெல்ல சாய்த்து, சொட்டிய நான்கு டீ துளிகளில் நாவை நனைத்துப் பெருமூச்சுவிட்டாள். ஒருநாள் பொழுதை எப்படியோ தள்ளியாகிவிட்டது. பொழுதும் விடிய தயாராக இருந்தது.

“இன்னைக்கு எப்படியாவது நாட்டார் கடையில கடன் சொல்லி அரிசி, பருப்பு வாங்கி சமச்சிக்கிறேன், நீ கொஞ்சம் சீக்கிரம் வந்துடு. துவச்ச துணிய எல்லாம் தரம் பாத்து பிரிக்கணும்.”

“சரிடி, இன்னைக்கு வெள்ளிக்கிழம யாரும் பழைய துணிய போட மாட்டங்க, நா சிக்கிரம் வந்துடுவேன், வந்து பிரிக்கலாம்”

“சரிங்க, நா போய் மிச்ச துணிய துவச்சி காய வைக்குறேன். கொழா காலியா இருக்கு.”

“யக்கா, உனக்கு அப்புறம் நா வருவேனு சொல்லுக்கா, நா என்னோட குடத்த வைச்சிட்டுப் போற, எவளாச்சும் வந்து முந்திக்க போறா, வம்பு பண்ணவே வருவாளுங்க. காப்ரேசன் தண்ணிய புடிச்சி நாங்க பொழைக்குறதுக்கு கூட இங்க பொறாமை. நா போய் புள்ளைங்கள அனுப்புறேன்”

“யக்கா, யக்கா இங்க வாயேன்.”

 “இன்னாடி வேணும் தனியா கூப்புடுறே?”

“இல்ல யக்கா, எங்க வூட்டு சைடுல ஒரு கல்யாணம் இருக்கு ஒரு நல்ல புடவையா இருந்தா தா, பத்திரமா திருப்பித் தந்துடுறேன்.”

”சரி டி நாளைக்குத் தரேன், கட்டின பிறவு பொடவைய நல்லா தொவச்சி திருப்பித் தரனும்”

“சரி கா, புள்ளைய அனுப்பு, நா இருந்து தண்ணீ புடிச்சித் தரேன்.”

“சரிடி நா வரேன்”.

“வும்ம் பொடவைய வாங்குற வரைக்கும் நல்லா பேசுவாளுங்க, திரும்ப வாங்கணும்னா நான்தான் நாயா அலையணும், ஏய், ஈஸ்வரி, கீழ கொடம் வைச்சிட்டு வந்து இருக்கேன், அமுலு அக்கா புடிச்சதும், நாமதான் புடிக்கணும், நீ போய் தண்ணிய புடிச்சி வை, நா துணியெல்லாம் வாரிகினு வரேன்.”

“யம்மா, நீயும் வாமா, நா மட்டும் போனா என்ன திட்டுறாங்க, வர தண்ணீ எல்லாத்தையும் நாமே புடிச்சிகுறோமா, அதனாலதான் தண்ணீக்குக் கஷ்டமா இருக்காம்,”

“ஆமாம்டி, ஊருல நா ஒருத்தி துணி அலசுறதாலதான், நாட்டுக்குத் தண்ணி பஞ்சம் வந்துடுச்சி. போடி, போய் பொழப்ப பாரு. கத்துறவ கத்துவா, நம்ம ஊட்டு அடுப்பு எரியிர வழிய நாமதான் பாக்கணும். அடுத்த ரெண்டு மாசத்துக்கு மழையும், குளிரும் வந்துடும், குப்பைய கொட்டக்கூட எவளும் வர மாட்டா, பழய துணிய எவ தருவா, வர காசு ஒரு வேள திங்கவே போதாது. தை மாசம் பொறக்குற வரைக்கும் சிங்கிள் டீக்கே சிங்கிதான் அடிக்கணும்.”

பழைய துணிகளை அள்ளிக்கொண்டு, நடைபாதையில் அமர்ந்து துவைக்கத் தொடங்கினாள். வெயில் உச்சிக்கு வரும் முன்பே துணிகளைத் துவைத்து, உலர வைத்தாள். பிறகு, சமையல், வீட்டு வேலைகள், பகுதி நேர வேலையாகக் கூடை முடைதல், பிள்ளைகளைக் கவனித்தல், காய்ந்த துணிகளைத் தரம் பார்த்து பிரித்தல் என்று இடைவெளி இல்லாமல் உழைத்தல். அவளின் ஒரே சந்தோஷம் அவளின் அழகான குழந்தைகள். ஆனால், பெண் குழந்தைகளைப் பார்க்கும் பொழுது நெருப்பைச் சுமப்பது போல் உணர்ந்தவள், சிறு வயதிலேயே அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க நினைத்தாள்.

முதல் இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தாள், திருமணமும் முடிவானது.

“ஏய், ஈஸ்வரி, தங்கச்சிய கூட்டிக்கிட்டு வாடி”

“இன்னாமா, எதுக்குக் கூப்பிட்ட?”

“இந்தாங்கடி, இந்த வாரம் வந்த துணிங்க, இதுல, நல்லதா பாத்து, நாலு சேலய எடுத்துக்கோங்க, கல்யாணத்துக்குச் சீர்வரிச பொட்டியில வைக்க.”

“யின்னா யம்மா, கல்யாணத்துக்குக்கூடப் புதுத் துணி வாங்கித் தர மாட்டியா? பழசதான் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் புதுசுனு சொல்லித் தருவ, நாங்களும் நம்பி போட்டுக்குவேம், மாமியார் வூட்டுல நம்புவாங்களா?”

“ஆமாம்டி, நீங்க ரெண்டு பெரும், சீமான் வூட்டுக்குப் போறிங்க புதுத் துணி ஒண்ணுதான் கொற, போற எடமாவது நல்லா இருக்காதானு பார்த்தா, எ பொழப்புத் தான்டி உங்களுக்கும், உங்க அப்பா, கந்த துணிய வித்து, அதுல வர காசுக்கு,  உங்களுக்குக் கஞ்சி ஊத்தவே முடியல, இதுல எங்க நல்ல மாப்புள, நல்ல துணி மணி, போங்கடி, போய் வேலையப் பாருங்க”.

இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடிந்தது, குழந்தைகள் இன்று குடும்பத் தலைவிகள். “எப்படியோ, ரெண்டு பொண்ண கர ஏத்தியாச்சுயா, மீதி ரெண்டையும் சீக்கிரமே கல்யாணம் பண்ணி அனுப்பிட்டா, பைய்யன நல்ல ஸ்கூலுக்கு அனுப்பலாம், கார்ப்ரேசன் ஸ்கூலுல நல்லாவே சொல்லித் தர மாட்டேங்குறாங்க, அதான்யா புள்ள செரிய படிக்க மாட்டேங்குறான், கடைசிக் காலத்துல அவதானே நம்ம பாத்துக்குவான்?”

“அடி போடி, நல்லா படிச்ச புள்ளைங்கள படிப்ப நிறுத்தி கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு, அதுங்களும் கார்ப்ரேசன் ஸ்குலுலதானே படிச்சுச்சி, இவன் படிக்காம மட்டைய வெச்சிகினு விளையாடிகிட்டு இருக்கான், எனக்குப் பின்னாடி அவனும் கந்த துணிதான் கிழிக்கப் போறான் பாரு.”

“அவன திட்டாம உனக்குத் தூக்கம் வராதே. பெரியவ வந்தாயா, அழுது வடிஞ்சுட்டு போனா, குடிச்சிட்டு வந்து தினமும் அடிச்சி பாடாபடுத்தி எடுக்குறானு பொலம்பிட்டுப் போனா, அழுது தீக்குறா, நம்ம வூட்டுல இருக்கும்போது தூங்கவே முடியல, அழுக்குத் துணி மூட்டைங்க மழ வந்தா நசநசனு  நாத்தம் அடிக்குது, வெயிலுக்குக் காத்த அடச்சி நிக்குதுனு அழுகுறா, இப்போ நம்ம வூட்டுக்கே வந்துடுறேனு அழுகுது பாவம், பெருசு ஒரு வாய் இல்லா பூச்சி,  சின்னது ஓடி வருது இன்னானு தெரியலயே, உன்னத்தன்யா பாத்துகுனே வருது, இன்னானு கேளு ”.

“யப்பா, யப்பா அந்தப் பக்கத்து மாடியில இருக்க யக்காங்க  எல்லாம் படிக்குற ஸ்கூலுக்கு அடுத்த வருசம் சேக்குறேனு சொன்னியே, இந்த வருசம் சேப்பியாப்பா? அவங்க எல்லாம் நல்லா படிக்குறாங்கப்பா, என்னயும் சேத்து விடுப்பா.”

“சரி, குட்டிமா அடுத்த வருசம் சேக்குரேன்.”

“போப்பா, போன வருசமும் அததான் சொன்ன, நீ அடுத்த வருசமும் அததான் சொல்லுவ அடுத்த வருசம் நானே போய்ச் சேந்துக்குவேன்”

“ஆமாம்டி, சும்மா யாராவது சேத்துக்குவாங்களா? காசு வேணாமா, போடி போய்த் தூங்கு, உங்க அப்பன் தெரு, தெருவா அலைஞ்சு பொழைக்குற பொழப்புக்கு, நல்ல ஸ்கூலுக்கு நீ போவியா? இந்த ஸ்கூலுக்கு அனுப்புறதே ஏதோ மதியானத்துல சோறு போடுறாங்கனுதான், இல்லனா உங்க அக்காளுங்க கூடவே ஓட்டிவிட்டு இருப்பேன். போடி போய் தூங்கு.”

“இந்தாயா, அதே பாரு நம்ம சின்ன பொண்ணு வூட்டுல இருந்து மாப்புள்ள மச்சா இந்த நேரத்துல வராரு, இன்னானு கேளு.”

“யக்கா, யன்னா உங்க பொண்ணு செத்து போச்சி யக்கா, ஏதே புருசன், பொண்டாட்டிகுள்ள சண்டையாம், புள்ளைய அடிச்சு இருக்கங்க, இன்னானு எனக்குத் தெரியல, வாங்கக்கா.”

ஐயோ என்று கதறி தரையில் விழுந்தள் காஞ்சனா. சுயநினைவு வந்த போது தன் மகளின் சடலத்தைக் கண்டு, கதறி அழுதாள்.

“ஐயோ, எவூட்டுல வசதி இல்லனு தானே, பச்சப்புள்ளைங்கள கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன், இப்புடி எம்புள்ளைங்க அவஸ்தப் படுதுங்களே, ஒருத்த தினமுன் குடிச்சிட்டு வந்து அடிச்சிக் கொல்லூறான், இவன் ஒரே அடியா அடிச்சி கொன்னுட்டானே” என்று தன் கணவனைப் பிடித்துக் கொண்டு கதறினாள்.

“நல்லா வாழுங்கனுதானே கடன, ஒடன வாங்கிக் கல்யாணம் பண்ணி வெச்சேன், இப்படி அடிச்சிக் கொன்னுட்டானே, அவன நாம சும்மா விடக் கூடாது புள்ள, அவன கம்பி எண்ண வைக்குறேனா, இல்லையானு பாரு.”

“போலிஸ் ஸ்டேசனுக்குப் போனா மட்டும் என்ன, என் புள்ள திரும்ப வரவா போகுது, கோர்ட்டு, கேசுனு அலைய நமக்குக் காசு, பணம் ஏது, இதுங்களுக்குக் கஞ்சி ஊத்தவே வழியக் காணும், போதும் சாமி, போதும் மிச்சம் இருக்குற புள்ளைங்களயாவது நல்லா படிக்க வைக்கணும்யா, அதுங்களாவது நல்லா இருக்கட்டும்யா, அதுங்களுக்கும் சீக்கிரமா கல்யாணத்தப் பண்ணி சாகடிக்க வேண்டாம், போயா, போயி மத்த காரியத்த பாரு, அவ போய்டா, அல்பாய்சு  மிச்சம் இருக்குற புள்ளைங்கல பாப்போம்.”

தன் மகளைக் கொன்றவனை, மன்னிக்கும் மனப்பக்குவம் அவளுக்கு இல்லை, ஆனால் அன்று, ஒரு தாயின் சோகத்தைவிட, மீதம் இருந்த குழந்தைகளின் எதிர்காலம் அவளுக்குப் பெரிதாகத் தெரிந்தது.  

“யக்கா, நா ஒரு அடிதான் அடிச்சேன், அவ கீழ விழுந்துட்டா, மண்டைல அடிபட்டு இப்புடி ஆயிடுச்சி, நா வேணும்னு ஒண்ணும் செய்யல.”

“நீ யாருடா என் புள்ளைய அடிக்க, உன்ன உங்க ஆத்தா, அப்பா ஒழுங்கா வளர்த்து இருந்தால் எங்க புள்ளைய அடிச்சி இருப்பியா? நா ஒழுங்கா வளர்க்கல, இல்ல நா என் புள்ள உங்கிட்ட அடி வாங்கி சாகுமா, வுன்ன கிழிச்சி மாலையா போட்டு இருப்பா, இனி எனக்கு முன்னாடி வந்து நிக்காத, உன்ன குத்திக் கொன்னுட்டு நா ஜெயிலுக்குப் போய்டுவேன். வாய தெறந்து பேசக்கூடத் தெரியாத, புள்ளப்பூச்சியா வளர்த்துட்டேனே” என்று தன் மகளைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

நாட்கள்   நகர்ந்தன. ஏழையின் சபதம் எத்தனை நாள் வாழும், மீண்டும் அதே தவறைச் செய்தாள். மற்ற குழந்தைகளுக்கும் திருமணம் முடித்து வைத்தாள். இப்பொழுது, கடைசி மகள், ”நா படிக்க நினைச்ச ஸ்கூலுல உங்கள படிக்க வைக்குறேன், நீங்க ரெண்டு பேரும் நல்லா படிக்கணும்” என்று தன் குழந்தைகளிடம் சொல்கிறாள். அதைச் சொல்வதும் ஒரு குழந்தை என்பதே  வறுமையின் இயலாமையின் உச்சக்கட்டம்.

தவம் இருந்து பெற்ற மகன், தந்தையின் தொழிலைத் தொடர்ந்தான். “ எங்க அப்பா கந்த துணி வாங்கி , வித்தாறு, ஆனா நா பட்டுத் துணி வாங்கி விக்குறேன்” என்று பெருமையாகப் பேசிக் கொண்டு, குலத்தொழிலைத் தொடர்ந்து செய்கிறான். ஒரே வித்தியாசம், இவன் மோட்டார் சைக்கிளில், “நல்ல விலைக்கு உங்கள் பழைய பட்டு புடவைகள் வாங்கப்படும்” என்று ஒலிப்பெருக்கியைக் கத்தவிட்டு தெரு, தெருவாக அலைகிறான். இவனின் தந்தை தன் நாக்கு வறண்டு போக, கால்வலிக்க மிதிவண்டியை மிதித்து தெரு, தெருவாக அலைந்து தேய்ந்தார்.

படைப்பாளர்:

எம்.கே. வனிதா. உயிர்வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பட்டிமன்றங்களிலும் பேசி வருகிறார்.