சனி, ஞாயிறு விடுமுறை என்றாலே எனது சொந்த  ஊருக்குச் செல்வது வழக்கம். தோட்டத்து வீட்டில் எனது அப்பாவும், அம்மாவும் மட்டும் தனியாக இருப்பார்கள். பேத்திகளின் வருகைக்காகவே காத்து கிடப்பவர்கள் இருவரும். என் அப்பாவுக்கு தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் கிடையாது. ஒரு நிமிடம் உட்கார மாட்டார். தோட்ட வேலைகளைப்  பார்த்தபடியே இருப்பார். அப்படி அலுத்து உட்கார்ந்தாலும், தென்னை நார் கிழிப்பது, ஈக்குச்சி சீவுவது என அந்த நேரத்தையும் வீணடிக்காதவர்.

அம்மாவுக்கு பெரும்பாலும் பேச்சுத் துணைக்கு ஆள் இருப்பதில்லை. நம்மைப் போன்று ஸ்மார்ட் ஃபோன்களையும் பயன்படுத்தத் தெரியாது. அம்மாவின் தனிமையைப்  போக்கும் ஒரே வழியாக இருந்தது தொலைக்காட்சிப் பெட்டிதான். எனக்கு தெரிந்து, நாங்கள் இல்லாமல் கூட ஓரிரு நாள்கள் இருந்துவிடுவார். ஆனால் தொலைக்காட்சிப்  பெட்டி இல்லாமல் ஒரு நாள்கூட இருக்க மாட்டார். அப்படி நாள் முழுவதும் பார்ப்பது என்னவோ  ‘சீரியல்கள்’தான். அடுப்படியில் சமையல் வேலைகளைச் செய்துக்  கொண்டே சீரியல்களின் வசனங்களைக் காதால் கேட்டுக் கொண்டிருப்பார்.

எங்களை அவ்வப்போது தொலைப்பேசியில் அழைத்தால்கூட,  விளம்பர இடைவேளை, அல்லது பிடிக்காத சீரியல் ஓடும் நேரத்தில்தான் அழைப்பார். பெரும்பாலும் அம்மாவுக்கு உதவியாக நான் சமைக்கும் நேரங்களில் அந்த நாடகங்களின் காட்சிகளை நானும் காண வேண்டி வரும். “வேறு சேனல் ஏதாவது மாத்தேன். எப்ப பாரு நாடகம் தானா?” என்று அம்மாவிடம் கேட்டாலும் அவர் மாற்ற மாட்டார்.

“உங்களுக்கு என்ன? வருவீங்க… போவீங்க… 25 வருஷமா எனக்கு ஆறுதலா, துணையா இருக்குறது இந்த நாடகம் தான். இது இல்லனா நான் என்னைக்கோ பைத்தியம் ஆகிருப்பேன்”, என்று ஒரே பதிலாகச் சொல்லி வாயடைத்துவிடுவார். 

அப்படி ஒரு நாள், ஒவ்வொரு நாடகத்திலும் என்ன கதை என்று என் அம்மாவிடம் கேட்டபோது அனைத்து தொலைக்காட்சித் தொடர்களிலும் பொதுவாக இருந்த கருப்பொருள்கள் –

  1. ஒரு ஆணுக்காக இரண்டு பெண்கள் அடித்துக் கொள்வது
  2. குடும்பப் பெண் என்றால் அமைதியாக, அடக்க ஒடுக்கமாக எவ்வளவு சோதனைகள் வந்தாலும் பொறுத்துக் கொண்டு வாழ்வது 
  3. ஒவ்வொரு நாடகத்திலும் மனைவி, கணவனை ‘சார், ஹஸ்பண்ட் சார், அர்ஜுன் சார், ப்ளா ப்ளா ப்ளா சார்’ என்று அழைப்பது
  4. திருமணத்திற்குப் பிறகு நிச்சயமாக ஒரு தாத்தாவோ, பாட்டியோ ஊரிலிருந்து வந்து புது மருமகள் சமத்தா? சமத்தில்லையா? என்று டாஸ்க் வைப்பது, அந்த டாஸ்க்குகள் என்னவென்றால் – சமையல் டாஸ்க், கோலம் போடும் டாஸ்க், கோயில் பரிகார டாஸ்க், விரத டாஸ்க் 
  5. குடும்பத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பெண் தான் வில்லியாக இருப்பாள். அவள் தீட்டும் திட்டங்கள் அனைத்தும் மிக மிக கொடூரமாக, கற்பனைக்கும் எட்டாதவையாக இருக்கும்.
  6. கணவனுக்கு பிரச்னை வரும்போது கோயிலில் உருண்டு புரண்டு, தன்னை வருத்திக் கொள்வது எல்லாம் குடும்பப் பெண்ணின் வேலை. இதையெல்லாம் யார் சரியாக செய்கிறார்களோ, அவரே சிறந்த மருமகள்.

எவ்வளவு முட்டாள்தனமான வேடிக்கைகளையெல்லாம் தொலைக்காட்சி மூலம் கடத்துகிறார்கள்? என்னுடைய சிறு வயதில் நாடகம் பார்ப்பதற்காகவே காத்து கிடந்த காலம் உண்டு. அந்த நாடகங்களில் இந்த அளவுக்கு அயோக்கியத்தனங்களும், நாகரிகமற்ற காட்சிகளும் கிடையாது. ஜீபூம்பா, மாயா மச்சிந்திரா, சக்திமான் போன்ற சிறுவர்களுக்கான நாடகங்களும், ஜான்சிராணி, வீரசிவாஜி போன்ற வரலாற்று நாடகங்களும், சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற நகைச்சுவை நாடகங்களும் இன்னும் பல குடும்ப நாடகங்களும் உண்மையாகவே குடும்ப உறுப்பினர்களை ஒன்றாக இணைத்து, உட்கார்ந்து பார்க்கத்தான் வைத்தது. ஏனென்றால், அந்த நாடகங்களில் யதார்த்த சூழல் இருந்தது. ஆபாசங்களைக் காட்டவில்லை. குடும்பப் பிரச்னை காட்சிகளும் இன்றைக்கு காட்டுவதைப் போல மிகக் கொடூரமாக இருக்காது.

இப்போது காட்டப்படும் எந்தத் தொடரிலும் பெண்கள் சாதாரணமாக பேசுவதே இல்லை. அதிலும் குறிப்பாக வில்லிகள் அடேங்கப்பா!!! எவ்வளவு கொடூரம்! சாதாரணமானவர்கள்கூட இவர்களைப் பார்த்தால் கொடூரம் ஆகிவிடுவார்கள். குடும்ப உறுப்பினரை அழிக்க தீட்டும் திட்டங்களை பார்க்க வேண்டுமே..? குடும்ப நாடகம் போல் இருக்காது. ‘கொலைகார நாடகம்’ போல் இருக்கும். 

அதிலும், கதாநாயகன் கதாநாயகிகள் செய்யும் லீலைகளை எப்படி காதல் என்று சொல்வது? ஒரு தொடரைக்கூட நம்பி பிள்ளைகளுடனோ குடும்பமாகவோ அமர்ந்து பார்க்க முடியாது. வயதானவர்கள்தான் வேறு வழியில்லாமல் பார்க்கிறார்கள் என்றால், இளம் பெற்றோர்கள் சிலர் தங்களுடைய சிறு பிள்ளைகளை வைத்துக்கொண்டு பார்ப்பது வேதனைக்குரியது.

எனது மகள் இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, 

“எனக்கு ஏன்ம்மா மஞ்ச கலர் மணி போட்டு விட்ட?” என்றாள்.

“அதனால என்ன? உன் யூனிஃபார்ம்க்கு அது மேட்ச்சா இருக்கும்” என்றேன்.

“இத ‘தாலி தாலி’னு பூர்ணிதா கிண்டல் செய்றா” என்றாள்.

“தாலியா..?”

“ஆமாம்மா… “

“வேற என்ன சொன்னா?”

“உன் கழுத்துல போட்டு இருக்குறது தாலி. உன் வயித்துல குட்டி பாப்பா இருக்கா? அப்படினு கிண்டல் செய்றா”, என்றாள். 

“என்ன? அப்படியா சொன்னா?” என்று ஒரு நிமிடம் அதிர்ந்தே போய்விட்டேன்.

“நீ என்ன செஞ்ச?” 

“மிஸ்கிட்ட மாட்டிவிட்டேன்.”

“மிஸ் என்ன செஞ்சாங்க?”

“எங்க ரெண்டு பேருகிட்டயும் என்ன நடந்ததுனு விசாரிச்சாங்க…”

“அப்புறம்..?”

“என்னை போகச் சொல்லிட்டு அவள கண்டிச்சாங்க” என்றாள்.

உடனே எனது மகளின் வகுப்பாசிரியருக்கு போன் செய்தேன். நான் கேட்பதற்கு முன்பாகவே, “நானே உங்களை அழைக்கலாம் என்று இருந்தேன்” என்றார். “என்ன மேம் இது? இரண்டாம் வகுப்பு பிள்ளைங்க இப்படி பேசுறது ஆச்சரியமா இருக்கு. மஞ்சள் கலர் மணி அந்த சிறுமிக்கு  தாலியாக தெரிந்திருக்கு” என்றேன்.

“ஆமாம் மேம் அவ வீட்டில் வளருர சூழல் அப்படி இருக்கு. அவளோட பிஹேவியர் இப்படித்தான் இருக்கு. நான் வேணும்னா உங்க பொண்ண இடம் மாத்தி உட்கார வைக்கிறேன்” என்றார்.

“பரவாயில்லை மேம், எப்போதுமே நல்லதும், கெட்டதும் இணைந்துதான் இருக்கும். அதற்காக  ஓடி ஒளிந்துகொண்டே இருக்க முடியாது. இதையும் கடந்து பழகட்டும். அந்தப் பெண்ணுடைய அப்பா அம்மாவிடம் சொல்லுங்கள்” என்றேன். 

“அவளுடைய அம்மாவிடம் ஏற்கனவே பேசிவிட்டேன். ‘அவள் நாடகம் பார்ப்பதால் இப்படி பேசுகிறாள்’ என்று சொல்கிறார்” என்றார். 

எனக்குத் தெரிந்து பிள்ளைகள், ‘கேட்டு வளர்வதை விட பார்த்து வளர்வதுதான் அதிகம்.’ நாம் எதை குழந்தைகளின் முன்பு காட்சிப்படுத்துகிறோமோ, அதைத்தான் அவர்கள் முதலில் செய்வார்கள். நாம் புத்தகம் படித்தால், குழந்தைகளும் புத்தகத்தை எடுத்து புரட்டுவார்கள். நாம் படம் வரைந்தால் அவர்களும் வரைய முயல்வார்கள். நாம் தவறாகப் பேசினால் அவர்களும் தவறாகத்தான் பேசுவார்கள். இதில் பிழை யாருடையது? அந்த ஆறு வயது சிறுமியை குறை சொல்வதில் என்ன ஆகப்போகிறது? சீரியல் பார்க்க அனுமதித்த பெற்றோர்கள்தான் அவளின் நடத்தைக்கு முழு பொறுப்பு.

கடந்த 2024, செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி அன்று, மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவின் தொடக்க நிகழ்வில், பாரம்பரியக் கலை நிகழ்ச்சியில் ‘அங்கே இடி முழங்குது’ என்ற கருப்பசாமி பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதைக் கேட்ட சில பள்ளி மாணவிகள் உணர்ச்சிவசப்பட்டு சாமியாடியதையும், அவர்களைப் பிடிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறியதையும், பிறகு அந்த மாணவிகள் மயக்கம் அடைந்து விழுந்த நிலையில் அவர்களின் மீது தண்ணீர் தெளித்து அமர வைக்கப்பட்டதையும், சமூக வலைதளங்களில் பார்த்தோம். பொதுமக்கள் சாமியாடினால், ‘இதெல்லாம் மூடநம்பிக்கை, மூடப்பழக்க வழக்கம்’ என்று சொல்லும் கல்விச் சூழலில் பயணம் செய்யும் மாணவிகளே இப்படி சாமியாடியது நமது கல்வி கட்டமைப்புக்கு வெட்கக்கேடு. 

கல்வி என்பது வகுப்பறையில் மட்டும் கற்பது கிடையாது. வீடுகளிலும், தெருக்களிலும், ஊர்களிலும் என ஒவ்வொரு இடத்திலும் நாம் கல்வி கற்கிறோம். ஆனால், அங்கெல்லாம் கல்வியைவிட மூடநம்பிக்கைதான் அதிகம் பரப்பப்படுகிறது. அதனை வேரறுக்கும் இடங்களாக பள்ளிக்கூடங்கள் இன்னும் தீவிரமாக இயங்க வேண்டும்.

கிராமத்தில் இருக்கக்கூடிய உலகம் அறியா பெண்களுக்கும், வேறு வழியில்லாமல் ஆள் துணையற்று  தொலைக்காட்சி முன்பு அமரும் வயதானவர்களுக்கும், இந்த ஊடகங்கள்  என்ன செய்கின்றன? எதைக்  கற்றுத்தருகின்றன? 

நல்ல கருத்துடைய, தன்னம்பிக்கை வளர்க்கக்கூடிய, ஒரு பெண் தனக்கான துணையை விரும்பி ஏற்று, பின்பு அந்த உறவில் பிணக்கு ஏற்பட்டாலும்கூட, மனம் ஒடிந்து விடாமல் தனித்து வாழும் துணிவைத் தராமல், ஆணுக்காக அடித்துக் கொள்ளும் பெண்களாகவே காட்டப்படும் கதைகளை எழுதுவது யார்? ஆண்களா? பெண்களா? 

ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் மட்டுமே வில்லியாக காட்டப்பட்டு, கொடூரங்களைச் செய்பவராக பெண்ணைக் காட்டும்  உங்களது கற்பனைகளை, ஒன்றும் அறியா மக்கள் மனதிலும் நஞ்சாகப் புகுத்தாதீர்கள். குடும்பப் பெண் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற உங்களது (அதாவது ஆண்களின்) ஆசைகளை தொடர்கள் மூலமாகச் சொல்லி, ‘ஓகோ… ஒருவேளை இப்படித்தான் இருக்க வேண்டுமோ?’ என இளம் தலைமுறையினரை நம்ப வைக்காதீர்கள். வரலாற்றில் எவ்வளவோ நல்ல கதைகளும், கதாபாத்திரங்களும், வாழ்க்கைப் பாடங்களும் கொட்டிக் கிடக்கின்றன. அதனை காட்சிப்படுத்துங்கள், நாடகங்களின் வழியே…

பெற்றோர்களும் தொடர்களில் பொழுதைக் கழிக்காமல் தங்களுடைய பிள்ளைகளின் நலனுக்காக அதனை விட்டொழியுங்கள்.

‘எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே…

அவர் நல்லவராவதும் தீயவராவதும் பெற்றோர் மற்றும் சமுதாய வளர்ப்பினிலே…’

படைப்பாளர்

தீபா ராஜ்மோகன்

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தீபா ராஜ்மோகன், M Sc, B Ed, M Phil (இயற்பியல்) படித்துள்ளார். காரைக்கால் அகில இந்திய வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராகப் பணொயாற்றியுள்ளார். பட்டிமன்றப் பேச்சாளராகவும் உள்ள இவர், புத்தகங்கள் வாசிப்பிலும், புத்தகத் திறனாய்வு எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர்.