‘குழந்தைக்கு ஆறு மாசம் இருக்கும்ல… குப்புற விழுந்துட்டாளா இல்லையா.. ஒரு வயசு முடிஞ்சிருச்சு இன்னும் எழுந்து நடக்கலையா… இரண்டு வயசு ஆகப்போகுது இன்னும் பேசலையா?’

ஒரு குழந்தை தன் வளர்ச்சியில் இந்த மாதத்தில் இதைச் செய்தே ஆக வேண்டும் என வகுப்பது எல்லாக் குழந்தைகளுக்கும் சாத்தியமாகுமா?

பதினோரு மாதத்தில் எழுந்து நடந்த குழந்தையையும் பார்த்திருக்கிறேன், இரண்டு வயதில் எழுந்து நடந்த அக்கா குழந்தையையும் பார்த்திருக்கிறேன். அவர்கள் இருவருக்கும் இப்போது பத்து வயது இருக்கும். இருவரின் வளர்ச்சியும் இப்போது சமமாகத்தான் உள்ளது. அப்படியென்றால் ஒவ்வொரு குழந்தைக்கும் வளர்ச்சியின் வேகம் சற்று மாறுபடும் அல்லவா!

ஆனால், மைல் ஸ்டோனாகச் சொல்லப்படும் சில அந்தந்தக் கட்டத்தில் நடைபெறாமல் போகும்போது ஒரு தாய்க்கு அது மன அழுத்தத்தைத்தான் கொடுக்கிறது.

மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் எண்ணம் நம்மை அறியாமல் நமக்குள் புகுந்து விடுகிறது.

சில நாட்கள் கழித்து தானாகவே அவள் அதைச் செய்யும்போது இதற்காகவா இவ்வளவு பதறினாய் எனத் தலையில் யாரோ கொட்டு வைப்பது போல் உரைக்கிறது.

என்னதான் இந்தப் புரிதல் இருந்தாலும் ‘ஏன் இன்னும் உங்க பொண்ணு நடக்கலையா?’ என யாராவது கேட்டுவிட்டால் குழப்பங்கள் ஏற்படத்தான் செய்கின்றன.

மருத்துவரிடம் செல்லும்போது இது போன்ற சந்தேகங்களைக் கேட்டால்…

“ஆக்ட்டிவ்வா இருக்காங்களா.. விடுங்க அவங்களே நடப்பாங்க.. ரொம்ப சோர்வா இருக்காங்க, நீங்க பேசுறதுக்கு ரெஸ்பான்ஸ் இல்லைனா பயப்படலாம்.. துறுதுறுன்னு இருந்தா சந்தோஷம்தான்.. வெயிட் போடல நடக்கலன்னு அவசரப்படாதீங்க” என்றார்.

சரி நன்கு சாப்பிட மட்டும் வைப்போம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்போம். மற்றதெல்லாம் பொறுமையாகக்கூட நடக்கட்டும் எனத் திட்டமிடும்போது அடுத்த பிரச்னை.

‘செரலாக்லாம் கொடுத்தாதான குழந்தை வெயிட் போடும்… பிஸ்கட் கொடுங்க அப்போதான் நல்லா பசி கட்டும்’ எப்படி விழிப்புணர்வே இல்லாமல் இந்த மாதிரியான அறிவுரைகளை மட்டும் சுலபமாகத் தந்துவிட்டுப் போகிறார்கள்.

பல வித அரிசிக் கஞ்சி, ராகி கஞ்சி, ஆப்பிள், பப்பாளி, வாழைப்பழம், சாதம், பருப்பு இப்படி ஆரம்பிக்கத் திட்டமிட்டு தொடங்கும்போது நம்மையும் இவற்றை ஊட்ட விடாமல் அறிவுரைகளால் காயப்படுத்துகிறார்கள்.

‘நல்லா ரசம் சாப்பாடு ஊட்டுங்க.. உப்பு காரம் நல்லா உரைப்பா போட்டுக் குடுங்க. அப்போதான் குழந்தை எல்லாமே பழகும். கடையில வாங்குறதுகூட ஊட்டிப் பழகிடுங்க அப்புறம் சேராம போய்டும்.’

ஆம், இதெல்லாம் செய்யத்தான் போகிறோம். ஆனால் ஆரம்பத்திலேயே ஏன் நான் இதைக் கொடுக்க வேண்டும்? ஒரு வயதிற்கு மேல் உப்பு காரம் சேர்க்கத்தான் போகிறேன். இரண்டு மூன்று வயதிற்கு மேல் வெளி உணவைக் கொஞ்சம் கொஞ்சமாக வேண்டும்போது சேர்த்துக்கொள்ளத்தான் போகிறேன். ஆனால், உணவு ஊட்ட ஆரம்பிக்கும்போதே என் குழந்தைக்கு ஏன் இத்தனை அறிவுரை.

அன்றொரு நாள் வேலை முடித்து களைப்பாக வீட்டிற்குத் திரும்பும்போது உறவினர்கள் இருவர் வந்திருந்தனர்.

“குழந்தைக்கு ஒரு வயசு முடிஞ்சிருச்சுல, வெளி பால்லாம் குடுக்க ஆரம்பிச்சிட்டிங்களா?”

“இப்போதான் ஒரு மாசமா குடிக்கிறா.. ஒரு நேரம் குடிப்பா ஒரு நேரம் குடிக்க மாட்டிங்கிறா” என்றார் என் அத்தை.

“சக்கரை கொஞ்சம் நிறையவே சேர்த்து இனிப்பா குடுங்க.. அடம் பண்ணாம குடிப்பாங்க.. சக்கரை சேர்த்துக்கிட்டா குழந்தைக்கு நல்ல ஜீரணம் ஆகும்” என்றார். உடனே என் குடும்பத்தார் அனைவரும் என்னை முறைத்தார்கள்.

பொதுவாக நான் குழந்தைக்குச் செய்யும் உணவில் மிகக் குறைந்த அளவே சர்க்கரை சேர்ப்பேன். ஒரு வயது குழந்தைக்குப் பின் எவ்வளவுதான் சேர்க்க முடியும். அது மட்டுமன்றி ஓர் உணவின் உண்மையான சுவையை என் மகள் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை எனக்கு உண்டு. பாலுக்கென்று ஒரு தூய சுவை உண்டு அப்படியே பழக்கட்டும் அவள் வளரும்போது அவளுக்கு அந்தச் சுவை பிடிக்காதபோது சர்க்கரை வேண்டும் என்றால் கலந்து கொள்ளட்டுமே. இப்போது பாலின் சுவையைக் காட்ட வேண்டியது என் கடமை அல்லவா. தாய்ப்பாலில் என்ன சர்க்கரை கலந்தா விரும்பிக் குடித்தாள்.

வீட்டில் உள்ளவர்கள் நான் செய்வதை ஓரளவிற்கு ஆதரித்தாலும் வெளியில் இருந்து வரும் அறிவுரைகளால் அவர்களும் குழம்பி, என்னையும்  வேதனைக்கு உள்ளாக்குகிறார்கள்.

தப்பு சொல்லவில்லை, அனுபவத்தில் அறிவுரைகள் கூறலாம் தவறில்லை. சர்க்கரை நோய் வந்து சர்க்கரை இல்லாமல் காபி குடித்துக் கொண்டே பாலில் சர்க்கரை சேர்க்கச் சொல்லும் அறிவுரையை என்னவென்று சொல்ல!

‘சாப்பிட அடம்பிடிச்சா விட்றாதிங்க.. போன்ன காமிச்சாவது ஊட்டிடுங்க.. இப்போ இருக்கப் பிள்ளைங்க போன் பாத்தாதான் சாப்பிடுறாங்க.” இப்படியெல்லாம் அறிவுரை சொல்வதுடன் அவர்களே அலைபேசியில் பாட்டைப் போட்டு கையில் கொடுக்கிறார்கள்.

நாங்கள் அலைபேசியை இன்னும் பழக்கவில்லை. எப்போதாவது ஒன்றிரண்டு பாடல் கேட்பாள் அவ்வளவுதான் என்றாலும் விட மாட்டேன் என்கிறார்கள்.

‘நீங்க கொடுக்கலைன்னாலும் அவங்களே பழகிக்குவாங்க. அதெப்படி போன் காட்டாம வளர்க்கப் போறீங்க’ என ச்சவால் விடுகிறார்கள்.

நாங்களும் தேவைக்கு அலைபேசியைக் கொடுக்கத்தான் போகிறோம். அதை எந்த வயதில் கொடுக்க வேண்டும் எவ்வளவு நேரம் கொடுக்க வேண்டும் எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்பதை நாங்களே தீர்மானிக்கிறோமே, ஏன் அறிவுரை என்கிற பெயரில் திணிக்கிறீர்கள்?

நெருங்கிய உறவினர் வீட்டிற்குக்கூட விளையாட அனுப்ப பயமாக இருக்கிறது. அங்கேயும் சிலர் அலைபேசியைத்தான் கொடுக்கிறார்கள். கீழே கிடக்கும் தலைக்கு தேய்க்கும் தைல மருந்து டப்பாவைக் கையில் எடுக்கிறாள் யாரும் கவனிக்கவில்லை. வீட்டில் நொறுக்குத் தீனி என்கிற பெயரில் பாக்கெட் சிப்ஸ், கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிடும்போது இவள் கையிலும் கொடுக்கிறார்கள். மின்சாரம் சார்ந்த பொருட்கள் ஆங்காங்கே இருக்க இயங்கிக் கொண்டிருக்கும் பொருளில் கை வைக்கப் போகிறாள்.

அந்தக் காலத்தில் குழந்தை வளர்ப்பு இவ்வளவு கடினமாகவும் இவ்வளவு பதட்டமாகவும்தான் இருந்ததா? ஆனால், ஒப்பிடுவது மட்டும் அந்தக் காலத்தோடு ஏன் ஒப்பிடுகிறார்கள்?

இப்போது இருக்கும் குழந்தைகளை வளர்ப்பதற்கு எவ்வளவு உழைப்பு போட வேண்டியுள்ளது.

என் அண்ணன் மகன் என் அண்ணியிடம் அலைபேசி வேண்டும் என அடம்பிடித்தான்.

“ம்மா எனக்கும் ஒரு போன் வாங்கித் தாங்க.”

“எதுக்குடா உனக்கு போன்? அதான் பாட்டெல்லாம் டிவிலயே போடறோம்ல…”

“இல்லம்மா நானும் அப்பா மாதிரி படுத்துக்கிட்டே போன் பாக்கறேன்.” ஒரு மூன்று வயது சிறுவனின் பதிலில் ஆச்சரியம் அடைந்தேன்.

மருத்துவர்கள் அலைபேசி தருவதை முடிந்த வரை தவிருங்கள், அது குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் என்கின்றனர். சாப்பிடும்போது கட்டாயமாகக் கொடுக்க வேண்டாம் என்கிறார்கள்.

நாம் ஒன்று குழந்தைகளுக்குத் தர வேண்டாம் என நினைத்தால் அதை நாமும் செய்யாமல் இருக்க வேண்டும். அப்போது அதற்காக எவ்வளவு மெனக்கெட வேண்டியுள்ளது.

ஒரு வயது குழந்தை செய்யும் சேட்டைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு, பின்னாலேயே அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு, அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு, அவர்கள் செய்யச் சொல்வதைச் செய்து கொண்டு நம் மன நலனையும் பாதுகாப்பது எவ்வளவு கடினமாக உள்ளது.

அப்படி நாம் மெனக்கெட்டு ஒவ்வொன்றாகச் சீர்ப்படுத்த முயற்சிக்கும்போது அறிவுரை என்கிற பெயரில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

“என்ன வேணும் செல்லத்துக்கு.. ஐஸ்கிரீம் சாப்பிட போலாமா.. கேக் வேணுமா.. சாக்லேட் வாங்கப் போலாமா.. சிப்ஸ் சாப்பட்றியா?”

ஒரு குழந்தையை மகிழ்விக்க இப்படிப்பட்ட உணவுகள் மட்டும்தான் இருக்கின்றனவா என்று நான் கேட்டால் உடனே எல்லோரும் என் பக்கம் திரும்பி விடுவார்கள். ஏன் இதெல்லாம் சாப்பிடாமல்தான் நீ வளர்ந்தாயா, ஓரளவுக்குக் கட்டுப்படுத்தலாம், எல்லாத்தையும் ஒதுக்கினால் குழந்தை உன் பேச்சே கேட்காது என்பார்கள்.

நானும் சிறு வயதில் சாக்லேட், ஐஸ்கிரீம் சாப்பிட்டுதான் வளர்ந்தேன். ஆனால், அதில் இத்தனை வகைகளும் இத்தனை வண்ணங்களும் அப்போது இல்லை.

அவளுக்கும் எல்லாமே கொடுக்கத்தான் போகிறேன். கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னாளில் வேண்டும் போது சேர்த்துக்கொள்வேன். இப்போது என்ன அவசரம்?

நானே இவற்றைத் தரலாம் என நினைக்கும்போது சமூக வலைத்தளங்களில் வரும் ஹெல்த் வீடியோக்கள் மேலும் நம்மைப் பயமுறுத்தி மன அழுத்தம் தருகின்றன.

ரொம்பவும் கட்டுப்படுத்த வேண்டாம் பார்த்துக் கொள்ளலாம் என விடவும் முடியவில்லை.

ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டபோது வெட்டிய கேக்கை என்னை மீறி என் மகளுக்கு ஊட்டி விட அடுத்த வாரம் முழுவதும் அதீத இருமல் சளியால் பாதிக்கப்பட்டாள்.

மூன்று நாட்கள் தொடர்ந்து நெபுலைசர் வைக்க வேண்டிய கட்டாயம். வைத்துக் கொள்ள மாட்டேன் என அவள் கதறி அழ, அவளை இறுக்கிப் பிடித்து வைத்துக் கொண்டே நானும் கண்ணீர் சிந்தினேன்.

இப்போது எங்கே போனார்கள் அறிவுரைகள் சொன்னவர்களும் வேண்டாததைத் திணித்தவர்களும்?

(தொடரும்)

படைப்பாளர்:

ரேவதி பாலாஜி

சேலம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்சமயம் ஈரோட்டில் வங்கிப் பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்தே தமிழ் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை ஏற்படுத்துகிற தாக்கங்களைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்து வருகிறேன். மைவிகடன் இணைய தளத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். கடந்து ஆண்டு சஹானா இணைய இதழ் நடத்திய நாவல் 2023-24 போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளேன். அதில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிற தலைப்பில் நான் எழுதிய நாவல் புத்தகமாகவும் வெளிவர உள்ளது.