இன்றைய சூழலில், இதை பற்றி பொதுவெளியில் பேசுவதே தவறு என்பதுபோல, நாம் நடமாடிக் கொண்டிருக்கின்றோம். நாம் பேசாமல் இருந்துவிடலாமா? கூடாது!
பொதுவாக ஞாயிறு விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், எரிச்சலுடன் இருப்பார்கள் (பெரியவர்களுக்கும்கூட அதே மனநிலை தான்). அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிக்குச் செல்லும்பொழுது, குழந்தைகளின் மனம் படும் பாட்டைப் பற்றி சொல்லவே வேண்டாம். எதையோ தொலைத்து விட்டு பள்ளிக்கு செல்வதாகவே மனம் வெதும்புவார்கள். பெரும்பாலான குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பி வரும்போதே, இயல்புக்கு திரும்பியிருப்பார்கள். நண்பர்களை சந்தித்த துள்ளலுடன் வருவார்கள். ஓரிரு குழந்தைகள் மட்டும் விதிவிலக்காக இருப்பார்கள். அவர்களும் ஓரிரு நாளில் வழமைக்குத் திரும்பியிருப்பார்கள்.
ஆனால், வேறு மாநிலங்களிலிருந்து பிழைப்புக்காக இங்கு வந்து குடியேறி இருக்கும் குடும்பங்களை சார்ந்த பள்ளிக் குழந்தைகளின் மனநிலை, பள்ளிச் சூழல் பற்றி நாம் பேசியிருக்கிறேன்றோமா? அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? புதிய பள்ளிக்கு செல்லும் ஏனைய குழந்தைகள்போல விரைவில், இயல்புக்குத் திரும்புவார்களா?
இன்று தமிழகத்தின் குக்கிராமங்களில்கூட, வேறு மாநிலத்தவர்கள் குடும்பங்களோடு வசிக்கின்றார்கள். வறுமைக்கோட்டை ஒட்டியோ அல்லது அதற்கு சற்று மேலாகவோ வாழும் மக்கள் அவர்களுக்கு அருகாமையில் இருக்கும் பள்ளிகளையே நாடுவர்.
வெளிமாநில நடுத்தர வர்க்கத்தினருக்கும் மற்றும் மேல் தட்டு வர்க்கத்தினருக்கும் பிரச்சனையில்லை. அருகிலுள்ள நகரங்களில் ஆங்கில வழிக்கல்வியில் பள்ளிக் கல்வியை தொடங்குவர் அல்லது தொடருவர். இரண்டாம் மொழியாக இந்தியையோ, பிரெஞ்சையோ அல்லது சமஸ்கிருதத்தையோ தேர்ந்தெடுக்கலாம். தேவைப்பட்டால் விரும்பும் எம்மொழியையும் தேர்ந்தெடுக்கலாம்.
முதன்முதலாக பள்ளிக்குள் அடியெடுத்து வைக்கும் குழந்தைகளுக்கு தாய்மொழியல்லாத ஏனைய மொழிகளில், எழுதக் கற்பதும், வாசிக்கக் கற்பதும் மிகுந்த சிரமத்தைத் தரும். தாய்மொழி தமிழல்லாத குழந்தைகள், ஆரம்பக் கல்வியை தமிழ்வழியில் கற்க ஆரம்பிக்கையில், கொஞ்ச நாள்களுக்கேனும் சுணக்கம் காட்டுவர். பல குழந்தைகளுக்கு வீட்டிலேயே தமிழ், இரண்டாவது பேச்சு மொழியாகியிருக்கும். அதனால், பள்ளியில் பெரிதாக சிரமமிருக்காது.
ஆனால், வேற்று மாநிலத்தவர் குழந்தைகளுக்கு?
குறிப்பாக ஒரிய, அஸ்ஸாம், பீகாரி, மராத்தி பேசுபவர்களின் பிள்ளைகளுக்கு அவரவர்களின் தாய்மொழியும், வெளியே அவர்கள் மற்ற வேற்று மாநில குடும்பத்தவர்களுடன் பேசும் இந்தியும், அவர்கள் வாழ்விடத்து மொழியான தமிழுமென மூன்று மொழிகள் அவர்களைச் சூழ்ந்திருக்கும்.
இருக்கின்ற மொழிப் பிரச்சனை போதாதென்று,வேற்று மாநில பிள்ளைகளுக்கு, நான்காம் மொழியாக ஆங்கிலம், இன்னொரு மொழிப் பாடம் வடிவில் வந்து சேரும். அதாவது,பள்ளியில் முதன்மை மொழியாக தமிழும், இரண்டாம் மொழியாக ஆங்கிலமும்.
படிப்பறிவு குறைந்த பெற்றோர்களுக்கு தங்கள் தாய்மொழியை வாசிக்குமளவுக்கும், எழுதுமளவுக்கும் திறம் இருக்குமா என்றால் சந்தேகமே! இந்நிலையில், புதிதாகக் குடியேறியிருப்பவர்கள் தமிழ் மொழியை பேசுவதற்கே மாதங்களோ, வருடங்களோ ஆகும். சிலருக்கு, இந்தி மொழி பேசுவதிலேயே சிரமம் இருக்கும். இந்நிலைமையில் அவர்களோடு வரும் பிள்ளைகளின் நிலை?
எழுத, வாசிக்க சிரமப்படுவதைப்போல பேசுவதிலும், நட்பு பாராட்டுவதிலும்கூட அவர்கள் மிகுந்த சிரமங்களையே சந்திப்பார்கள். கல்வி மற்றும் ஆசிரியர்களின் மீதான எரிச்சல், வெறுப்பு போன்றவற்றை மடைமாற்றி பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறாமல், பிடித்து இழுத்து வைப்பவர்கள் நண்பர்களே. இப்பிள்ளைகளுக்கு அதுவும் எளிதாக கிடைக்குமா என்றால், கடினந்தான்!
சில மாதங்களுக்கு முன்பு, புறநோயாளிகள் பிரிவிலிருந்தபோது, பதின்ம வயது சிறுவன் சீட்டை நீட்டினான். “ரெண்டாவது ஊசி… நாய்க்கடி…” என்று திக்கித்திணறிப் பேசினான்.
சீட்டு புதிதாக இருக்கவும், “பழைய சீட்டு எங்கே பா? முதல் ஊசி எப்ப போட்டது?” என்றேன். “இல்ல…” என்றான்.
நாய்க்கடி ஊசியை சிலர் வரிசைக் கிரமமாக போடாமல் விட்டு விடுவர். அது பலனளிக்காது என்பதால், முன்பு போட்ட நாய்க்கடி ஊசி குறித்தும், கடித்த நாய் குறித்தும் விசாரிப்போம். அவரிடமும் விசாரித்தேன்.
அச்சிறுவன் விபரம் ஏதும் சொல்லாமல் சிரமப்பட்டதால், “கூட யார் வந்திருக்காங்க… எந்த ஊர்?” என்றேன்.
“ …” ஒரு சிற்றூரை சொன்னான். அவன் சொல்லும்போதே சிறுவன் வடநாட்டை சேர்ந்தவன் என்று தெரிந்தது. உடன் யாரும் வரவில்லையென்று எங்களின் உதவியாளர் கூறினார்.
“முன்னாடி ஊசி போட்ட டேட்டை காலண்டர்ல காண்பி…” என்றேன். அருகிலிருந்த காலண்டரில் தேதி காண்பித்தான். தேதியை தமிழில் சொல்ல தெரியவில்லை. ஆங்கிலத்தில் சொல்லவும் தெரியவில்லை. தடுமாறினான்.
“இந்தி தெரியுமா?”என்றேன். பேச கொஞ்சம் தெரியும். எழுத, வாசிக்கத் தெரியாது என்றான். எனக்கு இந்தி தெரியாது. அங்கிருந்த எவருக்காவது இந்தி தெரியுமா என்று விசாரித்தேன். அங்கு எவருக்கும் இந்தி தெரியவில்லை.
(நான் மாநிலத்தின் இருமொழிக் கொள்கையை ஆதரிக்கிறேன். எனக்கு விருப்பமிருந்தாலோ, தேவைப்படும் பொழுதோ இன்னொரு மொழியை கற்றுக்கொள்வேன். அதற்கு யாரும் தடை சொல்ல முடியாது. அதை எவராலும் மறுக்கவும் முடியாது!)
வேறு வழியின்றி, நான் தமிழ், ஆங்கிலம் கலந்து கேள்வியெழுப்பினேன்.
“எந்த ஸ்டேட்…?”
“ஒரிசா…” என்றான்.
சிவகாசியில் படிப்பதாகவும், கடந்த நான்காண்டுகளாக தமிழகத்தில் இருப்பதாகவும் உடைந்த தமிழில் கூறினான். அவ்வூரில் அவனுடைய தந்தை வேலை செய்வதால் அங்கு வந்ததாகச் சொன்னான்.
மறு ஊசி போடும் தேதியை குறித்துக் கொடுத்து, காலண்டரில் காண்பித்து அனுப்பினோம். அதே நாளில், அங்கு வந்த நாய்க்கடி தடுப்பூசி போடும் பள்ளிப் பிள்ளைகளில் அவன் மட்டுமே பெற்றவர்களின்றி தனித்து வந்தவன்.
ஓரிரு பிள்ளைகள் பெற்றோரின்றி தனித்து வந்தாலும், சூழ்நிலையை துணிச்சலாகவே எதிர்கொள்வர். சில சிறுவ, சிறுமியர் தோழமைகளுடன் வருவார்கள். இச்சிறுவனைப் போன்று அச்சங்கலந்த பார்வையோடு, பிள்ளைகள் தனியாக வந்ததில்லை. அச்சிறுவனோடு தாயோ, தந்தையோ உடன் வந்திருந்தால், அவர்களின் அரைநாள் கூலி போயிருக்கும்.
இவனைப் போன்றே, பலருக்கும் அவரவர் சொந்த ஊரில்/மாநிலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பு அமைந்திருக்காது. இவர்களின் எதிர்காலம்?
ஒரு வகையினர், ஆரம்பக்கல்வியை தமிழில் தட்டு தடுமாறி கற்க ஆரம்பித்து, எட்டாம் வகுப்பு வரையில் கற்கலாம். இரண்டாம் வகையினர், அதிபுத்திசாலிக் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், பள்ளிக் கல்வியை முடித்து, கல்லூரிக்குள் நுழையலாம். மூன்றாம் வகையினர், குழந்தைகள் பள்ளிக்கல்வியை முடிக்காமல் இடைநிற்கலாம். நான்காம் வகையினர், ஆரம்பக்கல்வியோடு நின்றுவிட்டு, உடலுழைப்பு தொழிலாளர்களாக மாறலாம். ஐந்தாம் வகையினர், அவரவர் சொந்த மாநிலத்தில் விடுதியிலோ/ உறவினர் வீடுகளிலோ தங்கிப்படிக்கலாம்.
இன்றைய நாளில், ஆயிரக்கணக்கான பிள்ளைகள் இச்சூழலில் இருக்கலாம். அவர்களுக்கு நமது அரசாங்கம், சிறப்பு ஏற்பாடுகள் செய்து, மூன்றாம் மொழியான இந்தியைக் கற்பிக்கிறதா என்று தெரியவில்லை.
அவரவர் தாய்மொழியை அரசாங்கமே கற்பிக்க முயற்சிப்பதென்பது நடவாத காரியம். தொண்டு நிறுவனங்கள் களமிறங்கி, இதைச் செய்யலாம். செய்கிறார்களா என்று தெரியவில்லை.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ‘தமிழ் வழி கற்போம்’ என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி மையங்கள் சில மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவை இன்னும் பரவலாக்கப்பட வேண்டும்.
‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’, தன்னிடம் வந்தவர்களை, கல்வி விசயத்தில் கைபிடித்து கூட்டிச் சென்றால், அவர்களின் அடுத்த தலைமுறையினர் பட்டதாரிகளாகலாம்.
நடக்குமா?
நடந்தே ஆக வேண்டும்!
பார்ப்போம்!
படைப்பாளர்
தேவி பிரபா
மனநல மருத்துவரான மரு. தேவி பிரபா கல்யாணி, இருபதாண்டுகளாக அரசு மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். ‘தேவி பிரபா’ என்ற பெயரில் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், புதிர்ப் பகுதிகள் எழுதி வருகிறார்.
புலம் பெயர்ந்த குழந்தைகளின் கல்வி நலன் சார்ந்த முக்கியமான பிரச்சினையைப் பேசும் கட்டுரை அருமை. இவர்களின் மொழிசார்ந்த பிரச்சினைக்கு அவசியம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாராட்டுகள் தேவி!
நன்றி கலையரசி மா. எடுப்பார்கள் என்றே எண்ணுகின்றேன். தமிழகம் முழுவதும் “தமிழ் வழி கற்போம்” என்ற திட்டம் விரிவுப்படுத்தப்பட வேண்டும்.
– தேவி பிரபா
Nice Article
நன்றி மா