நான் பெரி மெனோபாஸைக் கடந்தது போல பல பெண்கள் கடந்து கொண்டிருக்கக்கூடும். என்னிடம் நிறைய பெண்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை எனக் கேட்டிருக்கிறார்கள். மருந்துகள் துணையோடுதான் பலரும் இந்த நெருக்கடி காலத்தைக் கடக்கிறார்கள் என்றாலும், மருந்துகள் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வருமே தவிர, முற்றிலும் நிறுத்தாது. கர்ப்பப்பை எடுப்பதைச் சில மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும், எனக்குச் சிகிச்சை கொடுத்த மருத்துவர் முடியாது என்று கூறிவிட்டார்.
நாற்பது நாட்களுக்கு மேலான உதிரப்போக்கு ஹீமோகுளோபின் அளவைக் குறைக்க, மீண்டும் அலோபதி மருத்துவரிடம் தஞ்சம் அடைந்தேன். ஸ்கேன், பயாப்ஸி எனப் பரிசோதனைகளின் முடிவில் எனக்குக் கட்டிகள் இல்லை. ஆனால், எண்டோமைட்ரியோஸிஸ் எனத் தெரிந்தது. (அதுவும் எனது மூட் ஸ்விங்கிற்குக் காரணமாக இருந்திருக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்.) அதற்கு எனது மருத்துவர் பரிந்துரைத்தது ஹார்மோர்ன் மாத்திரைகள். தொடர்ந்து ஆறு மாதங்கள் எடுக்க வேண்டும் என்றார்.
நான் உதிரப்போக்கால் நொந்து போய் இருந்த நிலையில், கர்ப்பப்பை எடுத்துவிட்டால் தேவலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தேன். ஆனால், மருத்துவர் மறுத்துவிட்டார். அடுத்து ஹார்மோர்ன் மாத்திரைகள் தொடங்கினேன். அதற்கு பக்க விளைவுகள் இருக்கும். ஆனால், இதற்கு இந்த முறைதான் வேறு வழியில்லை என்றார். ஹார்மோர்ன் மாத்திரைகள் ஆரம்பித்தேன். மாதவிடாய் மாதா மாதம் என்ற இயல்புக்கு திரும்பினாலும் ஏழு, எட்டு நாட்கள் வரை அதீத உதிரப்போக்கு நீடிக்கும். மூன்றாம் நாளில் இருந்து உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் உட்கொள்ள படிப்படியாகக் குறைந்து ஏழாம் நாள் அல்லது எட்டாம் நாள் நீடிக்கும். இதில் இந்த மாத்திரைகள் காரணமாக வயிறு வலி (அல்சர் வலி) வேறு இருக்கும்.
இதனிடையே ஹார்மோர்ன் மாத்திரைகள் உடல் எடையை அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. பிபி எகிற, மூட்டு வலியும் தொடங்கியது. கைனோவிடம் செல்ல அவர் கார்டியாலஜிஸ்ட் பரிந்துரைத்தார். அவர் பிபிக்கு மாத்திரைகள் தொடங்கினார். மூன்று வேளை அதற்கும் மாத்திரை. ஒரு காலகட்டத்தில் கைப்பிடியளவு மாத்திரை மூன்று வேளையும்.
என் உடல் எடை, அதன் காரணமாக மூட்டு வலியும் பயமுறுத்த மீண்டும் தீவிரமாக உடற்பயிற்சிகள் ஆரம்பித்தேன். ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் உடற்பயிற்சி, யோகா ஆகியவை ஓரளவு பெரி மெனோபாஸ் தீவிரத்தைக் குறைத்தது. ஆனால், தொடர்ந்து செய்ய முடியாமல் மகன் திருமணம், அது சார்ந்த வேலை, வேலைக்குச் சென்று வந்ததில் சோர்வு ஆகியவற்றால் தொடர்ச்சியாகச் செய்யவில்லை.
ஆறு மாதம் எடுத்துக்கொண்ட ஹார்மோர்ன் மாத்திரை, பல தாக்கங்களை ஏற்படுத்தினாலும், ஆறு மாதத்திற்குப் பின் எடுத்த ஸ்கேனில் எனது எண்டோமைட்ரியாஸிஸ் என்கிற கர்ப்பப்பை வெளி சுவற்றின் தடிமன் குறையத் தொடங்கி இயல்புக்கு திரும்பியது. மருத்துவர் ஹார்மோர்ன் மாத்திரைகளை நிறுத்தினார். ஆனால், ஒவ்வொரு மாதமும் உதிரப்போக்கு மூன்று நாட்களுக்கு மேலும் தொடர்ந்தால், உதிரப்போக்கு குறைக்கும் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். எடுக்காமல் விட்டால் மீண்டும் இதே போல எண்டோமைட்ரியாஸிஸில்தான் முடியும், அதன் பின் மீண்டும் ஹார்மோன் மாத்திரைகள் தொடர நேரிடலாம் என்றார்.
ஆக மழை விட்டும் தூவானம் விடாத கதையாகதான் அதன் பின்னும் மாதவிலக்கு தொடர்ந்தது. இது என் மனதின் சமநிலையை வெகுவாகப் பாதித்தது. ஒரு காலகட்டத்தில் மாதவிலக்கு ஆரம்பித்தாலே பீதியடைவேன். ஐயோ எத்தனை நாளோ என்று. அப்போது சிலர் ஹோமியோ பரிந்துரைக்க, ஹோமியோ மருத்துவமும் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.
ஹோமியோ மருந்துகளும் தொடர்ந்து மாதக்கணக்கில் சாப்பிட்டதில் அதீத உதிரப்போக்குக் கொஞ்சம் குறையத் தொடங்கியது. அத்துடன் அதீத உதிரப்போக்கு குறைய எடுத்த அலோபதி மாத்திரையின் பக்கவிளைவான அல்சர் தொல்லையும் இல்லாமல் இருந்தது. ஹோமியோவும் தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும். ஆறு மாதம் தொடர்ந்து எடுத்தேன். அதன் பின் மாதவிலக்கு மெல்ல மெல்ல இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, கடைசியாக ஆறு மாதம் முன்பு என்ற அளவில் நின்றது. அலோபதி மருத்துவரிடம் அவர் குறிப்பிட்ட காலம் வரை பரிசோதனைகள் தொடர்வதை மட்டும் நிறுத்தவில்லை. 2022 இறுதி வாக்கில் வந்தது அதன் பின் வரவில்லை என்றாலும் மருத்துவர் ஓராண்டு முடிந்த பின் மீண்டும் ஸ்கேன், பயாப்ஸி எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
2014 இல் கால் வலியில் ஆரம்பித்தது, அதனைத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒன்று மாற்றி ஒன்று என 2022 வரை அது தொடர்ந்தது.
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள். ஒரு கட்டத்தில் என் நிலை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் வேலையை விட்டுவிட சொன்னார்கள். மருத்துவர்கூடப் பரிபூரண ஒய்வு சீராக்க உதவும் என்றார். ஆனால், அத்தனை வலி, வேதனை அனைத்திற்கும் வேலை அது கொடுத்த பொருளாதார சுதந்திரம் மட்டுமே எனக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது. ஏனென்றால் எதிர்மறை எண்ணங்கள் சுழன்றடிக்கும் போது, எது ஒன்றிலாவது முழு முற்றாக மூழ்கிப்போவது என்னைப் பல மன உளைச்சலில் இருந்து காப்பாற்றியது. அதனால் நான் வேலையைவிட மறுத்துவிட்டேன்.
சில நேரம் நள்ளிரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென படபடப்பு ஏற்பட்டு, ஏஸியிலும் வியர்வை பெருகும். இரவு ஆழ்ந்த தூக்கமிருக்காது. அதே போல திடீரென குளிரில் உடல் நடுங்கும். சில நிமிடங்கள் நீடித்து பின் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். இது பெரும்பாலும் இதயம் சம்மந்தப்பட்டதில்லை ஹாட் ப்ளஷ் என்றார் மருத்துவர். ஹார்மோன்களின் தாறுமாறான ஏற்ற இறக்கத்தின் விளைவு. சிலருக்கு மார்பில் பாரத்தைச் சுமப்பது போன்ற வலியிருக்கும். அந்த வலி நெஞ்சை அடைப்பது போல, மூச்சு முட்ட செய்வது போலத் தோன்றும். இது பீரியட்ஸ் முடிந்தவுடன் சரியாகிவிடும்.
ஹார்மோன்களின் தாறுமாறான சுழற்சி காரணமாக பீரியட்ஸ் ஆரம்பிப்பதற்கு முன் தலைவலி ஆரம்பித்து பீரியட்ஸ் முடியும் வரை தொடரும். ஏற்கெனவே மைக்ரேன் தலைவலியால் அவதிப்பட்டு வந்த நான் பெரி மெனோபாஸின் ஆரம்பக் கட்டத்தில் தலைவலியின் உச்சத்தை அனுபவித்தேன். இந்த எட்டாண்டுகளில் பல்வேறு வலிகள் இருந்தாலும், அதற்கு முன்வரை என்னைப் படுத்தி எடுத்துக் கொண்டிருந்த மைக்ரேன் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. மண்டையே வெடித்துவிடும், வெளிச்சம் பார்க்க முடியாது, ஒலிகள் எதையும் கேட்க முடியாது, வலி, எதற்கும் கட்டுப்படாத வாந்தி ஆகியவற்றால் அவதிப்பட்டுக்கொண்டு இருந்த நிலையில், கிட்டத்தட்ட முற்றிலுமாக அதில் இருந்து நலம் பெற்றிருக்கிறேன்.
ஒரு சில பெண்களுக்கு இந்தக் காலகட்டத்தில்தான் தைராய்ட் பிரச்னைகள் ஆரம்பிக்கும். எனக்கு மருத்துவர் அடிக்கடி தைராய்டு பரிசோதனைகள் பரிந்துரைத்தார். ஏற்கெனவே ஏகப்பட்ட ஹார்மோன்கள் வீராவேசமாக எனக்குள் போர் புரிந்துகொண்டிருந்ததால், தைராய்டு சற்றே அடக்கி வாசித்தது போலும், தைராய்டு இருக்கும் சில பெண்களுக்கு மாதவிலக்கு மெல்ல குறைந்து நாற்பதுக்குள் முற்றிலுமாக நின்றுகூட போகலாம். ஆனால், தைராய்டு ஹார்மோன்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் பிறகுதான் ஆரம்பிக்கும். உடல் எடை அதிகரிப்பது அல்லது குறைவதில் ஆரம்பித்து தைராய்டு சுரப்பைப் பொறுத்துப் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். சிலருக்கு விட்டமின் டி குறைபாடு ஆரம்பிக்க, அது பக்கவிளைவாகப் பலவற்றை ஏற்படுத்தும் என்பது தோழிகள் சிலரிடம் பேசியபோது தெரியவந்தது.
நாற்பதில் உடல் பிரச்னைகளைப் பார்த்துப் பயந்து தன்னை முடக்கிக்கொண்ட பெண்கள் வேறுவித மனச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். தனிமைதான் பல நேரம் ஆறுதல் என்றாலும், அந்தத் தனிமையை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம், நம் உடல் சார்ந்த பிரச்னைகளை, வலிகளை முறியடித்து இந்தப் பெரி மெனோபாஸ் காலகட்டத்துக்குப் பின்னும் ஓர் அழகான வாழ்கை காத்திருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கு நம்மை எப்படித் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
(தொடரும்)
படைப்பாளர்:
கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.