பெண்களின் பாதுகாப்பின் மேல் அக்கறை கொண்டவர்களின் கருத்து என்பது, பெரும்பாலும் மூன்று விஷயங்களை சுற்றிதான் வருகிறது.

பெண்கள் எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும், எப்பொழுதும் ஏதேனும் ஒரு ஆயுதத்தைப் பையில் வைத்திருக்க வேண்டும், தற்காப்புக் கலை தெரிந்து வைத்துக் கொள்வது இன்னும் நல்லது.

அதாவது பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆண்கள் அப்படிதான் இருப்பார்கள், நீதான் உன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பொறுப்பை மொத்தமாக பெண்களின் தலையில் ஏற்றி வைப்பது, பின்னர் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நீ ஏன் இதையெல்லாம் செய்யவில்லை என்று வகுப்பெடுக்கத் தொடங்குவார்கள். இவை எல்லாவற்றையும் பின்பற்றும் பெண்களும் கூட பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிறார்கள். ஆனால் அப்போது சமூகம் வேறு விதமாக கேள்வி கேட்கும். அந்த நேரத்தில் உனக்கு அங்கே என்ன வேலை? அப்போது நீ என்ன உடை அணிந்திருந்தாய்? யாருடன் இருந்தாய்? என்ன செய்து கொண்டிருந்தாய்?

வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம்கூட பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. தூங்கும்போதுகூட பெண்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும், ஆனால் இத்தகைய வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எந்த அறிவுரையும் கிடையாது.

பாலியல் வன்முறையில் இருந்து தற்காத்துக் கொள்ள பெண்கள் எப்போதும் தங்கள் கைகளில் பெப்பர் ஸ்பிரே அல்லது சிறிய கத்தி வைத்திருக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் அறிவுரை. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள பெண்களை ஆயுதமேந்தச் சொல்பவர்கள் ஒரு விஷயத்தை யோசித்துப் பார்த்தார்களா? இங்கே ஆறு வயது பெண் குழந்தைகள்கூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். அந்த குழந்தை எந்த கத்தியை எடுத்து வீசும்? இன்னும் சொல்லப்போனால், இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அந்தக் குழந்தைக்குத் தெரிந்தவர்களாகவோ, உறவுமுறையினராகவோதான் இருக்கின்றனர்.

கைப்பையில் சிறிய ரகக் கத்தியுடன் பொதுப் போக்குவரத்துகளில் பயணிக்கும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அந்த சின்னஞ்சிறிய பேனாக் கத்தி இந்த ஒட்டுமொத்த ஆண்களின் மீது அந்தப் பெண் வைத்துள்ள நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது. அந்தக் கத்தியையும் மீறி அந்தப் பெண் மேல் ஒரு பாலியல் வன்முறை நிகழ்த்தப்படுமானால், அடுத்து அவள் வைத்திருக்க வேண்டியது அரிவாளா? அல்லது உரிமம் பெற்ற துப்பாக்கியா? இல்லை நேரடியாக ராக்கெட் லாஞ்சர்களுக்கு நகரலாமா? பூமியின் அற்புதமான ஆண் பெண் உறவை இப்படி வன்முறைக் களமாக்கி வெற்றி பெறப் போவது யார்?

கத்தியையோ பெப்பர் ஸ்பிரேயையோ தேடிச் செல்ல வேண்டிய அவசியம் பெண்களுக்கு இல்லை. ஒரே ஒரு பெண்ணைச் சுற்றி ஆயிரம் ஆண்கள் இருந்தால்கூட அவள் அங்கே கண்ணியத்துடன் நடத்தப்படுவாள் என்னும் நிலைக்கு ஆண்கள் எப்போது முன்னேறிச் செல்கிறார்களோ, அதுதான் இது அத்தனைக்கும் விடிவு காலம்.

தற்காப்புக் கலை பயில்வதின் மூலம் பெண்கள் தங்களை பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று வாதிடுபவர்கள், இந்திய குத்துச் சண்டை சம்மேளனத்தின் தலைவரின்மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்களுக்கு என்ன பதில் அளிப்பார்கள்? ஒரே ஒரு குத்தில் எதிராளியை வீழ்த்தும் வல்லமை படைத்தவர்கள் அல்லவா அவர்கள்? பின்னர் ஏன் வீதிக்கு வந்து போராடினார்கள்? பெண்ணை தன் அதிகாரத்தின் கீழ் பார்க்கும் ஆணாதிக்க எண்ணம் மாறாதவரை, எதுவும் இங்கே மாறப் போவதில்லை.

நண்பனையோ, உடன் பணிபுரிபவரையோ நம்பிச் செல்லும் இடங்களில், குளிர் பானங்களில் மயக்க மருந்து கொடுத்து நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளில், அந்த தற்காப்புக் கலை எவ்விதம் கை கொடுக்கும்?

இதுவரை பெண்களின் மீது பாலியல் வன்முறை நிகழாத இடம் என்று ஒன்று இருக்கிறதா? வீடு, பணிபுரியும் இடம், வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள், பொதுப் போக்குவரத்து என்று எல்லா இடங்களிலும் பெண்கள் இதை எதிர்கொள்கின்றனர்.

கோயமுத்தூர் மற்றும் அண்ணா பல்கலை கல்லூரி மாணவிகளின் சம்பவத்தில், மிக முக்கியமாக சமூகத்தால் கேட்கப்பட்ட கேள்வி, அந்த இரவு நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு அங்கே என்ன வேலை? எந்த நேரத்தில் பெண்களின் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்படவில்லை என்று சொல்லுங்கள்? காலையில் பெண்கள் மிகவும் கண்ணியத்துடன் நடத்தப்படுகிறார்களா? அல்லது மாலை நேரங்களில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதே இல்லையா?

பகல், இரவு, அருவி, கடற்கரை, மலைகள், காடுகள், என்று எல்லாமும் எல்லோருக்கும்தான் சொந்தம். யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் செல்லும் உரிமை உள்ளது. அடுத்தவர் உடல் மீது வன்முறை நிகழ்த்துவதற்குத்தான் யாருக்கும் உரிமை இல்லை.

உடல் ரீதியாக தன்னால் எட்டமுடியாத, வீழ்த்த முடியாத பெண்களை மனதளவில் சித்திரவதைக்கு உள்ளாக்கி, அவர்களை துன்புறுத்தி பார்ப்பதற்கும் ஆணாதிக்க மனப்பான்மையே காரணம். அதன் காரணமாகத்தான் ஒரு பெண் நடிகரின் உடல் எடை என்ன என்று ஒரு ஆண் நடிகரிடம் கேட்பது, எப்படி அவரை உங்களால் இலகுவாக தூக்க முடிந்தது என்று கேட்பது, நீ நடிகைதானே இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் நீ பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பது… இவை எல்லாமே பாலியல் ரீதியான வன்முறைதான்.

நடிகையான தன்னை பாலியல் ரீதியில் பார்க்க வேண்டாம் என்று அவரே கேட்டுக் கொண்டபின்னும், மீண்டும் அதையே கேள்வியாக வைப்பது காலங்காலமாக ஊறிப்போன ஆணாதிக்க மனநிலை. இன்னும் சொல்லப் போனால், ஒரு நடிகையை பாலியல் ரீதியாகப் பார்க்கக் கூடாது என்பதே அவர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. அது எப்படி சாத்தியம் என்கிறார்கள்.

அத்தனை ஆண்கள் சுற்றி இருந்த அந்த அரங்கில் மிக தைரியமாக “நீங்கள் கேட்ட கேள்வி தவறு, நடிகையை, நடிப்பை பாலியல் ரீதியாக பார்க்காதீர்கள்” என்று ஆணாதிக்கம் மிகுந்த திரைத்துறையின் கன்னங்களில் பளாரென்று அறைந்து சொல்லி இருக்கிறார் கௌரி. தன்னைச் சுற்றி எத்தனை ஆண்கள் இருந்தாலும்கூட தனக்காக தான்தான் போராட வேண்டும் என்று கௌரி சொன்னது இங்குள்ள ஒவ்வொரு பெண்ணுக்காகவும்தான்.

போராடும் பெண்களுக்குத் தோள் கொடுப்பதும், துணை நிற்பதும் பால் பேதமின்றி அனைவரின் கடமை.

படைப்பாளர்

தரங்கிணி

எல்சீவியர் என்னும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். வாசிப்பில் நாட்டம் உடையவர். பெண்ணியம் சார்ந்த சமூக முன்னெடுப்புகளில் பங்களிப்பதில் ஆர்வம் உடையவர்.