4000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆர்க்கியா என்னும் கடுஞ்சூழல் வாழ் பாக்டீரியாக்கள்தான் முதன் முதலில் தோன்றிய உயிர்வாழும் செல்கள். அவை எரிமலை லாவாவின் சாம்பல், அதீத வெப்பம், ஆழ்கடலின் அதிக உப்பு, அதீத அழுத்தம் எல்லாவற்றையும் சமாளித்து வாழ, தகுதி பெற்றவை.
2500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அவை சாதாரண சூழலில் வாழும் பாக்டீரியாக்களாகப் பரிணமித்தன. அதன் தொடர்ச்சியாக 541 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடல்வாழ் விலங்குகள் தோன்றின. அந்த நேரத்தில் தாவரங்கள் வெறும் கடற்பாசிகள் மட்டுமே. ஆனால் அவை விலங்குகளைவிட வெகு வேகமாக விதவிதமானவையாக பரிணமித்து, ஒரு கரப்பான்பூச்சியளவு விலங்கு தோன்றியபோது அவை நீர் கடத்துத்திறன் பெற்ற வாஸ்குலர் தாவரங்களாகியிருந்தன. சிக்கலான உடல் செல்களின் கட்டமைப்பு காரணமாக, விலங்கினங்கள் மெல்லவே பரிணமித்து வந்தன.
இப்படி பூச்சியாக, புழுக்களாக, ஊர்வனவாக, பறப்பவையாக மெல்ல மெல்ல பரிணாமத்தில் வளர்ந்து கொண்டே வந்த விலங்கினம் மனிதன் (பெண்/ஆண்/பால்புதுமையினர்) என்னும் விலங்காக பரிணமித்து வெறும் 2.5 மில்லியன் ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால் மனித இனம் தன்னைத்தானே உயர்வாக எண்ணுவதும், உலகில் அனைத்தும் தனக்காக படைக்கப்பட்டுள்ளது என நம்பத் தொடங்கியதும் Anthropocentric என்னும் மானுடவியல் மையக்கருதுகோளிலும் இயங்கத தொடங்கியது ஏன்?
மனித இனத்தின் பரிணாமம் மிக மிக நுட்பமானது. அதன் வரலாறை சற்று பார்த்துவிட்டு மீண்டும் இந்தப்புள்ளியில் இணைவோம்.
மனித இனம் குரங்கிலிருந்து வந்தது என பள்ளியில் படிக்கும்போது நம் கற்பனை நேரடியாக ஒரு குரங்கு மனிதனாக மாறி வெற்றி நடை போட்டதாக வளர்ந்திருக்கலாம். ஆனால் அதற்கு 6-8 மில்லியன் ஆண்டுகள் தேவைப்பட்டன. அப்படியான குரங்கு அதற்கும் முந்தைய 25 மில்லியன் ஆண்டுகள் பல கிளைகளாகப் பரிணமித்து கிப்பன், கொரில்லா, சிம்பான்சி, ஒராங்குட்டான் எனப் பல ரகங்களாக மாறியிருந்தது.
முதலில் தானொரு குரங்கில்லை என அவ்வுயிரினம் உணரவேயில்லை. குரங்கினைப் போலவே நடந்து கொண்டது. அடுத்தது மெல்ல கைகளை பயன்படுத்தாமல், இரண்டு கால்களால் நடந்தது. கைகள் மெல்ல மனிதர்களைப்போல மாறியிருந்தது. இதுவே பெரிய முன்னேற்றம் அப்போது. இந்த ரக மனிதர்களுக்கு மூளை அளவு பிற்காலத்தில் வந்த மனிதர்களை விட மிக மிகக்குறைவு. இவர்களுக்கு Australopithecus என்று பெயர்.
அடுத்து வந்த இனம் Homo habilis. இவைதான் கைகளை பயன்படுத்த கற்றுக்கொண்ட முதல் இனம். அதுவரை பெயரளவில் மட்டுமே மனிதன். இந்த இனம் முதன்முதலாக கற்களைக் கொண்டு ஆயுதங்கள் செய்தது. அதனை வைத்து எதிரியினைத் தாக்கலாம் என யோசித்தது. மனிதனின் முதல் குணம் ஒரு விலங்கின் குணம்தான். கண்டுபிடிப்பின் முதல் தேவை தற்காப்புக்கும் தாக்குதலுக்கும்தான். இன்னமும் ஆயுதங்களோ அல்லது சொற்களோ நாம் அதற்காகத்தான் பயன்படுத்தி வருகிறோம். மனதின் ஒரு பகுதி விலங்காகவே நீட்டிக்கப்பட்டுள்ளது.
மனித இனம் Homo erectus ஆவதற்கு முன்புவரை அனைத்தும் கோண்டுவானா நிலப்பகுதிகளில் நிகழ்ந்தவை. அது தற்போதய ஆப்பிரிக்கா. மரபணுக்களை, மைட்டோகாண்டிரியல் DNA க்களை ஆய்வு செய்து, இத்தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
மெல்ல மனிதன் ஆப்பிரிக்காவில் தொடங்கி ஆஸ்திரேலியா வழியாக ஐரோப்பாவை அடைந்ததுதான் மனித இனப்பரவலின் வரைபடமாகும். இத்தனை தூரத்தினை மனிதன் நடந்து கடந்திருக்கவா முடியும்? நிலப்பகுதிகள் துண்டாகி, கண்டங்கள் உருவாகின. அப்போது அங்கங்கே தேங்கிய மனித இனம் அந்தச் சூழலுக்குத்தக்கவாறு உயரம், நிறம் போன்ற குணாதிசயங்களை, கால வாக்கில் அடையத் தொடங்கியது.
அதற்கடுத்த புதுப்பட ரிலீஸ்கள் இரண்டு. நியாண்டர்தால் மனிதர்களும் (தற்கால ஐரோப்பிய பகுதிகளில் பரவியிருந்த இனம்) தற்கால மனிதர்களான Homo sapiens ஆன நாமும். ஒரே கால கட்டத்தில் இந்த இரண்டு இனமும் வாழத் தொடங்கியபோது இவர்களுக்கு இடையே வலியது பிழைத்தல் செயல் நிகழ்ந்து, இந்த இனம் அழிந்திருக்கக்கூடும் என்பது ஒரு கருதுகோள்.
முரணாக, நியாண்டர்தால் இனமும் தற்கால மனித இனமும் கூடிக்கலந்து வாழ்ந்துள்ள ஆதாரங்களும் உள்ளன. நமது உடலில் பல இடங்களில் நியாண்டர்தால் ஜீன்கள் காணப்படுகின்றன (Y குரோமோசோம் தவிர்த்து).
இப்படியாக பரிணமித்த மனித இனம், மெல்ல தன் கைகளை பயன்படுத்தத் தொடங்கியதுதான் அதன் மூளையின் சிந்திக்கும் திறன் சிறப்புற முதல் காரணமானது. கைகளுக்குத் தக்கவாறு செயல்படத் தொடங்கிய மூளை சிந்தனைக்குத் தக்கவாறு கைகளைப் பயன்படுதியபோது பரிணாமத்தின் அடுத்த கட்டம் தொடங்கியது எனலாம்.
அடுத்த கண்டுபிடிப்பான ஆயுதம், மனிதர்களின் வேட்டையை சிறப்புறச் செய்தது. இதன் காரணமாக மற்ற விலங்குகளைவிட மனித இனத்தின் வாழ்திறன் அதிகரித்தது எனலாம். வலிமையானது என இந்த இனம் தன்னை உணரத்தொடங்கிய காலம் அது.
அதன்பின் மனிதன் அறிந்து கொண்ட நெருப்பின் ரகசியம் விலங்குகளுக்கு மத்தியில் மனிதனே வலுவானவன் என்னும் தோற்றம் வலுப்பெற காரணமாக அமைந்திருக்கலாம். மனிதனின் முதல் கடவுளான நெருப்புக் கடவுள் மனிதன் பரிணமித்து 2 மில்லியன் ஆண்டுகள் கழித்து உருவானதுதான். அதற்கு முன் உலகில் விலங்கு செயல்பாட்டால் ஆன நெருப்பே கிடையாது. இயற்கைச் சீற்ற நெருப்பு மட்டும்தான்.
அதன் பிறகு வேட்டையாடிகள் ஆனார்கள். விவசாயிகள் ஆனார்கள். பண்பாடு வருகின்றது. சொத்து வருகின்றது. குடும்ப அமைப்பு வருகின்றது. மனிதன் முழு சமூக விலங்காக மாறுகிறான்.
சுமார் 3.5 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, இத்தனை பரிணாம வளர்ச்சிக்குப் ஏற்பட்டபின், உலகின் முதல் ஓவியம் தீட்டப்படுகின்றது. அதுவும் ஒரு விலங்கால்.
மனிதனின் கைகளும் மூளையும், சிந்தனையும் சேர்ந்து கலை என்னும் வடிவுருவாக 40,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள், குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வெறும் வாழைப்பழம் ஒன்றைத் தந்தாலே மகிழ்ந்து நிறைந்துவிடுகின்ற ஒரு விலங்கு, இன்னமும் அதே வாழைப்பழத்தில் தனது கனவினை இறுகப்பற்றிக் கொண்டுள்ளபோது, அதிலிருந்து பிரிந்து வந்த மனிதர்களால் மட்டும் ஏன் நிறைவடைய முடியவில்லை? ஏன் அவர்களது தேடல் பிரபஞ்சம் தாண்டி ஓடுகின்றது?
போர்கள், வஞ்சனை, துரோகம், காதல், தாய்மை என கலந்துகட்டி மனிதமனம் கதம்பச்சரமாக மணம் வீச, மரபியல்படி என்ன காரணம்?
பார்ப்போம். பரிணாமம் வரைந்த ஓவியங்களையும்…
படைப்பாளர்
ஷோபனா நாராயணன்
முதுகலை உயிர்வேதியியல் மற்றும் முதுகலை உயிரியல் படித்துள்ளார். அறிவியல் ஆர்வலர்.
வெகு சிறப்பு
மிக அருமை
இத்தனை வேகமாக ஒரு யுகயுகமான பரிணாமத்தை தொட்டுக் காட்டி இணைப்பது சவாலானது. நல்ல முயற்சி. காலங்களைக் குறிப்பிடுகையில் பொது ஆண்டுக்கு முன்/பின் என்று குறிப்பிடுவது அவசியமானது. சுவாரசியமாக, அதே நேரம் பெரிய தாவல்களுடனும் கட்டுரை அமைந்திருக்கிறது. வாழ்த்துகள்.
Good flow of writing.