பொருள் 1:

வரலாறு என்றொன்று உருவாவதற்கு முன்பே மனிதர்கள் தோன்றிவிட்டார்கள். நவீன மனிதனை நினைவுபடுத்தும் உயிரினம் இரண்டரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. அப்போது ஒருவேளை நாம் ஆப்பிரிக்காவில் இருந்திருந்தால், இன்றைக்குப் பரிச்சயமாகிஉள்ள பல காட்சிகளை நாம் அன்றே கண்டிருக்கக்கூடும். அழுக்கிலும் சேற்றிலும் கட்டிப் புரண்டபடி ஆ, ஊவென்று ஆனந்தமாகக் கூச்சலிட்டு விளையாடும் குழந்தைகள். அக்கறையுடன் குழந்தைகளை கண்காணிக்கும் அம்மாக்கள்.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் திரிந்து கொண்டிருக்கும் இளையவர்கள். அனைத்தையும் அனுபவித்துத் தீர்த்த பிறகு, இதெல்லாமா வாழ்க்கை என்று தத்துவார்த்தமாக யோசித்தபடி ஒதுங்கி நிற்கும் முதியவர்கள். ஒரு வேளை யானைகளின் கூட்டங்களையோ சிம்பன்ஸிகளையோ கண்டிருந்தாலும் இதேபோன்ற காட்சிகளை நாம் அவர்களுடைய வாழ்விலும் கண்டிருக்கக்கூடும். ஆனால், மனிதர்கள் மற்ற உயிரினங்களிடம் இருந்து தங்களை வேறு படுத்திக்கொண்டதோடு மாபெரும் பாய்ச்சல்களையும் நிகழ்த்திக் காட்டினார்கள்.

நான்கு கால்களால் நடந்துகொண்டிருந்த நாம் ஒரே தாவு தாவி நிலவில் காலடி எடுத்து வைப்போம் என்றோ கவிதை எழுதியிருப்போம் என்றோ அணுவைப் பிளந்திருப்போம் என்றோ அன்று கற்பனை செய்திருப்போமா? ஆனால், தொடக்கத்தில் நமக்கும் ஜெல்லி மீனுக்கும் ஆமைக்கும் சிம்பன்ஸிக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. ஒரு வசதிக்காக பூமியின் வயது ஒரே ஒரு நாள் என்று வைத்துக்கொண்டால் காலை, மதியம், மாலை, இரவு என்று விதவிதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திவிட்டு நள்ளிரவு நெருங்குவதற்கு ஒரு விநாடிக்கு முன்பு கட்டக்கடைசியாகத்தான் நவீன மனிதனை உருவாக்கியது பூமி. இதிலிருந்தே நம்முடைய ‘முக்கியத்துவம்’ தெரிந்துவிடுகிறது.

மனிதக் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று மனிதனாக மாறுவதற்கு நமக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. ஒன்றரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் கிழக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஹோமோ சேப்பியன்ஸ் என்னும் இனத்தைச் சேர்ந்த மனிதர்கள் கிட்டத்தட்ட நம் சாயலில் இருந்தனர். அவர்கள் 70,000 ஆண்டுகளுக்கு முன்னால் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து கிளம்பி, அராபிய தீபகற்பம், ஐரோப்பா, ஆசியா என்று மெல்ல மெல்ல உலகம் முழுக்கப் பரவ ஆரம்பித்தனர்.

நம் அனைவருக்கும் பொதுவான ஒரே மூதாதையர் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதா? இருக்கிறது என்கிறார்கள் சிலர். அந்த முதல் மனிதன் பெண் என்பது அவர்களது வாதம். மைட்டோகாண்ட்ரியல் ஏவாள் என்று அந்த மூதாதையருக்குப் பெயரும் வைத்திருக்கிறார்கள். இவரிடமிருந்தே மனித குலம் தழைத்தது, இவரே நம் ஆதி தாய் என்று இவர்கள் அறிவித்தார்கள். ஆனால், இந்த ஆப்பிரிக்க ஏவாள் கோட்பாட்டுக்கு அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை.

1974ம் ஆண்டு ஒரு புது வெளிச்சம் கிடைத்தது. 33 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த ஒரு எலும்புக்கூடு எத்தியோப்பியாவில் கண்டெடுக்கப்பட்டது. மெலிதான அந்த எலும்புக்கூட்டைப் பார்த்த மாத்திரத்திலேயே அதற்கு லூசி என்று பெயரிட்டுவிட்டார்கள். லூசியின் உயரம் கிட்டத்தட்ட மூன்றரை அடி. எடை 29 கிலோ. இறக்கும்போது அவர் இருபது வயது பெண்ணாக இருந்திருக்கலாம். நமக்குக் கிடைத்திருப்பது 40 சதவிகித எலும்புக்கூடுதான் என்பதால் அவரைப் பற்றிய திடமான வேறு தகவல்களைப் பெறமுடியவில்லை.

படம்: லூசி, விக்கிபீடியா

சிறிய கால்கள், நீளமான கரங்கள், சின்ன மூளை என்று கிடைத்திருப்பதை வைத்து உருவகப்படுத்திப் பார்க்கும்போது லூசி அசப்பில் ஒரு நவீன சிம்பன்ஸியைப் போல் அன்று காட்சியளித்திருக்கவேண்டும். லூசியின் உயிரியல் பெயர் Australopithecus afarensis. அவருக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள எண் ஏஎல் 288-1. லூசியைத் தூசு தட்டி எழுப்பியவர் டொனால்ட் ஜொஹான்சன் என்னும் மானுடவியல் ஆய்வாளர். உலகப் புகழ்பெற்ற பீட்டில்ஸ் இசைக்குழுவினரின் ஒரு பாடல் வரியில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்தான் லூசி. இன்று அவர் உலகம் முழுவதிலும் பிரபலம்.

லூசியின் எலும்புக்கூடு அமைப்பை நுணுக்கமாக ஆராய்ந்த விஞ்ஞானிகளும் மானுடவியல் ஆய்வாளர்களும் வந்தடைந்துள்ள சில முடிவுகள் வியப்பூட்டக்கூடியவை. நான்கு கால்களால் நடந்துசென்ற மனிதக் குரங்குகளுக்கு மத்தியில் திடமாக எழுந்து நின்று நடந்துசென்ற முதல் உயிரினக் கூட்டத்தைச் சேர்ந்தவர் லூசி.

அதற்கு முன்பே மனிதக் குரங்குகள் அவ்வப்போது இரு கால்களால் ஓடியும் மரமேறியும் இருந்திருக்கக்கூடும் என்றாலும் தரையில் ஊன்றியிருந்த இரண்டு கைகளையும் முழுமுற்றாக விலக்கிக்கொண்டு நிமிர்ந்த முதுகுடன் எழுந்து நின்றது மனித குல வரலாற்றில் ஓர் அசாதாரணமான நிகழ்வு. அந்நிகழ்வின் அடையாளமாக நமக்குக் கிடைத்திருக்கும் அதிசயப் பொருள் லூசி. சரி, விடுபட்ட இரு கைகளையும் வைத்துக்கொண்டு லூசியும் அவருடைய வழித்தோன்றல்களும் என்ன செய்தார்கள்? இந்தக் கேள்விக்கான விடை அடுத்த பகுதியில்!

கட்டுரையாளர்:

மருதன்

எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.