உலகம் முழுக்க உயிர்கள் நிரம்பியிருக்கவும் வீடு முழுக்க மகிழ்ச்சி நிரம்பியிருக்கவும் அவசியமானது யாராவது சோறு ஆக்கிவைத்திருத்தல்.  வீட்டில் ஒருவர் சமைத்து வைத்திருப்பார் என்றால் தைரியமாக கால தாமதமாக வீடு வந்து சேரலாம்.

அதுபோலத்தான் விலங்கினங்கள் தைரியமாக கடலை விட்டு கரை ஏறி வரும்போது கரையில், நிலத்தில் உணவு தயாராக இருந்தது. தாவரங்கள் என்னும் பெயரில்.

விலங்குகளின் பரிணாமம் மிகத் தாமதமான ஒன்று. மெல்ல அவை தண்ணீரை விட்டு தரைக்கு நகர்ந்த காலகட்டத்தில், தாவரங்கள் அதன் பரிணாம வளர்ச்சியில் வெகுதூரம் சென்றிருந்தன. தாவரங்களின் பரிணாமத்தின் உச்சமாக அவை விதைகளை உருவாக்கும் அளவு முன்னேறியிருந்தன.

சிறு பாசி இனங்களாக வளரத் தொடங்கியவை, மெல்ல தரைக்கு வந்து புல், புதர், செடி, கொடி, மரம் என தங்கள் எல்லையை பூமியில் நீட்டித்திருந்தன. அவையே உணவு உற்பத்தியாளர்கள். பச்சை நிற குளொரோபில்கள் உற்பத்தி செய்துதரும் கரிமப்பொருள்தான் உலகில் உணவு என்னும் பதத்தின் ஆதிப்புள்ளி.

இத்தகைய தாவரங்களுக்குள் போட்டி உண்டா என்றால் உண்டு. வம்புக்கதைகள் பேசி மகிழ்ந்திருக்குமா என்றால், ஆம் மகிழ்ந்திருக்கும். தாவரங்களால் துன்பம் என வந்தால் ஓட முடியாது. அப்போது அவை சண்டையிடுமா என்றால் சண்டையிடும். பேசாத உணர்வற்ற எதிர்ப்பற்ற தன்மைக்கு நாம் மரத்துப் போதல் என பெயரிட்டு இருக்கிறோம். எத்தனை புரிதலற்ற அவதானிப்பு. ஆனால் தாவரங்கள் தங்களுக்குள் பேசிக் கொள்பவை,போடியிடுபவை, சண்டை செய்பவை, துன்பத்திற்கு எதிர்த்து நிற்பவை. நம்மைப்போன்றே நிலைத்திருக்கவும் இனத்தினை ( சிற்றினம் -species) பெருக்கவும் விழைபவை.

தாவரங்கள் சில வேதிப்பொருள்கள் மூலம் பக்கத்து தாவரத்திற்கு சமிக்கைகள் தரும். பழம் பழுப்பது இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு. ஒரு மரத்தின் பழம் பழுக்கத் தொடங்கும்போது வெளிவரும் எத்திலீன் வாயு அருகமைந்த மற்ற பழங்களையும் பழுக்கச்செய்யும் (அரிசி டப்பாவில் போட்டால் பழத்தை அரிசி பழுக்கவைப்பதாக நாம் நம்பிக்கொள்கிறோம். சூடு என்போம். அது இந்த வாயுதான்).

Photo by Reiseuhu on Unsplash

சில வைரஸ்கள் தாக்கத் தொடங்கும்போது, அருகமைந்த தாவரத்துக்கு வாயுக்களை வெளியிட்டு முட்டைக்கோசுகள் தங்களுக்குள் செய்தி பரிமாறிக்கொள்வதை வெகு சமீபத்தில் அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.  

கிருமிகள், பூச்சி ரகங்கள் போன்றவை தாக்கும்போது தாவரம் முற்றிலும் அழியும் நிலை நேரிடும். அப்போது தாவரங்கள் என்ன செய்யும்? தன்னிடம் எதற்காக விரும்பி எதிரி வருகின்றதோ அதற்கு நேர்மாறான விஷயத்தைத் தரும். இனிப்பான தேனிற்கு பதிலாக கசப்பான வேதிப்பொருள்களை உடல் முழுதும் பரப்பி வைத்துக்கொள்ளும். டீ இலையின் துவர்ப்புச் சுவை நமது காலையை வேண்டுமானால் அழகாக்கலாம், அதன் இலைகளை அழிக்கவரும் பூச்சியினங்களுக்கு அவை விருந்தாக அமைவதில்லை.

Photo by Rashid on Unsplash

புழு ஊர்ந்து வருகின்றதா, முட்களை உண்டாக்கிக் கொள்ளும். தோல் பகுதியில் கீறல் விழுந்து விடுகிறதா? கோந்து, ரப்பர் போன்ற பொருள்களை உருவாக்கிக் கொள்ளும்.  வாசனை அடிப்படையில் எறும்புகள், கரையான்கள் தங்களுக்குள் தொடர்பு கொண்டு மரத்தின் உச்சிக்கு வரப்பார்க்கின்றனவா? மரப்பட்டையில் சில வாசனைகளை உண்டாக்கிவிடும் மரம். எறும்புகள், கரையான்கள் குழம்பி ஓடிப்போகும்.

இவையெல்லாமே அந்த நொடியில், அந்த இடத்தில் யார் வாழ்வது யார் யாருக்கு பலியாவது என்பதற்கான போர்கள்தான். பரிணாமம் நகர்பவைகளுக்கு ஒரு விதமானது என்றால், ஒரே இடத்தில் நின்று சிக்சரடிக்கும் தாவரங்களுக்கோ வேறுவிதமானது.

சரி அடிப்பதும் கெடுப்பதுமான திட்டங்கள் பெற்ற தாவரங்களை நம்பியா நாம் கரை ஏறி வந்தோம் என்றால், அதுதான் இல்லை. நமக்கான உணவாக தாவரங்கள் திகழத்தான் செய்தன. அதற்கு பதிலாக நாமும் கூலி கொடுத்தோம்.

தாவரங்கள் தங்கள் உடல் வழியாக செய்து கொண்டிருந்த இனப்பெருக்கத்தைவிட ,மலர்கள் வழியாக செய்த இனப்பெருக்கம் அவற்றின் பரவலுக்கு மிக முக்கியமான காரணமாகும். தளைவழி இனப்பெருக்கம் ( Vegetative Reproduction) குறுகிய பரப்புக்கானது. மரபியல் வழி நிறைய புதுப்புது ரகங்கள் உருவாகாது ( Absence of variation).

தாவரங்கள் தங்கள் வெகுதூர கனவு நிலங்களுக்குச் செல்ல ஆசைப்பட்டன. அவை பூக்கத் தொடங்கின. அவற்றுக்கு விமானங்கள் வேண்டும். பறவைகளாக பூச்சிகளாக, தேனீக்களாக குரங்குகளாக…

தேனீக்கள், வண்டுகள் இருந்தால்தான் பெரும்பாலான தாவரங்கள் மகரந்தச் சேர்க்கை மூலம் இனப்பெருக்கம் செய்யமுடியும். வழக்கமாக துரத்திவிட்டுத்தானே பழக்கம்… என்ன செய்வது? வண்ண மலர்களை வைத்து கவர்ந்திழுப்பதுதான் திட்டம். வந்து சிக்குபவர்களுக்கு தேன் தந்து உபசரிப்பது அப்படியே வழிப்பயணத்திற்கு மகரந்தத்தூளினை அப்பி அனுப்புவது என தங்களது இனப்பெருக்கத்தினை தொடர்ந்தன.

Photo by Matt Quinn on Unsplash

இப்போது யார் யாரைக் கவர்வது என்னும் போட்டி. தேனீக்களுக்கு நீல வண்ண மலர்கள், வண்டுகளுக்கு வெள்ளை, சந்தன நிறப்பூக்கள்… பட்டாம்பூச்சிகளுக்கு பிரகாசமான மஞ்சள் ஆரஞ்சு போன்ற நிறங்கள் கண்ணுக்குப் புலனாகும் என்பதால், இந்த நிறப்பூக்கள் உடைய தாவரங்கள் செழிப்புற பரவின.

இரவு நேரத்து பூச்சியினங்களுக்காக இருளில், இரவில் வெள்ளை நிறப் பூக்கள் தோன்றின. அவை இருக்கும் இடம் பளிச்சென தெரிய வேண்டி, அடர்வாசனைகளை அந்த பூக்கள் உற்பத்தி செய்தன. இதன் காரணமாக விலங்குகளுக்கு தேன், கனிகள் (மகரந்தச்சேர்க்கை நடந்தால் மட்டுமே கனி உருவாகும்), விதைகள் (உலகின் பாதி உணவு அரிசி கோதுமை போன்ற விதைகளே) போன்றவை கிடைத்தன. விலங்குகள் செழிப்புற வளர்ந்து பரிணமித்தன. அதேசமயம் தாவர பெருக்கமும், தாவர ரகவகைகள் பெருக்கமும் கூடவே பல்கிப்பெருகின.

உயிர்கள் தங்களது வாழ்வு நிலைபெற சூழலுக்குத் தக்கவாறு தங்கள் வளர்ச்சி, செயல்பாடு, இனப்பெருக்க எதிரிகள் எதிர்ப்பு என அனைத்தையும் தகவமைத்துக் கொண்டன.  ஒன்றுடன் ஒன்று ஏதேனும் ஒருவிதத்தில் இணைந்தும் சார்ந்திருந்துமே இயங்குகின்றன.

நன்மை செய்பவர்களுக்கு நல்லவிதமாகவும், தனக்கு எதிரானவர்களுக்கு எதிர்விதமாகவும் தானாகவே செயல்படும் தன்மை இயற்கையில், பரிணாமவளர்ச்சிப் படி அமைந்தது.

சிந்தனைத்திறன் இல்லை என இப்போது வரை நம்பப்படும் தாவரங்கள், இத்தகைய தெளிவான வாழ்வமைப்பினை கொண்டுள்ளபோது, மனிதர்களின் மனமும் சிந்தனையும் எப்படியெல்லாம் பரிணமித்து வந்திருக்கும்? பார்ப்போம் வரும் அத்தியாயங்களில்.

படைப்பாளர்

ஷோபனா நாராயணன்

முதுகலை உயிர்வேதியியல் மற்றும் முதுகலை உயிரியல் படித்துள்ளார். அறிவியல் ஆர்வலர்.