காலைச் சுற்றும் நாய்க்குட்டியாய் அவளையே சுற்றிச் சுற்றி வந்தவனுக்கு இதயம் வலித்தது. கண்முன்னே அவனும் அவளும் ஒரு வயாதான பெண்மணியை அழைத்துக் கொண்டு அவளின் பெட்டிக்குச் செல்வதைப் பார்த்தவனுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவல்.
பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தவள் அவனுடன் பொறுமையாகப் பேசியபடியே செல்வதற்கு எதுவும் காரணம் இருக்கிறதா? இல்லை அவன் பார்வையில் தான் பிழையா?
அவர்களும் எல்லோரைப் போலவும் சக பயணிகள் என்று நினைத்தவனுக்கு, அந்த அம்மாளின் பேச்சை ஒட்டுக் கேட்க நினைத்த யோசனை பலனளித்தது. ஆனால் அவர் சொன்ன, “மருமகள்” என்கிற வார்த்தை அவனுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்தது. அந்தப் பெரியவர் அவனின் அம்மா என்று புரிந்தது. ஆனால் அவர் அவனின் அபியை அப்படி அழைத்தது சொல்ல முடியாத ஒரு வேதனையை அளித்தது.
அவள் அவரின் சகோதரரின் மகளாக இருக்கும் அதனால் மருமகள் என்றிருப்பார்கள்!
அப்படி என்றால் ஏன் அவர்கள் வேறு வேறு பெட்டியில் பயணிக்கிறார்கள்?
தெரிந்தவர்களாக இருக்கும்.
தூரத்து உறவினர்களாக இருக்கும்.
சும்மா பார்த்துப் பேசிக் கொண்டிருந்திருக்கலாம் அல்லவா? ஆனால் அவளறியாத நேரம் அவளை உரசிச் செல்லும் அவனின் பார்வையோ வேறு பொருள் அல்லவா சொல்கிறது. என்றெல்லாம் அவன் மன ஓட்டம் மழை நின்றபின் பூமிக்குளிலிருந்து குப்பென்று மேலெழுந்து செல்லும் ஈசல் கூட்டமாய் பல திசைகளிலும் பறந்து சென்றது.
சற்று தொலைவில் அவனும் அவளும் பேசிக்கொண்டு சென்றதைப் பார்த்தவனின் அடிவயிற்றுக்குள் அமிலமாகப் பரவிய பொறாமை உணர்வு, அவன் எவ்வளவோ தடுத்தும் அடங்காமல் தலை விரித்தாடியது.
அவன் பார்வையில் இருக்கும் அர்த்தமும் சொல்ல முடியாத உணர்வுகளும் இவனுக்கு நன்றாகப் புரிந்தது. ஏனெனில் அவை இவனின் உணர்வுகளை ஒத்து இருக்கின்றன.
கிளம்பிச் சென்ற கூட்டத்தில் அவன் அம்மாவோடு அவன் சென்றிருக்கக் கூடாதா?
யாரென்றே பேசியறியாத அவன் மீது இத்தனை வெறுப்பு வரக் காரணம் வியப்பளித்தது போல், யாரென்றே முன் பின் அறியாத அவள் மீது எங்கே என்று தெரியாத இந்த ஊரில் நள்ளிரவில் அவன் உள்ளுக்குள் தோன்றிய உணர்வுகளின் பிரபாவத்தின் வேகமும் திக்குமுக்காட வைக்கிறது.
அவளுக்காக தான் அந்த ஸ்லீப்பர் செல்சில் சேர்ந்தான். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே நடப்பதைக் கண் கொட்டாமல் பார்த்தவன் மனம் கசந்தது.
அவர்களிடம் காணப்படும் ஒருவித அந்நியோன்யத்தின் அர்த்தம் என்ன? ஏற்கெனவே நன்கு பழகியவர்கள் நடுவில் இவன் செல்ல என்ன உரிமை இருக்கிறது என்று யோசித்த போது, ‘தோழர் ‘ என்று அவன் அவளை எழுப்பியது நினைவுக்கு வந்தது.
எப்படி அவளை எழுப்ப, அவளிடம் என்ன பேச, அவள் என்ன பதில் சொல்வாள், அதற்கு அவன் என்ன சொல்ல வேண்டும் என்றெல்லாம் அவன் மனத் திரைக்குள் காட்சிகள் ஓட, ஒன்றிரண்டு முறை அவளிடம் பேசிய ஓரிரு வார்த்தைகளை மனதுக்குள் அசை போட்டபடி பரபரப்புடனும் ஆசையுடனும் நடந்து வந்தவனை ஒரு நொடியில் முந்திச் சென்று அவன் ஆசையில் மண் அள்ளி போட்டு விட்டான் அந்த நெடுமாரி!
நிராசையுடன் நடந்து சென்றவனுக்குச் சிரிப்புதான் வந்தது. தன் காதல் உலகைக் காணாத காதல்!
ஆனால் எல்லோரும் ஸ்தம்பித்து நிற்கும் வேளையில், பிறருக்கு உதவ துணிச்சலாக முடிவெடுத்து அதைச் செயல்படுத்தவும் செய்தவளை வாய் பிளந்து எத்தனை பேர்கள் பார்த்தார்கள் என்று தெரியாது. ஆனால் அவன் இதயம் அவள் வசமானது அப்போதுதான்.
அவள் பெயரையும், இவன் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸில்தான் பயணிக்கிறாள் என்பதைத் தவிர வேறு எந்தத் தகவலும் அவனுக்குத் தெரியாது. அது முக்கியமாகவும் தோன்றவில்லை. ஆனால் இந்த ரயில் கிளம்பிய பின் அவை தேவையல்லவா என்று எதார்த்தம் இடித்தது.
அவள் சென்னை செல்பவள் என்றால்கூட அதிகபட்சம் சமூக வலைதளங்களில் தொடர்பில் இருக்க முடியும். அதற்குப் பின்? அதற்காக இந்த ரயிலை இன்னும் இரண்டு மூன்று தினங்கள் இங்கேயே நிற்க வைக்கவா முடியும்? முடிந்தாலும் அவள் மனதில் இடம்பிடிக்க முடியுமா? மனதைத் திறந்து அவளுக்குக் காண்பிக்க முடியுமா?
இது நிஜமாகவே காதல் தானா? அல்லது சினிமாக்களைப் பார்த்து அவனாக கிறுக்குத் தனமாக இப்படி ஒரு முடிவுக்கு வந்தானா? எத்தனையோ பேர் இன்று அவளை வியந்து ரசித்திருக்க மாட்டார்களா? அவனும் அவர்களில் ஒருவன் தானே?
இது காதல் இல்லையென்றால் இன்னொருவன் அவளோடு சேர்ந்து செல்வதை கண்டு மனம் ஏன் இல்லாத குரூரங்களை எல்லாம் கற்பனை செய்கிறது?
இனி அவள் இருக்கும் திசைகூட பார்க்கக் கூடாது. பார்த்தால்தானே மனம் உடைகிறது என்று வலுக்கட்டாயமாக வேறு திசையில் தன் கவனத்தைத் திரும்பியவன் கண்களில் திருவிழா கூட்டத்தில் தொலைந்த குழந்தை போல் ஒரு பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஓர் ஓரமாக நின்று கடந்து செல்லும் பெண்களை எல்லாம் பார்த்தவாறு நின்றதைக் கண்டு பேச்சுக் குடுத்தான்.
“என்னாச்சு தம்பி? யார தேடுறே?” என்று கேட்டதுதான் தாமதம் அவன் கண்களிலிருந்து கண்ணீர் முத்துகள் உதிர்ந்தன. சொல்லவா வேண்டாமா என்று தயங்கியபடி, “எங்கம்மா.. எங்கம்மாவ தேடுறேன்.
இங்க… இங்கதான் இருக்கணும்?” என்றவன், ரயிலையும் வெளியே முண்டியடித்துக் கொண்டு செல்லும் கூட்டத்தையும் மாறி மாறி பார்த்தவன்,
அழுது கொண்டே விவரங்களைச் செல்லவும். அந்தச் சிறுவனுக்கு உதவ மனம் பரபரத்தது. முட்டி மோதி இறுதியாகச் சென்ற வண்டியில் ஏறும் ஆட்களோடு அவனை ஒருவழியாக ஏற்றி விட்டவனுக்கு, ஒரு பச்சை புடவையணிந்த பெண்ணை நோக்கி அவன் வேகமாக நடந்து சென்றது சற்று ஆசுவாசமாக இருந்தது.
அவன் செய்தவற்றைச் சற்று தொலைவில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த அபி , ஒரு சிறு புன்னகையுடன் அவன் திசையில் நடந்து வரவும், அவன் இதயம் இறைக்கை கட்டி பறந்தது. தான் செய்த நல்லதுக்கு இறைவன் அளித்த பரிசா?
“யாரு பையன் ,தோழர்?”
ஓடிச்சென்று பார்த்த போது கடைசி வண்டி கிளம்பி விட்டது. போக முடியாதவர்கள் கூடி பிரச்சினை பண்ணத் தொடங்கவும் அந்த இடம் ரணகளமானது.
தலையில் கை வைத்தவாறு வந்தவள் என்ன செய்வதென்று புரியாமல் குழம்பினாள். உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், அவள் அனுமானம் சரியாகவே இருக்கும் என்று உள்ளுணர்வு சொன்னது.
அவளுக்குத் தெரிந்த தகவலை வைத்து என்ன செய்வது என்கிற கேள்வி தலைதூக்கியது.
தனியாக வந்ததாக தானே உமா அக்கா சொன்னாள். விடுதியில் இருக்கும் பையன் அவரைத் தேடி வந்திருப்பானா? இல்லை வேறு யாருமாகக்கூட இருக்கலாம் என்று சொல்லி மனதைத் தேற்ற முயன்றாள்.
அந்தப் பையனின் அம்மா பெயர் உமா மகேசுவரி, ஊர் நாசரேத் அருகில் தேமாங்குளம்.
(தொடரும்)
படைப்பாளர்:
பொ. அனிதா பாலகிருஷ்ணன்
பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.