நானாக நான் – 3
மனம் போல வாழ்வு அல்லது மனம் போல மாங்கல்யம் என்ற வார்த்தைகளை பல இடங்களில் நாம் கேள்விப்பட்டிருப்போம். அல்லது கடந்து வந்திருப்போம். பல வாழ்த்துச் செய்திகள் இந்த வாசகங்களோடு நம்மை வந்து சேர்ந்திருக்கும். ஆனால், மனம் போல வாழ்வு என்பதை வாழ்க்கைக்குள் பொருத்திப் பார்க்கும்போது கொஞ்சம் இடறலாகத்தான் இருக்கிறது. வாழ்க்கை வரமா சாபமா என்பதெல்லாம் தனி மனித மனங்களைப் பொறுத்ததுதான் என்றாலும் எல்லோருக்கும் வாழ்க்கை எல்லா இன்பங்களையும் வாரி வழங்கி விடுவதில்லை.
இளவயதிலேயே அகால மரணமடைந்த எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இளவயதில் தூக்குக் கயிறை முத்தமிட்டவர்கள் இருக்கிறார்கள். வரலாற்றின் கறை படிந்த பக்கங்களில் செய்யப்பட்ட இனப்படுகொலைகள் ஏராளம். தொட்டிலில் கிடக்கும் குழந்தை முதல் பல் போன கிழவி வரை பலாத்காரத்திற்கும் வன்கொடுமைக்கும் ஆளாகி உயிர் விட்டவர்கள் எத்தனையோ பேர். ஈழப்போராட்டத்தில், தற்போது மியான்மரில் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்படுவோர்களின் சரியான எண்ணிக்கை நாம் அறியாதது. போர்களில் காலவெள்ளத்தில் அவல நிலையில் இறந்தவர்கள் எத்தனையோ பேர். எனக்குத் தோன்றுவதெல்லாம் ஒன்றுதான். இவர்களெல்லாம் நல்ல மனம் படைக்காதவர்களா?
என் அன்புத் தோழி திருமணமாகி மூன்றே மாதங்களில் தூக்குக் கயிறை முத்தமிட்டாள். பல வருடங்கள் ஆகியும் இன்ன காரணம் என்பதை நான் அறிந்தவளில்லை. என் மற்றொரு தோழியின் முகத்தில் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு கொடூரமான முறையில் திராவகம் வீசப்பட்டது. கணவனுக்கு மனைவி மீதும் மனைவிக்கு கணவன் மீதும் பல்வேறு புகார்களோடு பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஓர் அன்பான உறவை தன் வாழ்நாளில் இழந்து பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது வசித்துக் கொண்டிருக்கிறார்கள். விபத்து, வறுமை, நோய்மை, மனப்பிறழ்வு என எத்தனையோ பிரச்னைகளில் தீரா ரணத்துடன் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சாலை ஓரங்களில், பாலத்திற்கு அடியில் பிச்சைக்காரர்களாக, வீடற்று ஆதரவற்றவர்களாகப் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புற்றுநோய் போன்ற எண்ணிலடங்கா மோசமான நோய்களுடன் பலரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கைதிகளாக, அகதிகளாகச் சொல்லொண்ணா எத்தனையோ துயர்களோடு இவ்வஞ்சம் நிறைந்த வாழ்வை எதிர்கொண்டு வாழக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பன்னெடுங்காலமாகப் பணத்தோடும் பகட்டோடும் நல் ஆரோக்கியத்தோடும் உறவுகள் சூழ வாழ்பவர்கள்தான் நல்ல மனம் படைத்தவர்களா? நம்மால் தீர்மானித்துக் கொள்ள இயலாத விஷயங்களுக்காக நாம் எல்லைகள் கடந்தும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமா? நற்பிறப்பை, நல் பெற்றோரை, நல்ல இனத்தை, உயரிய சாதியை, விரும்பும் மதத்தை, உரிய துணையைத் தேர்ந்தெடுக்க இயலாதவர் நல்ல மனம் படைத்தவரில்லையா?
மனம் போல வாழ்வு என்பது வாழ்வு வசப்பட்டவர்களின் சௌகரியமான வாசகமல்லாது வேறேது?
நான் சென்னையில் அடுக்குமாடி கட்டிடத்தில் குடிவந்த பிறகு ஓர் அலறல் சத்தம் என்னைத் தினமும் எழுப்பும். ஆரம்பக் காலத்தில் பயந்தேன். பின்பு அது பக்கத்து வீட்டில் மனநலம் சரியில்லாத ஓர் அக்காவின் குரல் என்பது தெரியவந்தது. பிறகு அந்த அலறல் சத்தம் பழகி விட்டதால் பயப்படும் மனநிலை மாறியிருந்தது. ஆனால், அந்த வலி நிறைந்த குரல் தினமும் காலையும் மாலையும் கேட்டுக் கொண்டே இருக்கும். மனதின் மூலை முடுக்குகளில் ஏதோ ஓரிடத்தில் அம்மனதின் வலியின் எதிரொளியை அந்தக் குரல் பிரதிபலிக்கும்.
மாலை வேளைகளில் சில நேரத்தில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார் அந்த அக்கா. வெளிர் நிறம். சூரியனே அதிகமாகப் படாத வெண்ணிறத்தோல். அவ்வப்போது செடிகளில் ஆடும் இலைகளை வெறித்து பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார். அவரால் பேச இயலாது. சில ஒலிகளை மட்டுமே எழுப்புவார். அவர் அம்மாதான் அவருக்குச் சகலத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட முப்பது வயதிருக்கும் அந்த அக்காவின் சிறுநீர், மலம் மட்டுமல்ல மாதாந்திர உதிரத்தையும் சுத்தம் செய்வது அவர் அம்மாதான். சோறு ஊட்டிவிடுவதில் தொடங்கி எல்லா வேலைகளையும் அந்த அக்காவிற்கு அவர் அம்மாதான் செய்துவிடுவார். இரண்டு வயது பிள்ளையைப் போல தன் மகளை அவரின் முப்பது வயதிலும் கவனித்துக் கொண்டார். எவ்வித ரணத்தையும் களைப்பையும் வெளிக்காட்டாத அந்த அம்மாவின் முகத்தில் நித்திய இறைவனைக் காணலாம்.
எத்தனையோ பாடுகளோடு இப்படிக் கழிந்த வாழ்க்கையில் சில வருடங்கள் கழித்து உடல் நலமின்றி அந்த அக்கா இறந்து விட்டார். அவர் இறந்து ஒரு மாதத்தில் அந்தத் தாயும் இயற்கையாக இறந்து விட்டார். இந்தப் மகளைப் பார்த்துக் கொள்வதற்காகவே தன் உயிரை பிடித்து வைத்திருந்தாரோ என்று எண்ணும்படி ஒரு மாதத்தில் அந்த அம்மாவின் மரணமும் இயற்கையாக நிகழ்ந்தது. கண்முன்னே நடக்கும் துயர் நிறைந்த இவர்களைப் போன்ற பலரின் வாழ்வும் ஏன் இப்படியானது என்பது குறித்த பதிலை இதுவரை யாராவது கண்டறிய முடிந்திருக்கிறதா?
இரண்டு வயது வரை குழந்தைகளுக்கு மலம் மூத்திரம் அள்ளுவது சாதாரணம். ஆனால், முப்பத்திரெண்டு வயதுவரை மகளின் இயற்கை உபாதைகளை அதுவும் மாதாந்திர உதிரத்தையும் சேர்த்து கவனித்துக் கொள்வது என்பது அத்தனை எளிதானதல்ல. மனம் போல வாழ்க்கை என்பது இவர்களுக்கு எப்படிப் பொருந்தும்? மனம் போல் வாழ்க்கை என்பது உண்மையாயிருந்தால் இந்த நல்ல மனதிற்கு வாழ்க்கை இவர்களுக்கு அள்ளி கொடுத்திருக்கத்தானே வேண்டும்!
அதே போல ‘மனம் போல மாங்கல்யம்’ என்ற வார்த்தைகளையும் நாம் கேள்வியுற்றிருப்போம். விவாகரத்துப் பெற்றவர்கள், துணையை இழந்தவர்கள், சரியான துணை கிடைக்கப் பெறாதவர்கள் இவர்களெல்லாம் நல்ல மனம் வாய்க்கப் பெறாதவர்களா? ‘சுமங்கலியாப் போய் சேந்துட்டா’ என்ற வார்த்தைகளும் நடைமுறையில் இயல்பானது. கணவனுக்கு முன் மனைவி இறப்பதென்பது அவ்வளவு நல்ல விஷயமா? பெண்ணின் ஆயுளைவிடவும் மனிதர்களால் புனிதமாகக் கருதப்படும் பூவும் பொட்டும் சிறப்பானவையா?
எல்லாமும் வெறும் வார்த்தைகள்தானே என்று கருதுவீர்களேயானால் இந்த வாழ்க்கையைப் பெரும்பான்மையாக நிறைத்திருப்பது எண்ணங்களும் வார்த்தைகளும்தாம் என்பதை நாம் மறுத்துவிட இயலாது. அந்தஸ்து, பணம், சாதி போன்ற விஷயங்கள் வாய்க்கப்பெறாதவர்களைப் பழிப்பது எவ்வளவு இழிசெயலோ அதைப் போலவே உறவுகள் சார்ந்த பிறரின் இயலாமைகளைச் சுட்டிக்காட்டுவதும் இழிசெயலே.
மனம் குரங்கைப் போன்றது, மனமிருந்தால் மார்க்கமுண்டு போன்ற வாசகங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். ‘உள்ளப் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்’ என்னும் திருமூலர் கூற்றையும் நாம் அறிவோம். மனம் என்பது நம் எண்ணங்களன்றி வேறில்லை என்ற யதார்த்தத்தையும் மறுப்பதற்கில்லை. நல்ல எண்ணங்களால் நம் வாழ்வை அதை எதிர்நோக்கும் விதத்தை நாம் மாற்றி அமைக்கலாம் என்பது உண்மைதான். ஆனால், மனம் போலவே எல்லோருக்கும் வாழ்வு அமைகிறது என்பதைத்தான் முழுமையாக ஏற்பதற்கில்லை.
மனம் போல வாழ்வு அமைய வேண்டும் என்று வாழ்த்துவதில் தவறில்லை. ஆனால், நைந்து போன வாழ்வோடு அல்லாடும் ஒருவர் முன் இவ்வார்த்தைகள் ஏற்படும் சஞ்சலங்கள் மிகுதியானவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மனம் என்று கூறும் போது இதில் ஆண் பெண் என்ற வேறுபாடெல்லாம் இருக்கிறதா? மனம் என்பதில் எவ்வித பாலினமும் இல்லைதானே? பின்பு ஏன் பெண்மனம் ரகசியங்களைக் காக்காது என்ற பொய்யான பிம்பம் இன்னமும் நம்பப்படுகிறது. பெண் பலவீனமானவள் என்று கூறும் பொய்யைப் போல பெண்மனம் ரகசியங்களைக் காக்காது என்பதும் எவ்வளவு பெரிய பொய்! எவ்வளவு கட்டுக்கதைகளை இச்சமூகம் நம் மீது சுமத்தியிருக்கிறது?
தொடர்ந்து பேசுவோம். பேசாப் பொருளையும் பேசத் தொடங்குவோம். கதைப்போமா?
தொடரின் முந்தைய பகுதி:
ஆண் – பெண் அரசியல்
படைப்பாளர்:
ஹேமலதா
சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.