நீதிமன்றங்களும் நீதிமன்ற நடவடிக்கைகளும் இன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்களிடயே சென்றடைகின்றன. பல நீதிபதிகளின் கருத்துகளும் தீர்ப்புகளும் தொடர்ந்து விவாதப் பொருள்களாக உள்ளன.
கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷனந்தா என்பவர், நீதிமன்ற விசாரணயின் இடையே நீதிமன்றத்தில் வழக்கறிஞரிடம் பகிர்ந்த சில கருத்துகள் கடந்த வாரம் பேசுபொருளாக இருந்தன. இந்த நீதிபதியின் பகிர்வுகள் அதிர்ஷ்டவசமாக (அவருடைய துரதிர்ஷ்டம்) பதிவு செய்யப்பட்டு பகிரப்பட்டன. அவர் இரண்டு விதமான கருத்துகளை அன்றைய தினம் பகிர்ந்துள்ளார். ஒன்று, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பெங்களூருவின் கோரிபாளையா பகுதியை பாகிஸ்தான் என்று கூறியிருந்தார்.
இந்த இரண்டு கருத்துகளும் தேசிய அளவில் பேசுபொருளானது. பல மூத்த வழக்கறிஞர்கள் இந்த கருத்துகளுக்குக் கண்டனம் தெரிவித்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். மறுநாளே, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இவ்விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. இதுதொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அறிக்கை கேட்டிருகிக்கிறது உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டவுடன், சம்பந்தபட்ட நீதிபதி, அடுத்த நாள் நீதி மன்றத்தில் பெங்களூரு வழக்கறிஞர் சங்கத்தின் சில உறுப்பினர்கள் முன்னிலையில் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில் அவர், “நீதித்துறையின் நடவடிக்கையின் போது அவதானிக்கப்பட்ட சில கருத்துகள் சமூக ஊடகங்களில் அது சொல்லப்பட்ட பின்புலத்துக்கு, சூழலுக்கு மாறாக செய்தியாக்கப்பட்டிருக்கிறது. அந்த அவதானிப்புகள் எந்த ஒரு தனிநபரையோ, அல்லது சமூகத்தின் எந்த ஒரு பிரிவினரையோ புண்படுத்தும் நோக்கத்தில் தெரிவிக்கப்பட்டவை இல்லை. அந்த அவதானிப்புகள் எந்த ஒரு தனிநபரையோ, சமூகத்தையோ, சமூகத்தின் எந்தவொரு பிரிவினரையோ காயப்படுத்தியிருந்தால், நான் மனப்பூர்வமாக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும் அந்த பெண் வழக்கறிஞரையும் தான் குறிப்பிட்டு எதுவும் கூறவில்லை என்றும், அந்த வழக்கு தொடுத்த நபர்களை குறித்தே அப்படி கூறப்பட்டது என்றும் கூறினார்.
இந்த நிகழ்வு, அந்த நீதிமன்ற நீதிபதியின் உரையாடல்களைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்ததுள்ளது. உயர்நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும், 2020 கோவிட் பொது முடக்க காலகட்டத்தில் வேறு வழியின்றி இணையதளம் – வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணையினைத் தொடங்கின. அது முதல் தொடர்ச்சியாக இணயதள மூலம் விசாரணைகள் நடந்து கொண்டு வருகின்றன.
இதுவரை, நீதிமன்றங்கள் மக்களின் நேரடி பார்வைக்கு உட்பட்ட ஒரு தளமாக இருந்ததில்லை. ஒரு வழக்கில் சம்மந்தப்பட்ட நபர்கள் மட்டுமே அதிகமாக நீதிமன்றங்களுக்கு வருவதுண்டு. சென்னையிலும், மதுரையிலும் உயர் நீதிமன்றத்திற்குள் செல்ல வேண்டுமானால், அன்று வழக்கு விசாரணக்கு வரும் சம்பந்தப்பட்ட வழக்காடிகள் மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களும் தங்கள் வழக்கின் எண், அவர்கள் பெயர் போன்ற விவரங்களை ஒரு விண்ணப்பத்தில் பதிவுசெய்து, அந்த வழக்கு அன்று விசாரணக்கு உள்ளதா என்பதை சரிபார்க்கப்பட்ட பின்னரே பாஸ் வழங்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். ஒரு பொது நபராக, ‘நீதிமன்றங்கள் எப்படி இயங்குகின்றன எனப் பார்க்கலாம்’ என்று உள்ளே செல்ல இயலாது. இந்த சூழலில் இணைய தளத்தில் யாரும், எங்கிருந்தும் நீதிமன்ற விசாரணைகளைப் பார்க்கலாம் என்பது மிகுந்த வரவேற்கத்தக்க ஒன்றாகவே உள்ளது.
இன்று மேலே குறிப்பிட்டுள்ள நீதிபதியின் உரையாடல் பொதுவெளிக்கு வந்துள்ளது. ஆனால் இது போன்ற உரையாடல்கள் அவ்வப்போது நடந்து கொண்டேதான் இருக்கின்றன. நான் அந்தமானில் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் அமர்வு முன்பு ஒரு பொது நலன் வழக்கினை தாக்கல் செய்தேன். சுனாமி தாக்கப்பட்டு அங்கு இருந்த மக்கள் – குறிப்பாக மீனவர்களும் அவர்களைச் சார்ந்த தொழில் செய்யும் மக்களும், விவசாயிகளும் – தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, தங்களுடைய அனைத்து அடிப்படை தேவைகளுக்குக்கூட அரசாங்கத்தை நம்பியே இருந்த நேரம்.
சில மாதங்களுக்கு அரசு அனைவருக்கும் பொது விநியோகத் திட்டத்தின் மூலம், மக்களுக்குத் தேவையான அரிசி, மளிகை பொருள்கள், மற்றும் சில அத்தியாவசிய பொருள்களை பொது விநியோகக் கடைகளில் இலவசமாகக் கொடுத்து வந்தது. அவர்களுக்கு தேவையான உணவுப் பொருள்கள் அனைவரையும் அப்போதுதான் சென்று சேர்ந்த காலகட்டம். இன்னும் மக்களின் வாழ்வாதார நிலைமையில் சிறிய முன்னேற்றம்கூட இல்லாத நிலையில், அரசு இலவசப் பொது விநியோகப் பொருள்களை நிறுத்த உத்தரவு கொண்டு வந்தது.
அதனை எதிர்த்து, மக்களும் பல அமைப்புகளும் மக்களின் வாழ்வாதார சூழல் மேம்படும் வரை, இலவசப் பொருள்களை நிறுத்தக்கூடாது என்று போராடிய போது, அவர்கள் சார்பாக ஒரு பொது நலன் வழக்கினை தாக்கல் செய்தோம். வழக்குக்கு ஆதரவாக, பல தரப்பட்ட மக்களின் வாழ்வாதார நிலையை நீதிமன்றத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டி, பல ஆவணங்களை வழக்குடன் இணைத்திருந்தோம். வழக்கு ஆவணங்கள் சுமார் 500 பக்கங்களுக்கு மேல் இருந்தன. அந்தமான் உயர்நீதிமன்ற வரலாற்றில் அத்தனை பக்கங்கள் கொண்ட வழக்கு முதன்முறையாக தாக்கல் ஆகி இருந்தது. வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மிகுந்த எதிர்ப்புடனேயே விசாரித்தார்கள்.
ஒரு கட்டத்தில் ஒரு நீதிபதி “வாட் இஸ் திஸ் ஷிட் ஆஃப் அ பேப்பர்” (What is this shit of a paper?) என்று ஒரு பக்கத்தினை காட்டிக் கேட்டார். உடனே என் வாதத்தினை நிறுத்திவிட்டு, “என்ன கேட்டீர்கள்?” என்று கேட்டேன். அவர் “ஒன்றுமில்லை” என்றார். அவர் கேட்டது எனக்குள் ரீங்காரிமிட்டுக் கொண்டிருந்ததால், மேற்கொண்டு வாதம் செய்வதை நிறுத்தி, “நீங்கள் கேட்டது ஏற்புடையது அல்ல, நீங்கள் கூறியதை திரும்பப் பெறவேண்டும்”, என்று கூறினேன்.
அப்படிக் கூறிய நீதிபதி, நான் பேசப் பேச அப்படியே அவர் நாற்காலியில் சாய்ந்து என் பார்வையில் இருந்து மறைய ஆரம்பித்தார். உடன் இருந்த மற்றொரு நீதிபதி, “மேடம் நீங்கள் கோபப்பட வேண்டாம். என் சகோதரர் ஷீட் ஆஃப் பேப்பர் (sheet of paper) என்றே கூறினார், நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்,” என்று என்னை சமாதானப்படுத்தும்படி பேசினார். “இல்லை, நான் தெளிவாக புரிந்து கொண்டு தான் பேசுகிறேன். இதற்கு மேல் இங்கு பேசுவதற்கு எதுவும் இல்லை,” என்று நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினேன்.
அந்த வழக்கினை என்னுடன் இருந்த வழக்கறிஞர் தொடர்ந்து நடத்தினார். ஆனால் நீதிபதிகள் எதுவும் மேற்கொண்டு பேசாமல், அந்த வழக்கினை தள்ளுபடி செய்தார்கள். பின்பு அதனை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, அரசு உத்தரவினை இடைக்காலத் தடை செய்து, மக்களுக்கு தொடர்ந்து இலவச பொருள்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவு பெறப்பட்டது. அதன் மூலம் அந்தமான் மக்கள் அனைவரும் தொடர்ந்து இலவச ரேஷன் பெற்றார்கள்.
இன்றைய இணையதள வசதியும் நீதிமன்ற விசாரணைகள் பதிவு ஆகும் வசதியும் அன்று இருந்திருந்தால், அந்த நீதிபதியின் உரையாடல் பதிவாகி இருக்கும். அவர் ‘ஷிட் ஆஃப் அ பேப்பர் (shit of a paper)’ என்று கூறினாரா அல்லது அவரது சக நீதிபதி கூறியது போல் ‘ஷீட் ஆஃப் அ பேப்பர் (sheet of a paper)’ என்று கூறினாரா என்பது தெரிந்து இருக்கும். இன்றும் பல நீதிபதிகள் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளின்போது தங்கள் வரையறையை மீறுகின்ற நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் உள்ளன. பல நேரம் வழக்கறிஞர்கள் அதனைப் பெரிதுபடுத்தாமல் கடந்து சென்று விடுகிறார்கள். நீதிபதிகள் அவர்கள் கொடுத்த உத்தரவினை வழக்காடி/வழக்கறிஞர் மதிக்கவில்லை என்பதாலும், வழக்கறிஞர்கள் தொடர்ந்து அதே நீதிபதியின் முன் வந்து நிற்க வேண்டிய சூழல், கேட்டுக் கேட்டுப் பழகி விட்ட நிலை, என்று இந்த வரையறை மீறலுக்கு பல காரணிகள் இருக்கலாம். ஆனால் இந்தப் போக்கு, கர்நாடக உயர்நீதிமன்ற நிகழ்வின் மூலம் ஒரு மாற்றத்தை நீதிமன்ற நடவடிக்கைகளில், நீதிபதிகளின் உரையாடல்களில் கொண்டு வரும் என்று நம்புவோம்.
நீதிபதிகள் தங்கள் முன் வாதாடும் வழக்கறிஞர்களையும், வழக்காடிகளையும், குறிப்பாக அரசு அலுவலர்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டாம். ஆனால் மரியாதைக் குறைவாக நடத்தாமல் இருக்கலாம். பல நேரங்களில், நீதிமன்றத்தில் இல்லாதவர்களைப் பற்றி பேசும்போது ஒருமையில் குறிப்பிடுவது, ‘அவன், இவன்’ என்று சொல்லுவது, ‘இவனுங்களை பற்றி தெரியாதா?,’ ‘திமிர் பிடித்தவன்’, ‘கொழுப்பு’ என்பது போன்ற குறியீடுகளை தவிர்த்தல் நல்லது.
உயர் நீதிமன்றம் என்பது அரசியல் சாசனத்தின் ஒரு மிகப்பெரிய அமைப்பு. இது ஒரு ஜனநாயக முறையினையும், சமூக நீதியினையும் சகோதரத்துவத்தையும், தனி மனித மாண்பினையும் உயர்த்திப் பிடிக்க வேண்டிய ஒரு அமைப்பு. இங்கு வந்து அமர்ந்து நீதி பரிபாலனம் செய்யும் நீதிபதிகள் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் களைந்து, எவ்விதமான அனுமானங்களோ, முன்முடிவுகளோ இன்றி, திறந்த மனதுடன் விசாரணை செய்தால், இது போன்ற கருத்துப் பரிமாற்றங்களைத் தவிர்க்க இயலும்.
பல நீதிபதிகள் இதனை மிகுந்த அக்கறையுடன் கடைபிடிப்பதையும் பார்க்கிறோம். வழக்கறிஞர்கள் எல்லை மீறும்போது பொறுப்புடனும், மரியாதையடனும் வழிநடத்தும் நிகழ்வுகள் பல உள்ளன. இளம் வழக்கறிஞர்களை நீதிபதிகள் தட்டிக் கொடுப்பதும், ஊக்குவிப்பதுமான பெரும்பான்மையான நிகழ்வுகள் உள்ளன.
நீதிபதிகள் தங்களுடைய சொற்கள் மற்றும் செயல்களின் மூலம் அவர்களுக்குப்பின் வரும் நீதிபதிகளுக்கும், கீழமை நீதிமன்றங்களுக்கும், நிகழ்கால மற்றும் எதிர்கால வழக்கறிஞர்களுக்கும், நீதி பரிபாலனையின் நாயகர்களான பொதுமக்களுக்கும் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றனர் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.
படைப்பாளர்
கீதா தேவராஜன்
கடந்த 35 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். தொழிலாளர்கள் உரிமைகள், தொழிற்சங்க வழக்குகள், குழந்தை உரிமைகள் சார்ந்த வழக்குகள் நடத்திவருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் இறங்கியுள்ளார். இப்போது திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு கிராமத்தில் இயற்கை வேளாண்மை செய்வதுடன், உயர்நீதிமன்ற வழக்கறிஞராகவும் இயங்கி வருகிறார்.
சமீப காலத்தில் நீதிபதிகள் கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று செய்யும் அலப்பறைகள் அதிகமாக உள்ளன. விதவைக்கு எதற்கு மேக்கப் கிட் என்று அலகாபாத் உயர்நிதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். காலத்திற்கு தேவையான கட்டுரை. அருமை தோழர்.