Madam Celestin’s Divorce – Kate Chopin

மேடம் செலஸ்டின் தனது சிறிய வராந்தாவைத் துடைக்க காலையில் வெளியே செல்லும்போது, எப்போதும் சுத்தமாகவும் பொருத்தமாகவும் இருக்கும் காலிகோ ரேப்பரை (நீண்ட கவுன்) அணிந்திருப்பாள்.

அந்த சாம்பல் நிற, பின்புறம் அழகான வாட்டோ (பெண்களுடைய கவுனின் பின்புறம் முழுதும் அகலமான மடிப்புகள் தோளில் ஆரம்பித்து கவுனின் நுனி வரை தைக்கப்படும் மடிப்பு வகை) மடிப்புடன் இருக்கும் கவுனில் அவள் மிகவும் அழகாக இருப்பதாக வக்கீல் பாக்ஸ்டன் நினைத்தார். அதனுடன், தொண்டையில் இளஞ்சிவப்பு நாடாவின் வில்லை அணிந்திருந்தாள். அவள் எப்போதும் தனது வராந்தாவை துடைத்துக்கொண்டிருப்பதை காலையில் செயின்ட் டெனிஸ் தெருவில் உள்ள தனது அலுவலகத்திற்கு செல்லும் வழியில், வக்கீல் பாக்ஸ்டன் பார்ப்பார்.

அவர் அப்படி செல்லும்போது சில சமயங்களில், அவள் வீட்டின் வெளிப்புற வேலியில் சாய்ந்தவாறு நின்று காலை வணக்கம் சொல்வார்; அவள் வளர்த்து வரும் ரோஜாப்பூக்கள் குறித்து பாராட்டுவார்; அல்லது, அவருக்கு  போதுமான நேரம் இருந்தால், அவள் பேசுவதைக் கேட்பார்.  வழக்கமாக மேடம் செலஸ்டின் கேட்பதற்கு சில நல்ல விஷயங்களை வைத்திருப்பாள். அவள் ஒரு கையில் தனது காலிகோரேப்பரின் கவுனை சேகரித்துப் பிடித்துக்கொண்டும், மறுகையில் வைத்திருக்கும் துடைப்பத்தை அழகாக சமநிலைப்படுத்திக்கொண்டே, வக்கீல் சாய்ந்து நிற்கும் இடத்திற்கு அருகே சென்று, அவர் கேட்பதற்கு வசதியாக தன்னால் முடிந்தவரை வேலிக்கு அருகே சென்று பதிலளிப்பாள்.

ஆம் அவளுடைய கஷ்டங்களைப் பற்றி தான் பெரும்பாலும் பேசினாள். அனைவருக்குமே மேடம் செலஸ்டின் கஷ்டங்கள் தெரியும்.

“உண்மை, மேடம்,” ஒரு முறை வக்கீலுக்கே உரித்தான தொனியில், கொஞ்சம் உள்நோக்கத்துடன், “இது மனித இயல்பை விட அதிகம். பெண்ணின் இயல்பு – சகித்துக்கொள்ள வேண்டும். இதோ, உங்கள் விரல்கள் தேய எவ்வளவு வேலை செய்கிறீர்கள்…” அவள் தளர்ந்த கையுறைகளுக்கிடையே சிவந்து தெரிந்த தனது பளபளப்பான விரல் நுனிகளை ஒரு கணம் பார்த்தாள். “தையல் வகுப்பு எடுப்பது; பாட்டு கற்று கொடுப்பது; இன்னும் என்னென்ன கடினமான வேலைகளை உங்களுக்காகவும், அந்த இரண்டு சின்ன குழந்தைகளுக்காகவும் செய்கிறீர்கள் என்பது அந்த கடவுளுக்கு தான் தெரியும்”, அவர் ஒவ்வொன்றாக பல விஷயங்களை குறிப்பிட்டுச் சொன்னதில் மேடம் செலஸ்டினின் அழகான முகம் திருப்தியுடன் ஒளிர்ந்தது.

“நீங்கள் சொல்வது சரி தான். ஒரு பிகாயூன் (Picayune – மிக குறைந்த மதிப்புடைய காசு) ஒரு மாதம் இரண்டும் மாதமில்லை, கடந்த நான்கு மாதமாக ஒரு பைசாவைக்கூட என் கண்ணால் பார்க்கவில்லை. செலஸ்டின் கொடுக்கவுமில்லை, அனுப்பவுமில்லை…”

“துரோகி” வக்கீல் பாஸ்டன் தனக்குள்ளாக நரநரத்தார்.

“ஒரு வருடமாக…” அவள் மீண்டும் ஆரம்பித்தாள்.

“நீங்கள் அவரைப் பல மாதங்களாக பார்க்கவில்லை என்று நான் அடித்துச்சொல்ல முடியும். சரியா?” என்றார்.

“ஆம் ஆறு மாதங்கள் ஆகிவிட்டன அவரைக் கண்ணால் பார்த்து”, என்று ஒத்துக்கொண்டாள்.

“அது தான், நான் சொல்ல வந்ததும் இது தான்; அவர் நடைமுறையில் உங்களைக் கைகழுவி விட்டார்; உங்களை ஆதரிக்கத் தவறிவிட்டார். அவர் உங்களை மோசமாக நடத்தினார் என்பது எனக்கு ஆச்சரியமில்லை.”

“நல்லது, நீதிபதி,” என்றாள் தொண்டைய கனைத்துக்கொண்டே,” தினமும் மூச்ச முட்ட குடிக்கும் ஒரு குடிகார மனிதன் – அவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும்? மேலும் அவர் எனக்கு அளித்த வாக்குறுதிகளை நீங்கள் அறிந்தால்! ஆ, செலஸ்டின் வாக்குறுதியளித்த அளவுக்கு டாலர்கள் என்னிடம் இருந்தால், நான் வேலை செய்ய வேண்டிய தேவையே இருந்திருக்காது என்று உறுதியாக கூற முடியும்.”

“மேடம், என் கருத்துப்படி, விவாகரத்து நீதிமன்றம் உங்களுக்கு நிவாரணம் வழங்க தயாராக இருக்கும்போது, இந்த கஷ்டங்களை தாங்கிக்கொள்ளும் நீங்கள் கண்டிப்பாக ஒரு முட்டாள் பெண்ணாகத்தான் இருப்பீர்கள்.”

 “நீங்கள் அதைப் பற்றி முன்பே பேசினீர்கள் நீதிபதி; அந்த விவாகரத்து பற்றி நானும் யோசிதேன். நீங்கள் சொல்வது சரிதான் என்றும் நம்புகிறேன்.”

மேடம் செலஸ்டின் விவாகரத்து பற்றி யோசித்துப் பார்த்து, அதைப் பற்றியும் பேசியிருக்கிறாள்; வக்கீல் பாக்ஸ்டனும் அது குறித்து அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

மேடம் செலஸ்டின் அன்று காலை அவருக்காகக் காத்திருந்தாள், “நான் எனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் பேசிக் கொண்டிருந்தேன், அதைத்தான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்கள் அனைவரும் விவாகரத்துக்கு எதிராக இருக்கிறார்கள். நீதிபதி அவர்களே, அந்த விவகாரத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்”.

“மேடம், இந்த கிரியோல்ஸின் (கலப்பினத்தவர்) சமூகத்தில் இது எதிர்ப்பார்த்தது தான். நீங்கள் எதிர்ப்பை சந்திப்பீர்கள், அதை எதிர்கொண்டு தைரியமாக இருக்க வேண்டும் என்று நான் முன்பே உங்களை எச்சரித்தேன். நிச்சயமாக உறுதியாக இருக்க வேண்டும்”.

“ஓ, பயப்படாதீர்கள், நான் அதை எதிர்கொள்ளத்தான் போகிறேன்! இது மிகவும் அவமானகரமானது, குடும்பத்தில் இதுவரை இதுபோல நடந்ததில்லை என அம்மா கூறுகிறாள். ஆனாலும் அம்மா பேசுவது எல்லாம் சரிதான். அவளுக்கு என்ன கஷ்டம் ? நான் எல்லா வழிகளிலும் ஃபாதர் டுச்செரோனுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று சொல்கிறாள் – அவர் எங்கள் பாதிரியார் புரிகிறதா? என் அம்மாவை திருப்திப்படுத்துவதற்காக அவள் கூறியதற்கு உடன்படுகிறேன். ஆனால் உலகில் உள்ள அனைத்து நெறிமுறைகளும் செலஸ்டினின் நடத்தையை பொறுத்துக்கொள்ளத்தான் சொல்கின்றன.”

ஒரிரு நாட்களுக்கு பின்னரும், அவள் மீண்டும் அவனுக்காகக் காத்திருந்தாள். “நீதிபதி, அந்த விவாகரத்து பற்றி உங்களுக்கு தெரியும் தானே?”

“ஆமாம், ஆமாம்,” என்று வக்கீல் பதிலளித்தார், அவளுடைய பழுப்பு நிற கண்களிலும் அழகான இதழின் வளைவுகளிலும் ஒரு புதிய தீர்மானம் தெரிந்ததில் திருப்தியடைந்தார். “நீங்கள் ஃபாதர் டுச்செரோனைப் பார்த்தீர்கள் என்று நினைக்கிறேன், அவரிடம் அதை தைரியமாக கூற வேண்டி இருக்கிறது.”

“ஓ, அதற்கான சரியான வழியை உங்களுக்குச் சொல்கிறேன். அந்த மோசமான ஆளை பொறுத்தவரை, அவர் முழுவதுமாக கைகளைக் கழுவிவிட்டதாக கூறினார்; நான் பிஷப்பைப் பார்க்க வேண்டும்.”

“பிஷப் உங்களைத் தடுக்கமாட்டார் என நம்புகிறேன்,” என்ற வக்கீல்,  நன்கு புரிந்துகொண்டார் என்பதைவிட, ஆர்வத்துடன் தடுமாறினார்.

“நீதிபதி, நீங்கள் இன்னும் என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லை” என்று மேடம் செலஸ்டின் சிரித்தபடியே தலையைத் திருப்பியதுடன், கையிலிருந்த துடைப்பத்தையும் ஒரு சுழற்று சுழற்றினாள். அந்த செயல் மூலம் அவர்கள் உரையாடல் முடிவுக்கு வந்துவிட்டதை சொல்லாமல் சொன்னாள்.

பிறிதொரு நாள், “சரி, மேடம் செலஸ்டின்! பிஷப்பை பார்த்துவிட்டீர்களா?” வக்கீல் பாக்ஸ்டன் நடுங்கும் வேலிகளைப் பிடித்துபடி நின்று கொண்டிருந்தார். அவள் அவரை பார்க்கவில்லை. “ஓ! நீங்களா நீதிபதி?” என்று கூறியவாறு ஆவலுடன் அவனை நோக்கி விரைந்தாள். ஆனால் அதில் அவனைக் கவரும் எண்ணமில்லை.

“ஆம், நான் மான்சியொரைப் பார்த்தேன்,” என்று ஆரம்பித்தாள். வக்கீல் ஏற்கனவே அவளது முகத்தில் தெரிந்த உறுதியான தீர்மானத்தை வைத்து அனுமானித்திருந்தார். “ஆ, அவர் ஒரு பிரசங்கர். ஆனால் நாச்சிடோசெஸ் திருச்சபையில் பிரசங்கர் அல்ல. என் கஷ்டங்களைப் பற்றி அவர் என்னிடம் பேசிய விதம், என்னை அழத் தூண்டியது; அவர் அவற்றை எப்படி புரிந்துகொள்கிறார், எனக்காக அனுதாபப்படுகிறார் என்றே தெரியவில்லை.

நீதிபதி, நான் எடுக்க விரும்பும் அந்த நடவடிக்கையைப் பற்றி அவர் எப்படிப் பேசுகிறார் என்பதைக் கேட்டால், அது உங்களுக்கு உபயோகமாக இருக்கும், ஏனென்றால் அது சர்ச்சைக்குரியது.

ஒரு கத்தோலிக்கரின் கடமை எல்லாவற்றையும் அதன் கடைசி எல்லை வரை சென்று பார்ப்பது. ஓய்வுபெறும் வரை வாழ்க்கையை சுய மறுப்புடன் நான் வழிநடத்த வேண்டும் என்பதையெல்லாம் அவர் என்னிடம் கூறினார்.”

“ஆனால் அவர் உங்கள் தீர்மானத்திலிருந்து உங்களைத் திருப்பவில்லை என நினைக்கிறேன்” என்று வக்கீல் மனநிறைவுடன் சிரித்தார்.

“அதற்காக, இல்லை,” அவள் உறுதியாக பதிலளித்தாள். “பிஷப்புக்கு செலஸ்டின் போன்ற ஒருவரை திருமணம் செய்து கொள்வது என்னவென்று தெரியாது, ஏதாவது ஒரு முடிவுக்கு வர வேண்டும், அல்லது நான் நினைப்பது போல முடிவுக்கு வர வேண்டும். இனிமேல், ‘செலஸ்டின் வாழ்க்கையில் இருந்து விலக எனக்கு சட்டத்தில் உரிமை கிடைத்தது’ என்று நீங்கள் கூறினால், போப்பாலும் என்னை நிறுத்த முடியாது.”

வக்கீல் பாக்ஸ்டன் மனதில் புதிய மாற்றம் ஏற்பட்டது. அவர் தனது வேலை நாள் கோட்டை கழட்டிவிட்டு தனது ஞாயிற்றுக்கிழமை அணியும் உடையை அலுவலகத்திற்கு அணியத் தொடங்கினார். அவர் தனது பூட்ஸ் பாலீஷ், சட்டை காலர், அணியும் டை ஆகியவற்றில் கவனிக்கத்தக்க அளவு அக்கறை எடுத்தார். அவர் முன்னர் சரியாக கவனிக்கப்படாதிருந்த தனது மீசையை கவனமாக சீராக்கினார். பின்னர் பழைய நகரத்தின் தெருக்களில் நடந்து செல்லும்போது, அவளை மனைவியாக்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கற்பனையில் மிதந்து கனவு காணும் முட்டாள் பழக்கத்தில் விழுந்தார். அழகான மேடம் செலஸ்டின் அந்த இனிமையான புனிதமான அலுவலகத்தை தன் இருப்பால் நிரப்புவதைத் தவிர வேறு எதையும் அவர் கனவு காணவில்லை. பழைய நாச்சிடோசெஸ் வாசிகள் அவர்களை அவ்வளவு எளிதில் சுகமாக வாழ விடமாட்டார்கள். ஆனால் நாச்சிடோசெஸ் நகரத்திற்கு வெளியே, உலகம் நிச்சயமாக வாழ போதுமானதாக இருந்தது.

ஒரு நாள் காலையில் மேடம் செலஸ்டின் வீட்டிற்கு அருகில் வந்தபோது அவரது இதயம் வித்தியாசமான ஒழுங்கற்ற முறையில் துடித்தது, ரோஜாப்பூக்களுக்குப் பின்னால் அவளைக் கண்டுபிடித்தார், வழக்கம் போல் அவள் துடைப்பத்தால் தாழ்வாரம் மற்றும் படிகளை முடித்துவிட்டு, வயலட் எல்லையின் விளிம்பில் சிறிய செங்கல் நடையை துடைத்துக்கொண்டிருந்தாள்.

“குட்-மார்னிங், மேடம் செலஸ்டின்.”

“ஓ, நீங்களா, நீதிபதி? குட் மார்னிங்” என்றாள். அவர் காத்திருந்தார். அவளும் அவ்வாறே செய்கிறாள் என்று தோன்றியது. பின்னர், “நீதிபதி, அந்த விவாகரத்து பற்றி உங்களுக்குத் தெரியும் இல்லையா? அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன், அந்த விவாகரத்து விவகாரம் சரியாக வராது என்று கருதுகிறேன்.” துடைப்பம் கைப்பிடி முடியும் இடத்தில் அவள் கையுறை உள்ளங்கையில் ஆழமான சுருக்கங்களை உருவாக்கி, அவற்றை இலக்கின்றி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய முகம் வக்கீலுக்கு வழக்கத்திற்கு மாறாக சிவந்திருப்பதாகத் தோன்றியது; ஆனால் அது தொண்டையில் கட்டியிருந்த இளஞ்சிவப்பு டையின் பிரதிபலிப்பு மட்டுமே.

“ஆமாம், உங்களுக்கு கூற வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். நீதிபதி, செலஸ்டின் நேற்று இரவு வீட்டிற்கு வந்தார். அவர் இனி மனந்திருந்தி மரியாதையான புதிய வாழ்க்கை வாழ முடிவு எடுத்திருப்பதாக எனக்கு வாக்கு கொடுத்துள்ளார்.”

**************

ஆசிரியர்: கேட் சோப்பின், மூலக் கதை

தமிழில் கமலி பன்னீர்செல்வம்

படைப்பாளர்

கமலி பன்னீர்செல்வம்

கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இவரது ‘ஹார்மோன் விளையாட்டு’ என்ற நூலை ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.