‘இந்த ஊர்ல இருக்கிற எல்லா ஆம்பளைகளையும் சவுக்கால வெளுத்துவிட்டு, முதுகுல உப்பு, மொளகாப்பொடி தடவணும்.’ ஜோதி பல்லைக் கடித்தபடி தையல் இயந்திரத்தை மிதித்தாள். அது அவள் வாழ்க்கையைப்போல கடகடவென்று உருண்டது. கையும், காலும் தன் போக்கில் வேலை செய்தன.

அவள் முதுகில் ஏதோ குறுகுறுவென்று ஊர்வதுபோல் கூசியது. சட்டென்று திரும்பினாள். அங்கே பல்லை இளித்தபடி அவன்தான்…  சூப்பர்வைசர் வேல்ராஜ் நின்றிருந்தான். பார்வை எறும்புகள் சரம் பிடித்துக் கொண்டிருந்தன.

“என்ன ஜோதி… இப்புடி வேர்த்து ஊத்துது உனக்கு? ஃபேனை திருப்பி வெக்கட்டா..?” பேசியவாறே பெடஸ்டல் பேனை அவள் புறம் திருப்பினான். ஜோதியின்மேல் சிலுசிலுவென்று படர்ந்த காற்று அவளைக் குளிர்விப்பதற்குப் பதிலாகக் கொதிக்கும் தீயில் தள்ளியது. முகத்தைத் திருப்பிக்கொண்டு பதில் பேசாமல் தைக்கத் தொடங்கினாள்.

“அய்யே… கொஞ்சம் சிரிச்சாத்தான் என்னவாம்?” வேல்ராஜ் விடாப்பிடியாகக் கேட்டான். மீண்டும் மௌனமே பதிலானதில் எரிச்சலுடன் நகர்ந்தான். “ஒருநா எங்கிட்ட வசமா மாட்டுவடி” மனதுக்குள் கருவிக் கொண்டான்.

அவளுக்குக் கண்களில் நீர் முட்டிக் கொண்டது. தினமும் ஒன்றரை மணி நேரம் பேருந்தில் கசகசத்து இங்கே வந்து மாலை வரை கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. அதில் இந்த வேல்ராஜ் மாதிரி ஆட்களின் தொந்தரவு ஒருபக்கம்.

ஜோதி இந்த நகரத்தின் எத்தனையோ லட்சம் பேர்களில் ஒருத்தி. அவள் பெற்றோருக்கு இரண்டாவது மகள். மூத்தவள் சுசீலா படிக்கவேமாட்டாள். ஜோதி நன்றாகப் படித்துக் கொண்டிருந்தாள்.  பத்தாவதில் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றாள். கடனை உடனை வாங்கி ஓரளவு சுமாரான பள்ளியில் அக்கவுண்ட்ஸ் படிப்பில் சேர்ந்தாள். அப்பன்காரன் குடிகாரன். அம்மா தனலட்சுமி அக்கம் பக்கம் நான்கைந்து வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்த்துப் பழையது கொண்டு வருவாள். அதில்தான் நிறைய நேரங்களில் வயிறு அரைவாசியாவது நிரம்பும்.

அந்த அரை வயிற்று சோற்றுக்கே சுசீலாவும், ஜோதியும் லட்சணமாக இருந்தார்கள். சுசீலா வயிற்றுப் பசியோடு வயதுப் பசியும் சேர்ந்து கொண்டதில் பக்கத்தில் அபார்ட்மெண்ட் கட்ட வந்த ஒரு வெளியூர் இளைஞனுடன் ஒருநாள் அதிகாலை ஓடிப்போனாள். அம்மா இடிந்து போய்க் கிடந்தாள். அப்பன் பெருமாள் செய்தியின் துயரம் தாளாமல் மீண்டும் ஒரு பாட்டிலை ஊற்றிக் கொண்டு வந்து வாசலில் நின்றுகொண்டு களமாடினான். “யேய்ய்… இன்னமே அந்த ஓடுகாலி எம்மவ இல்லை. இந்த ஊட்டுல இருந்து எவளாச்சும் வெளிய காலெடுத்து வச்சீங்க. தலை கழுத்துல இருக்காது.” மனைவியை மூர்க்கமாக எட்டி உதைத்து இவனும் கீழே விழுந்தான். ஜோதி பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஊட்ட உட்டு வெளிய போவலேன்னா சோத்துக்கு என்ன பண்றது? நீ ஒழுங்கா வேல வெட்டிக்குப் போயி, நாலு காசு கொண்டாந்திருந்தா எம்மவ இப்புடி ஓடிப் போயிருக்க மாட்டா” தனலட்சுமி அப்படியே தரையில் அமர்ந்து கொண்டு பிலாக்கணம் வைத்தாள். இவளுக்கு வயிற்றைப் பிசைந்தது. பெருமாள் பதிலேதும் சொல்லாமல் மீண்டும் கடைக்குக் கிளம்பினான்.

மறுநாளில் இருந்து ஜோதியின் படிப்பு நிறுத்தப்பட்டது. படிக்க வேண்டும் என்று அழுது அரற்றிய மகளிடம், “ஏன் நீயும் எவனையாவது இழுத்துட்டு ஓடவா?” என்று கூசாமல் கேட்டான் பெருமாள். “ஊட்டு வேலைகளைப் பாத்துட்டு பேசாம உள்ளயே கெட.” பாட்டிலை வாயில் கவிழ்த்துக் கொண்டு, ஒரு விரலால் ஊறுகாயை வழித்து நக்கினான். சுறுசுறுவென்று ஏறவே தலையை உலுக்கிக் கொண்டான். ஜோதி கண்ணீரை விழலுக்கு இறைத்தாள்.

அவளுக்கு சிறுவயதில் இருந்தே யாராவது துணை வேண்டும். தண்ணீர் பிடிக்க, கோயிலுக்குப் போக, இரவில் தூங்க, பள்ளிக்குப் போக, அவ்வளவு ஏன்? காலையில் கொல்லைக்குப் போகக்கூட அம்மாவோ, அக்காவோ வேண்டும். யாரையாவது சார்ந்தே இருப்பாள். வீட்டில் வேலைகள் செய்து பொழுதைக் கழித்தாள். உடன் படிக்கும் தோழிகள் பள்ளிக்குப் போவதை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டு இருப்பாள்.

நான்கைந்து மாதங்களில் ஜோதியின் எதிர்ப்பையும், தனலட்சுமியின் கண்ணீரையும் பொருட்படுத்தாது பெருமாள் பக்கத்து ஊரில் ஆட்டோ ஓட்டும் முரளிக்கு ஜோதியைத் திருமணம் செய்து அனுப்பிவிட்டான். “புள்ளப்பூச்சியை மடில கட்டுன மாதிரி, உன்னை ஊட்ல வெச்சிட்டு, எப்ப நீயும் உங்கக்கா மாதிரி ஓடீருவியோன்னு காவக் காத்துட்டுக் கெடக்க முடியாது” பீடியைப் பற்ற வைத்து இழுத்தான்.

“உங்கக்கா ஓடிப் போய்ட்டாளா? ஆமா நீயும் அந்த மாதிரி யார்கூடயாச்சும் பழகிருக்கியா?” என்று கேட்ட கணவனை முதல்நாளே பிடிக்காமல் போனது அவளுக்கு. குடிப்பழக்கம் வேறு அவனுக்கு இருந்தது. 

கடனே என்று அவனுடன் குடும்பம் நடத்தினாள். முரளி ஒழுங்காக ஆட்டோ ஓட்டாமல் குடித்து விட்டுக் கிடந்தான். இதற்கிடையே ஒரு பெண்குழந்தை பிறந்தது. பெண்ணாகப் பிறந்து விட்டதே என்று மாமியார் தினமும் கரித்துக் கொட்டினாள். வருமானம் சரியாக இல்லாமல் பட்டினி கிடந்தாள். பக்கத்து வீட்டில் இருக்கும் சந்திரா அவ்வப்போது பரிதாபப்பட்டு இவளுக்கும், மகளுக்கும் உணவிடுவாள். குழந்தை சத்தான ஆகாரம் இன்றி நோஞ்சானாக இருந்தது. 

ஒருநாள் சந்திரா தான் பணிபுரியும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று இவளையும் அழைத்துப் போனாள். முரளிக்குத் தெரிந்து பேயாட்டம் ஆடினான். “வேலைக்குப் போறவ எவடி ஒழுங்கா இருக்கா? ஊர் சுத்துறதுக்கு இது ஒரு சாக்கு.” போதையில் சலம்பியவனிடம் தாட்சண்யமாகப் பேசினாள் சந்திரா.

“தோ பாரு தம்பி. நீயும் ஒழுங்கா காசு தாரதில்ல. உம்மவளைப் பாத்தியா? நோஞ்சானா இருக்கு. சோதி ஊட்ல சும்மாதான இருக்கா. உங்கம்மாவ புள்ளையப் பாத்துக்கச் சொல்லு. எல்லாரும் ஊட்லயே குந்தினு இருந்தா தட்டுல சோறு ஆகாசத்துலருந்தா வரும்?” கொஞ்சம் கெஞ்சலும், கொஞ்சம் அதட்டலுமாகச் சம்மதம் வாங்கிவிட்டாள்.

“சரி..போ. ஆனா எதுனா தப்பா காதுல உழுந்துது, கருக்கருவாளை எடுத்து சீவிப் போட்ருவேன்.” எச்சரித்து விட்டுத்தான் வேலைக்கு அனுப்பினான்.

தினமும் விடிகாலையிலேயே எழுந்து, சோறு, குழம்பு ஆக்கி வைத்து விட்டு, தெருமுனையில் தண்ணீர் பிடித்து வந்து வைத்து விட்டு, மகளை எழுப்பிக் குளிப்பாட்டி, துணி மாற்றி, சோறூட்டி விட்டு, முகத்தைக் கடுகடுவென்று வைத்திருக்கும் மாமியாரிடம் ஒப்படைத்து, அரக்கப் பறக்க ஒருவாய் அள்ளிப் போட்டுக் கொண்டு, மதியத்துக்கும் டப்பாவில் சோற்றை அடைத்துக் கொண்டு சந்திராவுடன் ஓடுவாள். அங்கே தையல் இயந்திரத்துடன் போராடிவிட்டு மாலையில் பிழிந்த துணியாய் வருவாள்.

வேல்ராஜ் அங்கே சூபர்வைசராக இருந்தான். பெண்களிடம் பேசும்போது கண்களைப் பார்த்துப் பேசவே மாட்டான். அங்கே பணிபுரியும் பெண்கள் பெரும்பாலும் வறுமையின் பிடியில் இருந்தார்கள். அதனால் அவர்களை வளைத்து விடுவது அவனுக்கு சிலசமயம் எளிதாக இருந்தது. எல்லோரையும் ஒரே கணக்கில்தான் வைத்திருந்தான். அவனுக்கு உடன்பட்டவர்களுக்கு கம்பெனியில் சலுகைகள் தாராளமாகக் கிடைத்தன. மறுத்தவர்களுக்கு வேலைச்சுமை அதிகரித்தது. 

சந்திராவுடன் தினமும் வேலைக்குப் போய் வந்தாள் ஜோதி. ஒன்றிரண்டு மாதங்கள் எந்தப் பிரச்னையும் இன்றி நகர்ந்தன. மீதமாகும் துணிகளைச் சேகரித்து குழந்தைக்கு இரண்டு கவுன்கள்கூடத் தைத்தாள் ஜோதி.

ஒருநாள் மதியம். சாப்பிட்டு முடித்து டிபன் டப்பாவைக் கழுவி விட்டுத் திரும்பியவள் வேல்ராஜ் மீது மோதிக் கொண்டாள். அவனது விழிகள் விரிந்தன. ‘எப்படி இவ்ளோ நாளா இவளைக் கவனிக்காம விட்டேன்?’ மண்டையைக் குடைந்து கொண்டான். “சாரிங்க சார்” என்று மன்னிப்பு கேட்டவளின் கையைப் பிடித்துக் கொண்டான். “உனக்கு அடி ஏதாச்சும் பட்டுடுச்சா? நீ எந்த செக்சன்? ஸ்டிச்சிங்கா, எம்ப்ராய்டரியா? ஆமா… நா உன்னப் பாத்ததேயில்லை. நீ எங்கிருந்து வர்றே?” வாய் பாட்டுக்கு சரமாரியாகக் கேள்விகளை உதிர்த்துக் கொண்டிருந்தாலும் கை அவளது கையைத் தடவிக் கொண்டிருந்தது. கண்கள் உடலெங்கும் மேய்ந்து கொண்டிருந்தது. அவளுக்கு அருவருப்பாக இருந்தது. பட்டென்று கையை உதறிவிட்டுப் போனாள். 

அப்புறம் பிடித்தது சனி. ஒரு நாளைக்கு நாலைந்து முறை தேவையில்லாமல் அவளது பிரிவுக்கு வரத் தொடங்கினான். அவளை உரசுவது, முதுகைத் தடவுவது, இடுப்பில் கை வைக்க முயற்சிப்பது என்று அத்துமீறத் தொடங்கினான். அதுபோல்தான் இன்றும் வந்து ஃபேனைத் திருப்பி விட்டுப் போனான். மதியம் சாப்பிடும்போது அடுத்த பிரிவில் வேலை பார்க்கும் ரத்னா வந்தாள்.

“நீதானா அந்த மேனாமினுக்கி.?” என்றாள் எடுத்த எடுப்பிலேயே. ஜோதி அதிர்ந்தாள். 

“வேலு சொல்லுச்சி. புடி குடுக்க மாட்டேங்குறியாமே. உன்னை பத்தி விசாரிச்சிட்டுத்தான் வந்துருக்கேன். உம்புருசன் ஒரு குடிகாரன். ஒழுங்கா ஆட்டோ ஓட்டாத தெண்டச்சோறு. கொஞ்சம் வேலுவுக்கு அட்ஜெஸ்ட் பண்ணிட்டுப் போனாத்தான் என்ன?  கம்பெனிக்கு வர நேரமானா கேக்க மாட்டாங்க. இப்புடி பீஸ் தெச்சிட்டு அல்லாட வேணாம். டீ குடிக்க போனா சீக்கிரம் வரத் தேவையில்லை. மத்தியானம் சாப்டுட்டு சித்த நேரம் தூங்கலாம். அப்பப்ப கைல காசு. வேறென்ன வேணும் உனக்கு?” என்றவளை அருவருப்பாகப் பார்த்தாள்.

“எனக்கு மானம், மரியாதை வேணும்.” என்றவளைப் பார்த்து நொடித்து விட்டுப் போனாள் ரத்னா. “ம்க்கும்… இவுளுக தான் மானம், மருவாதியோட இருக்காளுக. இருடி உன் மானம் என்னாவுதுன்னு பாரு…” 

அன்று மதியம் மூன்று மணிக்கு தேநீர் குடிக்க எழுந்தவளுக்கு கழிவறை போகும் உந்துதல் ஏற்பட்டது. ஒரு சிறிய சந்துக்குள் நுழைந்துதான் கழிவறைக்குச் செல்ல முடியும். சந்தின் முனையில் வேல்ராஜ் நின்றிருந்தான். ஜோதி திகைத்து திரும்பிச் செல்ல முயன்றாள். அவன் சட்டென்று அவள் கையைப் பற்றி இழுத்து மூர்க்கமாக அணைக்க முயன்றான். அவள் அவனை உதற முயன்று தோற்றாள்.

“என்னடி ரத்னா கிட்ட மானம் மரியாதை வேணும்னு கேட்டியாமே. என்ன திமிரா? இங்க எனக்கு புடிச்சவ எவளா இருந்தாலும் வளைஞ்சு குடுக்கணும். இல்லேன்னா ஒடிச்சிருவேன் பாத்துக்க. வேலைல இருக்கணுமா? வேணாமா? காலி பண்ணிடுவேன். மரியாதையா நாளைக்கு காலைல பதினொரு மணிக்கு டீ பிரேக்ல பின்னாடி இருக்குற குடோனுக்கு வர்ற. இல்லேன்னா உம் பேரைக் கெடுத்துருவேன். கம்பெனி முழுக்க நீ ஒரு மேட்டருன்னு பரப்பி விட்ருவேன். மரியாதையா நாளைக்கு மல்லிப்பூ வெச்சிட்டு வந்து சேரு.” அவள் கன்னத்தில் முத்தமிட முயன்றான். ஜோதி தனது பலமனைத்தையும் சேர்த்து அவனை உதறிவிட்டு ஓடினாள்.

அன்று மாலை சந்திராவுடன் செல்லும்போது அவள் முகத்தைப் பார்த்து விட்டு வினவிய சந்திராவிடம் வெடித்து அழுதாள். “நான் என்னக்கா பண்ணுவேன். இந்தப் பாவி இப்படி தொல்லை பண்றான். எம் புருசனைப் பத்தி உங்களுக்கு நல்லாத் தெரியும். வேலை போய்டுச்சுன்னா என்ன பண்ணுவேன்? எப்படி இந்தாள் கிட்ட சொல்லுவேன்?” கேவினாள். “பேசாம வெசத்தை தின்னுட்டு செத்துடறேன்.”

“அப்ப உன் புள்ளை.?” 

“அதையும் என்கூடவே கூட்டிட்டு போயிடுறேன். இந்தக் கேடுகெட்ட உலகத்துல அது வாழ வேணாம்க்கா.”

சந்திரா அவளை முறைத்தாள். “செத்தா எல்லாம் சரியா போயிடுமா? அறிவு கெட்டவளே. வாழ்ந்து காட்டணும். நீ என்னடி தப்பு செஞ்ச?”

“இப்ப நான் என்ன பண்றது?.” கண்ணீரைத் துடைத்துக் கொண்டே கேட்டாள் ஜோதி.

பேருந்தை விட்டிறங்கி இருவரும் நடந்தார்கள்.

“எத்தனை நாளைக்கு அடுத்தவங்களைச் சார்ந்து வாழுவே ஜோதி? யாரும் எப்பவும் துணைக்கு வர மாட்டாங்க. நமக்கு நாம தான் நிரந்தரத் துணை. புரிஞ்சிக்கடி. உன் பிரச்னைகளுக்குத் தீர்வு வெளிய இல்லை. உன்கிட்டத்தான் இருக்கு. சுய மரியாதையை விட்டுக் குடுக்காதே. நீ எதிர்த்துக் குரல் குடுத்துப் பாரு. நாய் விரட்டும்போது ஓடுனேன்னா அது இன்னும் விரட்டும். குனிஞ்சு கல்லெடு. வாலை இடுக்கிட்டு ஓட்டம் பிடிக்கும்.”  வீடு திரும்பும் போது ஜோதியின் மனமும்,  முகமும் தெளிவடைந்து இருந்தது.

அவள் வீட்டுக்குள் நுழைந்ததும் மாமியார் மகளைக் கொண்டு வந்து கையில் திணித்தாள். “இந்தா புடி உம் புள்ளைய… இத நாள் முழுக்க பாத்துக்கணும்னு என் தலையெழுத்து” என்றளை நோக்கி, “ஏன் அதைவிட நீங்க வேறென்ன பண்றீங்க? நான்தான் காத்தாலயே சோறாக்கி, வேலைகளை எல்லாம் முடிச்சிட்டு போறேன்ல. ராத்திரி வந்து துணி துவச்சு, மாவரைச்சு, சாப்பாடு செய்யுறேன்ல… இதக்கூட உங்களால பண்ண முடியாதா?” ஆங்காரமாகக் கத்தினாள். மாமியார் வாயடைத்துப் போனாள்.

இரவு களைப்பிலும், வெறுப்பிலும் உறங்கிக் கொண்டிருந்த ஜோதியை உசுப்பினான் முரளி. அவனது கையைத் தட்டி விட்டாள். முரளி வெறியானான். “என்னடி பிகு பண்ற. வேலைக்கு போற எடத்துல எவனையாவது வச்சிருக்கியா?” மதுவின் நெடி மூக்கைக் கடுக்க வைத்தது.

அடுத்த நொடி வெகுண்டெழுந்த ஜோதி, ஆவேசமாக அவனைத் தள்ளி விட்டாள். “நீயெல்லாம் ஒரு மனுஷனா? கட்ன பொண்டாட்டியை நல்லா பாத்துக்க முடியாத கையலாகாவன் நீ. இதுக்கு மட்டும் நான் வேணுமா?” பொரிந்தாள்.

“என்னடி.. சம்பாரிக்குற திமிரா?”

“ஆமாண்டா.. சம்பாரிக்க வக்கில்லாத நீ பேசவே கூடாது. நல்லதா நாலு வார்த்தை பேசுறியா நீ? நான் என்ன மெஷினா? இனிமே என் இஷ்டம் இல்லாம மேல  கை வெச்சே, மரியாதை கெட்டுப் போயிரும்” அவிழ்ந்த கூந்தலை முடிந்து கொண்டாள். வெறிபிடித்த வேங்கை மாதிரி சீறிய அவளைப் பார்த்துத் திகைத்து நின்றான் முரளி. அவனது போதை எப்போதோ இறங்கிப் போயிருந்தது.

மறுநாள். ஜோதி வழக்கம் போல வேலைகளை முடித்து விட்டு கம்பெனிக்குக் கிளம்பினாள். பத்துமணி இருக்கும். வேல்ராஜ் அங்கே வந்து அவள் இருக்கிறாளா என்று நோட்டமிட்டான். அவளைப் பார்த்ததும் முகம் மலர்ந்தான். “படிஞ்சிட்டா போல. வேலைய விட்டு தூக்கிருவேன்னதும் பயம் வந்துருச்சு.” மனதுக்குள் சிரித்துக் கொண்டு அவள் அருகில் வந்தான். 

“என்ன ஜோதி? சும்மா ஜில்லுனு வந்திருக்க” என்றவாறு அவள் அருகில் வந்து இளித்தான். வேகமாக எழுந்த ஜோதி பளாரென்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். தையல் மிஷின்கள் சட்டென்று நிசப்தமாகின. 

“என்னடா? வேலைக்கு வர்ற பொண்ணுங்கனா உனக்கு அவ்ளோ இளப்பமா? என்ன தைரியத்துல மேல கை வெக்கிற? நாங்க கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிக்கணும்னு வேலைக்கு வந்தா, உன்னை மாதிரி மொள்ளமாறிங்க அதை உபயோகிக்க பாக்குறீங்களா?” என்றவாறே கைப்பையைத் திறந்து ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்தாள். 

“நேத்து என்கிட்ட நீ நடந்துகிட்டதை இந்தப் பேப்பர்ல கம்ப்ளெயிண்டா எழுதியிருக்கேன். அது மட்டும் இல்ல. இங்க நிறையப் பொண்ணுங்ககிட்ட நீ முறைதவறி நடந்ததையும், அவங்களை மிரட்டினதையும் சேர்த்து எழுதி இருக்கேன். அவங்ககிட்ட எல்லாம் கையெழுத்து வாங்கி இருக்கேன். இதை மேனேஜர் கிட்ட புகாரா கொடுக்கறோம். உடனடியா உன்னை விசாரிச்சு, நடவடிக்கை எடுக்கலைன்னா முதலாளிகிட்டயும் புகார் பண்ணுவோம். போராட்டம் நடத்துவோம்” என்றவாறே மேலாளரின் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினாள் ஜோதி. கையெழுத்துப் போட்ட ஏழெட்டுப் பெண்கள் அவளைத் தொடர்ந்தனர்.

வேல்ராஜ் சுற்றும்முற்றும் பார்த்து விட்டு வலியால் சிவந்த கன்னத்தைத் தடவிக் கொண்டே வெளியேறினான்.

படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.