கேள்வி:
நான் ஷர்மிளா, கணித ஆசிரியர். எங்க அண்ணிக்கு குழந்தை பிறக்கப் போகுது! புது வரவுக்காக வீட்டில் என்ன திட்டங்கள் வகுக்கணும்,என்ன செயல்களை கூட்டணும், பெருக்கணும், கழிக்கணும்?
பதில்:

உங்கள் அண்ணிக்கு நல்லவிதமாக குழந்தை பிறந்து தாயும் சேயும் நலமாக இருக்க வாழ்த்துக்கள்! கணக்கு டீச்சரின் கேள்விகள் மிகச் சரியானவை! எல்லோருடைய கூட்டு முயற்சியும் இருந்தால்தான் குழந்தையை சிறப்பாக வளர்க்கமுடியும்.
குழந்தையை வரவேற்க செய்ய வேண்டியவை:

- வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கும் சுத்தமாக இருக்க வேண்டும். வீட்டை ஒட்டடை அடித்து, ஜன்னல்கள், கதவுகள் உட்பட எல்லாவற்றையும் தூசி தட்டி, சோபாக் கவர்கள், மேஜை விரிப்புகள், திரைச் சீலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் எல்லாவற்றையும் சுத்தப்படுத்த வேண்டும். சோபாக்கள், மர நாற்காலிகள், படுக்கைகள் தலையணைகள் ஆகியவற்றை தூசுதட்டி முடிந்தால் வெயிலில் போட்டு எடுக்கலாம். வெயிலில் போடுவதால் பூசணத் தொற்று நீங்கும்.
- தரையை தினமும் சுத்தம் செய்து ஏதாவது கிருமி நாசினி கலந்த நீரால் துடைக்க வேண்டும். முழு வீட்டையும் செய்ய முடியாவிட்டாலும் குழந்தையும், தாயும் இருக்கும் அறையையும் சமையலறையையும் கட்டாயம் தினமும் துடைக்க வேண்டும்.
- கழிவறைகள், வாஷ் பேசின்கள், குளியல் அறைகள் ஆகியவற்றை வார இருமுறை சுத்தம் செய்து பிறகு கிருமி நாசினி தெளித்துவிடவேண்டும்.
- குழந்தை மற்றும் தாய்க்கும் தனித்தனியாக குளிக்க புதிய அல்லது புதிது போல் சுத்தப்படுத்தப்பட்ட வாளி, கப்பு போன்றவை வேண்டும்.
- குழந்தைக்கு தனியாக சோப்பு டப்பா, சோப், தேங்காய் எண்ணெய் தேவை.
- குழந்தைக்கு குளிக்க வைக்க மிருதுவான புதிய காட்டன் துண்டுகள் தேவை.
- குழந்தைக்கு சிறிய காட்டன் படுக்கை, காட்டன் போர்வைகள், பஞ்சு நிரப்பிய சிறு தலையணைகள், திண்டுகள் தேவை.
- காட்டன் காலுறைகள், கையுறைகள், தலைக்கு தொப்பி ஆகியவை தேவை.
- குழந்தைக்கான உடைகளில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். எல்லா உடைகளும் காட்டனாக மட்டுமே இருக்க வேண்டும். சட்டையில் எளிதாக போட்டு எடுக்கும் வண்ணம் முன்பக்கம் முழுதும் திறந்து மெல்லிய நாடாக்கள் கொண்டதாக இருந்தால் நல்லது. குட்டையான கைகள் கொண்டதாக அல்லது கைகள் இல்லாமலேயும் இருக்கலாம்.இடுப்பில் முக்கோணமாக மடித்த காட்டன் நாப்கின்களை முன்புறமாக கட்டி விடுவதற்கு ரெடி பண்ணிக்கணும். உடை மாற்றும் போதும், இவற்றை மாற்றி விடலாம் . எலாஸ்டிக் வைத்த ஜட்டிகளை தவிர்க்க வேண்டும்.
- பேபி பவுடர்களை கூடியவரை தவிர்க்கவும். இவற்றைப் பற்றி தனியாக அடுத்து சொல்கிறேன்.
- குழந்தைக்கு துடைத்து விட சுத்தமான வெள்ளைத் துணிகளை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். வெள்ளையில் விலை குறைந்த காடா துணிகள் கிடைக்கும். ஒரு மீட்டர் ரூ 30 – 40 இருக்கும் அகலமும் அதிகம் இருக்கும். அதனை 1 ½ X 1 ½ அடி சதுர துணிகளாக வெட்டி ஓரம் தைத்து வைத்துக் கொள்ளலாம். அம்மா, மாமியார், பாட்டியின் பழைய புடவைகள், கணவர் அல்லது அண்ணனின் நலிந்த கைலிகள் குழந்தைக்கானவை அல்ல. வெள்ளைத் துணியாக இருந்தால் அழுக்கு, கறை, சிறு பூச்சிகள் ஊர்வது எல்லாம் எளிதாக கண்ணுக்குத் தெரியும்.
- கூட்டு குடித்தனமா அல்லது தனி குடுத்தனமா என்பதை பொறுத்து தாய், மாமியார், அத்தை போன்ற அனுபவம் உள்ள யாராவது ஒருவர் தாயையும் குழந்தையையும் கவனித்துக் கொள்ள முடிவு செய்ய வேண்டும். உதவிக்கு இன்னும் ஒரு உதவியாளரும் (அவர் பெண்ணாக இருப்பது நல்லது) தேவை.
- வீட்டில் உள்ள எல்லோரும் தங்கள் துணிமணிகள், கைகள், நகங்கள் ஆகியவற்றை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
- பணியில் இருக்கும் பெண்ணாக இருந்தால் எவ்வளவு மாதங்கள் முழு சம்பளத்துடன் விடுப்பு, அரை சம்பளம் அல்லது சம்பளம் இல்லா விடுப்பு எடுக்க முடியும் என்பதெல்லாம் கணவருடன் பேசி குடும்பத்தின் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்ய வேண்டும்.
- குழந்தை தரிப்பதற்கு முன்பே சரியாக யோசித்து பணம் சேர்த்து வைப்பது நல்லது.
- மருத்துவ உதவிக்கு குழந்தை மருத்துவர், மகளிர் நல மருத்துவர் அல்லது பொது மருத்துவர் அருகில் இருக்கிறார்களா; மருத்துவமனையின் பணி நேரம் என்ன, அவசரத்திற்கு தொடர்பு கொள்ள போன் நம்பர்கள், மருந்து கடை அருகில் உள்ளதா என்று இதையெல்லாம் தெரிந்து டைரியில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அருகில் உள்ள ஆட்டோக்காரர் நம்பரும் தேவை. “டைரியா? இந்தக் காலத்தில் எதற்கு டாக்டரம்மா! நீங்க பெரிய பூமர் ஆண்ட்டி” என்று கிண்டல் அடிப்பது எனக்கு கேட்டு விட்டது . ஆட்டோ ஓட்டுநர் எண் கணவரின் செல்லில் இருந்தால் அவர் ஆபீஸில் போனை எடுக்காமல் இருக்கலாம். அம்மா மொபைலில் இருந்தால் சார்ஜ் போயிடலாம்! எல்லாம் ஏற்படும் தானே! டைரி ஒரு பொது பொருளாகிவிடும் அல்லவா!
- வீட்டில் இருப்பவர்கள், பெண்கள் மட்டுமின்றி, கணவன், மாமனார், மைத்துனர் எல்லோரும் வேலையை பங்கிட்டு செய்து தாயைக் கவனித்துக் கொண்டால் அம்மாவுக்கும் ஓய்வு கிடைக்கும்.
- இரவில் குழந்தையைப் பார்த்துக் கொள்ளவேண்டுமானால் குழந்தை தூங்கும் நேரம் அல்லது விளையாடும் நேரம் தாய் தூங்கி விட வேண்டும். அதற்கு மற்றவர்கள் உதவி, நேரத்தை பங்கிட்டு கொண்டு செயல்பட வேண்டும்.
- சில குழந்தைகள் காரணமில்லாமல் அழும். அப்போது தோளில் போட்டு லேசாக முதுகில் தட்டிக் கொடுத்து குழந்தையின் காதருகில் மிக மெல்லிய குரலில் பேசலாம் அல்லது பாடலாம். இந்த குரல் ஆண் குரலாக இருந்தால் அதுவும் அப்பாவாக இருந்தால் குழந்தைக்கு ரொம்ப பிடிக்கும். நான் சொல்லவில்லை. ஆராய்ச்சி சொல்கிறது! இதற்காகவும் இரவில் ஒரு அவசரத்திற்கு உதவவும். ஒரு ஆண் வீட்டில் இருக்கும் படி திட்டமிட்டுக் கொள்ளவும். இல்லாவிட்டால் அடுத்த வீட்டு அண்ணன் தம்பி அல்லது போன் செய்தால் வரக்கூடிய ஒருவரை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
- தாயும் குழந்தையும் இருக்கும் அறை காற்றோட்டமாக, பகலில் வெளிச்சமாக இருக்க வேண்டும். நேரடியாக அதிக வெயில் அறையில் படும்படி இருக்க வேண்டாம். வெளிர் நிறத்தில் மெல்லிய திரைச் சீலை பயன்படுத்தலாம்.
- இரவில் மெல்லிய வெளிச்சத்துடன் கூடிய 25 வாட் போன்ற பழைய பல்பு போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தை விழித்திருக்கும் போதும், விளையாடும் போதும் பளிச்சென்று வெள்ளை பல்பு பயன்படுத்தலாம்.
- குழந்தையும் அம்மாவும் இருக்கும் இடத்தில் தொலைக்காட்சி, மடிக்கணினி போன்றவற்றுக்கு தடை விதித்து விடுங்கள். தொல்லை பேசியையும் அம்மாவும் குழந்தையும் உபயோகிக்கும் படுக்கையில் வைக்கக்கூடாது. சற்று தள்ளி டேபிளில் வைத்துக் கொள்ளலாம்.
- குழந்தையை மடியில்/ தோளில் வைத்துக் கொண்டு யாரும் தொல்லை பேசியில் (எனக்கு அது அலைபேசி அல்ல) பேசினால் வாயிலிருந்து எச்சில் துளிகள் குழந்தை மேல் பட்டு நோய் தொற்று ஏற்படலாம்.
- சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சொறி சிரங்கு, பேன், பொடுகு, பரவும் வகை தோல் நோய்கள் உள்ள யாரும் அறையில் நுழையக்கூடாது.
- தாய்க்கு நோய் இருந்தால் உடனே உடனடியாக தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.
- அம்மாவும் குழந்தையும் முதல் 3-4 மாதங்களாவது 24 X7 பிரியாமல் இருக்க வேண்டும். இது குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு நல்லது.

சில நடைமுறைகளை திட்டமிட்டு வகுத்துக் கொண்டு குழந்தைக்கும் அம்மாவுக்கும் தேவையான பொருட்களை வாங்கிக் கட்டிக்கொண்டு, குப்பை, தூசி, அழுக்கு,பாசி, பூசணம் ஆகியவற்றை வீட்டிலிருந்து மீதமில்லாமல் தயவு தாட்சணியம் இல்லாமல் கழித்து வீட்டில் அனைவரும் செல்லக்குட்டியையும் அதனைப் பெற்றுத் தந்த பெண்ணையும் கண்டு ஆனந்தத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்!
என்ன ஷர்மிளா டீச்சர்! எனது குறிப்புகளுக்கு எவ்வளவு மார்க்! எனக்கு கூட்டல், வகுத்தல், பெருக்கல், கழித்தல் வருமா? வராதா??
தொடரும்…
படைப்பாளர்

மரு. நா. கங்கா
நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.




