கேள்வி

தாய்ப்பால் சுரப்பதிலும் தருவதிலும் உள்ள மூடநம்பிக்கைகளும் தவறான கருத்துக்களும் யாவை?

பதில்

படித்த பெண்களும்கூட வீட்டில் உள்ளவர்கள் (பாட்டி, அம்மா, மாமியார், நாத்தனார்) கூறும் அறிவியலுக்குப் புறம்பான சில கருத்துகளைக் கேட்டு பயந்து, பதட்டமாகி தாய்ப்பால்  தருவதில் தயக்கம் காட்டுகிறார்கள். தனக்கு பால் சரிவர சுரக்காதோ என நினைக்கிறார்கள். இது ஒரு மூத்த குழந்தை  மருத்துவரான எனக்கு மிகவும் கவலையை அளிக்கிறது.

1995 -ல் இருந்து, அதாவது 30 வருடங்களாக தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்வுகளை பள்ளி /கல்லூரி மாணவிகளை மனதில் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன. தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள், மருத்துவர் கேள்வி பதில் நிகழ்ச்சிகள், தினசரிகளிலும், பத்திரிகைகளிலும், கட்டுரைகள் போன்றவற்றை நிறைய, திகட்டும் அளவுக்கு வெளியாகின்றன. இந்த செய்திகள் இன்னும் பெண்களிடம் சென்று அடையவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கும் உண்மை. ஏன் இந்த நிலைமை?!

 தாய்ப்பால் சுரப்பது பற்றி பல இளம் தாய்மார்கள் என்னிடம் கேட்கும்  சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறேன். அதற்கு முன் ஒரு அறிவியல் அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். பெண்களின் உடல் ஆக்ஸிடோஸின், ப்ரோலேக்டின் என்ற இரு ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை தாம்பத்தியத்திற்கும், பிரசவ நேரத்திலும், பாலூட்டும் நேரத்திலும் தங்கள் பங்களிப்பை அளிக்கின்றன. 

எல்லா பெண்களுக்கும் இவை சுரக்கும். இவை எல்லாம் சரியாக இருந்தால்தான் அவர்கள் குழந்தை பேறு அடைகிறார்கள். வேறு மருத்துவ பிரச்னைக்காக ஹார்மோன்கள் சுரப்பதை தடுக்கும் மாத்திரைகள் ஏதாவது சாப்பிட்டு இருந்தால், அப்போது அவை குறையும். மாத்திரையை நிறுத்திவிட்டால் மறுபடியும் நார்மலாக சுரக்கத் தொடங்கிவிடும். மார்பை குழந்தை சப்பி இழுத்துக் குடிக்க குடிக்க ஆக்ஸிடோசின் அதிகமாக சுரக்கும். இரவில் பாலூட்டும்போது ப்ரோலேக்டின் சுரக்கும். எனவே தாய்ப்பால் சரியாக சுரக்கவில்லை என்பதற்கு பெண்கள் சொல்லும் காரணங்களை அறிவியல் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாது. என்  குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் தர வேண்டும் என்ற திடமான எண்ணத்துடன் பாலூட்ட ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்.

  • மார்பகம் சிறியதாக /பெரிதாக இருப்பதால் பால் சரியாக  சுரக்காதா?

       மார்பகத்தின் அளவுக்கும் பால் சுரப்பதற்கும் தொடர்பு இல்லை. ஒவ்வொரு மார்பகத்திலும் பால் சுரக்கும் சுரப்பிகள், நாளங்கள் எல்லாம் குறிப்பிட்ட  எண்ணிக்கையில் எல்லோருக்கும் இருக்கின்றன. மார்பகம் பெரிதாக இருந்தால் மார்க்காம்பை கவ்விப் பிடித்து, காம்பை சுற்றியுள்ள கறுப்புப் பகுதியை வாயில் எடுத்துக் கொள்வதற்கு குழந்தைக்கு உதவ வேண்டும்.

      • தாயின் வயது குறைவு அல்லது அதிகம் என்பதால் போதுமான பால் சுரக்காதா?

       பெண் பருவம் அடைந்து 2- வருடத்திலேயே இந்த ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பித்து விடுகின்றன. மாதவிடாய் நிற்கும் வரை சுரக்கும். 45 -வயதிற்கு மேல் சுரக்கும் அளவு சிறிது குறையலாம்.  ஆனாலும் குழந்தை நன்கு சப்பினால் போதுமான பால் சுரக்கும்.

      மேற்சொன்ன இரண்டு கேள்விகளும் அம்மாவின் தாய் அல்லது மாமியார் கேட்பவை. “இந்தப் பொண்ணுக்கு மார்பு பெரிதாக இல்லை. எப்படி பால் சுரக்கும்!”, “இது ரொம்ப சின்னப் பொண்ணும்மா! அதுக்கு எப்படிம்மா பால் வரும்!” போன்றவை இளம் தாயின் நம்பிக்கையைத் தகர்த்துவிடும்.

      • என் அம்மாவுக்கும், மாமியாருக்கும் தாய்ப்பால் சுரக்காதாம். எனக்கும் அப்படி ஆகுமா?

       அப்படி எதுவும் இல்லை. அந்த நேரம் வேறு காரணங்களால் அவர்களுக்கு பாலூட்ட முடிந்து இருக்காது. அது மரபியல் அடிப்படையில் இல்லை. தாய்ப்பால் சுரப்புக்கு மரபணு ரீதியான தொடர்பு இல்லை.

      • பெண்  ரொம்ப ஒல்லி/அவள் ரொம்ப பருமன்- அவளுக்கு எப்படி தாய்ப்பால் சுரக்கும்?

      தாயின் உடல் எடைக்கும் பால் சுரப்பதற்கு தொடர்பு இல்லை. இந்த ஒல்லி அல்லது பருமன் ஹார்மோன் சம்பந்தப்பட்ட நோய்களால் வந்துள்ளதா என்று மட்டும் சோதித்துக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து குறைந்த தாய் பாலூட்டும் போது அதிக களைப்பாக உணர்வாள், அவ்வளவுதான்! நன்றாக சாப்பிட வேண்டும்.

      • சிசேரியன் செய்ததால் பால் இல்லை!

      இது அடிக்கடி என்னிடம் சொல்லப்படுகிறது. ஆனால்   இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அறுவை அரங்கத்தின் உள்ளேயே குழந்தையைத் தூக்கி தாயின் மார்புடன் சேர்த்து வைக்கலாம். தாய்க்கு களைப்பாக இருக்கலாம். தையல் இருப்பதால் குழந்தையை கையாள சிரமங்கள் இருக்கலாம். அடுத்தவர்களின் உதவியுடன் பாலூட்டலாம். ஆனால் அறுவை சிகிச்சை என்று பயந்து முதல் 4-5 நாள்கள் பால் பாட்டில், ரப்பர், ஊட்டி, பவுடர் பால் போன்றவற்றை ருசி காட்டிவிட்டால், குழந்தை தாயின் மார்பில் சப்பாது. இது Nipple Confusion எனப்படும். குழந்தை பிறந்தவுடன் மார்பில் வைத்து பால் ஊட்ட வேண்டும்.

      • என் முதல் குழந்தை பால் குடிக்கல! இந்தக் குழந்தையும் குடிக்கவில்லை!

       இது ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு குழந்தைக்கும் தாயிம் ஹார்மோன்கள் வழக்கப்படி சுரக்கின்றன. முதல் குழந்தைக்கு பாலூட்டிய மகிழ்வும், அனுபவமும் கிடைக்காத தாய் இப்படி பொருந்தாத காரணங்களை கூறாமல் அடுத்த குழந்தை  பிறந்தவுடன் பாலூட்ட வேண்டும். அந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் அனுபவித்துப் பார்த்தால் மட்டுமேஅதன் மகத்துவம் புரியும்.

      • முதலில் ஒரு கருச்சிதைவு (Abortion) ஆனது. அப்போது பால் கட்டிக் கொண்டது. அதற்கு மாத்திரை கொடுத்தார்கள். எனவே இரண்டாவது குழந்தைக்கு பாலே வரவில்லை!

       தோழி! இது  தவறம்மா! அந்த மாத்திரைகள் ஒரு சில நாட்கள் மட்டும்தான் ஹார்மோன்கள் சுரப்பதையும், பால் சுரப்பதையும் தடுத்திருக்கும். பிறகு  அவற்றின் அளவு சரியாகிவிடும். அடுத்த குழந்தை பிறந்தவுடன் மார்பில் அணைத்து பாலுட்டினால் தானாகவே பால் சுரக்கும்.

      • 2-3 வருடங்கள் கருத்தடை மாத்திரை சாப்பிட்டு நிறுத்திய பிறகு பிறந்த குழந்தை இது. அதனால் பால் இல்லை!                  

       கருத்தடை மாத்திரை ஒவ்வொரு மாதம்  21 நாள்கள் சாப்பிட வேண்டும். சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் ஹார்மோன்கள் அளவு சரியாகும். இந்த மாத்திரைகள் நீண்ட நாள் பாதிப்புகளை ஏற்படுத்தாது. இதற்கும் பால் சுரப்பதிற்கும் தொடர்பு இல்லை.

      • நிப்பிள் உள்வாங்கி இருக்கிறது. குழந்தையால் சரியாக சப்ப முடியவில்லை!         

       இது ஒரு சரியான காரணம்தான். ஆனால் கருவுற்ற காலத்தில் மருத்துவர் /மருத்துவ பணியாளர்கள் இதை கவனிக்க வேண்டும். தாயும் இதைப்பற்றி பேச வேண்டும். குழந்தை பிறக்கும் முன்பே சில எளிய பயிற்சிகளால் இதை சரி செய்து விடலாம். அப்படியே கவனிக்கவில்லை என்றாலும் குழந்தை பிறந்த பிறகு 2-3 நாள்களில் பயிற்சிகளால் இதனை சரி செய்துவிடலாம். தாய்க்கு கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தையை அந்த மார்பிலேயே சப்பவிட்டால்  சில நாட்களிலேயே சரியாகிவிடும்.

      • இரட்டை குழந்தை/ எடை குறைந்த குழந்தை/ குறைமாத குழந்தை இவர்களுக்கு தாய்ப்பால் தர முடியுமா?    

       கட்டாயம் முடியும். இரண்டு குழந்தைகளுக்கும் போதுமான பால் சுரக்கும். தாய்க்கு பாலூட்ட களைப்பாக இருக்கும். நல்ல சத்துள்ள உணவு, சிறிது ஓய்வு, வீட்டில் உள்ளவர்களின் உதவியுடன் பாலூட்டலாம். குறைமாதம் அல்லது எடை குறைந்த குழந்தையால் வேகமாக சப்ப முடியாது. தாய் தூக்கி அணைத்து குழந்தைக்கு பாலுட்ட பழக்க வேண்டும். முதல் சில நாட்கள் பாலுட்ட முடியாத குழந்தைகளுக்கு தாய்ப்பாலை கரந்து எடுத்து பாலாடை அல்லது ஸ்பூன் மூலம் கொடுக்கலாம். இடையிடையே குழந்தையை சப்புவதற்கும் பழக்க வேண்டும்.

      பாலுட்டுவது தொடர்பாக உங்களுக்கு உள்ள எந்த சந்தேகத்தையும் கருவுற்ற காலத்திலேயே மருத்துவரிடம் கேட்டு போதிய விளக்கத்தை பெற்று குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் தர ரெடியாக இருங்கள்!

      படைப்பாளர்

      மரு. நா. கங்கா

      நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.