கேள்வி:

தாய்ப்பால் வங்கி இருக்காமே! அதற்கு மூலதனம் (Capital) எங்கிருந்து வரும்? வட்டி (Interest) எவ்வளவு? நீண்ட கால வைப்பு நிதி (Fixed Deposit) உண்டா? யார் பயனாளிகள்?

பதில்:

ஒரு பன்னாட்டு வங்கியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் வர்ஷினியின் கேள்விதான் இது!

ஒரு நிதி வங்கியின் அதிகாரிக்கு தாய்ப்பால் வங்கியைப் பற்றி தெரிந்திருக்கிறது என்பது தீவிர தாய்ப்பால் ஆதரவாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி! கண் வங்கி(Eye Bank), தோல் வங்கி(Skin Bank), எலும்பு வங்கி(Bone Bank) என்றெல்லாம்  கூட உண்டு. ரத்த வங்கி நீண்ட காலமாக நமக்கு எல்லோருக்கும் தெரிந்தது தானே?

நம்மிடம் அதிகமாக இருக்கும் பணத்தை ஒரு இடத்தில் சேமித்து, கடன் தேவையானவர்களுக்கு பிரித்து  அளிப்பதுதான் வங்கியின் அடிப்படைக் குறிக்கோள். இரண்டு பார்ட்டிக்கும் வட்டி உண்டு. பணம் போடுபவர்களுக்கு குறைந்த வட்டி! கடன் பெறுபவர்களுக்கு அதிக வட்டி! வங்கியில் பணிபுரியும் அதிகாரியின் இந்தக் கேள்வி நியாயமானது.

தாய்மார்களிடம் அதிகமாகச் சுரக்கும் இயற்கை அமுதமான தாய்ப்பாலை சுத்தமாக சேகரித்து பிரிட்ஜ் அல்லது ஃப்ரீசரில்(Freezer) வைத்து பாதுகாத்து, தாய்ப்பால் கிடைக்கப் பெறாத குழந்தைகளுக்குக் கொடுப்பதுதான் தாய்ப்பால் வங்கியின் கோட்பாடு.

பரந்த நல்ல மனம் கொண்ட தாய்மார்கள், பிற குழந்தைகளுக்கும் பயன்படட்டும் என்கிற உயர்ந்த சேவை மனப்பான்மையுடன் சேகரித்து தரும் பால்தான் முதலீடு (Capital). தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள், பயனாளிகள் (Beneficiaries). உங்கள் வங்கியுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்றால், தாய்ப்பால் வங்கியில் சம்பந்தப்பட இரண்டு பேருக்கும் வட்டி கிடையாது.

நீண்ட கால வைப்பு நிதி (Fixed Deposit) உண்டா என்று கேட்டீர்கள் அல்லவா?கட்டாயம் உண்டு! தாய்ப்பாலில் குழந்தைகளின் உடல் மற்றும் உணர்வுகள் நன்கு திடமாக வளர பல சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவாக உள்ள பிஞ்சு குழந்தைக்கு தேவையான பற்பல நோய் எதிர்ப்பு புரதங்களுடன் (Immunoglobulin A, G) பால் கிடைக்கிறது. எனவே அவர்களுக்கு ஆபத்தான கிருமித் தொற்றுகள் ஏற்படுவதில்லை. இதுதான் நீண்டகால வைப்பு நிதி!

அந்தக் குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சி அருமையாக இருக்கும். குழந்தைகள் நல்ல குடிமக்களாக வீட்டிற்கும் நாட்டிற்கும் செயல்படுவார்கள். இதுதான் வைப்பு நிதியின் வட்டி! சேவை மனப்பான்மையுடனும், தாயின் பரிவுடனும் தாய்மார்கள் நன்கொடையாக வழங்கும் தாய்ப்பாலுக்கு இது மிகப்பெரிய வட்டி அல்லவா? வைப்பு நிதி சேமித்த தாய்க்கு என்ன வட்டி தெரியுமா? கரந்து எடுக்க எடுக்க அவளுக்கு அதாவது அவளது குழந்தைக்கு அதிகமாக பால் சுரக்கும். வேறொரு குழந்தைக்கு உதவுகிறோம் என்ற பரவசமும் மன நிறைவும் நிம்மதியும் போனசாகக் கிடைக்குமே!

வேலைக்குப்  போகும் தாயும் தன் வீட்டிலேயே பாலைக் கரந்து எடுத்து சேகரித்து, ஒரு சிறிய வங்கியை, தன் ஃபிரிட்ஜில் ஏற்படுத்தலாம். தேவைக்கு அதிகமான பால் சுரக்கும் போது சேகரித்து வைத்து தேவைப்படும் நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் இந்த பாலை ஊட்டலாம். அறை வெப்பநிலையில் 4 மணி நேரம் பாலை வைத்திருக்கலாம். ஃப்ரிட்ஜில் உள்பகுதியில் வைக்கவும். ஃப்ரிட்ஜ் கதவில் வைக்கக்கூடாது.

ஃப்ரிட்ஜின் உள்ளே வைப்பதாக இருந்தால் நான்கு நாட்கள் சேமிக்கலாம். ஃப்ரிட்ஜில் தனி கதவுடன் ஃப்ரீசர் இருந்தால், ஃப்ரீசரில் ஆறு மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம். 30- 40 மில்லி அளவில் சிறு சிறு டப்பாக்களில் சேமிக்கவேண்டும். முதலில் சேமித்து வைப்பதை முதலில் தீர்ப்பது (First in / First Out) என்ற அடிப்படையில் உபயோகிக்க வேண்டும். பயண நேரங்களில் சிறிய கூலர் பாக்ஸில், ஐஸ்கட்டிகளை போட்டு ஐஸ்கட்டிகளை அடிக்கடி மாற்றி கூலர் பாக்ஸில் இந்த டப்பாவை வைத்து 24 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

தாய்ப்பால் வங்கியில், தீவிர குளிரை (மைனஸ் டிகிரிகளில்) ஏற்படுத்தும் ஆழ்நிலை உறைப் பெட்டிகளை(Deep Freezer) உபயோகிப்பார்கள். 12 மாதங்கள் வரை தாய்ப்பாலை சேமிக்க முடியும். இது ஒரு பெரிய இயக்கமாய் இப்போது நடைபெறுகிறது. சில அரசு  மருத்துவமனைகளிலும், பல தன்னார்வ  தொண்டு  நிறுவனங்களும் தாய்ப்பால் வங்கியை நடத்துகின்றனர். இங்கு தாய் பதிவு செய்து கொண்டால் அவர்களுக்கு சில பரிசோதனைகளை செய்து பாலைப்  பெறுவார்கள். சில தொற்று நோய்களின் ((உ.ம்) B வகை மஞ்சள் காமாலை, டைபாய்டு, HIV) கிருமிகள் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு தொற்றை ஏற்படுத்தக்கூடும். எனவே பரிசோதனைகள் கட்டாயமாகிறது. சோதனைகள் அனைத்தும் இலவசமாக செய்யப்படுகின்றன. பால் தேவைப்படும் குழந்தையின் தாயும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தாய் தன் பாலை சேகரித்து தன் வீட்டு ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு தொலைபேசியில் அழைத்து சொல்லிவிட்டால் போதும். மருத்துவப் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் வீட்டிற்கு வந்து பெற்று செல்வார்கள். தாயோ தாயின் குடும்பத்தினரோ அலைய தேவையில்லை!

தாய்ப்பால் வங்கியைப் பற்றி நான் ஒரு கோடுதான் போட்டு இருக்கிறேன். நம்பகமான வலைத்தளங்களில் படித்து முழு விவரமும் பெற்று பெரிய நால்வழிச் சாலையாக போட்டுக்கொண்டு இந்த சேவையில் இணைந்து விடுங்கள்.

 வர்ஷினி! உங்கள் வங்கியில் இருக்கும் பொருளைவிட எங்கள் வங்கியின் முதலீடு விலைமதிப்பற்றது! புரிகிறதா?

படைப்பாளர்

மரு. நா. கங்கா

நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.