கேள்வி
நான் 8 மாத கர்ப்பிணி. குழந்தைக்கு தாய்ப்பால்தான் கொடுக்கணும் என்று மாமியார் சொல்கிறார்! உங்கள் விளக்கம் என்ன?
பதில்
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் வாரம் என்று உலக அளவில், ஆம்! உலக அளவில், அனுசரிக்கப்படுகிறது. இந்த நேரம் உங்கள் கேள்வி மிகவும் உசிதமானது.
நானும் மாமியார்தான்! அதனால் நான் உங்கள் மாமியாரின் அறிவுரைக்கு முழு ஆதரவு தருகிறேன். தன் பிள்ளைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்து அதன் நல்ல பயன்களை அவர் அடைந்திருக்கிறார் போலும்! இந்த விஷயத்தில் மாமியார் சொல்வதை கேளுங்கள், மருமகளே!
ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையக் கருத்தின் அடிப்படையில் தாய்ப்பால் வாரத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த வருடத்தின் மையக் கருத்து – “தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னுரிமை அளியுங்கள்- நிலையான ஆதரவு அமைப்புகளை உருவாக்குங்கள்” என்பதாகும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு அவளது குடும்பம்தான் முதல் ஆதரவு! கணவன், அம்மா, மாமியார் இதில் முக்கியமானவர்கள்.
கருவுற்ற 20 -22 வாரங்களில் சீம்பால் சுரக்க ஆரம்பித்துவிடும். அதனால் மார்பகங்கள் கனமாக இருப்பதை உணருவீர்கள். மார்பகக் காம்புகள் (Breast Nipples) வெளியில் இருக்கிறதா என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். உள்ளடங்கி இருப்பதுபோல் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள். எளிய சில செய்முறைகளால் அதை சரி செய்து விட முடியும். காம்பு பகுதியையும் மார்பகங்களின் அடிப்பகுதியையும் சுத்தமாக பராமரியுங்கள். சிறிது தளர்வான காட்டன் உள்ளாடைகளை உபயோகியுங்கள்.
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் ஆரம்பித்து, ஆறு மாதம்வரை தாய்ப்பால் மட்டும் கொடுக்கவேண்டும். பிறகு தாய்ப்பாலுடன் இணை உணவுகளும் சுமார் இரண்டு வயது வரை, முடிந்தால் அதற்கு மேலும் தாய்ப்பாலை சேர்த்துத் தருவது என்று மனதளவில் உறுதியாக அடித்தளம் அமைத்துக் கொள்ளுங்கள். கருவுற்ற காலத்தில் குடும்பத்தின் வழக்கப்படி இயற்கையான ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். தாய்ப்பால் தருவது தொடர்பான அறிவியல் அடிப்படையிலான செய்திகளை படியுங்கள், சேகரியுங்கள், கேளுங்கள். சந்தேகங்கள் ஏற்பட்டால் மருத்துவரிடம் விரிவாகப் பேசுங்கள்.
இப்போ தாய்ப்பால் கொடுக்க நீங்க ரெடிதானே!
ஏன் தாய்ப்பால் தரவேண்டும்? இதனால் யார் நன்மை அடையப் போகிறார்கள்?
- குழந்தை
- தாய்
- குடும்பம்
- நாடு
- உலகம்
“டாக்டர்! இப்படி எல்லாம் கப்ஸா விடாதீர்கள், நான் தாய்ப்பால் கொடுத்தால் உலகிற்கே நல்லதா?” என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுந்து விட்டது. ஒவ்வொன்றாக விளக்கினால், முடிவில் நீங்களும் எங்கள் பக்கம் தான்!

குழந்தைக்கு என்னென்ன நன்மைகள்?
பிறந்த குழந்தைக்கு
முதல் உணவு
முதல் உணர்வு
முதல் மருந்து
முதல் தடுப்பு (ஊசி) மருந்து
எல்லாம் தாய்ப்பால் மட்டுமே!
தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து, எல்லாவித வைட்டமின்கள், தாது உப்புக்கள், இரும்பு, தாமிரம், துத்தநாகம் போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள், தேவையான தண்ணீர், எல்லாம் தேவையான சூட்டுடன் இருக்கிறது. குறைமாத குழந்தை மற்றும் எடை குறைந்த குழந்தை பெற்றெடுத்த தாய்க்கு, குழந்தைக்கு தேவையான, மாறுபட்ட ஊட்டச்சத்துக்களுடன் தாய்ப்பால் சுரக்கிறது.
எனவே தாய்ப்பால் எல்லா வகையிலும் பொருந்தக்கூடிய ரெடிமேட் உணவு!தாய்ப்பால் குழந்தையை உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற முதல் உணவு! முழுமையான உணவு !
தாய்ப்பாலில் குழந்தையின் குடல் வளர்ச்சிக்கும், செரிமானத்துக்கும் தேவையான நன்மை செய்யும் நுண்ணுயுரிகள் (Lactobacillus, Bifidus) போன்றவை நிறைந்து இருக்கின்றன.
தாய்ப்பால், குழந்தைக்கு ஏற்படக்கூடிய குடல் தொற்று, சுவாசப் பாதைத் தொற்று, தோல் தொற்று போன்றவைகளை ஏற்படுத்தக்கூடிய பற்பல பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் அழிக்கக்கூடிய எதிர்ப்பு சக்திகளை (Anti Bodies, Immunoglobin, A,G) கொண்டுள்ளது. எனவே தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு இந்த நோய்கள் ஏற்படாது. லேசாக ஏற்படும் ஜலதோஷம் போன்றவற்றைத் தவிர, உயிர்க்கொல்லி நோய்கள் ஏற்படாது.
தாய்ப்பாலில் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்தும், துரிதப்படுத்தும் DHA, மெதியோனின், டிரிட்டோபேன் போன்ற சத்துகள் நிறைய இருக்கின்றன. எனவே தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு மூளை வளர்ச்சியும் அறிவுக்கூர்மையும் (IQ) அதிகம்.
தாயின் மார்புடன் அணைத்து பால் ஊட்டும் போது அந்தத் தொடுதலும் வெப்பமும் குழந்தைக்கு முழுமையான பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கிறது. தாய், சேய் பாசப் பிணைப்பிற்கு சிறந்த அடித்தளம் அமைகிறது. குழந்தையின் சுயமதிப்பு, தன்னம்பிக்கை மற்றவரிடம் அன்பாக இருப்பது போன்ற உணர்வுகள் திடப்படுகின்றன. TALCS என்ற சுருக்கமான சொல் மூலம் இதை குறிப்பிடுகின்றனர்.
மென்மை, மிருது (Tender)
பாசம் (Affection)
அன்பு (Love)
அக்கறை (Care)
பாதுகாப்பு உணர்வு (Security)
எனவே தாய்ப்பால் குழந்தையின் முதல் உணர்வு.
இவை யாவும் பிறந்தது முதல் கிடைக்கப்பெற்ற குழந்தை, நல்ல குடிமகனாக எதிர்காலத்தில் வளர்வான், பெண் குழந்தைகளுக்கும் இது பொருந்தும். இவை கிடைக்காத குழந்தைகள் பிற்காலத்தில் வன்முறை, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடக்கூடும். இவை ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன.
போதிய காலம் தாய்ப்பால் அருந்திய குழந்தைக்கு எதிர்காலத்தில் ஏற்படும் வாழ்வியல் நோய்களான அதிக உடல் எடை , இரத்தத்தில் அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், எலும்புகள் வலுவிழத்தல் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. ரத்தப் புற்றுநோய் ஏற்படுவதும் குறைகிறது.
தாய் பெறும் நன்மைகள்
- தாய்ப்பால் ஊட்டுவதால் அவளுக்கு கிடைக்கும் மன நிறைவு, பூரிப்பு, பெருமிதம் ஆகியவை பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தங்களை குறைக்கின்றன. அவள் தன்னை முழுமை பெற்றவளாக உணர்கிறாள்.
- கருவுற்ற காலத்தில் அவள் உடலில் சேர்ந்த 3-4 கிலோ கொழுப்பு கரைந்து பழைய உருவ அமைப்பைப் பெறுகிறாள்.
- பிரசவித்தவுடன் தாய்ப்பால் ஊட்டுவதால் ஏற்படும் ஹார்மோன் மாறுதல்களால், குழந்தை பிறந்தவுடன் கருப்பை விரைவில் சுருங்கி அதிக ரத்தப்போக்குத் தடுக்கப்படுகிறது.
- தாய்க்கு உயிர்க் கொல்லி நோய்களான மார்பக புற்றுநோய் (Breast Cancer), சினை முட்டைப்பை புற்றுநோய் (Ovarian Cancer) ஆகியவை வரும் வாய்ப்பு வெகுவாக குறைகிறது.
- முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டும் கொடுத்து, அதிலும் இரவில் குறைந்தது இரண்டு முறையாவது பாலுட்டும் தாய்க்கு, அடுத்த கரு உடனடியாக உண்டாவதில்லை. அதாவது தாய் பாலூட்டுவதே ஒரு இயற்கையான கருத்தடை முறையாக செயல்படுகிறது.
குடும்பத்திற்கு ஏற்படும் நன்மைகள்:
- தாய்க்கும் குழந்தைக்கும் நோய்கள் இல்லையெனில் பலவித சிரமங்கள் இல்லை.
- அடுத்த குழந்தையும் 6 மாதங்களுக்கு தரிக்காது.
- மருத்துவ செலவுகள் இல்லை.
- பால், பால் மாவு, பாட்டில்கள் வாங்கும் செலவுகள் இல்லை.
- மாவுப்பொருள்கள் வேண்டாம் என்பதால் எரிபொருளும் தண்ணீரும் சேமிக்கப்படுகிறது.

நாட்டிற்கு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகள்:
- குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் குறைகின்றன.
- மற்ற பால் வகைகள் கொடுப்பதால் ஏற்படும் செலவு மிச்சம்.
- தண்ணீர் தேவைகள் குறைவு.
- எரிபொருள் சிக்கனம்.
- மாவுப்பால் தயாரிக்கும் தொழிற்சாலைகள் பயன்படுத்தும் தண்ணீரும் எரிபொருளும் மிச்சம்.
- தொழிற்சாலைகளில் இருந்து புகை வெளியேறி, சுற்றுச்சூழலை மாசு படுத்தாது.
- மற்ற பால் வகைகளை பயன்படுத்தும்போது ஏற்படும் கழிவுகளான பிளாஸ்டிக் பாட்டில்கள், தகரங்கள், அட்டை பெட்டைகள் ஆகியவை சுற்றுச்சூழலை பாதிக்கும். இவை யாவும் தடுக்கப்படுகிறது.
உலகிற்கு ஏற்படும் நன்மைகள்:
1.குழந்தைகள் நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்
2. நல்ல அறிவாளிகளாக வளர்வார்கள்
3. ஆரோக்கியமான தாய்மார்கள்
4. மக்கள் தொகை கட்டுப்பாடு
5.பணம் சேமிக்கப்படுவதால் பல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தலாம் 6.மாசு குறைந்த சுற்றுச்சூழல் நிலவும்.
7. குறைந்த தண்ணீர் தேவை.
இப்படியெல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வரிசை மிகவும் நீளமானது.
ஒரு சமுதாயத்தில் தாயும், குழந்தையும் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு நல்ல உடல் மற்றும் மனநலத்துடன் இருந்தால் அந்த சமுதாயம் வளமானதாக மாறும். பல சமுதாயங்கள் இணைந்தது நாடு! பல நாடுகள் இணைந்தது உலகம்! எனவே சிறு துளி பெருவெள்ளம் என்பதை போல் ஒரு குடும்பத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதால் உலகமே நலம் பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.
1998-ல் அனுசரிக்கப்பட்ட உலக தாய்ப்பால் வாரத்தின் மையக்கருத்து- “தாய்ப்பால் ஊட்டுவது மிகச்சிறந்த முதலீடு” (Breast Feeding is the Best Investment) என்பதாகும். அப்போதைய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் அனைத்து தாய்மார்களும் தாய்ப்பால் மட்டும் ஊட்ட ஆரம்பித்தால், பல கோடிக் கணக்கான ரூபாய் அந்நியச் செலாவணி மிச்சமாகும் என்பது உறுதி செய்யப்பட்டது. இப்போது அதன் மதிப்பு எவ்வளவு கோடிகளோ?
குழந்தைக்கு, தாய்க்கு, குடும்பத்துக்கு, சமுதாயத்துக்கு நாட்டிற்கு உலகிற்கு நீடித்த வளர்ச்சியை பெற்றுத்தர ஒவ்வொரு தாயும் தாய்ப்பால் அளிப்பது முக்கிய கடமையாகும்.
முதல் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டும். பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவுகளும் தர வேண்டும் என்கிற உங்கள் மாமியாரும், நானும் உறுதி பட சொல்வது நியாயம் தானே!
படைப்பாளர்

மரு. நா. கங்கா
நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.




