குட்டி – 2
குட்டியின் கல்யாணப் பேச்சு தொடங்கியதிலிருந்தே ரதியாளுக்கு மனதில் ஒரு பரபரப்பு இருந்து கொண்டே இருந்தது. சந்திரா ஊரில் இருக்கும் பெரிய மளிகைக் கடைக்காரர் மகன் என்று தெரிந்தவுடன் கொஞ்சம் பரபரப்பு அடங்கியதைப் போல் இருந்தது.
சந்திராவைச் சந்திக்க ஊருக்குப் போகும்போது அந்த கடையைப் பார்த்திருக்கிறாள். நல்ல பெரிய கடை தான். அப்பா எப்போதும் கடையில் இருப்பார். மகனை வெளி வேலைகளுக்கு அனுப்பி விடுவார் போல. அவ்வப்போது தான் பார்க்க முடியும்.
நல்ல களையான முகம். அமைதியான பையன். யோசித்த வரை அவனைப் பற்றிய நல்ல அபிப்ராயமே தோன்றியது. ஆனால் இது மட்டுமே பற்றாதே. விசாரிக்க வேண்டுமல்லவா? சரி, மலையப்பனுக்குத் தெரியாததா? எல்லாம் அவரே கண்டிப்பாகச் செய்வார். ரதியாள் மனதில் ஏகப்பட்ட சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தன.
அவள் கல்யாண வைபோகமும் நினைவுக்கு வந்தது. யோசித்துப் புன்னகை செய்யும்போதே மலையப்பன் வரும் சத்தம் கேட்டது. இன்னொரு நாள் விலாவாரியாக யோசித்துச் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டே எழுந்து வந்தாள்.
நேரே சமையலறைக்குள் போனவர், மொடக் மொடக்கென்று சத்தம் வருமளவு பானைத் தண்ணீரை வேகமாக வயிற்றுக்குள் அனுப்பிக் கொண்டிருந்தார்.
‘ஒரு வேளை கோபமாக ஏதும் இருக்கிறாரா?’ என்று உற்றுப் பார்த்தவாறே சமையலறை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் ரதியாள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. குடித்து முடித்தபின் புன்னகைத்தவாறே திரும்பினார்.
“இன்னிக்கு பெரிய மாப்பிளையையும் அன்பையும் கூட்டிக்கிட்டு சில பேர் வீட்டுல விசாரிக்கப் போனேன். மார்க்கெட்டுலயும் விசாரிச்சேன்.”
“ம்ம்ம்”
அவர் புன்னகைத்தவாறே பேசியதால் எல்லாம் நன்றாகத்தான் நடந்திருக்கிறது என்று புரிந்துவிட்டது. ஆனாலும் அவர உற்சாகத்தைப் பார்க்க ரதிக்கு ஆர்வமாயிருந்தது. உடம்பில் ஒரு துள்ளலும், குரலில் பயங்கர உற்சாகமுமாகப் பேசினார்.
“ரொம்ப நல்ல பையனாம்”
“ம்ம்”
“மார்க்கெட்டுல எல்லாரும் அவ்வளவு நல்ல விதமாச் சொன்னாங்க. பொறுமையாப் பேசுவாப்லயாம். பொறுப்பா வேலை செய்வாப்டியாம்”
“ம்ம்ம்”
“ஊருக்குள்ளேயும் நல்ல பேருதான். சந்திரா வீட்டுக் கிட்ட ஒரு பெட்டிக் கடை இருக்குதில்ல. அந்தக் கடை வச்சிருக்க முத்து சொன்னான், அவங்க கதையெல்லாம். இந்தத் தம்பி தான் கடைய விரிவாக்கம் பண்ணி அழகுபடுத்தி நிறைய வேலை பாத்திருக்காரு.”
“அடேங்கப்பா”
“ஆமா. மொத்ததுல நம்ம குட்டிக்கு மாப்பிள்ளை கிடைச்சாச்சு”
இதைச் சொன்னபோது பயங்கர பெருமிதம் தெறித்தது அவர் குரலில். நல்ல மாப்பிள்ளையைக் கண்டெடுத்துவிட்டார் அல்லவா அவர் செல்லப்பிள்ளை குட்டிக்கு!
ரதியாளுக்கு அவர் சந்தோஷத்தைப் பார்க்கையில் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது.
“நம்ம குட்டி சந்தோஷமா இருப்பால்ல ரதிம்மா?”
அவர் இப்படிக் கூப்பிட்டு எத்தனை நாளாயிற்று? யோசனையோடே பதில் சொன்னாள்.
“உங்களை மாதிரி அப்பா கிடைச்சா, எந்தப் பொண்ணா இருந்டாலும் சந்தோஷமாதாங்க இருப்பா.”
சந்தோஷமாய்ச் சிரித்துக் கொண்டார். அசதி மேலிட, கொஞ்ச நேரம் தூங்கலாமெனக் கண்ணசந்தார்.
******
பக்கத்து வீட்டுச் சின்னப்பையன் ரமேஷ் தென்னந்தோப்புக்குள் ‘தடதடவென’ வேகமாய் ஓடினான்.
******
தொடரும்…
முந்தைய பகுதியை வாசிக்க:
படைப்பு
சௌம்யா
எம்.பி.ஏ. பட்டதாரி மற்றும் தொழில்முனைவோரான இவர், சேலத்தில் பிறந்து சென்னையில் வசித்து வருகிறார். சிறுவர் இலக்கிய உலகத்தில் கதை சொல்லியாகவும், பத்திரிகை எழுத்தாளராகவும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்.