“அக்கா, நான் எத்தன நாளைக்குத்தான் உன் வீட்டுல ஒக்காந்து இப்படி ஓசிச் சோறு தின்னுட்டு இருக்க முடியும்? ப்ளீஸ்க்கா எங்கனா வீட்டு வேல வாங்கிக் குடுக்கா. நிம்மதியா இருக்கும்” என்றாள் கோலவிழி.

“அடிங்க… நீ பேசுற பேச்சுக்கு எங்கிட்ட செருப்படிதான் படப்போற. போ… போய் உங்கம்மா பார்த்து வெச்சிருக்கற அரக் கெழவனையே கட்டிட்டு, வருஷத்துக்கு ஒண்ணு பெத்துக்க” எனப் பாய்ந்தாள் அஞ்சலி.

அருவருத்து, காதைப் பொத்திக்கொண்டாள் கோலவிழி.

அவள் இங்கே வந்து ஒரு வாரம் ஆகிறது. முதல் இரண்டு நாள்கள் வரைதான் அவளால் அங்கே இயல்பாக இருக்க முடிந்தது. 

மிகச் சிறிய வீடு அது. கணவன், மனைவி, இரு பிள்ளைகள், வருமானத்துக்குத் தக்கவாறு இறுக்கிப் பிடித்து சிக்கனமான வாழ்க்கை  எனச் செல்லும் அவர்களின் குடும்பத்துக்குள் தான் அதிகப்படியாக ஒட்டிக் கொண்டிருக்கிறோமே என்கிற குற்ற உணர்வு உண்டாகிப்போக, இப்படியாகப் புலம்பத் தொடங்கிவிட்டாள்.

அவளின் கசங்கிய முகம் பார்த்து, “அதான் அண்ணன் உன்ன ஸ்கூல்ல சேர்த்துவிடுறேன்னு சொல்றாங்க இல்ல. கொஞ்சம் பொறுமையா இருக்கமாட்டியா நீ?” என்றாள் அஞ்சலி. 

“அதெல்லாம் நடக்கற காரியமாக்கா? அதுக்கு நான் படிச்ச ஸ்கூல்ல இருந்து டீ.சீ வாங்கணும், அதுவும் என் அம்மாக்கு தெரியாம. அதோட இல்லாம, பெத்தவங்க கையெழுத்து இல்லாம இந்த ஊர் ஸ்கூல்ல சேர்த்துப்பாங்களா சொல்லு? சொன்னா புரிஞ்சுக்கவே மாட்டேங்கற” என்று பதிலுக்குக் கத்தினாள் கோலவிழி. 

“போதும் வாய மூடுடி. மரியாதையா போய் ரெடி ஆவுற வழியப் பாரு. இப்போ உங்க அண்ணன் வருவாரு. மொதல்ல ஸ்கூலுக்குப் போய், என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு வாங்க. அப்பறம் முடிவு செஞ்சுக்கலாம். இப்ப புதுசா வந்திருக்கற ஹெச்.எம் ரொம்ப நல்ல மாதிரின்னு சொல்லிக்கறாங்க. நிச்சயமா உதவி செய்வாங்க” என அவளை அடக்கினாள் அஞ்சலி.

அவள் சுணங்கி நிற்கவும், “அடியே, உங்க அம்மாவ பத்தி எல்லாம் கவலப்படாத.  விட்டுது சனின்னு சொல்லி இந்த நேரத்துக்கு அவங்க நிம்மதியா இருப்பாங்க. இதுவரைக்கும் அவங்க உன்னத் தேடி இங்க வரலல்ல? இதுலயே உனக்குப் புரியலையா? என் வீட்டை கண்டுபிடிச்சு இங்க வரதெல்லாம் அவங்களுக்கு ஒரு பெரிய விஷயமா, சொல்லு?  பதினெட்டு வயசு முடியாம உனக்குக் கல்யாணம் நடத்தப் பார்த்தாங்கல்ல? அதனால அவங்களால போலிஸுக்கும் போக முடியாது. ஃப்ரீயா விடு” என அவளுக்குத் தைரியம் அளித்தாள்.

ஆனால் அவள் என்ன சொல்லியும் கோலவிழி மனம் தெளிந்தபாடில்லை. அஞ்சலியின் வற்புறுத்தலால் ஏனோ தானோ எனக் கிளம்பி ராஜாவுடன் அவர்கள் பகுதியின் அரசுப் பள்ளிக்குச் சென்றாள். அங்கே போய்ப் பார்த்தால், அப்படி ஓர் ஆச்சரியம் அவளுக்காகக் காத்திருந்தது.

அனுமதி பெற்று தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்ததும் வியப்பில் அவளின் விழிகள் வெளியே வந்து குதித்தன. “அலமேலு மிஸ்” என்றபடி ஓடிப்போய் அவரின் கையை பிடித்துக்கொண்டாள்.

அவசரமாக முகக் கவசத்தைச் சரியாக அணிந்தபடி, “என்னம்மா இப்படிப் பண்றியேம்மா, யாரும்மா நீ?” எனச் சாநிடைசரைக் கையில் ஊற்றிக்கொண்டு அவளுக்கும் கொடுத்தார்.

“சாரி மிஸ், சாரி மிஸ்” எனக் கையைத் தூய்மைப்படுத்திக்கொண்டு தள்ளிப்போய் நின்றவள், “கோலவிழி மிஸ்” எனத் தன் முகக் கவசத்தை இறக்கி ஏற்றினாள்.

“அடப் பொண்ணே, நீ எங்க இங்க? ஸ்கூலுக்கு வரச்சொல்லி எத்தன தடவ பிள்ளைங்க கிட்ட சொல்லி அனுப்பினேன். நீதான் வரல. உங்கப்பா எப்படி இருக்காரு?” என மகிழ்ச்சியுடன் வினவினார் அலமேலு.

“அப்பா இறந்துட்டாங்க மிஸ்” என்று அவள் சொல்லவும் உச்சுக் கொட்டினார்.

“விடுங்க மிஸ்… எல்லாம் முடிஞ்சுது” என்றவள் அருகில் நின்ற ராஜாவை, “உங்களுக்கு அஞ்சலி அக்கா நினைவிருக்கா, அவங்க வீட்டுக்கார்” என அறிமுகப் படுத்தினாள்.

யோசித்து, ”உங்க ஊரு அம்மன் கோயிலுக்கு எதிர பூக்கட வெச்சிருந்தாங்களே வசந்தா அவங்க பொண்ணுதான” என வினவினார்.

“ஆமாம் மிஸ்” 

“நல்லது, ஆனா இந்த நோய்த்தொற்று நேரத்துல எதுக்கு இங்க வந்திருக்கீங்க?” 

அவள்  அப்பாவின் மரணம், அம்மாவின் விட்டேத்தித்தனம், கட்டாயத் திருமண ஏற்பாடு என அனைத்தையும் சுருக்கமாகச் சொன்னான் ராஜா. 

“இவ்வளவு நடந்திருக்கு, இத ஏன் எங்கிட்ட முன்னாலயே சொல்லல கோலவிழி நீ?” எனக் கொதித்துப் போனார் அலமேலு மிஸ்.

“இல்ல மிஸ், நான் சொன்னா எங்கயாவது போலிஸ் கேஸ் ஆகிடுமோன்னு பயந்தேன். அம்மா பாவம்னு தோணிச்சு” என்றவளைக் கனிவாகப் பார்த்தார்.

“ஒண்ணும் பிரச்ன இல்ல தம்பி, இவளோட நல்ல நேரம், போன வருஷம் நயன்த் வரைக்கும் ஆல் பாஸ் போட்டதால அந்த லிஸ்ட்ல இவ பேரு வந்திருக்கும். இந்த வருஷம் பத்தாவதுக்கும் பப்ளிக் எக்ஸாம் எழுதாமலேயே ஆல் பாஸ் போட்டுட்டாங்க இல்ல? அதனால சிக்கல் இருக்காதுன்னுதான் நினைக்கறேன். நான் வேல செஞ்ச ஸ்கூல்லதான படிச்சிட்டு இருந்தா? அங்க விசாரிச்சு சொல்றேன். எந்தச் சிக்கலும் இல்லன்னா, மார்க் ஷீட், டிசி வாங்கிட்டு வந்து குடுங்க, இங்க அட்மிஷன் போட்டுவிடறேன்” என்றார்.

“மேடம், இவ அம்மா கையெழுத்து இல்லாம இதெல்லாம் செய்ய முடியுமா?” எனக் கவலையுற்றான் ராஜா.

“அப்பா இறந்துட்டாங்க, நான்தான் கார்டியன்னு சொல்லி கையெழுத்துப் போடுங்க தம்பி. பிரச்ன இல்ல” என்றவர், “இதோ பாரு கோலவிழி, நீ நல்லா படிக்கற பொண்ணு, ஸ்போர்ட்ஸ்லயும் கெட்டிக்காரி. அதனால உன்ன நம்பறேன். நல்லா படிச்சு என் பேர காப்பத்தணும்” என்றார் அலமேலு மிஸ். கண்ணீர்த் தளும்பியது கோலவிழிக்கு.

“நிச்சயமா மிஸ், எனக்கு உங்கள மாதிரி மேத்ஸ் டீச்சரா வரணும்னுதான் ஆச. நல்லா படிச்சு உங்க ஸ்டூடன்ட்னு பேர் வாங்குவேன்” எனத் தழுதழுத்தாள், இந்தப் பள்ளியில் இவளைச் சேர்த்து விட்டதற்காக இவளே அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தப் போகிறாள் என்பதை உணராமல்.

இவள் மட்டுமல்ல, அரசுப் பள்ளிகளில் படித்த ஏனைய மாணவர்களும் பள்ளிக்குப் போகாமல் வீட்டிலேயே முடங்கியதால், அனைவரையும் தேர்ச்சிப் பெற்றவர்களாக அரசு அறிவித்திருக்க, இவள் பள்ளிக்குச் செல்லாமலேயே பத்தாவது தேர்ச்சிப் பெற்றிருந்தாள். அதைக் கொண்டு, தலைமை ஆசிரியர் அலமேலு, பதினோராம் வகுப்பில் அறிவியல் பிரிவிலேயே அவளைச் சேர்த்துக்கொண்டார்.

நவம்பரில்தான் பள்ளிகள் திறந்தன. தொடக்கத்தில் முழு உற்சாகத்துடன்தான் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினாள். ஆனால் நாள்கள் செல்லச்செல்ல அவளுக்குப் பள்ளி செல்லும் ஆர்வம் குறைந்துபோனது. நினைத்தால் பள்ளி செல்வது, இல்லாமல் போனால் விடுப்பு எடுப்பது, என அவளுக்குக் கல்வியில் நாட்டமே இல்லாமல் போனது. 

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் வீட்டிலேயே இருந்துவிட்டதால், அதுவும் அஞ்சலியின் வீட்டுக்கு வந்த பிறகு அவளுக்குப் பிரச்னை என எதுவும் இல்லாமல் போக, பெரிதான உடல் உழைப்பே இல்லாமல் கைபேசி, தொலைக்காட்சி என சொகுசுக்குப் பழகிப் போயிருந்ததால், பொறுப்பான பெற்றோரின் கண்டிப்பில் இல்லாமல், ஓரளவுக்குமேல் கடிந்து சொல்ல இயலாத பாதுகாவலரின் பொறுப்பில் இருந்ததால், தான்தோன்றித்தனத்துடன் இருக்கப் பழகிப்போனாள். சமூக வலைத்தளங்கள் அவளின் ஆசிரியர் கனவைக் காலாவதி ஆக்கியது.

உழைக்க நமக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ நமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள உழைத்துக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உழைக்கிறோம், ஆனால் வருந்தி உழைப்பவரெல்லாம் கோடீஸ்வரராக ஆவதில்லை. அடுத்த வேளை உணவுக்கான உத்தரவாதம் என்பதே பலருக்கும் பெரும் சவாலாகத்தான் இருக்கிறது.

உழைக்காமல் உண்டி வளர்க்க, இன்னும் சொல்லப் போனால் கோடிகளில் புரளக்கூட இங்கே பல உபாயங்கள் குறுக்கு வழியில் கொட்டிக் கிடக்கின்றன. மக்களின் மூளையைக் கழுவினால் போதும். இல்லாமல் போனால் கார்ப்பரேட் சாமியார்கள் இங்கே எப்படி உருவாகின்றனர்? 

மதங்களின் பெயரால், கடவுளின் பெயரால், கொஞ்சம்கூடச் சிந்திக்க விடாமல்  மக்களின் மூளையைக் கழுவியது போக, இப்பொழுது அறிவியலின் துணைகொண்டு சமூக வலைத்தளங்கள் மூலமாக அதைச் சுலபமாகச் செய்கின்றனர். உழைக்காமல் உட்கார்ந்த இடத்திலேயே வருமானம் ஈட்டும் வாய்ப்பு வீடு தேடி வருகிறது. 

வெள்ளித்திரையிலோ அல்லது சின்ன திரையிலோ பிரபலமாக வேண்டும் என்றால் அங்கே இருக்கும் போட்டிக்கு, உள்ளே நுழைவது அவ்வளவு ஒன்றும் சுலபமில்லை. இதுவே சமூக வலைத்தளங்களில் தம்மை நிறுவுவது என்பது மிக மிகச் சுலபம். ஒரே ஒரு கைபேசி இருந்தால் போதுமே! 

அதற்குக் கல்வியில் சிறந்தவர்களாகவோ அல்லது குறிப்பிட்ட துறையில் விற்பன்னராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘ட்ரோல்’ என்கிற பெயரில் ஒருவரைக் கிண்டல் கேலி செய்தோ ஆபாச வார்த்தைகள் பேசியோ எண்ணற்றோரின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பி அதன் மூலம் பிழைப்பு நடத்துபவர்கள் இங்கே ஏராளம். பலரின் பாலியல் வறட்சிக்குத் தீனி போட்டுப் பிழைப்பவர்களும் ஏராளம் ஏராளம்.

சமூகத்திற்குத் தேவையான நல்ல விஷயங்கள் இல்லாமலும் இல்லை. ஆனால் அதன் மூலம் புகழ்பெறுவது அவ்வளவு சுலபமொன்றும் இல்லை. எனவே எதிர்மறையான பாதையைத் தேர்ந்தெடுத்துப் போவது பலருக்கும் சுலபமாக இருக்கிறது.

அப்படி ஒரு பாதையைத்தான் கோலவிழியும் தேர்ந்தெடுத்தாள். குறுகிய காலத்திற்குள்ளேயே பிரபலமாகிவிட வேண்டும் என்றும், அதிகப் பணம் ஈட்ட வேண்டும் என்றும் ஆசைப்பட்டு அவள் செய்து கொண்டே போன செயல்கள் அனைத்தும் அவளையே ஒரு கண்ணியாக்கி பலரையும் சிக்க வைத்துச் சிதைத்தது. 

(தொடரும்)

படைப்பாளர்

எழுத்தாளர் கிருஷ்ணப்பிரியா நாராயணன். தமிழ் நாவலாசிரியர் மற்றும் பதிப்பாளர். சென்னையில் வசிக்கிறார். சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பதினாறு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறாருக்கும்
நூல்களும் எழுதி வருகிறார்.