உலகளவில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் குறைந்து வருவதால் இந்த நூற்றாண்டின் இறுதியில், ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தொகை குறையும், என ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

உதாரணமாக 2100-ம் ஆண்டில் ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட 23 நாடுகளில் நாடுகளில் மக்கள் தொகை பாதியாகக் குறையும் எனக் கருதப்படுகிறது. தற்போது உலகிலே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில், 1.4 பில்லியனில் இருந்து 2100-ம் ஆண்டு 732 மில்லியனாக மக்கள் தொகை குறையும்.

பெண்கள், குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. இந்த எண்ணிக்கை ஏறக்குறைய 2.1க்கும் குறைவாக இருந்தால், மக்கள் தொகை குறையத் தொடங்கும். நன்கு படித்து பின்னர் வேலைக்குச் செல்லும் பெண்கள், குறைவான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவே விரும்புகின்றனர்.

சில நாடுகள் மேம்பட்ட மகப்பேறு வசதி, தந்தைக்கு விடுப்பு, இலவச குழந்தைப் பராமரிப்பு, நிதி சலுகைகள் மற்றும் கூடுதல் வேலைவாய்ப்பு உரிமைகள் போன்ற கொள்கைகளை முயன்றுள்ளன. ஸ்வீடன், ஒவ்வொரு பெண்ணும் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணிக்கையை 1.7ல் இருந்து 1.9ஆக அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இது இன்னும் 1.3 ஆகவே உள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநில முதலமைச்சர்கள்  குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்கான பிரச்சாரங்களைக் கடந்த வருடமே ஆரம்பித்து விட்டனர்.

ஹங்கேரி, 30 வயதுக்குட்பட்ட தாய்மார்களுக்கான, வருமான வரியை ரத்து செய்துள்ளது. இத்தாலியில், 2033-ம் ஆண்டுக்குள், ஆண்டுக்கு குறைந்தது அரை மில்லியன் பிறப்புகளை எட்டுவதற்கான பிரச்சாரத்தை பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆதரித்துள்ளார்.

ஆனால், சீனாவில், அரசாங்கம் சமீபத்திய ஆண்டுகளில் பெண்ணிய எதிர்ப்பு நிலைப்பாட்டை கடுமையாக எடுத்துள்ளது. 2023-ம் ஆண்டு அனைத்து சீன மகளிர் கூட்டமைப்பின் கூட்டத்தில், பெண்கள் “திருமணம் மற்றும் குழந்தை பெற்றெடுக்கும் ஒரு புதிய கலாச்சாரத்தை தீவிரமாக வளர்க்க வேண்டும்” என்று ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறினார். சீனாவின் புதிய விவாகரத்துச் சட்டம், பெண்களின் சொத்துரிமையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

“குழந்தைகள் பிறப்பு குறைவது பல நாடுகளுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகப் பெண்களின் உரிமையிலும், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தலையிடக்கூடாது’’ என்கிறார் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டின் எமில் வோல்செட். சட்டரீதியாக அமைக்கப்பட்ட எல்லா சுதந்திரங்களும் நிபந்தனைக்குட்பட்டவை. வரலாறு நமக்கு அதனை இலகுவாக புரிய வைத்து விடுகிறது.

1920-ம் ஆண்டில், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான ஒரு சோசலிச அரசின் கடமைப்பாடாக, கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய உலகின் முதல் நாடானது சோவியத் யூனியன். பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும், பிறப்பு விகிதம் குறைந்து வருவதை உணர்ந்ததும் அச்சட்டம் மீளப் பெறப்பட்டது. ஏற்கனவே நாம் மீட்டுக் கொண்ட உரிமைகள் பறிக்கப்படாது இருக்கவேண்டி, நாம் மறுபடியும் வீதிகளில் இறங்கி போராட வேண்டிய சூழ்நிலைகளும் வரலாம். ஐந்தாம் அலை பெண்ணியமும் அவசியமாகக்கூடும்.

 பிறப்பு விகிதம் குறைவதென்பது பெண்ணியத்தின்  விளைவு எனக் குறை கூறுவது ஏற்புடையதல்ல. நவீன, சமத்துவமான குடும்பங்களை ஆதரிக்கத் தகவமைத்துக் கொள்ளாத ஒரு சமூகத்தின் விளைவே இது. Covid பெருந்தொற்று, அதன் பின்னர் தொடர்ந்த பொருளாதார நெருக்கடிகள் பிறப்பு விகிதம் குறைவடைந்ததற்கான காரணிகளில் சில. இன்று, பெரும்பாலான குடும்பங்கள் ஒற்றை வருமானத்தில் வாழ முடியாது. ஆண்கள் வேலை செய்யும்போது பெண்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும் என்கிற கருத்து, பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை. மனித உரிமைகள் என்ற ரீதியில் அவை நியாயமானதாகவும் இல்லை. குறைந்து வரும் பிறப்பு விகிதங்களை நிவர்த்தி செய்ய விரும்பினால், பெண்களைக் குறை கூறுவதை நிறுத்திவிட்டு, மலிவு விலையில் குழந்தை பராமரிப்பு மற்றும் ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு, அனைத்து பெற்றோருக்கும் நெகிழ்வான வேலை ஏற்பாடுகள், குடும்ப அங்கத்தவர்களிடையே பகிரப்பட்ட வீட்டுப் பொறுப்புகள் மற்றும்  சுகாதாரப் பராமரிப்பை மேலும் அணுகக்கூடியதாக பொருளாதாரக் கொள்கைகளை  சரிசெய்யத் தொடங்க வேண்டும்.

பெண்கள் வீட்டிலேயே இருந்து குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தும் பழமைவாதிகள் இன்றும் உள்ளார்கள். முழுநேர குழந்தை வளர்ப்பு என்பது பெண்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட சமாச்சாரம் கிடையாது. வேலை, வீடு என்ற வாழ்க்கை சமநிலை (Work life balance) பற்றிய கேள்வி தாய்மாரிடம் மட்டும் கேட்கப்படுகிறது. ‘Super woman’ போன்ற சொல்லாடல்கள் கணவனின் குறைந்தளவு பங்களிப்பில், மனைவி குடும்பத்தை (கணவன் அடங்கலாக) ‘பராமரிக்கும்’ கைங்கரியத்தைக் குறிக்கிறது. ஆனால் ‘Superman’ என்பவர் திரையில் பறந்து பறந்து கட்டடங்களைத் தாவிப்பிடிக்கின்றார்.

Superman களுக்கு வெளியே பார்க்கும் வேலையோடு வீட்டு வேலைகளையும் ஏன் சமாளிக்க முடிவதில்லை? வேலைக்கும் வீட்டிற்குமான வாழ்க்கைச் சமநிலையை பற்றி ஏன் தந்தையர்களிடம் கேட்பதில்லை.

 ஆண்களுக்கு லட்சியம் இருக்கும்போது, ​​அது  பாராட்டத்தக்கது. ஆனால் பெண்கள்  அதே விடயத்தைச் செய்யும்போது, ​​அது குடும்ப விழுமியங்களுக்கும் நாகரிகத்திற்கும் அச்சுறுத்தலாக அமைகிறது. ஆண்கள் அறிவியலாளர்களாகவோ , எழுத்தாளர்களாகவோ தம்மை அர்ப்பணித்து வேலைசெய்வதும் அதனால் குடும்ப பொறுப்புகளை முழுமையாக அல்லது அதன் பெரும் பங்கை மனைவிமாரிடம் ஒப்படைப்பது என்பது காலம்காலமாக நடந்து வருவது.

உலகப் புகழ்பெற்ற ஆண் தத்துவவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள் உருவானபோது, அவர்களின் துணைவியர் வீட்டுப் பொறுப்புகளை தம்மீது ஏற்றிக் கொண்டவர்கள். இன்றைய நாள்களில் பெண்கள் லட்சியவாதிகளாக இருப்பதைப் போற்றுவது ஒரு நவீன பாணி (trend). ஆனால் அதே பெண்கள் வீட்டு வேலைகளையும் தனியாக கச்சிதமாக முடிப்பவர்களாக இருந்தால் மட்டுமே ‘வெற்றிப் பெண்கள்’ என கருதப்படுகிறது.

இது போன்ற பாரபட்சமான, முதிர்ச்சியற்ற எண்ணக்கருக்களோடு இன்றும் சமூகத்தில் பலர் உள்ளனர். இங்கு பெண்கள் முழுநேர லட்சியப் பயணங்களில் செல்வது என்பது ஒரு விநோதமாக பார்க்கப்படுகிறது. பெண் எனும் பாலினம், குழந்தைப்பேறு என்பதை மட்டுமே முதன்மையாக கருதவேண்டும், தன் குடும்பத்திற்காக தன் நலன்களையும் லட்சியங்களையும் ‘தியாகம்’ செய்யவேண்டும் அல்லது தன்னை வருத்தி, ஊதியம் தரும் வேலை, குடும்பம், குழந்தைப் பராமரிப்பு என அனைத்தையும் சுமந்து வாழவேண்டும் என்பதே இன்றும் ஆண்மையவாத தமிழ்ச் சமூகத்தின் பொதுப் புத்தியில் உள்ளது.

இவ்வகையான ஆணாதிக்கச் சிந்தனைகளாலேயே திருமணத்தை தள்ளிப்போடுவதும் புறக்கணிப்பதும், குழந்தை பேற்றை விரும்பாது போவதுமாக பெண்களின் சிந்தனைப்பாங்குகளும் தெரிவுகளும் மாறிவிடுகின்றன.

கொழும்பு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 300 மாணவர்களிடமும் தமிழ்நாடு VET Institute of Arts and Science -ஐ சேர்ந்த 234 மாணவர்களிடமும் தாய்மை மற்றும் குறைந்து வரும் கருத்தரிப்பு வீதம் பற்றிய கருத்துக் கணிப்பு ஆய்வொன்று இவ்வருடம் நிகழ்த்தப்பட்டது. இருநாட்டைச் சேர்ந்தவர்களும் தமது கல்வி, தொழில் முன்னேற்றங்கள், பொருளாதார பாதுகாப்பு முன்னிட்டு தாய்மையடைதலை தள்ளிவைப்பதாகக் கூறியுள்ளனர், இருப்பினும் அவர்கள் தெரிவு செய்த கல்வித்துறைக்கு ஏற்ப அவர்களின் தனிப்பட்ட தெரிவுகள் வேறுபடுகின்றன.

ஒரு சமூகத்தின் கலாச்சாரம் என்பது மாறக்கூடியது; மனிதர்களாகிய நாம் உருவாக்கிய விதிகளும் சம்பிரதாயங்களுமே முகங்கள் அற்ற கலாச்சாரமாக உருவெடுத்துள்ளன. பிறப்பு, இறப்பு போல் இயற்கை நிகழ்வு அல்ல திருமணங்கள். சாதி, வர்க்க, மதங்களின் கூறுகளை கடத்திச் செல்வதாகவே திருமணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. திருமண முறைகளும் அதைச் சூழ்ந்துள்ள சம்பிரதாயங்களும் பாலின பேதம் கொண்டவையாக, பெண்களை அடிமைப்படுத்தும் வகையிலே வடிவமைக்கப்பட்டுள்ளன.

பெண்களின் கருப்பைகளைச் சூழந்தே ‘ஒழுக்கம்’ எனும் இறுக்கமான சமூக கட்டுமானம் வரையப்பட்டுள்ளது. ஆனால் அதே ஒழுக்கம் ஆண்களுக்கு மிக நெகிழ்வாக உள்ளது. கருப்பை அரசியலை, அவ்வுறுப்புக்கு சொந்தமான பெண்களைவிட ஏனையவர்கள் தீர்மானிக்கிறார்கள். எவ்வகை பொருளாதார சமூகமெனினும், மனித வளம் அதன் அடிப்படையாகிறது. பெண்கள், மனிதர்களை உற்பத்தி பண்ணும் இயந்திரங்களாகவே பார்க்கப்படுகின்றனர். தேவைக்கேற்ப கையாளப்படும் மனித இயந்திரங்களாக பெண்கள் இருக்க முடியாது, அதற்கெதிரான கிளர்ச்சிகள் தவிர்க்க முடியாதது.

திருமணங்கள், குடும்பங்களை நிறுவுகின்றன, அவை பாலின வகிபாகங்களை சமனற்ற முறையில் கொண்டுள்ளன. குடும்பம் எனும் அலகுக்குள் ஊதியமற்ற வேலைகளை பெண்களே பெரும்பான்மையான செய்கின்றனர். சமைத்தல், வீட்டை சுத்தம் செய்தல், குழந்தை மற்றும் வயதானவர்களை பராமரித்தல் போன்ற ஊதியமற்ற வேலைகள் பெண்கள் மீது திணிக்கப்படுவதால் ,பெண்கள் ஊதியம் பெறும் வேலைகளை புரியவும் தொழில் முன்னேற்றம் காணவும் தமது சுய பாராமரிப்பை செய்யவும் நல்ல நட்புகளைப் பேணவும், அரசியலில் ஈடுபடவும் நேரம் போதாது துன்பப்படுகின்றனர்.

இலங்கையில் பல்கலைக்கழகங்களில் ஆண்களைவிட பெண்களை அதிகமாக இருப்பினும், பொருளாதாரம் மற்றும் அரசியல் தலைமைத்துவங்களில் பெண்கள் பின் தங்கியே உள்ளனர். 30% க்கும் குறைவாகவே பெண்கள், உழைக்கும் குழுவினரில் உள்ளனர். மொத்த சனத்தொகையின் 52% ஆக இருக்கும் பெண்களில், 10% மட்டுமே பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்நாள்களை திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் என இரு காலகட்டங்களாக எளிதாகப் பிரித்து விடலாம், திருமணத்தின் பின் தம் சுயம் உள்பட அவர்கள் பலவற்றை இழப்பதாகவே கட்டமைக்கப்பட்ட சமூக அமைப்பு (systematic social structure) உள்ளது. உடுத்தும்ம் உடையிலிருந்து எத்தனை குழந்தைகள் பெறுவது அல்லது குழந்தைகள் பெறுவதா என்பதுவரை பெண்களின் சொந்த விருப்பம் நிராகரிக்கப்படுகிறது

சமூக மறுஉற்பத்தி எனும் செயல்முறையும் அதன் செலவினங்களும் சமமாக சமூக உறுப்பினர்களிடையே பங்கிடப்பட வேண்டும். இன்றைய சமூகத்தில் சமூக மறு உற்பத்தியில் பெரும்பான்மையாக ஈடுபடும் பெண்கள், உழைப்பு சுரண்டலுக்குள்ளாகிறார்கள். பெண்ணடிமைத்தனம் வெறுமனே உழைப்புச்சுரண்டலோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. குடும்பம் என்ற அலகுக்குள் பாலியல் அடிமைத்தனமும் (Marital Rape) வீட்டு வன்முறையும் (Domestic violence) பாலின ரீதியாக பெண்களையே பாதிக்கின்றன.

இலங்கையைப் பொறுத்தவரை, 5 பெண்களுக்கு ஒருவர் என்ற ரீதியில் தமது இணையர்களால் உடல்ரீதியாக அல்லது பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்டனர் (Intimate Partner Violence) என 2019 அரச தகவல்கள் திணைக்களத்தின் கருத்துக் கணிப்பு கூறுகிறது. பெண்கள், இன்றும் இரண்டாம் தர பிரஜைகளாகவே பார்க்கப்படுகின்றன. பெண்களின் சம உரிமைகளும் வாய்ப்புகளும் பல பெண்ணிய போராட்டங்களாலும் புரட்சிகளாலும் வென்றெடுக்கப்பட்டவை. உலகம் முழுவதுமாக பெண்ணின் உரிமைகளை பாதுகாக்க பல சட்டங்கள் இயற்றப்பட்டது எனினும் அவை முழுமையடையவில்லை. இலங்கையில் இன்னும் 26 சட்டங்கள், பாலின பேதம் கொண்டவையாக உள்ளன என United Nations Population Funds -ன் ஆய்வு கூறுகிறது.

பெண்களைப் பாதுகாக்கும் பல சட்டங்கள் உள்ள போதும் சம அந்தஸ்து என்பது சமூகத்திலும் வீட்டிலும் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. சம உரிமைகளும் சம வாய்ப்புக்களும் சம அந்தஸ்தும் கிடைக்கும் வரை பெண் விடுதலைக்கான போராட்டங்கள் தொடரும். ‘கல்யாணச் சந்தையிலே’ என்ற இத்தொடர் முழுவதுமாக மேற்கூறியது போன்று திருமணம், குடும்பம், வீடு என்ற சமூக நிறுவனங்கள் எங்கனம் பெண்களை ஒரு தலைபட்சமாக பாதிக்கின்றன என விரிவாக ஆராய்ந்து விட்டோம். அவற்றின் மீள்புத்துருவாக்கங்களும் புதிய வடிவங்களும் அவசியம் எனவும் கண்டோம்.

பிறப்பு வீதம் என்பது பெண்களின் உடலோடு பிணைக்கப்பட்ட விடயம், அவர்களின் சுய தெரிவு மற்றும் உரிமைகள் பற்றியது. அது தொடர்பாக பெண்களிடம் கலந்தாலோசிக்காமல், அது தொடர்பான கொள்கைகளில் பெண்களின் கருத்துக்களை உள்வாங்காமல் நீண்ட கால நோக்கில் வெற்றி தரும் தீர்வுகள் கிடைக்கப் போவதில்லை. அரசும் தனியாரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்த வேண்டியவை அல்லது விஸ்தரிக்கப்படவேண்ணியவை சில:

  • இலவச அல்லது மிகவும் மலிவு விலையில் குழந்தை பராமரிப்பு நிலையங்களை நிறுவுதல்
  • தாய்மாருக்கு ஒரு வருட மகப்பேற்று கால விடுமுறை வழங்குதல், தந்தையாருக்கு குறைந்தபட்சம் 2-4 வார விடுமுறையை வழங்குதல்
  • நெகிழ்வான நேரம் கொண்ட வேலைகள் (flexible hours), மற்றும் பகுதிநேர வேலைகளை (Part time), நிரந்தரத் தன்மையுள்ளவையாக (Permanent positions) ஏற்படுத்தி கொடுத்தல்
  • இனப்பெருக்கம்/குழந்தைப்பேறு தொடர்பான அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தல்
  • குழந்தைப்பேறு என்பது தனிப்பட்ட தெரிவு, குழந்தை பெறாமலும் ஒருவர் வாழலாம் என்ற வாழ்க்கைத் தெரிவு மீதான சமூகக் களங்கத்தை நீக்குதல்
  • விவாகரத்து செயன்முறையை இலகுவாக்குதல் (No fault divorces)
  • குழந்தை வளர்ப்பில் தந்தைமாரின் முதன்மையான பங்களிப்பை வளர்த்தெடுத்தல்
  • அடிப்படை திறன்களான உணவு தயாரிப்பு, வீடு சுத்திகரிப்பு, ஆடை பராமரிப்பு போன்றவற்றை ஆண் பிள்ளைகளிடையே வழக்கமாக கொணர்தல். இவை இருபாலாரும் செய்யக்கூடிய பணிகள் என்ற விழிப்புணர்வை இளம் பருவத்திலேயே விதைத்தல்.
  • அரச திணைக்களங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், காவல்துறை என பல்வேறு அதிகார மட்டங்களில் பாலின சமத்துவத்திற்கான வகுப்புக்கள் நடத்துதல்
  • கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குதல்
  • பாலின சமத்துவத்தை உள்ளடக்கிய பாடத்திட்டங்களை சிறு பிராயம் தொடங்கி அறிமுகப்படுத்தல்

முற்றும்.

படைப்பாளர்

அஞ்சனா

பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர்,  MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.